நம் மருந்துகளை ஏன் உபயோகிக்க மறுக்கிறார்கள்?

கொரோனாவை ஒழிக்க ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லாத போது

கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவின் மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் ஒரு மருந்தாக முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல இடங்களில் இந்த மருந்தை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர். 
உண்மையில் கபசுர குடிநீர் என்பது என்ன, அது கொரோனாவை குணப்படுத்துமா, மாற்று மருத்துவ முறைகளில் கொரோனாவுக்கு தீர்வு இருக்கிறதா என்பதெல்லாம் குறித்து மூத்த சித்த மருத்துவர்களில் ஒருவரான கு. சிவராமன், பிபிசி நேர்காணலில் கூறியவை:-
கே. கபசுர குடிநீர் கொரோனாவைக் குணப்படுத்துமா?
ப. கொரோனாவைக் கட்டுப்படுத்தக்கூடிய, கொரோனாவைத் தடுக்கக்கூடிய மருந்து என ஒரு முழுமையான மருந்து எந்த மருத்துவத்திலும் கிடையாது. மார்ச் மாதத் துவக்கத்திலேயே ஆயுஷ் துறையானது இந்தியாவில் இந்தத் தொற்று பெரிதாகப் பரவினால் என்ன செய்வது என்பது குறித்து மாற்று மருத்துவ முறை நிபுணர்களுடன் விவாதித்து, விதிமுறைகளை உருவாக்கியது. எந்த மருத்துவத்திலும் கொரோனாவுக்கு மருத்துவம் இல்லாத நிலையில், சித்தமருத்துவத்தைப் பொறுத்தவரை நாங்கள் சில ஆலோசனைகளைத் தந்தோம். கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், ஆடாதொடை மணப்பாகு ஆகியவற்றை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.
இதை எப்படித் தேர்ந்தெடுத்தோம் என்றால், இந்த கோவிட் - 19ன், மருத்துவ ரீதியான அறிகுறிகளை முதலில் பட்டியலிட்டோம். காய்ச்சல், நெஞ்சில் சளி சேருவது, மூச்சு இரைப்பு போன்ற நிமோனியா நோய்க்கான அறிகுறிகள்தான் இந்நோய்க்கும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது. அதே அறிகுறிகளைக் கொண்ட பழைய நோய்களுக்கு நாங்கள் மருந்துகளைக் கொடுத்திருக்கிறோம். அப்படிப் பார்க்கும்போது, நிமோனியா போன்ற மரணம் வரை கொண்டுசெல்லக்கூடிய காய்ச்சல்களுக்கான முக்கியமான சித்த மருந்து கபசுர குடிநீர்.

கபசுர குடிநீர்

கொரோனாவுக்கு மருந்து ஆங்கில மருத்துவத்திலும் கிடையாது. அவர்கள் எப்படி இந்நோய்க்கு சிகிச்சையளிக்கிறார்கள்? re - purposing of old molecules என்ற முறையில் ஏற்கனவே பல நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துகளைக் கொடுக்கிறார்கள். எச்ஐவிக்குக் கொடுக்கப்பட்ட மருந்திலிருந்து இரண்டு மூலக்கூறுகள், குளோரோகுயின் சல்ஃபேட் என மலேரியாவுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்திலிருந்து சில மூலக்கூறுகள், நுரையீரல் சார்ந்த தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு எதிர் நுண்ணுயிரி - அசித்ரோமைசின் ஆகிய மருந்துகள்தான் இப்போது இந்த நோய்க்குக் கொடுக்கப்படுகின்றன. இவை வேறு நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டவை. ஆனால், இப்போது இந்த நோய்க்குக் கொடுக்கப்படுகிறது.
இதோபோல சித்த மருத்துவத்தில் re - purposing செய்வதற்கு நிமோனியா போன்ற பழைய நோய்களுக்கு பயன்படுத்தப்பட்ட கபசுர குடிநீர் என்பதுதான் சரியான மருந்தாக இருந்தது. இந்த மருந்தில் 15 மூலிகைகள் இருக்கின்றன. இவை, சளி, மூச்சு இரைப்பு, காய்ச்சல், தொண்டைவலி ஆகியவற்றைக் குறைக்கக்கூடிய மூலிகைகள். ஆகவேதான் இந்த மருந்தை கொடுக்கலாம் என அரசுக்குப் பரிந்துரை செய்தோம்.
தவிர, இந்த மருந்து வைரஸ்களைக் குறைப்பதில் எப்படிச் செயல்படுகிறது என்ற ஆராய்ச்சிக்கும் உட்படுத்த வேண்டுமென மத்திய அரசையும் கோரியிருக்கிறோம்.
கே. இந்த கபசுர குடிநீர் நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லோராலும் குடிக்கக்கூடியதா?
ப. இதில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். கபசுர குடிநீர் இந்த நோய்க்குப் பயன்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியான உடனேயே மக்கள் இப்போது உள்ள பதற்ற நிலையில், நானும் ஒரு டம்ளர் குடித்து வைத்துவிட்டால் எனக்கும் இந்த நோய் வராதுதானே என்ற எண்ணத்தில் ஊரடங்கை மீறி வெளியில் வர ஆரம்பித்தார்கள். கடைகளிலும் மருத்துவமனையிலும் நிற்க ஆரம்பித்தார்கள். ஒரு ஆங்கில மருந்தை வாங்கிச் சாப்பிடுவதில் உள்ள பயம், ஆங்கில மருந்தை வாங்கிச் சாப்பிடுவதில் இருக்காது. இதனால், ஊரடங்கை மறுத்து அந்த மருந்தை வாங்க ஆரம்பித்தார்கள்.
அப்போதுதான் நாங்கள், இப்போதைய தேவை ஊரடங்குதான். அதைத்தான் பின்பற்ற வேண்டுமெனச் சொன்னோம். அப்போதுதான் சமூகரீதியாக பரவுவதை தடுக்க முடியும் என்று விளக்கினோம். யார் இந்த நோயால் பாதிக்கப்படக்கூடிய பிரிவில் அதாவது, ஏற்கனவே மூச்சு இரைப்பு உடையவர்கள் போன்ற பிரிவினருக்கு அரசே இதனை வாங்கிக் கொடுக்கட்டும் என்று சொன்னோம்.
இரண்டாவதாக, இம்மாதிரியான ஒரு பதற்ற சூழலில் இந்த மருந்திற்கு இருக்கும் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு, யாரோ சிலர் ஏதோ சில மூலிகைகளைப் பயன்படுத்தி கபசுர குடிநீர் என்ற பெயரில் விற்றால், அதை வாங்கி அருந்தி ஏதாவது பிரச்சனையாகிவிட்டால் கபசுர குடிநீரால்தான் அந்தப் பிரச்சனை ஏற்பட்டது என்று சொல்லிவிடக்கூடும். அது அந்த மருந்தில் இருந்த தவறாகப் பார்க்கப்படாமல், மருத்துவத்தின் தவறாகப் பார்க்கப்படும்.
ஆகவே, அரசுதான் தேவையான மக்களுக்கு இந்தக் குடிநீரைப் பரிந்துரைக்க வேண்டும்.
கே. இந்தக் குடிநீரைக் குடிப்பதால் நோய் வருவதைத் தடுக்க முடியுமா?
ப. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து என இதனைச் சொல்லவே முடியாது. தடுப்பு மருந்து என்றால் vaccine போல இருக்க வேண்டும். அப்படியான எந்த ஆய்வும் இந்த மருந்தில் நடக்கவில்லை. ஆகவே, இதனை தடுப்பு மருந்து என்ற வார்த்தையை இதற்குப் பயன்படுத்தக்கூடாது. அதற்கு மாறாக, இந்த மருந்து ஒரு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும் என்று சொல்லலாம். கொரோனா தாக்கிய 85 சதவீதம் பேருக்கு இந்த வைரஸால் தாக்கப்படுகிறார்கள். ஆனால், அந்நோய் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாது. அப்படியே போய்விடுகிறது. ஆனால், ஒரு சிலருக்கு நோயாக மாறிவிடுகிறது. அந்த 85 சதவீதம் பேருக்கும் நோயால் தாக்கப்படும் ஒரு சிலருக்கும் என்ன வேறுபாடு என்பது இதுவரை தெரியவில்லை.
சுவாச மண்டலக் கிருமிகளை எதிர்க்க உடம்பில் ஒரு ஆற்றல் இருக்கிறது. ஒருவேளை அந்த ஆற்றலை அதிகபடுத்த இந்த மருந்து பயன்படலாம். ஏன் பயன்படலாம் என்று சொல்கிறோம் என்றால், இந்த மருந்து ஏற்கனவே சுவாச மண்டல நோய்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதில் உள்ள ஒவ்வொரு மூலிகையின் பயன் குறித்து ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால், உறுதிப்பட சொல்ல வேண்டுமானால், இன்னும் ஆய்வுகள் தேவை. இந்த காலகட்டதிலாவது இது தொடர்பான ஆய்வுகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.
கே. சித்த மருத்துவ முறை நிரூபிக்கப்படாத மருத்துவ முறை என நவீன மருத்துவ ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள். இதை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
ப. ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சித்த மருத்துவத்திற்கும் நவீன மருத்துவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. நவீன மருத்துவத்திற்கான மருந்து ஆராய்ச்சிக்கு உலகளாவிய மருந்து நிறுவனங்கள் நிறைய உள்ளன. சித்த மருத்துவர்களுக்கு அப்படி வேறு யாரும் ஆய்வுசெய்து சொல்லும் நிலையே இல்லை. ஒரு சித்த மருத்துவர் ஒரு மருந்தைச் சொன்னால், அவரேதான் அதை ஆய்வு செய்து தர வேண்டியுள்ளது. நவீன மருந்து ஆய்வு நிறுவனங்களே மிகச் சொற்பம்.

Image copyrightGETTY IMAGESகொரோனா வைரஸ் : கபசுர குடிநீர் என்பது என்ன?அது கொரோனாவைக் குணப்படுத்துமா?

தவிர, மருந்து ஆய்வுக்குப் பின்பாக மிகப் பெரிய வணிகம் உள்ளது. ஒரு மருந்து ஆய்வு நிறுவனம், ஒரு மருந்தை ஆய்வுசெய்து, மருந்தாக சந்தைப்படுத்தினால் எவ்வளவு வர்த்தகம் செய்ய முடியும் என கணக்கிட்டுத்தான் ஆய்வே துவங்கப்படுகிறது. அம்மாதிரியான சூழலில் நிலவேம்பு குடிநீரையோ, கபசுர குடிநீரையோ உலகளாவிய ஆய்வு நிறுவனங்கள் ஆய்வுசெய்து அதன் திறத்தை விளக்க வேண்டும். ஆனால், அது நடக்கும் சூழல் இங்கே இல்லை. இங்குள்ள நிறுவனங்கள் எல்லாமே சின்ன நிறுவனங்கள்.
உதாரணமாக ஒரு மருந்தை ஆய்வுசெய்து முறையாக ஒரு நவீன மருந்தாக வர குறைந்தபட்சம் ஒரு பில்லியன் டாலரும் ஏழு ஆண்டுகளும் தேவைப்படும். சித்த மருந்துகளுக்கான சந்தையே 30-40 கோடி ரூபாய் அளவுக்குத்தான் இருக்கும். அப்படியிருக்கும்போது மருந்து செய்யும் நிறுவனங்கள் எப்படி இம்மாதிரியான ஒரு ஆய்வைச் செய்யும்?
சீனாவில் பாரம்பரிய மருந்தை மிக அழகாகப் பயன்படுத்துகிறார்கள். வுஹானுக்கு சென்ற பாரம்பரிய மருந்துவர்கள், QPD என்ற கஷாயத்தை நிமோனியாவைக் கட்டுப்படுத்தவும் நுரையீரலில் சளி சேராமல் இருக்கவும் நவீன மருந்துகளோடு சேர்ந்து கொடுக்கிறார்கள். பிறகு, அது தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. எப்படி இது சளி சேர்வைதைக் குறைக்கிறது, எப்படி நுரையீரலில் செயல்படுகிறது என்பதெல்லாம் அந்த ஆய்வுக் கட்டுரையில் இடம்பெறுகிறது. பாரம்பரிய சீன மருத்துவத்தில் அது சாத்தியமென்றால் இங்கே ஏன் அது சாத்தியமில்லை?

அடிப்படையான 'பயோ - சேஃப்டி' ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, இந்த மருந்தைக் கொடுத்துப் பார்க்கலாமே என்ற மனோபாவம் வர வேண்டும். ஒருவேளை இந்த மருந்து பயனளிக்கவில்லையென்றால் நாங்களும் இதைத் தூக்கி எறிந்துவிடத் தயாராக இருக்கிறோம்.
சித்த மருத்துவத்தை ஆய்வுசெய்ய சென்னையைச் சுற்றியே பல ஆய்வு நிறுவனங்கள் இருக்கின்றன. பல இடங்களில் இதைச் செய்வதற்கான உபகரணங்களும் அறிவியலாளர்களும் இருக்கிறார்கள். அங்கே இதைச் செய்யலாம்.
தவிர, இம்மாதிரி வைரஸ் நோய்கள் இதுபோல ஒழிந்துவிடப் போவதில்லை. கோவிட் - 19 போய்விட்டால், வேறு ஏதாவது ஒரு வைரஸ் விலங்குகளிலிருந்து மனிதனுக்குப் பரவும். அப்போது இம்மாதிரி ஆய்வுகள் பயன்படும். தனி மருந்தாகக் கொடுக்கலாமா, இல்லை வேறு மருந்துகளோடு சேர்த்துக் கொடுக்கலாமா என்பதையெல்லாம் அப்போதுதான் தீர்மானிக்க முடியும். ஆனால், அப்படி ஏதும் நடக்காததுதான் கையறு நிலையாக இருக்கிறது.
கே. ஒருவருக்கு சித்த மருந்தையும் மற்றொருவருக்கு நவீன மருந்துகளையும் கொடுத்து ஆய்வுசெய்வது எளிதுதானே.. அப்படி ஏன் நடப்பதில்லை?
ப. இது மிக எளிவான ஆய்வு. இது போன்ற ஆய்வைத்தான் முதலில் செய்ய வேண்டும் என்று சொல்கிறோம். சோதனைக்காக மூன்று குழுக்களை எடுத்து, ஒரு குழுவிற்கு நவீன மருந்து + கபசுர குடுநீரைக் கொடுக்க வேண்டும். அடுத்த குழுவிற்கு வெறும் நவீன மருந்தை மட்டும் கொடுக்க வேண்டும். இன்னொரு குழுவிற்கு வெறும் கபசுர குடிநீரை மட்டும் கொடுக்க வேண்டும். இதில் எந்தக் குழுவில் என்ன முன்னேற்றம் ஏற்படுகிறது என்று பார்க்கலாம். ஆனால், இப்படி ஒரு சோதனையைச் செய்ய Ethical clearance வாங்க வேண்டும். அதற்கான விண்ணப்பத்தை அளிக்க, இந்த மருந்தை முதற்கட்ட ஆய்வு செய்திருக்கிறீர்களா, ஃபார்மகோ - கைனடிக் ஆய்வு செய்திருக்கிறீர்களா, விலங்குகள் மீது செய்திருக்கிறீர்களா, சிறிய மிருகங்களிடம் செய்திருக்கிறீர்களா, பயோ - சேஃப்டியில் என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். இதையெல்லாம் முடித்தால்தான் நோயாளிகளுக்கு மருந்தை கொடுத்து சோதிக்க முடியும்.

Image copyrightGETTY IMAGESகொரோனா வைரஸ் : கபசுர குடிநீர் என்பது என்ன?அது கொரோனாவைக் குணப்படுத்துமா?

ஆனால் இப்போது உலக சுகாதார நிறுவனம், மியூரி (Meuri) என்ற திட்டத்தை முன்வைக்கிறது. ஒரு இக்கட்டான காலகட்டத்தில், வேறு மருந்துகள் இல்லாத காலகட்டத்தில், இம்மாதிரியான சட்டங்களுக்குள் செல்லாமல் அதற்கான அறிஞர்கள் ஒரு ஆய்வாக செய்துபார்க்கலாம் என்கிறார்கள். ஆனால், அதை இங்கே ஏற்க மறுக்கிறார்கள். அதுதான் சிக்கல்.
கே. மாற்று மருத்துவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர், தங்களிடம் கொரோனாவுக்கு இப்போதே மருந்து இருப்பதாகச் சொல்கிறார்கள்..
ப. மாற்றுமருத்துவமே அறிவியல் அடிப்படையற்று என்ற எண்ணம் படித்தவர்களிடமும் ஆட்சியாளர்களிடமும் போய்ச் சேர்வதற்கு இதுபோன்ற போலி விளம்பரங்கள், யூகத்தின் அடிப்படையிலான அறைகூவல்கள் மிக முக்கியமான காரணம். சமீபகாலமாக, சமூக ஊடகங்களின் பங்கு பெரிதாக இருக்கிறது. இந்த நிலையில், பலர் என்னால் இதைக் குணப்படுத்திவிட முடியும்; நான் சொல்வதுதான் சரியானது என எளிய தமிழில் பேசுகிறார்கள். இது இம்மாதிரியான ஒரு பதற்ற சூழலில், "என்னிடம் தீர்வு இருக்கிறது" என்ற வார்த்தை மிக எளிதாக உள்ளே செல்கிறது.
இதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்குத்தான் இருக்கிறது. ஒரு தவறான செய்தி பரப்பப்படும்போது, அந்த செய்தியால் தவறு நிகழுமென அரசு கருதினால் அந்தச் செய்தியைப் பரப்புபவர் மீது அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அடுத்ததாக நான் சொல்ல விரும்புவது, நோய்களுக்கும் நம் பிரச்சனைகளுக்கும் இணையத்தில் தீர்வைத் தேடாதீர்கள். அது மிகத் தவறான விஷயம். ஒவ்வொரு மனிதரின் உடலும் வெவ்வேறு மாதிரியானது. பிரச்சனை வரும்போது குடும்ப மருத்துவரை அணுகிக் கேட்பதுதான் சரி. அவர்கள் அனுமதி இல்லாமல் மருந்துகளைச் சாப்பிடாதீர்கள். உலகம் முழுவதுமே இம்மாதிரியான மாற்று மருத்துவ முறை என்று கூறி, ஏமாற்றுவது நடக்கிறது.
எங்களைப் போன்ற மாற்று மருத்துவ முறைகளைப் படித்தவர்களுக்கு, பாரம்பரியமாக மருத்துவம் செய்பவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. சில விஷயங்களைத்தான் ஊடகங்களில் சொல்ல வேண்டும். Magic remedy act என்றே ஒரு சட்டம் இருக்கிறது. இந்தந்த நோய்களை நான் குணப்படுத்துவேன் என விளம்பரம் செய்வதே தவறு. இது எல்லோருக்கும் பொதுவானது. ஒரு மருந்தின் லேபிளில்கூட என்னென்ன இருக்க வேண்டுமென கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்தச் சட்டத்தை மீறுவது மிகத் தவறான செயல்.
கே. இந்த நெருக்கடியான சூழலில், நம்முடைய அரசுகள் மாற்று மருத்துவம் குறித்து என்ன பார்வையை வைத்திருக்கின்றன?
ப. இந்தியாவைப் பொறுத்தவரை மாற்று மருத்துவத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்ற எண்ணம் குறைவாகத்தான் இருக்கிறது. சீனாவில் இந்நோய் தொடர்பாக 51 ஆய்வுகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா 50 ஆய்வுகளை நடத்துகிறது. பிரிட்டனில் 10 ஆய்வுகள் நடத்துகிறது. இந்தியா ஒரு ஆய்வையும் நடத்தவில்லை.
மத்திய அரசு இதற்கான முனைப்புகளை இப்போது முன்னெடுக்கிறது. என்ன செய்யலாம் என பிரதமர் அலுவலகத்திலிருந்து கேட்டிருக்கிறார்கள். மாநில அரசிலும் பேசுகிறார்கள். ஆனால், இது போதாது. போர்க்கால அடிப்படையில் எல்லா ஆய்வுகளையும் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, கோவிட் என்ற நோய்க்கு மருந்துகான ஆய்வை முன்னெடுத்தால் நாம் தீர்வைக்காண முடியும். வரவிருக்கும் தொற்றுகளுக்கும் நாம் மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும்.
மாற்று மருந்து நிபுணர்கள், மருத்துவத் துறைக்கு வெளியில் உள்ள அறிவியல் ஆய்வாளர்கள், நவீன மருத்துவர்கள் ஆகிய மூவரும் ஒரு புள்ளியில் சேர வேண்டும். அந்த வேலை அரசினுடையது. நீங்கள் சேர்ந்து இது தொடர்பான ஆய்வுக்கு ஒரு திட்டத்தைக் கொடுங்கள் என்று சொன்னால், இதை நம்மால் செய்ய முடியும்.
------------------------------8---------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?