தேவையா சுங்கசாவடிகள்.
சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளை குறித்தும், பரனூர் சுங்கச்சாவடி தாக்கப்பட்டது குறித்தும் பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் விரிவாக தனது பார்வையைப் பதிவு செய்துள்ளார். அவரது கட்டுரை பின்வருமாறு :
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டுள்ளது மிகமிக வருத்தமான விஷயம். அதனை முற்றிலுமாக சீரமைக்க ஒரு வாரம் ஆகும் என்றும் அதுவரை அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள். மிக மிக சந்தோஷமான விஷயம்.
பிரச்னைக்கு மூல காரணம் என்ன? அரசுப் பேருந்து ஓட்டுனர் ஒருவரிடம் சுங்கக் கட்டணத்தை டோல்கேட் ஊழியர் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஏற்கனவே எடுத்தாகி விட்டது என்று சொல்லி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மனித தாக்குதலில் போய் முடிந்துள்ளது.
வடநாட்டிலிருந்து வந்து பணியாற்றும் ஊழியரான அவர் அரசுப் பேருந்து ஓட்டுனரை கடுமையாக தாக்கியுள்ளார்.யார் மீது தவறோ? அதெல்லாம் இருக்கட்டும். அங்கிருந்தவர்களுக்கு மத்தியில் உதித்த ஒரே கேள்வி, எங்கிருந்தோ வந்த ஒரு வடநாட்டு ஆசாமி எப்படி தமிழ்நாட்டில் அதுவும் ஒரு அரசுப் பேருந்து ஓட்டுநரையே இப்படி தாக்க தைரியம் வருகிறது என்று வெகுண்டு எழுந்து விட்டார்கள்.
சுங்கச்சாவடியில் காத்திருந்த மற்ற அரசுப் பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களும் பாதிக்கப்பட்ட ஓட்டுனருக்கு ஆதரவாக தட்டிக் கேட்க ஆரம்பித்தார்கள்.
சிறிது நேரத்தில் டோல்கேட் முழுவதுமாக அடித்து நொறுக்கப்பட்டது. நடந்திருப்பது மிகப்பெரிய வன்முறை. சட்டப்படி பெரிய குற்றமே. என்றாலும் பல விஷயங்களை ஆராயவேண்டிய அளவுக்கு இந்த சம்பவம் வித்திட்டுள்ளது. வாகன ஓட்டிகளிடமும் அவற்றில் பயணிப்பவர்களிடமும் எதனால் இந்த ஆவேசம்?
காரணங்களை வெகு சுலபமாக சொல்லிவிடலாம். ஒன்று அண்மைக்காலமாக சுங்கச்சாவடி ஊழியர்களின் அடாவடி கடுமையாக உள்ளது. யாரையுமே பொருட்படுத்துவதில்லை; மதிப்பதே கிடையாது.
கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு போடா நாயே என்கிற தொனியில் தான் பார்க்கிறார்கள். சந்தேகத்தை போக்கிக்கொள்ள, ஒன்று இரண்டு கேள்விகளை வாகன ஓட்டிகள் கேட்க ஆரம்பித்தால் உடனே அவரைச் சூழ்ந்துகொண்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் பயமுறுத்துகிறார்கள்.
இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் இந்த டோல்கேட் ஊழியர்கள் அனைவருமே வடநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டு இருப்பவர்கள். பலருக்கு தமிழ் மொழியே தெரியவில்லை. வாகனங்களில் வருபவர்களை மிரட்டும் இயந்திரமாக மட்டுமே தயார்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இது எல்லா சுங்கச்சாவடிகளிலும் உள்ள நிலைமை.
சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் கொள்ளையின் தலைமைப்பீடமாகவே மாறிவிட்டன என்பதே மறுக்கமுடியாது உண்மை.
செங்கல்பட்டு பரனூரை எடுத்துக்கொள்வோம். தமிழகத்தின் மிக முக்கியமான சுங்கச்சாவடி. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மார்க்க வாகனங்கள் அனைத்தும் மதுரைக்கு வந்துசேர்ந்து பயணிக்கும். திருச்சியை அடையும்போது, அவற்றுடன், ராமேஸ்வரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, கம்பம் மார்க்க வாகனங்கள் சேர்ந்துகொள்ளும்.
உளுந்தூர்பேட்டையில் இவற்றுடன் சேலம், கோவை மற்றும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களும் இணையும். விக்கிரவாண்டி வந்தால், கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி மார்க்க வாகனங்கள் சென்னை நோக்கிய தேசிய நெடுஞ்சாலையில் இணையும்.
திண்டிவனம் வந்தால், புதுவை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம் மார்க்க வாகனங்கள் கலக்கும். தென்மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்கள், மத்திய மாவட்ட வாகனங்கள் என அனைத்தையும் முதலில் உள்வாங்கும் சுங்கச்சாவடி மேல்மருவத்தூர் அருகே ஆத்தூரில் உள்ளது.
இந்த சுங்கச்சாவடியை விட இன்னும் கூடுதலாக, சென்னையிலிருந்தும் சென்னையை நோக்கியும் என இருபக்கமும் வாகனங்களை அதிகமாக உள்வாங்குவது செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிதான்.
இப்போது நினைத்துப்பாருங்கள் இந்த இரண்டு சாவடிகளிலும் எவ்வளவு தொகை தினமும் சுங்கச்சாவடி கட்டணமாக வசூலாகும் என்று. இனி கொஞ்சம் நிதானமாக படியுங்கள்…
முதலில் பெட்ரோல் டீசல் வகை கொள்ளையைப் பார்ப்போம். பரனூர் சுங்கச் சாலை நீளம் 46 கிலோமீட்டர். இதனை ஒரு காரில் கடக்க மூன்று அல்லது நான்கு லிட்டர் பெட்ரோல் தேவை. ஏற்கனவே கார் வாங்கும்போதே சாலைவரி என பெருந்தொகையை வசூலித்து விடுகிறார்கள்.
அதே கார், டோல் சாலையை கடக்க 46 கிலோமீட்டருக்கு பெட்ரோல் டீசல் விலையில், மத்திய மாநில அரசுகளுக்கு 180 ரூபாய் வரை வரியாக செலுத்திவிடும். இப்போது சுங்கக் கட்டணம் 60 ரூபாய், ஆக 46 கிலோமீட்டருக்கு 240 ரூபாய், இதில் காருக்காக கட்டிய சாலை வரி வராது.
கூட்டி வகுத்துப் பார்த்தால் ஒரேயொரு கிலோ மீட்டர் சாலையை கடக்க ஒரு காருக்கே ஐந்தே கால் ரூபாய். அப்படி என்றால் பேருந்துகள், கனரக லாரிகளுக்கு என்ன கதி என்று யோசித்துப் பாருங்கள். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வாகனங்கள் என்றால்கூட ஒரு நாளைக்கு இரண்டு கோடியே நாற்பது லட்ச ரூபாய், வருடத்திற்கு 2,160 கோடி ரூபாய் என வெறும் 46 கிலோ மீட்டர் சாலை, மத்திய மாநில அரசாங்கங்கள் மற்றும் சாலையை அமைத்து வசூல் செய்யும் தனியார் நிறுவனத்திற்கு சம்பாதித்துக் கொடுக்கிறது.
போகட்டும், பெட்ரோல் டீசல் விஷயத்தை விட்டுவிட்டு சுங்கக்கட்டணத்திற்கு மட்டும் வருவோம். கார், வேன், பேருந்து லாரிகள் என 60 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை ஒரு வழிக்கட்டணமாக வசூலிக்கிறார்கள். இவற்றிற்கு இடையிலான சராசரி 180 என வைத்துக்கொள்வோம். வேண்டாம்,100 என்றே வைத்துக்கொள்வோம்.
அதன்படி ஒரு நாளைக்கு மொத்த வசூல் ஒரு கோடி ரூபாய், 46 கிலோ மீட்டர் சாலையை அமைக்க 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆனது சில நூறு கோடிகள். ஆனால் சுங்க வசூலை பாருங்கள், தினம் ஒரு கோடி என வருடத்திற்கு 365 கோடி, இதில் இயக்கம் பராமரிப்பு செலவு 16 சதவீதம் என்று கழித்தாலும் வருடத்திற்கு 300 கோடி 15 ஆண்டுகளில் 4,500 கோடி ரூபாய். நாம் சொல்வது பரனூர் என்ற சுங்கச்சாவடிக்கு மட்டும்.
ஆனால் அரசுத் தரப்பு புள்ளி விவரங்களை கேட்டால் தலை சுற்ற ஆரம்பித்துவிடும். கடந்த ஆண்டு செப்டம்பரில் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுப் பெற்றதின் ஒரு பகுதியை இங்கே நினைவு கூர்வோம்.
தாம்பரம் - திண்டிவனம் நான்கு வழிச்சாலைப் பணி முடிந்து 2005-ஆம் ஆண்டு சுங்கக்கட்டணம் அறிமுகமானது. சாலை அமைக்க 536 கோடி செலவு என மத்திய அரசு தெரிவித்தது. 2018 ஆண்டு செப்டம்பர் வரை பதிமூன்றரை ஆண்டுகால சுங்க வசூல் 1,098 கோடி. அதாவது இரண்டு சுங்கச்சாவடிகளையும் சேர்த்து, ஒரு சுங்கச்சாவடிக்கு சுமார் 600 கோடி. சராசரியாக ஆண்டுக்கு 44 கோடி.
ஒரு டோல்கேட்டில் தினமும் என கணக்கிட்டால் சுமார் 12 லட்சம். சாதாரண டாஸ்மாக் கடையிலேயே தின வசூல் சில லட்சம். 9,000 கோடிகளுக்கும் கணக்கில் வரும் வெறும் 1,098 கோடிகளுக்கும் இடையில் மயிரிழையளவுதானே வித்தியாசம்.
சரி, எப்போதுமே ஆளும் கட்சிதான் இதைப்பற்றி கண்டுகொள்ளாது. ஆனால் ஆண்ட கட்சியும் மற்ற முக்கிய கட்சியும் ஏன் கண்டன அறிக்கையோடு மட்டுமே நிறுத்திக்கொள்கிறார்கள்? வழக்கு தொடுத்து, செய்த செலவுக்கு மேல் எடுத்த பிறகும் ஏன் சுங்கக் கட்டணம், அதுவும் வருடத்திற்கு வருடம் உயர்த்தப்படும் கட்டணம் என்று, குடுமியை இழுக்க மாட்டேன் என்கிறார்கள்?
சுங்கச்சாவடி அரசியல், அது பெரிய கூட்டு அரசியல். எல்லோரும் சேர்ந்த கும்மாள அரசியல். பல்லாயிரம் கோடியை பங்கு போடும் பகுத் அச்சா அரசியல் என்று சொல்லப்படுவது சும்மாதானா?
- ஏழுமலை வெங்கடேசன்
குறிப்பு : உண்மையான வசூல் விவரங்களை எவரும் வெளியிடமாட்டார்கள் என்பதால், நமக்கு தெரிந்தவர்களிடம் திரட்டிய புள்ளிவிவரங்கள் அடைப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதனால் வசூல் விவரங்கள் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.