வியாழன், 13 பிப்ரவரி, 2020

தமிழ்நாட்டின் வியாபம் ஊழல்?


தமிழகத்தின் கிராமப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய குடும்பத்து இளைஞர்கள்   அரசு பணி  பெற வேண்டுமானால் தேர்வாணையம்  ஓர்  நேர்மையான அமைப்பாக இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும். 1974-ஆம் ஆண்டு நான் தேர்வாணையம் நடத்திய  தொகுதி 4 தேர்வு எழுதினேன். சிலருக்கு நியமன உத்தரவு வந்தது. எனக்கு வரவில்லை.  பின் 1975 எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதால் தொகுதி 4 ல் தேர்வு செய்யப்பட்ட நியமனங்கள் ரத்து செய்யப்படுவதாகவும்,  தொடர்ந்து திருத்திய தேர்வு முடிவுகள் பத்திரிகைகளில் வந்தன. எனது  எண்ணும்,  தொடர்ந்து நியமன ஆணையும் எனக்கு வந்தது.  முதன் முதலில் தேர்வாணைய  நியமனங்கள் நேர்மையாக நடப்பதில்லை  என்பது  எனது சொந்த அனுபவம் மூலம் உறுதியானது. நான் அரசுப்பணியில் நேர்மையாக இருக்க இதுவே உந்து சக்தியாக  இருந்தது என்றால்மிகையில்லை.
கடந்த காலங்களில் நடந்த எல்லா தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. பெரிய அளவில் அவை வெளியே தெரிவதில்லை. 2019 ஆம்  ஆண்டு ஒரே மாவட்டத்தில்  99 பேர் தேர்வாகினர் என்ற செய்தி சமூக ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பின் தான்  அது விஸ்வரூபம் எடுத்து, சிபி-சிஐடி  விசாரணை வரை வந்துள்ளது.  இராமநாதபுரம் மற்றும் கீழக்கரையில்  தேர்வெழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டனர் என்று  வாழ் நாள் முழுதும் தேர்வெழுத தடை என்ற அறிவிப்போடு தேர்வாணையம் இப்பிரச்சனையை முடித்துக் கொண்டது. ‘கருப்பு ஆடுகளைகளை யெடுப்போம்’, ‘தேர்வை ரத்து செய்ய மாட்டோம்’ என்று தமிழக அமைச்சரும் அவசர அவசரமாக  அறிவித்து பிரச்சனையை முடித்து விட்டார்.
வெளிச்சத்திற்கு வந்து முடித்து வைக்கப்பட்ட நிகழ்வு
அதன் பின் பூதம் கிளம்பியிருக்கிறது. 2019  தேர்வு மட்டுமல்ல.  2018, 2017, 2016 என அது பின்னோக்கி சென்று  கொண்டே இருக்கிறது. இதுவரை 37 பேர் கைது. நீதிமன்றத்தில்   இடைத்தரகர் சரண்.. இப்படி தொடர்கிறது.  குறிப்பாக அதிக முக்கியத்துவம் உள்ள தொகுதி 1 மற்றும்  தொகுதி 2, 2ஏ தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் முறைகேடுகள் ... தொகுதி 1 ல் வெற்றி பெற்ற  72 பேரில் 62 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்கிறது ஓர் செய்தி. அதில் மூன்று விடைத்தாள்களை ஒருவரே எழுதியுள்ளார். இப்படி தொடர்கிறது முறைகேடுகள். சமூக ஊடகங்களில் இதை விட அக்குவேறு ஆணிவேராக பிரித்துப் போடுகின்றனர்.   தேர்வாணையத்தில் முன்பு வெளிவந்த சில முறைகேடுகளை நினைவுபடுத்திக்கொள்வது, நடந்து கொண்டிருக்கும்  ஊழல் முறைகளை உறுதி செய்ய உதவியாக  இருக்கும். 2001-2002  ஆம் ஆண்டு நடந்த தொகுதி ஐ தேர்வு குறித்து  ஏ.பி.நடராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதன்  W.A.1063-2009 மற்றும் 1287-2009 வழக்கில் நீதியரசர்கள்  எலிப் தர்மாராவ்  மற்றும் டி.அரிபரந்தாமன் ஆகியோர் 91 பேர் தேர்வு செய்யப்பட்ட நேர்வில் 83 பேர் விதி மீறலில் ஈடுபட்டுள்ள னர்  எனக் கூறி அவர்களின் தேர்வு செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளனர். ( 91 பேரின் விடைத்தாள்களை வழக்குரைஞர் ஆணையம் மூலம் தணிக்கை செய்திருந்தனர்). உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டிலும் அது உறுதி செய்யப்பட்டது. பின் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு  வழக்கில் மீண்டும் அனைவரும் பணியில் தொடர்கின்ற னர். இந்த 83 பேர்களில் பலர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளாக பதவி உயர்வும் பெற்றுள்ளனர்.  
தேர்வாணையத்திற்கு  அவமானமில்லையா?
2011ஆம் ஆண்டு த.உதயச்சந்திரன் தேர்வாணைய செயலாளராக இருந்த போது ஆர்.செல்லமுத்து  தலைவராகவும் மற்றும் 14 உறுப்பினர்களும் இருந்துள்ள னர். பல் மருத்துவர், மோட்டார் வாகன  ஆய்வாளர் II போன்ற சில தேர்வுகளில்  முறைகேடுகள் நடந்துள்ளது  என்பதறிந்து சில நடவடிக்கைளை அவர் எடுத்துள் ளார். நேர்முகத்தேர்வில்  21 மாவட்டங்களைச் சேர்ந்த  53 பேருக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட தையும் அதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்ப தையும் கண்டுபிடித்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த சேர்மன் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து தேர்வாணை யத்தின் செயலாளர் உதயச்சந்திரன் தேர்வு நடவடிக்கை களில் தலையிடக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி யுள்ளனர். அவருக்கு கோப்புகளை அனுப்பக்கூடாது என்றும் சுற்றறிக்கை அனுப்பினர். செயலாளர்  பெயரில் தான் அறிவிப்புக்கள் செய்யப்படுகின்றன.  உதயச்சந்திரன், தலைமைச் செயலாளர் மற்றும் ஊழல் தடுப்புத்துறைக்கு புகார் மனு அனுப்பினார். ஊழல் தடுப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சேர்மன் மற்றும் உறுப்பினர்கள்  வீடுகளைச் சோதனையிட்டது. மேற்கண்ட சோதனைகளில் அசல் விடைத்தாள், அதிகாரப்பூர்வமற்ற தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல்,  பரிந்துரைக் கடிதங்கள், பெயர் மற்றும் மாணவர்களின் கடவுச் சீட்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம், 28 மது பாட்டில்கள் ஒரு உறுப்பினர் வீட்டில் இருந்துள்ளது. சண்முகம் முருகன் என்பவர் வீட்டில் ரூ.26.3 லட்சமும், முருகன் சகோதரரும் முன்னாள் காவல் துறை அதிகாரியுமான ஜி.துரைராஜ் வீட்டில் ரூ.17 லட்சமும் இருந்துள்ளது. இந்தப்பணத்தை இரு பிளாஸ்டிக் பைகளில் போட்டு அடுத்த வீட்டு காம்பவுண்டுக்குள் போட்டுவிட்டு திருவாளர் காவல்துறை ஐஜி சுவர் ஏறிக்குதித்து தப்பித்தார் என்றும், அந்தப்பணம் கைப்பற்றப்பட்டதாகவும் 14.10.2011 தேதிய இந்து ஆங்கில செய்தி கூறுகிறது. இந்த நெருக்கடியால்   தேர்வாணைய சேர்மன் ராஜினாமாவும் செய்தார். உதயச்சந்திரன் மாறுதல் செய்யப்பட்டு விட்டார். அப்படியானால் அரசுக்கும் அமைச்சர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகத் தானே பொருள்? 

பணம் கொடுத்தால் தேர்வாணைய உறுப்பினர் பதவி
ஒரு தேர்வாணைய உறுப்பினர் பதவி  பெற  உமா மகேஸ்வரி என்பவரிடம்   67 லட்சம் ரூபாய் நல்லதம்பி என்ற  வழக்குரைஞர் கொடுத்ததாகவும், ஆனால் தனக்கு   பதவி கிடைக்கவில்லை,  பணமும் திருப்பிக்  கிடைக்கவில்லை என்று மதுரை காவல் ஆணையரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.  பணம் கொடுத்தவர் முன்னாள்  சபாநாயகர் கா.காளிமுத்துவின் இளைய சகோதரர்.  உமா மகேஸ்வரி   அதனை மறுத்துள்ளதாகவும் அச்செய்தி  கூறுகிறது. ஆகவே அரசு மட்டத்தில் நல்லதம்பி போல ‘தேர்வாணைய சேர்மன் மற்றும் உறுப்பினர் பதவிகள்  பணம் கொடுத்து தான் பெறுகின்றனர் என்பதும் வெள்ளிடைமலை’ . பின் எப்படி இவர்கள் நேர்மையாக தேர்வு நடத்துவார்கள். பணம் கொடுப்பவர்களுக்குத் தானே நியமனம் வழங்குவார்கள். அப்பொழுது தானே ரூ. 67 லட்சத்தை வட்டியுடன்  திரும்ப எடுக்கமுடியும். இது குறித்து ஐ.ஜி  ஜே.கே.திரிபாதியிடம்  கேட்ட போது சி.பி.ஐ க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று கூறியதாக 14.1.2012 இந்து செய்தி வெளியிட்டது ஆனால் விசாரணை என்ன ஆனது? ‘ஆண்டவனுக்குத்தான் தெரியும்’ ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தேர்வாணைய உறுப்பினர்களாக  2016 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட வி.ராமமூர்த்தி, ஆர்.பிரதாப்குமார், வி.சுப்புராஜ், எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.  பாலுசாமி, எம்.மாடசாமி, பி.கிருஷ்ணகுமார் , ஏ.சுப்ரமணி யன், என்.பி.புண்ணியமூர்த்தி, ராஜாராம் ஆகிய 11 பேர்  நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம்  ரத்து செய்துள் ளது. ஆகவே முழுக்க முழுக்க தேர்வாணைய உறுப்பினர் கள் அரசியல்வாதிகளால் முறைகேடுகள் செய்வதற் காகவே நியமிக்கப்படுகின்றனர் என்றால் மிகையில்லை.
ஆகவே தேர்வாணைய சேர்மன் மற்றும் உறுப்பினர் தேர்வில் வெளிப்படையான தேர்வு முறைகள் வேண்டும். தனி நபர்களுக்குப்பதில்  தலைமைச் செயலகத்தில் உள்ள முக்கியத் துறைகளின் செயலாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள்  கொண்ட அமைப்பாக தற்போதைய அமைப்புக்கு பதிலாக இது மாற்றப்படவேண்டும். அப்பொழுது தான் இவர்களுக்கு பொறுப்பு  இருக்கும். அதோடு அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயல்களாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.  
தொகுதி 1 மற்றும் தொகுதி 2
தொகுதி 1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராகப்பதவி கிடைத்தால், ஐஏஎஸ் ஆகும் வாய்ப்பு நிச்சயம். தொகுதி 2 ல் வருவாய்த்துறையில் பணி வாய்ப்பு  பெறுபவர்களும் ஐஏஎஸ் ஆகும் வாய்ப்பு உள்ளது என்ற நிலை இருக்கிறது.இந்த கனவுகளில் தான் முறைகேடுகள் நடைபெறுகின்றன.  இதர பணிகளுக்கும் பல   லட்சம்  லஞ்சம் கொடுத்து பதவிகள் பெறுகின்றனர். பதவிக்கு வந்த பின் அவர்கள் செலவு செய்த பணத்தை பொது மக்களி டமிருந்து லஞ்சமாகப் பெற்று விடுகின்றனர். எப்படிப் பார்த்தாலும் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான்.  எழுத்துத்தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் பெறுபவர்கள் நேர்முகத்தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று பதவி பெற்றுவிடுகின்றனர் என்று ஒருவர் கூறியது ‘வாட்ஸ்அப்’ மூலம்  வைரலாகிவருகிறது. 1970 களில் என் கல்லூரிப் பேராசிரியர் ஏ.நல்லசாமி  பல முறை எழுத்துத் தேர்வுகளில்  தேர்வாகியதாகவும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற  முடியவில்லை என்றும் கூறியது  ஞாபகம் வருகிறது. அப்பொழுதெல்லாம் அமைச்சர்களின் மருமகன்கள் தான் தொகுதி 1 தேர்வில் வெற்றி பெறுவதாக அவர் கூறுவார். அது இன்றும் தொடர்வது தான் நம் தமிழகத்தின் சாபக்கேடு. 
தற்பொழுது முடித்து வைக்கப்பட்டது
அமைச்சர் பெருமக்களுக்கோ, உயர் அதிகாரிகளுக்கோ  தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ள  முறைகேடுகளில் தொடர்பில்லையா? தொடர்பில்லை யென்றால்  விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி யிருப்பார்களே! இந்த கேள்விகள் இன்று தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது. பல ஆயிரம் பேர் முறைகேடுகள் மூலம் நியமனம் பெற்றிருப்பர் என்பதில் சந்தேகமில்லை. இதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இல்லையா ? எதிர்க்கட்சிகளும், பொது மக்களும் இதனை வலியுறுத்த வேண்டாமா? இடைத்தரகராகச் செயல்பட்ட காவலர் சித்தாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளியான ஜெயக் குமார் என்பவரும் கைதாகியுள்ளார்.  தற்பொழுது  ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடந்த முறைகேடுகளை மட்டுமே சிபிசிஐடி விசாரணை செய்கிறது. அது போதுமானதல்ல. 
சி.பி.ஐ. விசாரணை வேண்டும்
தற்பொழுது தேர்வாணையம்  2018-2019,  2019-2020 ஆகிய இரு ஆண்டுகளுக்கும் 7.2.2020 அன்று இறுதி செய்துள்ள  (9882) தேர்வு செய்துள்ள  தேர்வர்கள் விபரங்களையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் குழு அமைத்து தேர்வர்கள் படித்த பயிற்சி மையம், அதில்  எத்தனை பேர் தேர்வு பெற்றுள்ளனர், ரூ.10 லட்சம், 15 லட்சம் கொடுக்கும் வசதி படைத்தவர்களா, கடன்  வாங்கி கொடுத்து தேர்வு பெற்றுள்ளனரா? அரசியல் செல்வாக்குள்ளவர்களா என்று அனைத்து வாய்ப்புக்களையும் 100 %  விசாரணை செய்து உறுதி செய்து கொண்டு பணி நியமனம் வழங்குவதன் மூலமே எதிர்காலத்தில் இது போன்ற செயல்களைத் தடுக்க முடியும். இல்லையென்றால் இது போன்ற முறைகேடுகள் தொடரவே செய்யும். அத்தகைய விசாரணை முடியும் முன்பு பணி நியமனம் வழங்கக்கூடாது.
தற்பொழுதும் நடக்கும் முறைகேடுகள்
சமீபத்தில் கால் நடை மருத்துவர் பணி நியமனத்திற் கான அறிவிப்பு வந்தது.  விண்ணப்பிக்கும் முன்பே தேர்வர்கள் 12 லட்சம் முதல் 20 லட்சம் வரை கொடுத்தால்  தான் வேலை கிடைக்குமாம் என்கின்றனர். பல் மருத்துவர் ஒப்பந்த நியமனம் அதாவது  ரூ. 26000-00 ஒட்டு மொத்த சம்பளம் என்ற பதவிக்கே  ரூ.15 லட்சம் என்ற செய்தியை தேர்வர்கள் கூறும் போது அதிர்ச்சியாக உள்ளது. இப்பொழுதே ‘ஆள்பிடி’ முயற்சிகள் துவங்கியிருக்கும்  என்பதில் சந்தேகமில்லை. 
தமிழகத்தில்  தற்பொழுது தற்காலிக, ஒட்டு மொத்த ஊதியம் ரூ.40000- பெறும்  கால் நடை மருத்துவர்கள் மறு நியமனம் வழங்கும்  பொழுது மாறுதல்களுக்காக  லஞ்சம் வாங்கிக்கொண்டு கேட்ட ஊர்களுக்கு மாறுதல் வழங்கியதையும், கொடுக்காதவர்கள் மீண்டும் பழைய இடங்களில் நியமிக்கப்பட்ட செய்தியும் உள்ளது.தமிழகத்தில்  சத்துணவு ஊழியர் முதல் அனைத்து  தற்காலிக  நியமனங்களுக்கும், மாறுதல்களுக்கும் லஞ்சம் வாங்குவது தடையின்றி நடைபெற்றுக்கொண்டுள்ளது. 
பயிற்சி மையங்கள்
அப்பல்லோ உள்ளிட்ட  பயிற்சி மையங்கள் தங்கள் மையத்தில் படித்தவர்கள்  அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று விளம்பரம் செய்துள்ளன. 2016 ஆம் ஆண்டு நடந்த தொகுதி 1 தேர்வில் அமைச்சரின் மருமகள்,  உயர் அதிகாரியின் மகன் என   தொகுதி I ல் தேர்வு பெற்று பணியில் உள்ளனர்  என்று செய்திகள் வந்து ள்ளன. பயிற்சி மையக் கட்டணம் ரூ. 70 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாகவும் செய்திகள் கூறு கின்றன. பயிற்சி மையத்தின் பொறுப்பாளர்கள் முறைகேடு களில் ஈடுபட்டு, இடைத்தரகார்களாக செயல்படுகிறார்கள்  என்ற புகாரில்  முழுதுமாக உண்மையில்லை என்று கூறிவிட முடியாது.  ஆகவே அவர்களை  விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.
தற்பொழுது  2017  தொகுதி II ஏ தேர்வு முறைகேடுகள் தொடர்பாகவும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 37 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகவே தேர்வாணையத்தின் தொகுதி I -ல்  2002-க்குப்பின் வெற்றி பெற்ற அனைத்து தேர்வு முடிவுகள் குறித்தும் முழு விசாரணைக்கு  உத்தரவிட வேண்டும். குறிப்பாக தற்பொழுது நடந்துள்ள  தொகுதி 4 முடிவுகள்  9882 வெற்றியாளர்கள் குறித்தும்  சி.பி.ஐ விசார ணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.  இது ஒன்றும் பெரிய பணியாக இருக்காது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குழு அமைத்தால்  அதன் வேலைகள் விரைவிலும், முழுமையாகவும் நடத்திட முடியும். அப்படிச் செய்வதன் மூலமே   தமிழகத்தில் இன்னொரு வியாபம் நடைபெற வில்லை என்றும், அவ்வாறு நடைபெற்ற போதும் முழுமை யாக நடவடிக்கை எடுத்தோம் என்றும் நாம் பெருமைப் பட்டுக்கொள்ள முடியும். இல்லையேல் சந்தேகம் தொடரவே செய்யும். நீதிமன்றத்தில் தற்பொழுது தொடரப்பட்டுள்ள வழக்கில் சிபிஐ  விசாரிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை நீதிமன்றம்  பணி நியமனம்  வழங்கிட  தடை விதிக்கவேண்டும்.
தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை
முதன்மைத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை தற்பொழுது கல்லூரி பேராசிரியர்கள் செய்கின்றனர்.இதனை மாற்றி முதல் கட்டமாக மேல்நிலைப்பட்டதாரி ஆசிரியர்களும், அதனையே கல்லூரி பேராசிரியர்களும் என இரண்டு கட்டமாக  திருத்தும் புதிய முறையைக் கொண்டு  வரவேண்டும். அப்பொழுது தான் மதிப்பெண்கள் முறைகேட்டினைத்தடுக்க முடியும்.   நேர்முகத் தேர்வைப் பொறுத்தவரை வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மாற்று முறையில் நியமிக்கப்படும் தேர்வாணைய உறுப்பினர்களுடன் நேர்முகத்தேர்வுக்கு வரும் தேர்வர்கள் முன்னிலையில் 50 பேர் கொண்ட குழுக்களாக  அமைத்து கேள்விகள் கேட்பதும், அவர்கள் கூறும் பதில் சரியா தவறா என்றும், அதற்கு கிடைக்கும் மதிப்பெண்களை அவ்வப்பொழுது டிஜிட்டல் போர்டு மூலம் வெளியிட்டு அவரது மொத்த மதிப்பெண்கள் மற்றும்  அவரது  ‘ரேங்க்’ ஐ  உடனுக்குடன் வெளியிட வேண்டும். அப்பொழுது தான் நேர்முகத்  தேர்வுகளில் தேர்வாணைய உறுப்பினர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் வழங்கி முறைகேட்டில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும். 
தேர்வாணைய நிர்வாகத்தை முதலில் சுத்தம்  செய்க!
தற்பொழுது தேர்வாணையத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்மையான முறையில் தேர்ச்சி பெற்றனர்  என்பதை நிரூபிக்கவும், அமைச்சர் பெருமக்கள், உயர் அதிகாரிகளுக்கு இம்முறைகேட்டில்  தொடர்பில்லை என்பதை நிரூபிக்கவும், அவர்கள் இத்தேர்வில் தலையிட வில்லை என்பதை நிரூபிக்கவும்  முழுமையான சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட  வேண்டும். இல்லையேல் ‘கருப்பு ஆடுகள் சாயம் பூசிய ஆடுகளாகவே’ மக்களு க்குத்  தெரியும். அவ்வாறு சிபிஐ விசாரணை முடியும் வரை  பணி நியமனம் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும்.
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீதே சந்தேகம் உள்ளதாக வலைத்தளங்களில் செய்திகள் வருகின்றன.  தேர்வாணை யத்தின் சேர்மன் மற்றும் நான்கு உறுப்பினர்கள் தாங்க ளாகவே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஆளுநர் அவர்களை விடுவிக்க வேண்டும். செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகிய  இருவரையும் உடனடி யாக விடுவித்துவிட்டு நேர்மையான  அதிகாரிகளை நிய மித்து அதன் பின் சி.பி.ஐ விசாரணை நடத்தப்படவேண்டும். 
ஆதார் எண்ணைப்பதிவு செய்வதாலோ, தேர்வு பெற்ற வர்கள் விபரங்களை இணையதளத்தில் பதிவிடுவதாலோ தற்பொழுது நடந்திருப்பது போன்ற முறைகேடுகளைத் தடுக்க இயலாது. நேர்மையான,அதிகாரிகள் நியமிக்கப் பட்டு, தேர்வு மையம் தொடங்கி, விடைத்தாள் திருத்தும் மையம், நேர்முகத்தேர்வு என அனைத்திலும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நடவடிக்கைகள் மூலமே இந்த முறைகேடுகளைத் தடுக்க முடியும். அதற்கு நேர்மையான ஓர் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். மக்கள் அதற்கு தயாராக வேண்டும். 

-மா.அண்ணாதுரை, 
மாவட்ட வருவாய் அலுவலர்(ஓய்வு), 
ஈரோடு
-----------------------------------

ஆங்கிலேய அரசை எதிர்த்தாரா சாவர்க்கர்.?
சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் எப்போதாவது மன்னிப்பு கேட்டாரா, இல்லையா என்பது குறித்த பதிவுகள் ஏதும் அரசிடம் இல்லை என்று இந்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தகவல் அறிந்தவர்களின் கருத்துப்படி, சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர்.
1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன் பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார்.
“சாவர்க்கர் சகோதரர்கள் சிறைச்சாலைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய எங்களை ரகசியமாக தூண்டிவிடுவார்கள். ஆனால் எங்களுடன் வெளிப்படையாக இணைந்து கொள்ள சொன்னால் பின்வாங்கிவிடுவார்கள். சாவர்கர் சகோதரர்களுக்கு கடின உழைப்பு கொண்ட வேலைகள் வழங்கப்படவில்லை” என்று பரிந்திர கோஷ் என்ற மற்றொரு கைதி பின்னர் ஒரு சமயம் தெரிவித்தார்.
15 நாட்களுக்கு ஒரு முறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினோல்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்பு கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது.
தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திந்தார். பதிலுக்கு, அவர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்திற்காக பணியாற்ற தயாராக இருந்தார்.
ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்? அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரனம் என்ன என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல், இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
காந்தி கொலை வழக்கில் தங்கள் மீது படிந்த கறையை நீக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ். -க்கு நீண்ட காலம் எடுத்தது. இந்த வழக்கில் சாவர்க்கர் சிறைக்குச் சென்றார், பின்னர் வழக்கில் இருந்து விடுபட்டு 1966 வரை வாழ்ந்தார், ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.”
ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கூட அவரை புறக்கணித்தது. அவர் எப்போதுமே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். காந்தி கொலை தொடர்பாக சாவர்க்கர் மீதான சந்தேகம் எப்போதும் மறையவே இல்லை என்பதே காரணம். சாவர்கருக்கு தெரியாமல் காந்தி படுகொலை நடந்திருக்க முடியாது என்று கபூர் கமிஷன் அறிக்கையிலும் தெளிவாக கூறிவிட்டது.
--------------------------------------

அரசு மருத்துவமனைகளுக்கு
 மூடுவிழா.
ஏழைகள் பெருமளவில் பயன்பெறும் அரசு  மருத்துவமனைகளை ஒழிப்பதற்கான வழிவகை களை இந்த பட்ஜெட்டில் மோடி அரசு அறி வித்திருக்கிறது. மாவட்ட அரசு மருத்துவமனை களில் ‘‘அரசு - தனியார்- கூட்டு’’ திட்டத்தின் அடிப்படையில் தனியார் மருத்துவக்கல்லூரியை நடத்த  மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. மேலும் அரசும் தனியாரும் கூட்டாக மருத்துவ மனையை நடத்தும் போது தனியார் நிர்வாகம் நோயாளிகளிடம் உரிய கட்டணத்தை பெற்று  மருத்துவமனையை நடத்தலாம் என்கிறது.  அப்படியென்றால் இனி அரசு மருத்துவமனை களில் பணமிருப்போருக்கு மட்டுமே  சிகிச்சை, ஏழை நோயாளிக்கு இடமில்லை என்ற நிலை  உருவாகும். 
இது மக்களுக்கான சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பில் இருந்து அரசு தன்னை முற்றிலும் விடுவித்துக் கொள்ளும் ஏற்பாடாகும். தற்போது தமிழகம் போன்ற மாநிலங்களில் மாவட்ட மருத்துவமனை என்பது தனித்து இயங்குவதில்லை. அது குக்கிராமங் களையும் இணைந்திருக்கும் சங்கிலித்தொடர். கிராமப்புற ஆரம்ப  சுகாதாரம் நிலையம் துவங்கி,  மாவட்ட மருத்துவமனை, அரசு  மருத்துவ கல்லூரி வரை தேவைக்கேற்ற உரிய சிகிச்சைக்காக  இணைத்திருக்கும் ஏற்பாடாகும். இதனை சீர்குலைப்பது அவசர சிகிச்சைபிரிவில் இருப்ப வர்களை வீதியில் தூக்கி வீசுவதற்கு ஒப்பாகும். 
இந்தியாவில் ஏற்கனவே மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய அரசு மருத்துவமனைகள் இல்லை.  கிராமப்புறங்களில் 51.9 சதவிகித மருத்துவ மனைகளும், நகர்ப்புறங்களில் 61.4 சதவிகித மருத்துவமனைகளும் தனியார் வசம்தான் இருக்கின்றன.  இதன் காரணமாக கிராமப்புறங் களில் 79.5 சதவிகிதத்தினரும், நகர்ப்புறங்களில் 83.7 சதவிகிதத்தினரும் தங்கள் சேமிப்பில் இருந்தே மருத்துவ செலவினங்களை மேற்கொண்டு வரு கின்றனர். இந்த மருத்துவ செலவினங்கள்  வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களையும் வறுமைக்கோட்டுக்குள் தள்ளி வருகிறது என் கிறது 2018 என்எஸ்ஓ அறிக்கை. ஏழைகளுக்கு இருக்கும் ஒரே உயிர்காக்கும் புகலிடம் அரசு மருத்துவமனைகள்தான்.
10 இந்தியர்களில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக  உலக சுகாதார நிறுவன அறிக்கை  எச்சரித்திருக்கிறது. இதுபோன்ற எச்சரிக்கைகளையெல்லாம் பொருட்படுத்த அரசு தயாராக இல்லை. வளர்ந்த நாடுகள் முறையான ஆரம்ப காலப் பரிசோதனைகள் மற்றும்  சிகிச்சை மூலம் இளமைக்கால மரணத்தை 20சதவிகிதம் குறைத் திருக்கின்றன. ஆனால் இந்தியாவைப் பொருத்த வரை அதற்காக முறையாக எந்த ஏற்பாடும் இல்லை.  இந்தியர்களில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு  ஏழைகளுக்கு எந்தவொரு தனியார் அல்லது அரசு சுகாதார காப்பீடும் இல்லை என்கிறது 2018 சமூக நுகர்வுக்கான தேசிய கணக்கெடுப்பு. இந்த நிலையில்தான், இருந்த கொஞ்ச நஞ்ச அரசு மருத்துவமனை ஏற்பாடுகளையும் குழிதோண்டி புதைக்கும் வேலையை மோடி அரசு தற்போது மேற்கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் தனியாரை அனு மதிக்கும் முடிவை அறவே கைவிட வேண்டும்.
-------------------------------