மொழிப் போர்.....
1937-ல் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்டபோது ராஜாஜி இந்தி படிப்பதை மேனிலைக் கல்வியில் கட்டாயம் ஆக்கினார். குழந்தைக்குத் தாய் கட்டாயப்படுத்தித் தான் பாலூட்ட வேண்டும் என்று விளக்கம் தந்தார். இந்தி ரயில் வண்டி அதில் போனால் வேகமாக முன்னேறலாம் என்றும் சொன்னார்.
பெரியார் கொதித்து எழுந்து சுயமரியாதை இயக்கத்தின் மூலமும், நீதிக்கட்சியின் மூலமும் போராட்டங்கள் நடத்தினார். இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் தமிழுக்குப் பதிலாகத் திணிக்கப் பார்க்கிறார்கள் என்கிற எண்ணம் வலுப்பெற்றுப் போராட்டங்கள் நடைபெற்றன. பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். தீரர் சத்தியமூர்த்தியும் ராதாகிருஷ்ணனும் காங்கிரஸிலேயே இந்தி திணிப்பை எதிர்த்தார்கள்; எனினும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார் ராஜாஜி.
இந்திய குடிமக்கள் மீது ஆங்கிலேய அரசு போலவே கிரிமினல் சட்டத்தைத் தாகூர் மற்றும் ஜின்னாவின் எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமலே பயன்படுத்தினார் ராஜாஜி.

நடராசன் என்ற இளைஞர் சிறைக்கொடுமையின் காரணமாக 1939 ஜனவரி 15 அன்று உயிர் நீத்தார். அவரையடுத்து தாளமுத்து என்ற இளைஞரும் சிறைக்கொடுமை தாங்காது 1939 மார்ச் 13ஆம் நாளன்று சிறைச்சாலையிலேயே இயற்கை எய்தினார். கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் என்று இரண்டு உயிர்கள் போன பின்னும் போராட்டங்களை விமர்சித்தார் ராஜாஜி.
பெண்கள் பலர் குழந்தைகளோடு சிறை சென்றனர்; பெண்களைப் போராட தூண்டியதற்காகப் பெரியார் ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஆறு மாதத்தில் உடல்நலம் காரணமாக விடுவிக்கப்பட்டார். தனித்தமிழ் இயக்கம் வளர்ந்ததும் அப்பொழுது தான்.
அதற்குப் பிறகு 1939இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விலகக் கவர்னர் மீண்டும் அச்சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். காங்கிரஸ் விடுதலைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்ததும் எல்லா மாநில அரசுகளையும் இந்தியை கட்டாயம் ஆக்கச் சொன்னது. முதலில் தமிழ் பேசும் பகுதியில் இன்னொரு மொழியாகத் தேர்வு செய்துகொண்டு படிக்கவேண்டிய பாடம் என்று பல மொழிகளைக் கொடுத்து அதில் இந்திக்கு மட்டும் ஆசிரியர்களை அதிகமாக நியமித்து ஹிந்தி திணிப்பை மறைமுகமாக ஆரம்பித்தது ஓமந்தூரார் அரசு. பின்னர் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பிள்ளைகள் பெற்றாலே உயர்கல்விக்குத் தகுதி பெறுவர் என்றது இன்னமும் கொதிப்பை அதிகப்படுத்தியது.

பெரியார் போராட்டக்களம் புகுந்தார்; ம.பொ.சிவஞானம், திரு.வி.க. முதலியோரும் எதிர்ப்புகளில் கலந்து கொண்டனர்; ஒரு வழியாக அரசு போராட்டக்காரர்களின் மீதான வழக்குகளைத் திரும்பப்பெற்றது; கட்டாயம் என்பது விருப்பப்பாடம் என்றானது.
இதற்கு முன்னமே அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்போது இந்தி தான் தேசிய மொழியாக வேண்டும் என ஒரு குழு விரும்பியது (அதிலேயே சுத்தமான இந்தி, இந்துஸ்தான் என இரண்டு குழு இருந்தது தனிக்கதை). அதை எதிர்த்து தென்னக மற்றும் வங்கத்தைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர்; இறுதியில் தேசிய மொழி என்று ஒன்று இல்லாமலேயே, முன்ஷி அய்யங்கார் திட்டப்படி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அதிகாரப்பூர்வ மொழிகள் ஆயின; பதினைந்து வருடங்கள் வரை இதே நிலை தொடரும் என்றும், ஐந்து ஆண்டுகள் கழித்து எப்படிப் படிப்படியாக ஆங்கிலத்தை விளக்கி இந்தியை தேசிய மொழியாக்குவது எனப் பரிந்துரைகள் தர ஒரு கமிஷன் அமைக்கப்படும் என்றும் குறிக்கப்பட்டன.
படிப்படியாக அரசு இந்தியை வளர்த்தது; சட்ட ஆணைகளில் இந்தியை பயன்படுத்தியது. டால்மியாபுரத்தை கல்லக்குடி எனப் பெயர் மாற்றம் செய்யக்கோரி 1953-ல் போராட்டம் நடந்து இரண்டு தி.மு.க தொண்டர்கள் உயிர்விட்டனர். அண்ணா, பெரியார், முந்தைய ஹிந்தி ஆதரவாளர் ராஜாஜி ஆகியோர் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலமே தொடர வேண்டும் என்று 1956-ல் கையெழுத்திட்டனர்.

ஏற்கனவே அரசியலமைப்பில் சொன்னபடி கேர் கமிஷன் அமைக்கப்பட்டது; இந்தியை எப்படி முழுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம் என அது பல்வேறு யோசனைகள் தந்தது . அக்குழுவின் தென்னக மற்றும் வங்க உறுப்பினர்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். கோவிந்த் வல்லபாய் பந் தலைமையில் இதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அதுவும் அதையே சொன்னது. பத்தொன்பது வகையான இந்தி மொழிகள் பேசப்பட்டுக்கொண்டு இருந்த சூழலில் 36 கோடி மக்களில் வெறும் இரண்டரை கோடி மக்கள் மட்டும் பேசிய கடீபோலி இந்தியை தென்னகத்துக்கும் திணித்தார்கள். மக்கள் மீண்டும் போராட எழுந்தார்கள் .
நேரு ,1959-ல் "இந்தி பேசாத மாநில மக்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் ; இந்தி திணிப்பு செய்யப்பட மாட்டாது” என்றார். பந்த் இரண்டு ஆண்டுகள் போராடி சாதித்தவற்றை பிரதமர் இரண்டு நிமிடங்களில் கெடுத்து விட்டார் எனப் புலம்பினார். 1959-ல் தந்த உறுதியை நிஜமாக்க நேரு சட்ட வரைவை கொண்டு வர அதில் ஆங்கிலம் தொடரலாம் என்கிற வார்த்தையை, கண்டிப்பாகத் தொடரும் என மாற்றச்சொல்லி கேட்டார்கள் தமிழர்கள் . shall be என்கிற வார்த்தையைப் போட்டுவிட்டு ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகத் தொடரலாம் என்கிற இடத்தில் may be போட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. நேரு தொடரலாம் எனச் சொன்னதைத் தொடராமலும் போகலாம் என வருகிறவர்கள் கொள்வார்கள் எனப் பயந்தார்கள்.
அதுவே நடந்தது, சாஸ்திரி பிரதமர் ஆனதும் 15 வருடகாலக் காலக்கெடு முடிந்தது எனச் சொல்லி கட்டாய இந்தியை அறிமுகப்படுத்தினார். தமிழகம் கொதித்து எழுந்தது. 70 பேர் அதிகாரப்பூர்வ பதிவுகளின் படி தீக்குளித்துக் கொண்டனர். ஐம்பதாயிரம் மாணவர்கள் ஊர்வலமாகப் போனார்கள்; கலவரங்கள் வெடித்தன. பாரா மிலிட்டரி படைகள் வந்தன. பக்தவச்சலம் முரண்டு பிடித்தார். ஒ.வி.அழகேசன் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் பதவி விலக அதைச் சாஸ்திரி ஏற்றார்; பின்னர் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பிரிய வழி வகுக்காதீர்கள் என்று சொன்னதற்குப் பிறகு இந்தி திணிப்பு நின்றது. அதற்குப் பிறகு தேர்வுகளில் ஆங்கிலமும் இருக்கும் என அறிவித்தார்கள்.

மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்தார்கள்; அதை எதிர்த்தும் தமிழகத்தில் போராட இந்தி கற்கிற வாய்ப்புப் பறிபோனது. 1986 இல் நவோதயா பள்ளிகள் தமிழகம் வரும்போது அதை இந்தி திணிப்பு எனக் கலைஞர் எதிர்த்துப் போராட்டம் நடத்த இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் ஆனது தமிழ்நாடு.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்திக்கான கால அளவை அதிகப்படுத்துவது, மொரார்ஜி தேசாய் காலத்தில் துணை கமிஷனர் அல்லது அதற்கு மேலான பதவியில் உள்ள இந்தி கற்காத மாநில அதிகாரிகள் கட்டாயம் ஹஇந்தி கற்க வேண்டும் என்று உத்தரவு போட்டது. ராஜீவ் காந்தி காலத்தில் இந்தி வாரம் கொண்டாட வேண்டும் என்று அறிக்கை வந்தது, மத்திய அரசு அதிகாரிகள் இந்தியிலேயே கையெழுத்துப் போடவேண்டும் என்கிற உத்தரவு, என்.சி.ஆர்.டி. புத்தகங்களில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடியவர்களை முட்டாள்கள் என்று சித்தரித்த கேலிச்சித்திரம் இடம் பெற்றது, சமூக வலைதளங்களில் இந்தியில் மட்டுமே இனி அறிவிப்புகள் என்று அறிவித்தது என்று இந்தி திணிப்பு தொடர்கிறது. இந்தி திணிப்புக்கு எதிரான எதிர்ப்பை இந்திக்கு எதிரான எதிர்ப்பாகவும் பதிவு செய்வதும் தொடர்கிறது.
- பூ.கொ.சரவணன் IRS
_-----------------------------------------------
மக்களாட்சி நாடா?
மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அரசாணை பிறப்பித்தது.
மேலும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி, மொபைல் மற்றும் இணைய சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவை இன்னும் அமல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிறிது சிறிதாக தொலைத் தொடர்பு சேவைக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துவரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
I could not recognize Omar in this picture. Am feeling sad. Unfortunate that this is happening in our democratic country. When will this end ?
8,389 people are talking about this
அந்தப் புகைப்படத்தில் அடையாளம் காண முடியாத வகையில் நீண்ட வெள்ளை தாடியுடன் உமர் அப்துல்லா இருக்கிறார். தொடர்ந்து 6 மாதமாக வீட்டிக்காவலில் இருக்கும் உமர் அப்துல்லா, குறித்து எந்த தகவலும் கிடைக்காக நிலையில் இப்படி ஒரு புகைப்படம் வெளியாகியிருப்பது அரசியல் கட்சி தலைவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “உமர் அப்துல்லாவை என்னால் அடையாளம் காணவே முடியவில்லை. குடியரசு நாட்டில் தான் நாம் இருக்கிறோமா..? இதல்லாம் எப்போது முடிவுக்கு வரும்” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பலரும் மோடி அரசின் இத்தகைய அடக்கு முறைக்கு எதிராக தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
___________________________________