கொரோனா சில தகவல்கள்
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பலகலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,74,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,397 பேர் பலியாகி உள்ளனர்.
இத்தாலியில்தான் அதிகபட்சமாக 4,032 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸின் தோற்றுவாயாக இருந்த சீனாவில் மரண எண்ணிக்கை 3,139ஆக உள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் இரானும், ஸ்பெயினும் உள்ளன. இரானில் 1,433 பேரும், ஸ்பெயினில் 1,093 பேரும் பலியாகி உள்ளனர்.
இப்படியான சூழலில் இளைஞர்களை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகமான ஜெனிவாவிலிருந்து இணையம் மூலமாக உரையாற்றிய அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ், "இளைஞர்களே உங்களுக்கு ஒரு செய்தி உள்ளது. நீங்கள் வெல்ல முடியாதவர்கள் அல்ல. உங்களையும் இந்த வைரஸ் வாரக்கணக்காக மருத்துவமனையில் இருக்க வைக்கலாம் அல்லது நீங்கள் மரணிக்கக் காரணமாக அமையலாம். கவனமாக இருங்கள். வயதானவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிருங்கள்," என்றார்.
சர்வதேச அளவில் வயதானவர்கள்தான் கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக அதிகளவில் பலியாகி இருக்கின்றனர்.
இத்தாலியில் வைரஸ் தொற்று காரணமாகப் பலியானவர்களின் சராசரி வயது 78.5.
சீனாவில் பலியானவர்களில் 1 சதவீதம் பேர்தான் 50 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். இறந்தவர்களில் 15 சதவீதம் பேர் 80 வயதுக்கும் மேல் உள்ளவர்கள்.
----------+--------------------+-----------------
உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.
சார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது.
தொண்டை அருகே உள்ள செல்களில் அது முதலில் தொற்றிக் கொள்ளும். சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அவற்றை ``கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலைகளாக'' மாற்றும். அது பெரும் எண்ணிக்கையில் புதிய வைரஸ்களை உருவாக்கி உடலில் செலுத்தி, அதிக செல்களில் தொற்று ஏற்படுத்தும்.
ஆரம்ப கட்டத்தில் நீங்கள் நோயுற மாட்டீர்கள். சிலருக்கு ஒருபோதும் அறிகுறிகள் தோன்றாது.
நோயாக உருவாகும் காலம், அதாவது தொற்று ஏற்பட்டு அதன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கான காலம், ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால் சராசரியாக இது ஐந்து நாட்கள் என்ற அளவில் உள்ளது.
லேசான நோய்
ஏறத்தாழ அனைவருக்கும் இப்படித்தான் இருக்கும்.
கொரானா வைரஸ் தொற்று பரவிய 10 பேரில் எட்டு பேருக்கு கோவிட் - 19 நோய் லேசான பாதிப்பாக அமையும். காய்ச்சலும், இருமலும் தான் இதற்கான முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
உடல் வலிகள், தொண்டை வறட்சி, தலைவலியும் கூட வரலாம். ஆனால் இவை வந்தாக வேண்டும் என்றும் கிடையாது.
காய்ச்சலும், அசௌகரியமாக உணர்தலும், தொற்று பரவியதற்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்பாற்றலின் செயல்பாட்டால் ஏற்படக் கூடியவை. இந்த வைரஸ் ஊடுருவல் கிருமியாக இருக்கும். உடலின் மற்ற செல்கள், ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என உணர்ந்து சைட்டோகின்ஸ் என்ற ரசாயனத்தை உற்பத்தி செய்யும்.
இவை தான் நோய் எதிர்ப்பாற்றலாக செயல்படும். ஆனால் உடல் வலி, காய்ச்சலையும் ஏற்படுத்தும்.
கொரோனா வைரஸ் இருமல் ஆரம்பத்தில் வறட்டு இருமலாக இருக்கும் பின்னர் வைரஸ் தொற்று ஏற்படும்போது, செல்களில் எரிச்சல் தோன்றும்.
சிலருக்கு இருமலின் போது கெட்டியான சளி வெளியாகும் - வைரஸால் கொல்லப்பட்ட நுரையீரல் செல்களின் கெட்டியான சளியாக அது இருக்கும்.
படுக்கையில் கிடந்து ஓய்வெடுத்தல், நிறைய பானங்கள் குடித்தல் மற்றும் பாரசிட்டமால் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையின் விசேஷ சிகிச்சை முறை எதுவும் தேவையில்லை.
இந்த நிலை சுமார் ஒரு வாரத்துக்கு இருக்கும் - இதிலேயே பெரும்பாலானோர் குணமாகிவிடுவர். வைரஸை எதிர்த்து நோய் எதிர்ப்பாற்றல் போராடும் காரணத்தால் இவ்வாறு நடக்கும்.
இருந்தபோதிலும், சிலருக்கு தீவிர கோவிட் -19 நோய் பாதிப்பு ஏற்படும்.
இந்த நிலையில், இந்த நோய் பற்றி நாம் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் இவை. மூக்கு ஒழுகுதல் போன்ற தீவிர சளி அறிகுறிகளும் ஏற்படலாம் என்றும் ஆய்வுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தீவிர பாதிப்பு
வைரஸ் பாதிப்புக்கு எதிராக நோய்த் தடுப்பாற்றல் உக்கிரமாக செயல்படும்போது, இது நோயாக உருவாகும்.
உடலின் மற்ற பகுதிகளில் அழற்சியை ஏற்படுத்த இது ரசாயன சமிக்ஞைகளை அனுப்பும். ஆனால் இதை கவனமாக சமநிலைப்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான அழற்சி ஏற்பட்டால் உடல் முழுக்க பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
``நோய்த் தடுப்பாற்றல் எதிர்வினை செயல்பாட்டில் சமநிலையற்ற தன்மையை இந்த வைரஸ் ஏற்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக உடல் அழற்சி இருக்கிறது. இதை எப்படி செய்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை'' என்று லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் நத்தாலி மேக்டெர்மோட் கூறியுள்ளார்.
நுரையீரல் அழற்சி, நிமோனியா எனப்படுகிறது.
உங்கள் வாயில் இருந்து, மூச்சுக் குழாய் வழியாகச் சென்று, நுரையீரலின் சிறிய குழல்களில் அதனால் செல்ல முடியும் என்றால், நுண்ணிய காற்று அறைகளில் அதனால் போய் அமர்ந்து கொள்ள முடியும்.
அங்கு தான் ரத்தத்திற்கு ஆக்சிஜன் செல்வதும், கரியமில வாயு நீக்கப்படுவதும் நடக்கிறது. ஆனால், நிமோனியாவில் இந்த அறைகளில் தண்ணீர் கோர்த்துக் கொண்டு, சுவாச இடைவெளி குறைந்து, சுவாசிப்பது சிரமம் ஆகும்.
சிலருக்கு சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்படும்.
சீனாவில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி பார்த்தால், 14 சதவீதம் பேருக்கு இந்த நிலை வரை பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது.
சிக்கலான நிலையில் பாதிப்பு
பாதிக்கப்பட்டவர்களில் 6 சதவீதம் பேருக்கு சிக்கலான நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் உடல் செயல்பாட்டை இழக்கிறது, இதுவே மரணம் ஏற்படவும் காரணமாக உள்ளது.
நோய்த் தடுப்பாற்றல் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு, உடல் முழுக்க பாதிப்பை ஏற்படுத்துவது தான் பிரச்சினை.
ரத்த அழுத்தம் அபாயகரமான அளவுக்கு குறையும்போது உடல் உறுப்புகள் செயல்பாடு குறையும் அல்லது முழுமையாக நின்றுவிடும்.
நுரையீரலில் பரவலான அழற்சி ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்படும்போது, உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜனை அளிப்பதை நுரையீரல் நிறுத்துவிடுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்க முடியாமல் சிறுநீரகங்களை அது தடுக்கக் கூடும். உங்கள் குடல்களும் பாதிக்கப்படலாம்.
``நீங்கள் அதற்கு ஆட்படும் அளவுக்கு பெரிய அளவில் அழற்சியை இந்த வைரஸ் ஏற்படுத்தலாம். அது பல உறுப்புகளை செயல் இழக்கச் செய்யலாம்'' என்று டாக்டர் பரத் பன்கானியா கூறுகிறார்.
வைரஸை நோய்த் தடுப்பாற்றலால் அடக்கியாள முடியாமல் போனால், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் அது பரவி, இன்னும் அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் உடலின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். ECMO உள்ளிட்ட சிகிச்சைகள் அதில் அடங்கும்.
தடிமனான குழாய்களில் ரத்தத்தை வெளியில் எடுத்து, ஆக்சிஜனேற்றம் செய்து, மீண்டும் உடலில் செலுத்தக் கூடிய செயற்கை நுரையீரல் இது.
ஆனால் உறுப்புகள் உடலை உயிருடன் வைத்துக் கொள்ள முடியாமல் போகும் போது, அது உயிர்ப்பலி ஏற்படுத்தக் கூடும்.
----------------------------------+--------------+------
இந்தியாவும் கொரோனாவும்
உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறதா?
ஏற்கெனவே 3,000 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்ட, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள சுவாச மண்டலம் தொடர்பான இந்த வைரஸ் தாக்குதல் நோயை சமாளிக்க உலகில் ஆயத்தமான முதல் வரிசை நாடுகளில் நாம் உள்ளதாக இந்தியா கூறுகிறது.
இந்த வைரஸ் பாதிப்பால் முதலாவது மரணத்தை சீன அரசு ஊடகங்கள் உறுதி செய்த ஆறு நாட்களில், உலக அளவிலான சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு (WHO) பிரகடனம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜனவரி 17 ஆம் தேதியிலிருந்தே விமான நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.
மார்ச் 6 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதற்கு முந்தைய சில நாட்களில் நோய் கண்டறியப்பட்டது. அதில் இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் 16 பேரும் அடங்குவர். பதற்றம் அதிகரித்து வருகிறது.
பள்ளிக்கூடங்களிலிருந்து அறிவுறுத்தல்கள் தொடர்ந்து அனுப்பப்படுகின்றன. சில இடங்களில் அலுவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அலுவலகங்கங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கடந்த வார நிலவரத்தின்படி நாட்டில் 21 விமான நிலையங்கள், 77 துறைமுகங்களில் 600,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாக ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்திருந்தார்.
முறையாக எவ்வாறு கை கழுவலாம்
அருகில் உள்ள நேபாளத்துடன் சர்வதேச எல்லையை பகிரும் ஐந்து மாநிலங்களில் எல்லைப் பகுதியில் வாழும் 27,000-க்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் 10 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இரானிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வருபவர்களைப் பரிசோதிப்பதற்காக, இரானில் ஓர் ஆய்வகத்தை இந்தியா அமைக்கிறது.
இந்த வார இறுதிக்குள் இந்தியா முழுக்க 34 பரிசோதனை நிலையங்களில் இந்த வைரஸ் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இந்த வைரஸ் தீவிரமாகப் பரவ நேரிட்டால் நிலைமையை எப்படிக் கையாள்வது என்று சுகாதாரத் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வார்டு வசதிகள் உருவாக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதிக்குள் இந்தியா முழுக்க 34 பரிசோதனை நிலையங்களில், இந்த வைரஸ் பரிசோதனைக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். இப்போது 15 பரிசோதனை நிலையங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. போதிய எண்ணிக்கையில் N 95 முகக்கவச உறைகள் (மாஸ்க்) கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.
``எதிர்பாராத வகையில் தீவிரமாக நோய் பரவ நேரிட்டால், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா முழு அளவில் ஆயத்தமாக உள்ளது. நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம், உன்னிப்பாக நிலைமையை கவனித்து வருகிறோம், விழிப்புடன் இருக்கிறோம்'' என்று ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.
இவையெல்லாம் நம்பிக்கையான விஷயங்களாக இருக்கின்றன. ஆனாலும் தீவிரமாக நோய் பரவினால், அதைத் தடுக்க இவை போதுமானதாக இருக்காது என்று கூறப்படுகிறது.
முதலில், விமான நிலையங்கள், துறைமுகங்களில் மருத்துவப் பரிசோதனைகள் செய்தாலும், எந்த அளவுக்கு இதன் தொற்று பரவியிருக்கும் என்பது தெளிவாகத் தெரியாது. வைரஸ் பெருகி நோயாக வெளிப்படுவதற்கான காலம் - தொற்று பரவி அறிகுறிகள் தென்படுவதற்கு இடைப்பட்ட காலம் - 14 நாட்கள் வரை இருக்கும் என்கின்றனர். அது 24 நாள் வரைகூட ஆகலாம் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பரிசோதனைகளின் போது நோய் அறிகுறிகள் தென்படவில்லை என்று ஊருக்குச் சென்றவர்கள், தொற்று பரவி அதை தங்களுடைய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குக் கொண்டு சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. ``விமான நிலையத்திற்கு வந்து சேருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது நல்ல விஷயம். அதைத் தொடர வேண்டும். ஆனால், இப்போது அது மட்டும் போதாது. ஏற்கெனவே இந்தியாவில் உள்ள நடைமுறைகள் மூலமாக, வேறு சில கண்காணிப்பு நடைமுறைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும்'' என்று உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறுகிறார்.
முகமூடிகள் அணிவது பாதுகாப்பானதா?
பொது சுகாதார வசதிகள் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருந்தாலும், போலியோவை ஒழித்ததில் மற்றும் 2009ல் பறவைக்காய்ச்சல் தொற்று நோயை சமாளித்ததில், மிக சமீபத்தில் நடந்த உயிர்பலி வாங்கும் நிபா வைரஸ் தீவிர தாக்குதலை சமாளித்தது ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது. இந்திய அரசும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து மேற்கொண்ட தேசிய போலியோ கண்காணிப்புத் திட்டம் (NPSP), சமுதாய கண்காணிப்பு மற்றும் நேரடி தொடர்பு பரிசோதனை என்ற செயல்பாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இப்போது கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு இந்த இரண்டு செயல்பாடுகளும் தேவைப்படுகின்றன. (சுகாதார அலுவலர்கள் சுமார் 450 பேரை தொடர்பு கொள்கின்றனர் என்றும் அதில் 3 மாநிலங்களில் ஐந்து இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்)
இந்தியாவில் போதிய அளவில் முகக்கவச உறைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அவற்றை ஏற்றுமதி செய்ய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் சளிக் காய்ச்சல் கண்காணிப்புக்கான திட்டம் உள்ளது - H1N1 உள்ளிட்டநான்கு வகையான ப்ளூ வைரஸ்கள் இங்கே காணப்படுகின்றன. ப்ளூ காய்ச்சலுக்குப் பரிசோதனை செய்யும் வசதிகளைக் கொண்ட பல மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவை வழக்கமாக குளிர்பருவத்தில் காணப்படும் என்றாலும், இந்தியாவின் கோடை மற்றும் மழைக் காலங்களிலும் மக்களைத் தாக்குகிறது.
வைரஸ் இல்லை என்று முதல்கட்ட பரிசோதனையில் தெரிய வந்த நபர்கள் மூலம், சமுதாயத்தில் அடுத்த நிலையில் இந்த வைரஸ் பரவுகிறதா என்பதை, இந்த சளிக் காய்ச்சல் கண்காணிப்புத் திட்டம் மூலம் கண்காணிக்கலாம் என்று நச்சுயிரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ``இதற்கு முன்பு இப்படி செய்திருக்கிறோம். மீண்டும் அதுபோல செய்ய முடியும். நம்மால் விரைவாக மருத்துவப் பரிசோதனை செய்ய முடியும். அது சாத்தியமானது.பெரும்பாலான கொவிட் -19 தொற்றுகள் லேசானவை'' என்று டெல்லியை சேர்ந்த தொற்று நோய்கள் துறை வல்லுநர் லலித் காந்த் கூறுகிறார்.
மற்ற சவால்கள்
எதிர்பாராமல் தீவிரமாக வைரஸ் பரவினால், இந்தியாவுக்கு வேறு சவால்கள் இருக்கும். இங்குள்ள பொது சுகாதார வசதியின் தரம் ஏற்றத்தாழ்வு மிகுந்ததாக உள்ளது. இப்போதுள்ள மருத்துவமனைகளில், திடீரென நோயாளிகள் வருகை அதிகரிப்பு காரணமாக, கூட்டம் அதிகரிக்கலாம். போதிய அளவுக்கு முகக்கவச உறைகள், கையுறைகள், கவுன்கள், மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தீவிரமாக நோய் பரவினால், அதை சமாளிக்க இந்தியா போராட வேண்டியிருக்கும் என்று நச்சுயிரியல் நிபுணர் ஜேக்கப் ஜான் கூறுகிறார்.
``நாம் இன்னும் நமது நாட்டில் 21வது நூற்றாண்டுக்கான சுகாதார மேலாண்மை நடைமுறையை உருவாக்கவில்லை. எனவே, அந்த இடைவெளியின் பாதிப்பை எதிர்கொண்டாக வேண்டியிருக்கும்'' என்று scroll.in - இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
மக்களை கூட்டமாக தனிமைப்படுத்துவது மற்றும் சீனாவை போல பெரும் எண்ணிக்கையில் மருத்துவமனையில் அனுமதிப்பது ஆகியவை இந்தியாவில் சாத்தியமானதாக இருக்காது. அதற்குப் பதிலாக `இந்தியா வழியிலான தீர்வு' ஒன்றை நச்சுயிரியல் நிபுணர்கள் முன்வைக்கின்றனர். உரிய காலத்தில் வைரஸ் பாதிப்பைக் கண்டறிந்து, வகைப்படுத்துவதை உறுதி செய்துவிட்டால், லேசான தொற்று பாதிப்புகளுக்கு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறச் செய்யலாம்; தீவிர நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கலாம் என்பதாக அந்தத் திட்டம் உள்ளது. மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு நிலைகளில் அவசரகால செயல்பாட்டு மையங்கள் அமைக்க வேண்டும் என்றும், சுகாதார வசதிகளில் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது
ரயில்வே சமையல் அறைகளில், மாஸ்க் அணிந்த சமையலர்கள் உணவு தயாரிக்கின்றனர்.
சுகாதார சேவை தகவல் தொகுப்பு முழுமையானதாக இல்லை என்பதும் கவலைக்குரியதாக உள்ளது: மரணங்கள் மற்றும் நோய்கள் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வதில் கூட இந்தியாவின் செயல்பாடு போதிய அளவுக்கு இல்லை - 77 சதவீத மரணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மரணத்துக்கான காரணத்தை டாக்டர்கள் பல சமயங்களில் தவறாகக் கணிக்கிறார்கள் என்று டொரன்டோவை சேர்ந்த குளோபல் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது சளி காய்ச்சல் தொடர்பான மரணங்கள் பற்றி சிறு சிறு துண்டுகளாக மட்டுமே தகவல்கள் கிடைக்கின்றன.
பழங்கதைகளும், தவறான எண்ணங்களும்
சமூக வலைதளங்கள் மூலம் பரவும் புரளிகள், பழங்கதைகள் மற்றும் தவறான எண்ணங்கள் இந்தத் தொற்று பற்றிய எதிர்வினையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
முகநூலுக்கு சொந்தமான வாட்ஸப் மூலம் வைரலாகப் பரவி வரும் ஒரு தகவலில் - பூண்டு, இஞ்சி, வைட்டமின் சி மற்றும் எலுமிச்சை ஆகியவை இந்த வைரஸ் தாக்காமல் பாதுகாப்பைத் தரும் என்று சொல்கிறது என்று உண்மை கண்டறியும் Alt News Science தளத்தின் ஆசிரியர் சுமையா ஷேக் தெரிவித்தார்.
``இது சிக்கலானது அல்ல என்பதால் இதுதான் மிகவும் வைரலான வாட்ஸப் தகவலாக உள்ளது. ஏனென்றால் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்கள் `பெரிய மருந்து கம்பெனி ஏமாற்று வேலைகளை' முறியடிப்பதாக உள்ளன. எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டோ அல்லது இயற்கை தீர்வுகள் மூலமோ மக்கள் தாங்களாக சிகிச்சை செய்து கொள்ளக் கூடாது என்று மருந்து நிறுவனங்கள் கூறும்'' என்று டாக்டர் ஷேக் கூறுகிறார்.
நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில், அரசின் ஒரு துறை ஒரு ஹோமியோபதி மருந்தை பரிந்துரை செய்துள்ளது. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான இந்திய நாட்டின் ``மருந்து'' என்று அது குறிப்பிட்டுள்ளது.
யோகா செய்யலாம், கஞ்சா பயன்படுத்தலாம், பசுவின் சிறுநீர் மற்றும் சாணம் உட்கொள்ளலாம் என்பது போன்ற பரிந்துரைகளும் வேகமாகப் பரவுகின்றன. இதுபோன்ற அறிக்கைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் தரக் கூடாது என்று ஹர்ஷ்வர்த்தன் கேட்டுக்கொண்டுள்ளார். கைகளைக் கழுவுதல், உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல், அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் மருத்துவமனையை நாடுதல் என்ற எளிமையான முன்னெச்சரிக்கை விஷயங்களை கடைபிடிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வார்டுகள் அரசு மருத்துவமனைகளில் உருவாக்கப்படுகின்றன.
இந்தியா விரைவாக செயல்பாட்டு திட்டத்தை உருவாக்கி, வெளிப்படையாக தெரியப்படுத்தி, தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த - 24 மணி நேர ஹாட்லைன்கள் ஏற்படுத்தி, உதாரணமாக, இதுபற்றிய நிலவரம் குறித்து மக்கள் அதிக தகவல்கள் பெறும் வசதிகளை உருவாக்க வேண்டும்.
``நோயின் தீவிரத்தன்மை மாறி வரும் நிலையில் அதற்குப் பொருத்தமான வகையில், ஆதாரங்களின் அடிப்படையிலான, மதிப்பிடப்பட்ட பயன்கள் குறித்த விரைவான திட்டமிடல் தேவைப்படுகிறது. பரந்த நாடு என்ற வகையில், செயல்பாடுகளும் முடிவுகளும் பரவலாக்கப்பட வேண்டும், ஆனால் நன்கு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் சுவாமிநாதன்.
பதற்றம் கொள்வதற்கான அவசியம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று சுகாதார அமைச்சர் கூறுகிறார். ஆனால், இந்தத் தொற்று பரவுதல் மற்றும் இதைக் கட்டுப்படுத்துதல் விஷயத்தில் இந்தியா மிகவும் விழிப்புடனும், திறந்த மனதுடன் இருக்க வேண்டியுள்ளது.
---------------------------------------------------
நன்றி:பி.பி.சி.