சனி, 11 ஏப்ரல், 2020

கொரோனா அரசியல்


உலக வல்லரசுகள் கொரோனா  தொற்றால் நடுங்கி கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு சில நல்லரசுகள் இந்த நோய் தொற்றை எதிர்த்து தங்களால் இயன்ற வரை போராடிக் கொண்டிருக்கின்றன கொரோனா குறித்து நிறைய தகவல்கள் நாம் அறிந்ததே.  
அது இவ்வளவு வீரியத்துடன் பரவும் என் பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள் தான்.
உலக சுகாதார அமைப்பு இந்த நோய்த்தொற்று தொடர்பாக ஒரு கால வரிசையை வெளியிட்டுள்ளது. அதில் டிசம்பர் மாதத்தின் இறுதியிலேயே சீனா தங்கள் நாட்டில் நிமோனியா தாக்குதல் பற்றி உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தந்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுவதில் உலக வல்லரசுகளின் நான்கு மாத தாமதம் இந்த நோய் தொற்று இன்றைய நிலையை அடைந்ததற்கு ஒரு காரணம்.  மதிப்பிற்குரிய ஆராய்ச்சியாளர்கள் பலர் கொரோனா போன்றதொரு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அக்டோபர் மாதத்திலேயே அறிவித்திருந்தனர். உலகில் எந்த அரசுகளும் இதை கண்டுகொள்ளவில்லை.
இந்த உலகிற்கு கொரோனா வைரஸ் ஒன்றும் புதிதல்ல இந்த வைரஸ் பல வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் இதே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்கள் சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களை பாதித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய்த்தொற்று என்ற பட்டியலில் கொரோனா வைத்துள்ளது. இதுபோன்ற  எச்சரிக்கைகளை கணக்கில் கொண்டு உலக வல்லரசுகள் நோய்த்தொற்றை சமாளிக்க முன் தயாரிப்புகளை செய்ததா என்றால், இல்லை. ஒருவேளை குறைந்தபட்ச முன் தயாரிப்புகளை செய்திருந்தால் கூட இவ்வளவு பெரிய உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்திருக்காது. குறைந்தபட்சம் அமெரிக்கா போன்ற நாடுகள் குளோரோக்குவின் மாத்திரைகளை அதிகார பிச்சை கேட்டு பெற்றிருக்கதேவை இருந்திருக்காது. இந்தியா போன்ற வளரும் நாடுகளும் அந்த அதிகாரத்திற்கு பணிந்து குளோரோக்குவின் மாத்திரைகளை  ஏற்றுமதி செய்து இருக்க தேவை இருந்திருக்காது.
சார்ஸ் போன்றகொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்கள் இப்பொழுது கோவிட்19 ஆக மாற்றமடைந்துள்ளது. இதற்கு காலநிலை மாற்றம் ஒரு காரணியாக இருந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறிய  கருத்துக்களுக்கு இதுவரை எந்த நாடும் செவிசாய்க்கவில்லை. இந்நேரத்தில் உலகில் தற்போது  கொரானா நோய் தொற்றால் அதிகமாக பாதிப்புக்குள்ளான அமெரிக்கா காலநிலை மாற்றம் தொடர்பான சூழலியல் உடன்படிக்கைகளை நாங்கள் செயல்பட மாட்டோம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே உலக நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பாக தாங்கள் கொண்டுள்ள எண்ணங்களுக்கு ஒரு சான்றாகும்.
சார்ஸ் என்கிற கொடிய நோய் தொற்று பரவி பல ஆண்டுகள் ஆகின்றன.  அதே கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த மெர்ஸ் என்கிற நோய் தோற்று பரவி பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் தற்போது வரை  ஏன் இதற்கு ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது அதே குடும்பத்தைச் சேர்ந்த கோவிட் 19 நோய் தொற்று பரவி வருகிறது.  கொரானா தொடர்பாக  உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை, நோய்தொற்று தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை, காலநிலை மாற்றம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களின் தரவுகள்,  சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து நாம் பெற்ற அனுபவம் என்று பல இருந்தும் கொரோனாவை குணமாக்கும் மருந்துகளையோ அது வராமல் தடுக்கும் தடுப்பு மருந்துகளையோ இதுவரை எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை. ஏன் எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை ஏனென்றால் சந்தை அதை கோரவில்லை. தாராளவாத பொருளாதாரத்தில் சந்தையை பொறுத்தே அனைத்தும் தீர்மானிக்கப்படும்.  எந்த ஒரு தயாரிப்புகளும் கண்டுபிடிப்புகளும் சந்தையின் தேவையைப் பொறுத்தே முக்கியத்துவம் பெறுகின்றன. நவீன தாராளமயம் நமது அனைத்து தேவைகளையும் கார்ப்பரேட்டுகள் இடம் அளித்துவிட்டது . கார்ப்பரேட்டுகளின் ஒரே நோக்கம் லாபம். எவை சந்தையில் லாபம் தரக்கூடியவையோ அதற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கார்ப்பரேட்டுகள் மருந்து தயாரிப்பதை விட அதிக லாபம் கொண்ட அழகு சாதன பொருட்களை தயாரிப்பதிலும் கண்டுபிடிப்பதிலும் நேரம் செலவிட்டனர். மக்களைக் கொல்லும்  பெரும் தொற்றுக்கு மருந்தை விட சரும பொலிவிற்கான க்ரீம்கள் அதிக லாபம் தரக்கூடியது என்று கார்ப்பரேட் நினைக்கும். 2018 இல் உலக சரும க்ரீம்களுக்கான சந்தை மதிப்பு 135 பில்லியன் அமெரிக்க டாலர்கள், இதுவே 2025ல் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டும் என்றும் கணிக்கப்படுகிறது.
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போதாவது மருந்து தயாரித்து அதிலிருந்து மீட்கும் என்று எதிர்பார்க்கலாமா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. தாராளமயமாக்கம் முதலாளித்துவத்தின் சட்டத்திட்டங்கள் அவற்றை மக்கள் நலன் சார்ந்து இயங்க விடுவதில்லை.  தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான பந்தயத்தை, தேசங்களின் ஆளும் வர்க்கத்திற்கு இடையேயான சந்தை போட்டிகள் கெடுத்து குட்டிசுவர் ஆக்குகின்றன. அமெரிக்கா ஐரோப்பா நாடுகள் இந்தத் தடுப்பு மருந்தை முதலில் தனதாக்கிகொண்டு சர்வதேச நாட்டாமை செய்ய துடிக்கின்றன. இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற தருவாயில் அணுகுண்டு தயாரிக்கும் பந்தயத்தில் வெற்றி பெற்ற அமெரிக்கா உலக நாட்டாமையாக இன்று வரை ஆட்சி செய்கிறது. இன்று அணு ஆயுதத்திற்கு பதிலாக கொரோனா தடுப்புமருந்து. நேற்று முன்தினம் வரை சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவிவருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜெர்மனி மருத்துவ கம்பெனியான க்யூர்வேக் ஐ வாங்க முயற்சி செய்தார் என்பதே அந்த செய்தி.
 க்யூர்வேக் நிறுவனம்தான் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் அதை வாங்க ட்ரம்ப் முயற்சிப்பதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது என்பதே அந்த செய்தி. அதன் பின் ஐரோப்பிய யூனியன் இதே கம்பெனிக்கு 85 மில்லியன் பவுண்டுகளை மானியமாக அளித்து உள்ளது நம் சந்தேகத்தை வலுப்படுத்தும்.
இதுபோன்ற நெருக்கடியான காலத்திலும் கார்ப்பரேட்டுகள் மக்களின் அவலநிலையை பணமாக்கவே பார்க்கின்றன. பைனான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிக்கை ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகளின் விலைகள் 98% உயர்த்தப்பட்டுள்ளன என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.  இந்த மாத்திரைகள் கொரானாவிற்கு எதிராக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ரெம்டெசிவிர்  என்கிற மாத்திரைகள் ஒரு குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனத்தின் ஏகபோகமாக மாற்றப்பட்டுள்ளது.
முதலாளித்துவ சந்தைப் போட்டி என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை முன்னேற்றும் என்ற முதலாளித்துவ வாதத்திற்கு எதிராகவே அனைத்தும் உள்ளது என மீண்டும் ஒரு முறை கொரானா பெரும் தொற்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது.  எப்போதும் உற்பத்தி சாதனங்களின் தனியுடமை என்பது மனிதகுல வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாகவே இருந்து வந்துள்ளது. இன்று அது மனித குலத்தை அழிவு என்னும் பள்ளத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறது.
தீவிர தாராளமயக் கொள்கைகளை பின்பற்றாத நாடுகளே கொரானாவிற்கு எதிரான போரில் மக்களைக் காக்க முன்னணியில் உள்ளன. உலக வல்லரசு நாடுகள் மற்ற நாடுகளை மிரட்டி காரியம் சாதித்துக் கொள்வதன் மூலமாக  இந்தியா போன்ற நாடுகளிலோ சொந்த நாட்டு மக்களை முட்டாள் ஆக்குவதன் மூலமாக மக்களை பேரழிவை நோக்கி வேகமாக தள்ளி கொண்டுள்ளன. சோசலிச நாடுகள் மட்டுமே மக்களை காக்க தங்களால் இயன்றவரை போராடிக் கொண்டிருக்கின்றன. 
-பாலா
-----------------------------------------
கொரோனாவால் இறங்கு தளத்தில்
அமெரிக்கா.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் 102,734 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகளவில் 1,699,631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 376,327 ஆக உள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் கடந்த வாரம் முதலே புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தினமும் 10,000 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த சீனா, இத்தாலியைப் பின்னுக்கு தள்ளி தற்போது அமெரிக்கா முதல் இடத்திற்கு சென்றுள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு வல்லரசு நாட்டின் தலைவர் திணறி வருகிறார்.
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில், 1,973 பேர் இறந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,02,876 -ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,747 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, நியூயார்க் மாகணத்தில் மட்டுமே 1,72,358 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,844 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கு அடுத்தப்படியாக நியூஜெர்சியில் 54,588 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,932 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 3 நாட்களாக பலி எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. குறிப்பாக கடந்த 3 நாளில் சுமார் 6,000 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 3 வாரத்தில் 1.6 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 97 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் கடந்த 3 வாரத்தில் 1.6 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில் 66 லட்சம் பேர் வேலை இல்லாதோருக்கான அரசின் சலுகையை பெற புதிதாக விண்ணப்பித்து உள்ளனர். இதன் காரணமாக, அமெரிக்க பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 24 அன்று ஆங்கில இந்து இதழில், “புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம்” (The age of the neoliberal virus) என்ற தலைப்பில் வெளியான தாபிஷ் கைர் எழுதிய கட்டுரை வாசகர்களுக்காக மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது.

***

கோவிட்-19 என்ற நோயை உருவாக்கக்கூடிய கரோனா வைரஸ்தான் இந்த உலகின் முதல் புதிய தாராளவாத வைரஸ். இப்படிக் கூறுவது ஏற்கெனவே பாதுகாப்பற்று வாழும் நோயுற்றவர்களை, வயது முதிர்ந்தோரை, ஏழைகளை (பட்டினி கிடக்காமல் இவர்களால் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது) இந்த வைரஸ் எளிதாகத் தாக்கக்கூடிய அபாயத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. மாறாக, உலகின் பல்வேறு நாட்டு அரசுகள் இந்த வைரஸை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதைத்தான் விமர்சிக்க வேண்டியிருக்கிறது. ஐரோப்பாவில் ஒப்பீட்டளவில் சிறப்பான சமூக நல முதலாளித்துவ அரசுகளாக உள்ள, நான் வசித்துவரும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கும்கூட இந்த விமர்சனம் பொருந்தக்கூடியதுதான்.
பல்வேறு ஐரோப்பிய நாடுகளைப் போலவே டென்மார்க்கிலும் மார்ச் 12 தொடங்கி இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு நடவடிக்கைகள் அமலுக்கு வந்தன. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் மட்டும்தான் இதற்கு விதிவிலக்காக இயங்கி வந்தன. அறுபது இலட்சம் மக்கள் தொகை கொண்ட டென்மார்க்கில் மார்ச் 12 வாக்கில் 500 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது.
அவசியமான இந்த ஊரடங்கு நடவடிக்கையை முன்னரே எடுத்திருக்க வேண்டும். எனினும், இந்த ஊரடங்கைத் தவிர, இந்த நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான மற்றைய அவசியமான நடவடிக்கைள் எதுவும், நான் இந்தக் கட்டுரையை எழுதும் தருணத்திலும், மார்ச் 17 வரை டென்மார்க்கில் எடுக்கப்படவில்லை.
மற்றைய நடவடிக்கைகளுள் மிக முக்கியமான, இன்றியமையாத ஒன்று மருத்துவப் பரிசோதனை. மற்றைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே, டென்மார்க்கிலும் நோய்த்தொற்று தீவிரமடைந்த நோயாளிகளுக்கு மட்டும்தான் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. மிதமான தொற்று அறிகுறிகள் உள்ளவர்களைப் பொருத்தவரை – நூற்றுக்கும் மேற்பட்ட பிற நோய்களும் இதே போன்ற அறிகுறிகளை வெளிபடுத்தக்கூடியவைதான் – தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே அறிவுறுத்தப்படுகிறது. உள்நாட்டினுள் மருத்துவப் பரிசோதனை விரிவாக நடத்தப்படாத அதேவேளையில், டென்மார்க் அரசு, அரசியல்ரீதியான நடவடிக்கையாக, பிற நாடுகளுடனான தனது எல்லைகளை மூடிவிட்டது. செல்வ வளமிக்க மேற்குலக நாடுகளில் மருத்துவப் பரிசோதனையின் முடிவு தெரிவதற்கு இரண்டிலிருந்து நான்கு நாட்கள் வரை கால தாமதம் ஆகும் அதேவேளையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட சீனப் பகுதிகளில் நான்கு மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது ஆச்சரியமான விடயம்தான்.


கரோனா தாக்குதலையடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஒப்பிடும்போது மருத்துவ, சுகாதாரத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைவானது என்கிறார், கட்டுரையாளர் தாபிஷ் கைர்.

ஆக, இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வதென்ன? டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் சமூக நல மற்றும் மருத்துவ வசதிக் கட்டமைப்புகளைக் கொண்டிருந்த போதும், புதிய தாராளவாத அணுகுமுறையைத்தான் வெளிப்படுத்துகின்றன என்பதுதான் ஐயத்துக்கு இடமின்றித் தெரிகிறது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்தக்கூடிய பொறுப்பின் பெரும்பகுதி, தனிமைப்படுத்திக் கொள் என்ற கட்டளையின் வழியாகச் சாதாரண குடிமகனிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. சாதாரண சளித் தொல்லகளால் பீடிக்கப்பட்டவர்கள்கூடத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அறிவுரைகளையும் கட்டளைகளையும் அள்ளிவிடும் அரசுகளோ மிகக் குறைந்த அளவிற்கே நிதி ஒதுக்கியுள்ளன.
இது வியப்புக்குரியதல்ல. கடந்த இரண்டு பத்தாண்டுகளில், எப்பொழுதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களோ அல்லது குறிப்பிடத்தக்க பெரிய வங்கிகளோ தடுமாறத் தொடங்கியவுடனேயே, தேசிய அரசுகள், சுகாதாரம், ஆராய்ச்சி உள்ளிட்ட பொது சேவைகளுக்கான  நிதி ஒதுக்கீடுகளை வெட்டி, அதன் மூலம் கிடைக்கும் பொதுப் பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கியுள்ளன. இது உலகெங்கும் நடந்திருக்கிறது. இது மீண்டும் நடந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர்தான், டென்மார்க் அரசு கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்வதற்காகத் தனது நாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5,000 கோடி அமெரிக்க டாலர் (ஏறத்தாழ 3,50,000 கோடி ரூபாய்) மதிப்புடைய சலுகைகளை வழங்கியது. இத்தொற்று நோய் ஓர் அபாயமாக உருவாவதற்கு முன்னரே, அமெரிக்காவின் டிரம்ப் அரசு, தனது நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், நிதி மூலதனத் துறைக்கும் 1.5 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்களை வாரி வழங்கியது. இத்தொற்று அமெரிக்காவில் பரவி, தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்ட சமயத்தில் மேலும் 70,000 கோடி அமெரிக்க டாலர்கள் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிதியதவியாக வழங்கப்பட்டது. இங்கிலாந்து அரசு, இத்தொற்று அபாயத்தை முழுமையாக ஏற்க மறுத்தாலும், தனது நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 90,000 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியிருக்கிறது. மற்றைய நாடுகளிலும் இதே கதைதான்.
தேசியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்காமல் தடுப்பதற்கு இத்தகைய முட்டுக் கொடுத்தல்கள் அவசியம்தான் எனினும், இதில் இரண்டு பெரிய சிக்கல்கள் உள்ளன. இந்தச் சலுகைகளின் பெரும் பகுதி வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற கண்டிப்பான நிபந்தனையோடு ஒதுக்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக, மிகவும் குறைவான கூலி பெறும் தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. டென்மார்க், நார்வே, ஸ்வீடன் நாடுகள் கூட்டாக இணைந்து இயக்கும் ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே 10,000 ஊழியர்களை இடைநீக்கம் செய்துவிட்டது. மற்றைய நாடுகளிலும் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களும் தொழிலாளர்களும் வேலையிலிருந்து தூக்கியெறியப்படுவது நடந்து வருகிறது.


பெர்னீ சாண்டர்ஸ்

அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயகக் கட்சியின் சார்பில் சீட்டு கேட்டுப் போட்டியிட்டு வரும் பெர்னீ சாண்டர்ஸ் என்ற அரசியல் தலைவர் ஒருவர் மட்டும்தான், “இந்தச் சலுகைகள் மக்கட் தொகையில் 95 சதவீதமாக உள்ள உழைக்கும் மக்களின் வேலைகளைப் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப்பட வேண்டுமெயொழிய, 5 சதவீத மேட்டுக் குடியினரின் பங்கு மதிப்பு வீழ்ந்துவிடாமல் முட்டுக் கொடுக்க வழங்கப்படக் கூடாது” என வலியுறுத்தி வருகிறார். மற்றொரு சிக்கல் என்னவென்றால், அநேகமாக எந்தவொரு நாடும் இதற்கு இணையான தொகையை இத்தொற்று நோயை எதிர்கொள்ளும் விதத்தில், மக்கள் நல்வாழ்வு, சமூகத் துறைகளுக்கு ஒதுக்கவில்லை.
வெள்ளையர் அல்லாத நாடுகளில் எந்தவொரு அசம்பாவிதம் ஏற்பட்டாலும், அது மேற்குலக நாடுகளில் கனன்று கொண்டிருக்கும் இன வெறியைத் தூண்டிவிடும் என்பதோடு, சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பீதி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதி மூலதனக் கும்பலைத் தமது பங்குகளை அவசர அவசரமாக விற்கும் நிலைக்கும் தள்ளியிருக்கிறது. சீனாவின் குறிப்பிடத்தக்க தொழில்துறைகளைக் கட்டுப்படுத்தும் அளவிற்குப் பங்குகளை வைத்திருக்கும் இந்தக் கும்பல், அப்பங்குகளை மிகவும் மலிவாக விற்பதை சீன அரசும், சீன முதலீட்டாளர்களும் வாங்கி வருகின்றனர். சீனா, தற்சமயம் இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நிலையை எட்டியிருப்பதோடு, தனது நாட்டின் பொருளாதாரத்தையும் தொழில்துறைகளையும் முன்னைக் காட்டிலும் அதிக அளவில் கட்டுப்படுத்தும் நிலையை மீண்டும் பெற்றிருக்கிறது எனக் கூறலாம். இதன் மறுபக்கத்தில் அமெரிக்காவின் காங்கிரசு மற்றும் செனட் சபைகளைச் சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர்கள், அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சியடைவதற்குச் சற்று முன்பே, உள்பேரத்தின் மூலம் தமது பங்குளை விற்றுக் காசாக்கிவிட்டனர். மீண்டுமொரு ஒரு புதிய தாராளவாத வைரஸ்: இந்தப் போக்கு உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதிக்கும் வண்ணம் கணினிமயமாக்கம் (digitalisation) மற்றும் இயந்திர மனிதமயமாக்கம் (robotisation) ஆகிய துறைகளிலும் தொடரும்.
“இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பாக பல பேர் இறப்பது தேவையானதுதான்” என வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முதல் நாடு இங்கிலாந்துதான். இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத தருணத்தில் அரசியல்வாதிகள் கூறவருவது இதுதான்: “இந்த வைரஸ் அநேகமாக வயது முதிர்ந்தவர்கள், நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள், ஊட்டச்சத்துக் கிடைக்காத ஏழைகள் ஆகியோரைத்தான் கொல்கிறது. பொருளாதார உற்பத்திக்குப் பயனற்ற இந்தக் கூட்டம் வாழ்ந்தால் என்ன, செத்தால் என்ன என்பது பற்றி நாம் உண்மையில் அக்கறை கொள்ளத் தேவையில்லை.”
அரசியல் விமர்சகர்கள் அரசியல்வாதிகளின் இந்த உள்ளக்கிடக்கையை சுட்டிக்காட்டியவுடனேயே, அந்த வர்க்கம் தாம் கூறியதிலிருந்து பின்வாங்கியதோடு, ” நாங்கள் மக்களிடம் பொய் கூறாமல் தமது கடமையைச் செய்வதாக”த் தமது கூற்றுக்கு விளக்கமளித்தார்கள்.
அவர்கள் உண்மையைப் பேசுகிறார்களா? அல்லது, நிதி மூலதனத்தின் மதிப்பு மட்டுமே அக்கறைக்குரியது என்ற புதிய தாராளவாத தர்க்கத்திற்கு ஆட்பட்டுப் பேசுகிறார்களா? பசி என்ற கொள்ளை நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பு மருந்தான உணவுப் பொருட்கள் கையிலிருந்தும், ஒவ்வொரு நாளும் 8,000 குழந்தைகள் பசி என்ற வைரஸுக்குப் பலியாவது இந்தப் புதிய தாராளவாத சமன்பாட்டின் ஒரு பகுதியாகும். கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள நாம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், மற்ற கொள்ளை நோய்களை எதிர்த்த போராட்டம் தவிர்க்கவியலாதவாறு பாதிக்கப்படும்.
இந்தக் கொள்ளை நோயை எதிர்கொள்வதற்கு இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. இன வெறியும் தேசியவாதமும் இதற்கு உதவாது. இந்தக் கொள்ளை நோயைப் போல எதிர்காலத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி வரக்கூடிய கொள்ளை நோய்களை எதிர்கொள்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக, 1918-இல் உருவான ஸ்பானிஷ் ஃப்ளு என்ற கொள்ளை நோய் – பிரிட்டிஷ் அல்லது நேச நாட்டுப் படையினர் மத்தியில் உருவாகிப் பரவியது – 5 கோடி மக்களைக் காவு வாங்கியது. இந்த கரோனா வைரஸை முதல் புதிய தாராளவாத வைரஸ் என்ற முறையில் அணுகி, அதற்கேற்ப செயல்படவில்லை என்றால், பெரிதாக எதுவொன்றும் நடவாது.
தமிழாக்கம்: ரஹீம்