கொடுப்பது கார்பரேட்களுக்கு,

கேட்பது மக்களிடம்?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன்கி பாத்' என வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு முறை உரையாற்றும்போதும் நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறுவார். அறிவுரைகள் எப்போதும் நாட்டு மக்களுக்கு மட்டுமே.
மாட்டுக்கறி பிரச்னை முதல் குடியுரிமை சட்டம் தொடர்பான பிரச்னை வரை அனைத்திலும் அவரது வலதுசாரி கருத்துகளை மட்டும் சொல்லிவிட்டுச் செல்வார். அந்தவகையில் இந்த முறை, கொரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் வேளையில் மூன்றாவது முறையாக கொரோனா பற்றி மக்களிடம் உரையாற்றி அறிவுரை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி, நாட்டுக்கு மக்களே நிதி உதவு அளியுங்கள் என்றும், நிதியை அரசு பகிர்ந்து கொடுக்கும் என கூறியுள்ளார். கொரோனா பேரிடரால் அவதிப்படும் மக்களிடம் பணம் பெற்று அவர்களுக்கு கொடுக்கும் இந்த திட்டத்தை பலரும் ட்விட்டரில் வியந்து பாராட்டு வருகின்றனர்.


நேற்றைய தினம் மக்களிடையே பேசிய மோடி, உங்களுக்கு சிரமம் அளிக்கும் இந்த முடிவுக்காக மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் கூறினார். மேலும் இந்த கடினமான முயற்சி, போராட்டம் எல்லாம் நாட்டு மக்களின் வாழ்வா, சாவா போராட்டம் போன்றது எனவும் தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் போராளிகளான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோரை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார்.
மோடி அறிவித்த இந்த முன்று பிரிவினரும் கொரோனாவை நேரடியாக எதிர்த்துப் போராடும் போராளிகள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்தப் போராளிகளை தற்காப்புக் கவசமின்றி போரில் இறக்கியுள்ள சேதி பிரதமருக்கு தெரியுமா எனும் கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.


அதுமட்டுமின்றி, கொரோனாவிற்கு எதிரான போருக்கு நன்கொடை அளியுங்கள். அது ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் நீண்ட பயணத்திற்கு உதவும் என ஒரு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது நீண்ட தூரம் நடைபயணமாகச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் என்ன மாதிரியான எண்ணவோட்டத்தை ஏற்படுத்தும் என்பதை பிரதமரால் புரிந்துகொள்ள முடியுமா?
பொதுமக்களிடம் நிதி திரட்டி சேவை செய்யும் அளவிற்குத் தான் இந்திய பொருளாதாரம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 முன்னதாக, மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இந்தியப் பொருளாதாரம் அதலபாதளத்துக்குச் சென்றது. அந்தச் சூழலில் திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டிருந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் சேமிப்புப் பணத்தையும் எடுத்துக்கொண்டது பா.ஜ.க அரசு. மோடி பதவிக்கு வந்த பின்னர் ஆறு ஆண்டுகளில் அம்பானி,அதானி போன்ற கார்பரேட்களுக்கு 14,00,000 கோடிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்து அரசுக்கு வர வேண்டிய பணத்தை இல்லாமல் ஆக்கியது.
160,00,000 கோடிகள் வங்கிக்கடன்கள் வாராக்கடன்கள் என்று அறிவித்து மக்கள் பணத்தினை நாசம் செய்து பொருளாதாரத்தையே அசைத்தது மோடியின் பொருளாதாரக் கொள்(ளை) கை.
பணமதிப்பிழப்பால் பெரும் பணக்காரர்களுக்கு எந்த விதமான பாதிப்பில்லை.அப்பாவி எளிய மக்கள்தான் ஆண்டுகணக்கில் பாதிக்கப்பட்டனர்.வேலைவாய்ப்பிழந்தனர்.112 உயிர்கள் பலியானது.
சரி இதுஒருபுறமிருக்க, நாடே வறுமையில் வாட குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் நர்மதை அணை அருகில் ரூ.3,000 கோடியில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மிக உயரமான சிலை அமைக்கப்பட்டது. அதுவும் மேக் இன் இந்தியா ,சீன பொருட்களை வாங்காதீர்கள் என மக்களுக்கு அறிவுரை கூறி விட்டு சீனாவில் அச்சிலை தயாரிக்கப்பட்டது.
2000 கோடிகள் கங்கையை சுத்தம் செய்வதாக கூறி நாறடிக்கப் பட்டது.அழிந்து போன சமஸ்கிருத மொழியை வளர்க்க ,இல்லாத சரஸ்வதி நதியை ,தடத்தைக் கண்டுபிடிக்க என ஆயிரக்கணக்கில் கோடிகள் ஒதுக்கி மக்களிடம்  வரிகளால் பிடுங்கப்பட்ட பணத்தை விரயம் ஆக்கியுள்ளனர்.
ஆனால் மக்களுக்கு இப்போது மருத்துவம் செய்ய மக்களையே பணம்  கொடுக்கக் கூறி மனதால் பேசுகிறார் பிரதமர் மோடி.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆரம்பகட்டத்தில் இருக்கும்போது , டெல்லியின் ராஜபாதையை மீளுருவாக்கம் செய்ய 20,000 கோடியில் திட்டம் அறிவிக்கப்பட்டது. 
இந்தியா முழுமைக்கும் தொற்றைத் தடுப்பதில் மாநில அரசுகளுக்கு அதிக பணம் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில், டெல்லியின் ராஜபாதையை மீளுருவாக்கம் செய்யவேண்டிய தேவை என்ன?
இந்த முழுப் பணத்தையும் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பு நிதியாக வழங்கலாமே என்கிற யோசனை மோடிக்கு இல்லையா ? 
படேல் சிலை முதல் ராஜபாதை வரை மக்கள் பணத்தை வீணடித்து விட்டு மக்களிடம் நிதி கேட்பது நியாயமா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
------------------------------------------------------------------
கொஞ்சமாவது மனிதத் தன்மை வேண்டாமா?
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகையால் இந்த வைரஸ் சமூகப் பரவலாக உருவெடுப்பதைத் தடுக்கும் விதமாக மத்திய அரசு ஏப்ரப் 14ம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித முன்னேற்பாட்டினையும் செய்யவில்லை. இதனால் புலம்பெயர் தினக்கூலி ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட ஆயத்தமான போது, போக்குவரத்து வசதி இல்லாதால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தங்கள் ஊருக்குச் செல்லும் வழியில் இத்தகைய தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் கடுமையான துன்பங்களை அனுபவித்தனர். காவல்துறையினரின் கெடுபிடிகள், தடியடிகள், தோப்புக்கரண தண்டனைகள், சிறைபிடிப்புகள் இவற்றை மீறி ஊர் செல்ல அவர்கள் முண்டியடித்துக் கொண்டு சாலையில் நடக்கத் தொடங்கினர். பெருந்திகிலோடு சாலையில் பயணித்த அவர்கள் வழியில் கண்ட வாகனங்களில் எல்லாம் தொற்றிக் கொண்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணித்தனர்.
வாகன வசதி கிடைக்காமல் நடந்து சென்றவர்களில் பலர் தங்கள் உயிரை பசிக்கும், சாலைவிபத்திற்கும் பலிகொடுத்த பரிதாபங்கள் அரங்கேறி உள்ளன.
டெல்லியில் ஒரு உணவகத்தில் வீட்டு விநியோக ஊழியராக பணிபுரிந்த 39 வயதுடைய நபர் ஒருவர், மார்ச் 28 அன்று ஆக்ராவில் இருந்து மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது வழியில் இறந்தார். அவர் ஆக்ராவில் இருந்து, சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள மபத்ஃபா கிராமத்தில் வசிக்கும் இவர் மூன்று குழந்தைகளின் தந்தை ரன்வீர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள உணவகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார்.
அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு போலிஸார் எடுத்துச் சென்றனர். பிரேத பரிசோதனையில் மாரடைப்பு ஏற்பட்டதே அவருடைய மரணத்திற்கு காரணம் என்று தெரியவந்தது. நீண்ட தூர நடைப்பயணத்தின் சோர்வு அவருக்கு இருந்ததினால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோன்று மார்ச் 29 காலை, குர்கானில் இருந்து நவபாரத் டைம்ஸின் மூத்த நிருபர் சோனு யாதவ் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது வேகமாக நகரும் கேன்டர் தாக்கியது. ஹரியானாவைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். இறந்தவர்களில் பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளும் அடக்கம் எனக் கூறியுள்ளார்.
இருப்பினும், ஏ.என்.ஐ உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் இந்த விபத்து குறித்து, இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு என்றும் மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளன.
கடந்த மார்ச் 27 ந் தேதி இரவு, தெலங்கானாவில் இருந்து அண்டை மாநிலமான கர்நாடகாவின் ரைச்சூர் மாவட்டத்தில் வீடுகளுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழுவைச் சேர்ந்த 8 பேர் சாலை விபத்தில் பலியாகினர். இறந்தவர்களில் 18 மாத குழந்தை, ஒரு சிறுவன் மற்றும் ஒன்பது வயது சிறுமி ஆகியோர் அடங்குவர்.
தெலங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்டத்தில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் 31 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு பொலிரோ மேக்ஸ் திறந்த டிரக்கில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனம் மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.
காயமடைந்தவர்கள் தற்போது உஸ்மானியா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மீதமுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷம்ஷாபாத் நகரில் உள்ள ஒரு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதைப்போன்று மார்ச் 28 அன்று மும்பை-குஜராத் நெடுஞ்சாலையில் விராரில் நான்கு பேர் மீது லாரி ஏறியது. இறந்த 4 பேரும் ராஜஸ்தானின் பாஸ்வாடாவைச் சேர்ந்த ரமேஷ் பட் (55), நிகில் பாண்டே (32), நரேஷ் கலுசுவா (18), லாராம் பாகோரா (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கடந்த 28ந் தேதி மொராதாபாத்தின் பக்வர்ஹா பகுதியில் ஹரியானாவின் சோனிபட்டில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள தனது கிராமத்திற்கு நடந்து சென்றபோது 26 வயது ஷூ தொழிற்சாலை ஊழியரான நிதின் குமார் வீட்டிற்கு நடந்து சென்றபோது பேருந்து மோதி பலியானார்.
ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்ட மரணங்களுக்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டில் ஒரு குழந்தை உட்பட 4 புலம்பெயர் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட பிறகு, கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி இல்லாததால் வனப்பாதையை தேர்ந்தெடுத்து வந்துள்ளனர். காட்டு வழியே வரும்போது, காட்டுத் தீ ஏற்பட்டு பரிதாபமாக பலியாயினர்.
இதைப்போன்று மேற்கு வங்கத்தில், லால்சுவாமி என்ற 32 வயது புலம்பெயர் தொழிலாளி ஊரடங்கு உத்தரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த போது மயங்கி விழுந்து இறந்தார்.
மார்ச் 28 ம் தேதி சூரத்தில் 62 வயதான ஒருவர் மருத்துவமனையில் இருந்து தனது வீட்டிற்கு எட்டு கி.மீ தூரம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது இறந்துள்ளார்.
ஆக, இதுவரை ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை புலம்பெயர் தொழிலாளர்கள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தி வயர் ஆங்கில இணைய இதழ் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இதனையடுத்து, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வீட்டை விட்டு மக்கள் வெளியே வரவேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாநிலங்கள், மாவட்டங்களின் எல்லைகளை மூடி மாநில அரசுகள் சீல் வைத்துள்ளன.


இப்படி இருக்கையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வெளி மாநிலங்களில் கூலித் தொழிலாளர்களாக உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வழியில்லாமல் நிற்கதியாகத் தவிக்கின்றனர். அத்தியாவசிய தேவைக்கு என எவ்வித போக்குவரத்து வசதிகளும் இல்லாத காரணத்தால் டெல்லியில் பிழைப்பு நடத்தி வந்த தொழிலாளர்கள் 200 கி.மீ தொலைவுக்கு கால்நடையாகவே படையெடுத்து சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பதற்கு முன்பு பசியாலும், பொருளாதாரமின்மையாலும் மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. மேலும், ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்களுக்கு அடுத்த 21 நாட்களுக்கு தேவையான வசிப்பிடம், உணவு, பொருளாதார தேவை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திவிட்டு அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடி அரசைச் சாடியுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள பரேலி பகுதிக்கு நடந்தே வந்து சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அங்குள்ள பேருந்து நிலையத்துக்கு முன்புள்ள சாலையில் உட்கார வைத்து, சாலைகளில் தெளிக்க வைத்திருந்த கிருமி நாசினிகளை நகர அரசு அதிகாரிகள் அவர்கள் மீது தெளித்துள்ளனர்.


இது தொடர்பாக பேசியுள்ளா அஃப்சல் என்ற தொழிலாளி ஒருவர், “எங்களை பேருந்து நிலையம் முன்பு உட்கார வைத்ததும் உண்பதற்கு ஏதும் சாப்பாடு கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் திடீரென எங்கள் மீது இந்த கிருமி நாசினியை பீய்ச்சி அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எங்களுடன் பெண்கள் குழந்தைகள் எனப் பலர் இருந்தனர்” என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
வைரஸை ஒழிப்பதற்காக பயன்படுத்தும் கிருமி நாசினியை தொழிலாளர்கள் மீது தெளித்துள்ள இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொழிலாளர்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகலாம் என்றும், இவ்வாறு செய்யக்கூடாது என்ற அடிப்படை அறிவுகூட உ.பி,அரசுக்கு இல்லையா? என கண்டனங்கள் எழுந்துள்ளன.
----------------------------------------------------------------------
விரைவில் தீர்வு வரும்
உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவிரைவில் முடிவுக்கு வந்துவிடும் என நோபல் பரிசு வென்ற அறிவியல் ஆய்வாளர் மைக்கேல் லெவிட் கூறியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் 19 எனும் ஆட்கொல்லி வைரஸ் தொற்று நோய் தற்போது உலகின் 200க்கும் மிகாத நாடுகளில் பரவி பல்லாயிரக் கணக்கான உயிர்களை பலிவாங்கி வருகிறது. இதனால் உலக அளவில் பொருளாதார நிலை கடுமையான அழிவை சந்தித்து வருகிறது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்துக்கு மேல் இருந்தாலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோ 7 லட்சத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக இயற்பியலாளரும், நோபல் பரிசு வென்றவருமான அறிவியல் ஆய்வாளார் மைக்கேல் லெவிட், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்க்கு பேட்டியளித்துள்ளார்.


அதில், உலகெங்கும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்றும், சமூகத்தில் இருந்து மக்கள் விலகி இருத்தல் வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில் சமூக விலகலே கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தாக இருக்க முடியும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சீனாவை போன்று அமெரிக்காவும் விரைவில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டும் வரும். ஆனால் அதிக உயிரிழப்புகள் ஏற்படாது என மைக்கேல் லெவிட் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பாக ஜனவரி மாதம் முதல் ஆய்வு மேற்கொண்டு வரும் இவர், சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு சிக்கும் என தெரிவித்திருந்தார். அதுபோலவே அமெரிக்காவில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், சீனாவிலும் கொரோனாவால் 80 ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்படுவார்கள் என்றும், 3 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழக்க நேரிடும் என்றும் கூறியிருந்தது. அதுவும் நடந்தது.
இந்நிலையில், தற்போது கொரோனாவின் தாக்கம் முடிவுக்கு வரும் என அவர் கூறியிருப்பது ஏதாவது தெரியாமல் அவர் கூறியிருக்க மாட்டார் என சற்று ஆறுதல் தந்துள்ளது.
---------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?