வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

பயிர் காப்பீடும் தனியாரிடம்.

விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு மானிய திட்டங்களில் மத்திய அரசின் பங்கு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் இந்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள், பயிர்களுக்கு இனி இன்சூரன்ஸ் செய்வது கட்டாயமில்லை என்று கூறப்படுவதால், அவர்களுக்கு காப்பீடு உத்தரவாதமற்ற நிலைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 
அதன்படி, மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டுத் திட்டங்களை அமலாக்குவதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால், பிரதமரின் பசல் பீமா யோஜனா, மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க்காப்பீட்டுத் திட்டம் ஆகியன திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, காப்பீடு நிறுவனங்களின் செயல்பாட்டு ஒதுக்கீடு 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
மத்திய அரசின் மானியம் பாசன வசதி இல்லாத பகுதிகள் அல்லது பயிர்களுக்குப் பிரீமியம் விகிதம் 30 சதவீதமாகவும், பாசன வசதி உள்ள பகுதிகள் அல்லது பயிர்களுக்கு 25 சதவீதமாகவும் இருக்கும். 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பாசன வசதி பெற்ற மாவட்டங்கள், முழுமையான பாசன வசதி பெற்ற பகுதி அல்லது மாவட்டமாகக் கருதப்படும். வரையறுக்கப்பட்ட கால வரம்புக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்களுக்குப் பிரீமியம் மானியத்தை விடுவிக்க மாநில அரசுகளால் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அடுத்த பருவங்களுக்கு இந்தத் திட்டத்தை அமலாக்க அனுமதிக்கப்படமாட்டாது. 
கரீப் (ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம்) பருவத்திற்கான கடைசித் தேதி மார்ச் 31 ஆகவும், ரபி (அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை) பருவத்திற்கான கடைசித் தேதி செப்டம்பர் 30 ஆகவும் இருக்கும்.
வடகிழக்கு மாநிலங்களுக்குத் தற்போதுள்ள 50:50 என்ற மத்திய அரசின் பிரீமிய மானிய விகிதப் பங்கு 90 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட நடைமுறைகள் 2020 கரீப் பருவத்திலிருந்து செயல்பாட்டுக்கு வரும். மேலும், காப்பீடுக் கோரிக்கைகள் விரைவாக பைசல் செய்யப்படுவதற்கும் வழிவகுக்கும் என்றும் மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை இவ்வாறு முடிவு செய்துள்ளதால், பயிர் காப்பீடு திட்டத்தால் பயனடைந்த அல்லது எதிர்வரும் காலங்களில் பயனடையக்கூடிய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
காரணம், மத்திய அரசு சார்பில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த மேற்கண்ட பயிர் காப்பீடு திட்டங்களின் பங்கை பாதியாக குறைத்துள்ளது. அதன்படி, ஏற்கனவே 50 சதவீத (நீர்பாசன பகுதி) பிரீமிய மானியத்தின் பங்கை 25 சதவீதமாக பாதியாகவும், நீர்ப்பாசனம் செய்யப்படாத பகுதிகளுக்கு 30 சதவீதமாகவும் குறைத்துள்ளது.
2016ம் ஆண்டில் பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டபோது, ​​பயிர் கடன்கள் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர கட்டாயப்படுத்தப்பட்டது. இத்திட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து தனியார் காப்பீடு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளதாக உழவர் குழுக்கள், எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. ஆனால், பெரும் காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை செலுத்துவதில் அதிக ‘க்ளைம்’ தொகை கேட்பதால் நஷ்டத்தை சந்தித்தாக கூறப்படுகிறது. 
அதையடுத்து 2019-20ல் ஐசிஐசிஐ லோம்பார்ட் மற்றும் டாடா ஏஐஜி உள்ளிட்டவை இத்திட்டத்தில் இருந்து விலகி உள்ளன. ஏற்கனவே பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களும் இத்திட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டன.
விவசாயிகளை பொறுத்தமட்டில் அவர்கள் செலுத்தும் பிரீமியத்தில் கரீப் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 2 சதவீதமும், ரபி பயிர்களுக்கு 1.5 சதவீதமும் மற்றும் பணப்பயிர்களுக்கு 5 சதவீதமும் செலுத்துகின்றனர்.
 அரசின் சார்பில் செலுத்தப்படும் மானிய பிரீமிய நிலுவை தொகையை மத்திய, மாநில அரசுகள் சமமாகப் பிரித்துக் கொண்டன. இருப்பினும், மத்திய அரசின் மறுசீரமைப்பு அறிவிப்பால், மத்திய அரசின் மீதான நிதி சுமை குறையும், மாநிலங்களின் மீதான நிதிச் சுமை அதிகரிக்கும். பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் இனி இன்சூரன்ஸ் செய்வது கட்டாயமில்லை என்று கூறப்படுவதால், அவர்களுக்கு பயிர் காப்பீடுக்கான உத்தரவாதமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுகுறித்து, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ‘‘மத்திய அரசின் காப்பீடு திட்டங்களில் சேரும் 58 சதவீத விவசாயிகள் கடனாளிகள்; அவர்கள் இனி கட்டாயமாக காப்பீடுத் திட்டத்தில் சேரவேண்டியது இல்லை. முதல் ஆண்டில் (பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளின்) எண்ணிக்கை குறையக்கூடும். ஆனால் அதற்குப் பிறகு அது மீண்டும் அதிகரிக்கும். மாநிலங்களுடனான ஆலோசனை மற்றும் அனைத்து காப்பீடு நிறுவன பங்குதாரர்களின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த திட்டத்தில் மத்திய அரசு மறுசீரமைப்பு மாற்றம் செய்துள்ளது’’ என்றார்.

+-----------+--------------+
கணினியாளர் மரணம்.
கணினி அறிவியலில் கட், காப்பி, பேஸ்ட் செயல்முறையை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானி லாரி டெஸ்லர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கணினி உலகின் வரப்பிரசாதமாக கருதப்படும் டெஸ்லர் தனது 74 வது வயதில் காலமானார். முன்னாள் ஜெராக்ஸ் ஆராய்ச்சியாளர் லாரி டெஸ்லர், இன்று கணினியை எளிமையாக பயன்படுத்த உதவும் கட், காப்பி, பேஸ்ட் செயல்பாடுகளை கண்டுபிடித்தவர் ஆவார். அமெரிக்காவை சேர்ந்த லாரி டெஸ்லர், கணினி தயாரிப்பு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களில் பல புதிய கண்டுபிடிப்புகளை படைத்தார். 
தொடர்ந்து, ஜெராக்ஸ் பார்க், ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட உலகில் பெரிய தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் மின்னணு நிறுவனங்களில் பணியாற்றி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை படைத்தவர். அந்த வகையில் இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் உலாவி அதாவது ப்ரவுசரை உருவாக்கி கணினி மயமாக்கலுக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.
கடைசியாக, கணினி வரலாற்று அருங்காட்சியகத்தில் ஜிப்சி குறித்து டெஸ்லர் உற்சாகத்துடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், இன்றளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிரபலமான கட், காப்பி, பேஸ்ட் என்ற செயல்முறையை கண்டுபிடித்த பெருமைக்குரியவர். 74 வயதான லாரி டெஸ்லர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கட், காப்பி, பேஸ்ட், பைன்ட் அன்ட் ரீபிலேஸ் மற்றும் பலவற்றை கண்டுபிடித்ததவர், முன்னாள் ஜெராக்ஸ் ஆராய்ச்சியாளர் லாரி டெஸ்லர் ஆவார். உங்கள் வேலை நாள் எளிதாகும் புரட்சிகர கருத்துக்களுக்கு நன்றி என்று ஜெராக்ஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
+-----------------+-----------------------------+
மீண்டும் மதிப்பிழப்பு.
ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் ,2000 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம் மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்தியன் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
கள்ள நோட்டுகளையும், கறுப்பு பணத்தையும் ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கடந்த 2016-ம் ஆண்டில் மோடி அரசு அறிவித்தது.
மோடி அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு 3 மாதங்களாக ஏ.டி.எம் மையங்களில் வரிசையில் நின்றனர்.
பல உயிர்களைக் காவு வாங்கியபிறகு புதிய 500 ரூபாய், மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்திற்கு வந்தன. உழைக்கும் ஏழை மக்களிடம் இருந்த சேமிப்பு பழக்கத்தை முற்றிலுமாக சிதைக்கும் வகையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இந்த அரசாங்கம் கொண்டுவந்தது.
இதனால், சாமானியர்களின் சேமிப்பு பழக்கம் குறைந்ததே தவிர, எந்த கறுப்பு பணத்தையும் மோடி அரசாங்கம் ஒழிக்கவில்லை. அதற்கு மாறாக கறுப்பு பணம் வைத்திருந்தோர் தங்களது பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிக்கொண்டனர்.
இந்த மோசமான நடவடிக்கையால் படுத்த இந்திய பொருளாதாரம் தற்போது வரை மீளவில்லை. இந்நிலையில் ஏ.டி.எம் மையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்களில் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும்போது 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் இந்தியன் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வங்கி பணப் பரிவர்த்தனைகளிலும் இனிமேல் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியன் வங்கியின் இந்த அறிவிப்பு மீண்டும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையே இத்தகைய பிரச்னைக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.