திவால் அறிவிப்பு...

அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் நேவல்’ நிறுவனம், குறித்த நேரத்தில் கப்பல்களை கட்டித் தராததால், அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அம்பானி சகோதரர்களில் ஒருவரான அனில் அம்பானி நடத்தும் நிறுவனங்களில் ஒன்று ‘ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினியரிங் லிமிடெட்’ RelianceNaval and Engineering Limited (R-Naval) எனப்படும் கப்பல் கட்டும் நிறுவனமாகும். சுருக்கமாக ‘ஆர்- நேவல்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்திற்கு, மத்திய பாதுகாப்புத்துறை, கடந்த 2011-ஆம் ஆண்டுரூ. 2500 கோடி மதிப்பிலான, 5 ரோந்துக்கப்பல்களை (Naval offshore patrol vessels - NPOVs) கட்டித் தருவதற்கான ஆர்டர்களை வழங்கியிருந்தது.ஒப்பந்தப்படி, ‘ஆர்- நேவல்’ 2000 டன் எடைகொண்ட ரோந்துக் கப்பல்கள் ஐந்தை, 2014-15 ஆம் ஆண்டுக்குள் தயாரித்து அளித்திருக்க வேண்டும். ஆனால்,இதுவரை ஒரு கப்பலைக் கூட அளிக்கவில்லை. 
இதுகுறித்தே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகமானது, ஆர்- நேவல் நிறுவனத்திற்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கப்பல்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், உரிய அபராதம் செலுத்துவோம் என்று ஆர்- நேவல் நிறுவனம் ஒப்பந்தத்தில் கூறியிருந்தது. அதன்படி ரூ. 980 கோடி அபராதத் தொகையை, வங்கி உத்தரவாதத்திலிருந்து மத்திய பாதுகாப்புத்துறை தற்போது எடுத்துக் கொண்டிருக்கிறது.
அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் லிமிடெட்’நிறுவனம், கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து நஷ்டக் கணக்கு காட்டி வருகிறது.வங்கியில் வாங்கிய கடனையும் கட்டவில்லை. குறிப்பாக ஐடிபிஐ வங்கி அதிக அளவில் கடன் கொடுத்திருந்த நிலையில், இந்த கடனைச் செலுத்துவதில் சலுகை அளிக்க வேண்டும் என்று தேசியநிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம் ‘ஆர்நேவல்’ நிறுவனம் மனு அளித்துள்ளது. 
அத்துடன் திவால் நோட்டீஸ் அளிக்கவும் திட்டமிட்டு வருகிறது.
-----------------------------
ஐ.ஏ.எஸ்.முதலிடம் 
பெற்றவர்  வீட்டுக் காவலில்.

ஜம்மு காஷ்மீரில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடிமைப் பணிக்கான ஐ.ஏ.எஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தவர் ஷா பைசல். இவர் சொந்த மாநிலமான காஷ்மீரிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து 2019 மார்ச் 16-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற கட்சியைத் தொடங்கினார்.
இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அப்பகுதியை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது பா.ஜ.க அரசு. இந்த நடவடிக்கையின்போது பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.



ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பா.ஜ.க அரசுக்கு எதிராகவும் கருத்துக் கூறி வந்தார் ஷா பைசல். இதையடுத்து, ஆகஸ்ட் 13-ம் தேதி பைசலை டெல்லி விமான நிலையத்தில் கைது செய்த போலிஸார் அவரை ஸ்ரீநகர் எம்.எல்.ஏக்கள் விடுதியில் வீட்டுக்காவலில் அடைத்தனர்.
இந்நிலையில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஷா பைசல் மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்துள்ளது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எந்த வித விசாரணையும் இன்றி ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசலும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-----------------------------
பாஜக அமைச்சர் மாலையிட்டதால்
கங்கை நீரால் சுத்தம்.
பீகாரில் பா.ஜ.க அமைச்சர் மரியாதை செலுத்திய பின் கங்கை நீர் கொண்டு அம்பேத்கர் சிலையை சுத்தம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஒரு பேரணியில் உரையாற்ற பெகுசராய் சென்ற மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், அங்குள்ள பூங்காவில் சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இந்நிலையில், நேற்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் சி.பி.ஐ-யைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க அமைச்சர் கிரிராஜ் சிங் மாலையிட்ட அம்பேத்கரின் சிலையை கங்கை நீர் கொண்டு சுத்தப்படுத்தினர். அப்போது அவர்கள் அம்பேத்கர் மற்றும் பூலே ஆகியோரை புகழ்ந்து முழக்கமிட்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “அமைச்சர் கிரிராஜ் சிங் ஒரு மனுவாத ஆதரவாளர். அம்பேத்கர் எதிர்த்து போராடிய எல்லாவற்றிற்கும் அவர் ஆதரவாக நிற்கிறார்.



அவர் இங்கு வந்து மக்களிடையே வகுப்புவாத கருத்துகளைப் பேசினார். எனவே, இன்று சகோதரத்துவத்தை புனித நீர் கொண்டு சுத்தப்படுத்தினோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
தலித் மக்கள் கோவில் அல்லது பொது இடத்திற்கு வந்து சென்றால் அவ்விடத்தை ஆதிக்க சாதியினர் கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்து வந்தனர். இந்நிலையில், பீகாரில் பா.ஜ.க அமைச்சர் மரியாதை செலுத்திய பின் கங்கை நீர் கொண்டு அம்பேத்கர் சிலையை சுத்தம் செய்தது பலரையும் வியப்பில்  ஆழ்த்தியுள்ளது.
-----------------------------------

தாதா சாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.

இவர்  நாசிக்கில் 1870-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார். 1885-ம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன.

பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.

இவர் தனது 73-வது வயதில் 1944-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி இயற்கை எய்தினார்.

அவருடைய நினைவாக தாதா சாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.
--------------------------------
பிரச்னைக்குரிய கூகுள் வரைபடம்.
இந்தியாவில் இருந்து பார்க்கிறபோது, கூகுள் இணையதள வரைபடத்தின் எல்லைகள், காஷ்மீரை முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக காட்டுகிறது.

அதே நேரத்தில் இந்தியாவுக்கு வெளியே இருந்து இந்த வரைபடத்தைப் பார்த்தால் காஷ்மீரை பிரச்சினைக்குரிய பகுதியாக சித்தரிக்கிற விதத்தில் எல்லைக்கோட்டை புள்ளிகளைக் கொண்டு வெளியிட்டு இருக்கிறது.
பாகிஸ்தானில் இருந்து பார்த்தால்
அதாவது, பாகிஸ்தானில் இருந்து கொண்டு கூகுள் வரைபடத்தை பார்ப்பவர்களுக்கு வரைபடத்தின் எல்லைகள் காஷ்மீரை ஒரு பிரச்சினைக்குரிய இடமாக காட்டும். அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து பார்த்தால், அதே வரைபடத்தின் எல்லைகள் காஷ்மீரை முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக காட்டும்.

குறிப்பாக நீங்கள் எந்த நாட்டில் இருந்து கூகுள் இணையதள வரைபடத்தை பார்க்கிறீர்களோ, அதற்கேற்ப அது சர்ச்சைக்குரிய எல்லைகளை மாற்றுகிறது.

இச் செய்தியை அமெரிக்காவில் இருந்து வெளியாகிற ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை வெளியிட்டு இருக் கிறது.

இதுபற்றி கூகுள் இணையதள நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரை கேட்டபோது அவர் கூறியதாவது:-

சர்ச்சைக்குரிய பகுதிகள் மற்றும் அம்சங்களை நியாயமாக சித்தரிப்பதற்காக கூகுள் ஒரு நிலையான, உலகளாவிய கொள்கையை கொண்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய அல்லது உரிமை கோரும் நாடுகள், அதன் உலகளாவிய களத்தில் உரிமை கோரல்களை கூகுள் வரைபடம் காட்டுகிறது. இது எந்த ஒரு தரப்பும் எடுத்துள்ள நிலைப்பாட்டை அங்கீகரிக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை. உள்ளூர் பிரதேசத்துக்கு ஏற்ப மொழிபெயர்க்கப்பட்ட வரைபட தயாரிப்புகள், உள்ளூர் சட்டங்களுக்கு ஏற்றபடி அந்த நாட்டின் நிலையை எடுத்துக் காட்டுகின்றன.

ஆனால் நாங்கள் எங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு, மிகச்சிறந்ததும், மிகவும் புதுப்பித்ததுமான, அதிக துல்லியமான வரைபடங்களை தயாரித்து அளிப்பதற்கு உறுதி கொண்டுள்ளோம். அதிகாரபூர்வமான ஆதாரங்களில் இருந்து புதிய அல்லது அதிகம் துல்லியமான தகவல்கள் கிடைக்கிறபோது அல்லது புவிசார் அரசியல் நிலைமைகள் மாறும்போது எங்கள் வழங்குனர்கள் தருகிற தரவுகள் அடிப்படையில் எல்லை புதுப்பிப்புகளை நாங்கள் செய்கிறோம்.
என்றார்.
-----------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?