நம்பிக்கை ஒளி....
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் வேளையில், வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் மூலம் சிகிச்சையில் உள்ள நோயாளிகளை குணப்படுத்தும் பிளாஸ்மா தெரபியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கையில் எடுத்துள்ளது.
இதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் குணமடந்தவர்களின் விருப்பத்தை ஆராய்ந்துவிட்டு பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தோ, குணப்படுத்துவதற்கான மருந்தோ ஏதும் இல்லாத காரணத்தால் தற்போதைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகள் கொண்டும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கொண்டும் நோயாளிகள் குணமாக்கப்பட்டு வருகின்றனர். இதுவரையில் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரத்து 72 பேர் குணமாகியுள்ளனர்.
அவ்வாறு குணமானவர்களின் ரத்த நீரை (பிளாஸ்மா) எடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளவர்களுக்கு செலுத்தி சிகிச்சை மேற்கொள்வதே பிளாஸ்மா தெரபி. ஏனெனில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் உடலில் உள்ள ஆண்டிபாடி, தொற்று உள்ளவர்களின் உடலில் செலுத்தினால் அது வைரஸை எதிர்த்துப் போராடும். அதன் மூலம் அந்த நோயாளி குணமடையக் கூடும்.
அந்த வகையில் டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த ஏப்ரல் 4ம் தேதியன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49 வயதுடைய நபர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. தற்போது அவருக்கு கொரோனாவால் குணமானவரின் பிளாஸ்மா செலுத்தப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வந்ததோடு, இருமுறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று எதிர்மறையாக வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் முதல் நபர் குணமாகியிருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பு மருந்துகளே இல்லாத இக்கட்டான சூழலில் பிளாஸ்மா சிகிச்சை கைகொடுத்திருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்துள்ளது. இதுபோன்று, கொரோனாவால் குணமானவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்வந்துள்ளதும் கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. விரைவில் கொரோனா இல்லாத நாடாக இந்தியா மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
---------------------------------------------
உ.பிக்கு பிரியாணி,
தெற்குக்கு உப்புமா...!
கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய அரசு தேசிய ஊரடங்கை அறிவித்துள்ளது. மாநில அரசுகளும் பல்வேறு வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நிதி ஒதுக்க வேண்டும் என மாநில அரசுகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தின. அதில், தமிழக அரசு 9,000 கோடி ரூபாய் தேவை என கேட்டிருந்தது. ஆனால் மத்திய அரசோ சுமார் 500 கோடி ரூபாயே ஒதுக்கியிருந்தது. அப்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படாத உத்திரபிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் ஆயிரக்கணக்கில் நிதியை வாரி இரைத்தது மத்திய மோடி அரசு.
அதேபோன்ற நிகழ்வு தற்போதும் நடைபெற்றுள்ளது. 15வது நிதிக்குழுவின் பரிந்துரையின் பேரில், மாநிலங்களுக்கான ஏப்ரல் மாத பங்கீடு என ரூ.46 ஆயிரத்து 38 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில், தமிழகத்துக்கு மட்டும் 1,928.56 கோடி நிதியை ஒதுக்கிய மத்திய அரசு, உத்தர பிரதேச மாநிலத்துக்கு 8,255.19 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
ஆனால், ஆந்திராவுக்கு 1892.64, கர்நாடகாவுக்கு 1678.57, கேரளாவுக்கு 894.53, தமிழகத்துக்கு 1928.56, தெலங்கானாவுக்கு 982,(கோடிகளில்) என ஒட்டுமொத்தமாக நிதியில் இருந்து 16.02 சதவிகிதம் மட்டுமே கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இது தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை ஒப்பிட்டாலும் ஒட்டுமொத்த நிதியில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு 17.93 சதவிகிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணும் சுண்ணாம்பும் என்ற சொற்றொடர் போன்று மத்திய மோடி அரசு பாரபட்சத்தின் உச்சத்தில் இருந்து செயல்பட்டு நிதிகளை பகிர்ந்து வருகிறது. பாசிசத்தை கடைபிடிக்கும் அரசிடம் மாநில அரசுகள் ஒவ்வொன்றுக்கும் போராடி பெறும் நிலையே ஏற்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாடு அடிமைவம்ச அரசோ மோடியை எதிர்த்து கனவில் கூட கேள்வி கேட்காத பேசாமடந்தையாக உள்ளதுதான் நமது சாபக்கேடு.
----------------------------8----------------------------
குறைந்தது. காற்றுமாசு.
கொரோனா வைரஸ் பாதிப்பினால், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், காற்று மாசுபாட்டின் அளவு பெரியளவில் குறைந்துள்ளது என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். இப்போது, இதை உறுதிப்படுத்தும் விதமாக நாசாவின் செயற்கைக்கோள் படம்பிடித்த இந்தியாவின் புகைப்படம் நம்பமுடியாத சில அதிர்ச்சி தகவலைப் பதிவு செய்துள்ளது. நாசா செயற்கைக்கோள் பதிவு செய்துள்ள தகவலின் விபரங்களைப் பார்க்கலாம்.நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள், மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதிக்கு இடையில் படம்பிடித்துள்ள புகைப்படத்தில் வட இந்தியாவில் காணப்படும் காற்றுமாசின்( ஏரோசோல்) அளவு இதுவரை காணப்படாத அளவிற்குக் குறைந்துள்ளது என்று பதிவாகியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத மிகக் குறைந்த அளவு காற்றுமாசு மதிப்பீடு இந்த ஆண்டு தான் பதிவாகியுள்ளது என்று நாசா அதிர்ச்சி தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளது.
நாசாவால் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும் இந்த பதிவு, இந்த ஆண்டு நம்பமுடியாத தகவலைப் பதிவு செய்துள்ளது. மானுடவியல் என்று சொல்லப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட மூலங்களிலிருந்து வெளிவரும் நஞ்சு காற்றுமாசுகள் பல இந்திய நகரங்களில் ஆரோக்கியமற்ற அளவிலான காற்று மாசுபாட்டிற்கு காரணமாக இருக்கிறது என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இந்த காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் மனிதர்கள் தான் என்பதே உண்மை.
காற்று மாசு (ஏரோசோல்கள்) இயற்கையாக உருவாகும் ஏரோசோல்கள் என்று ஒரு வகையும், மற்றொன்று மனிதனால் உருவாக்கப்படும் ஏரோசோல்கள் என்று மொத்தம் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இயற்கையில் உருவாகும் தூசி புயல்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் காட்டுத் தீ போன்ற இயற்கை ஆதாரங்கள் ஒரு வகை ஏரோசோல்களை வெளியிடுகின்றன.
அதேபோல், புதை படிவ எரிபொருள்கள் மற்றும் பயிர்நிலங்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகளிலிருந்து வெளிவரும் ஏரோசோல்கள் காற்றை மாசுபடுத்துகிறது. முக்கியமாக புதைபடிவ எரிமம் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரோசோல்கள் தான் மனித வளத்தின் ஆரோக்கியத்தைச் சேதப்படுத்தும் அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது என்கிறது ஆய்வாளர்களின் அறிக்கை.
பொதுவாக, வசந்த காலத்தின் துவக்கத்தில், வட இந்தியாவின் கங்கை பள்ளத்தாக்கில், மனித நடவடிக்கைகள் தான் ஏரோசோல்களின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. அதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்கள், வாகனங்களிலிருந்து வெளியேறும் நைட்ரேட்டுகள், சல்பேட்டுகள் மற்றும் பிற கார்பன் நிறைந்த துகள்களை இந்த பகுத்து பெருமளவில் உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய அளவில் மனிதனின் ஆரோக்கியத்தைச் சீரழிக்க, இந்த சிறிய துகள்கள் தான் பெரும்பாலான பங்களிப்பை மேற்கொள்கிறது என்கிறது அறிவியல் உண்மை. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தான் இதற்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது சமீபத்திய கணக்கெடுப்பு.
-----------------------8------------------------