விளைவுகள் என்ன?

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல்மயம்!
மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய தொகுதி பிரிவுத் தேர்வில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி, தரகர்கள், கீழ்மட்ட ஊழியர்கள், மோசடியாக வேலைபெற்றவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டுள்ளனர். இம்முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எனக் கண்டறியப்பட்ட 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு போட்டித் தேர்வுகளை எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, ஆதார், விரல்ரேகை பதிவு உள்ளிட்ட புதிய கண்காணிப்பு வழிமுறைகளைப் பின்பற்றப் போவதாகத் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இவ்விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் சரியான திசையில்தான் செல்கின்றன என்பதைப் போன்றதொரு தோற்றம் இதன் மூலம் வலிந்து உருவாக்கப்படுகிறது.
தொகுதி 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் அம்பலமானதைத் தொடர்ந்து, வட்டாட்சியர், துணை ஆட்சியர், போலீசு துணைக் கண்காணிப்பாளர், சார்பதிவாளர்  உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும்  தொகுதி 1, 2 மற்றும் 2-ஏ தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதும் அம்பலமாகியிருக்கின்றன. டி.என்.பி.எஸ்.சி. மட்டுமல்லாது, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டி.ஆர்.பி. தேர்வுகள், கணினி ஆசிரியர் தேர்வுகள் ஆகியவற்றிலும், தட்டச்சுத் தேர்வுகளிலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவலர் பணிக்கான தேர்வுகளிலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் நியமனத்திலும் மோசடி  முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
எனினும், அரசுப் பணியாளர் தேர்வு முறைகேட்டில் தேர்வாணைய உறுப்பினர்கள், உயரதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் பங்கு குறித்து கேள்வி எழுப்புவோரின் வாயை அடைக்கும் நோக்கில், வதந்திகளைப் பரப்புவோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்பும் என மிரட்டுகிறார் தேர்வாணையத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஜெயக்குமார். சுண்டெலிகளைப் பலியிட்டுவிட்டு, பெருச்சாளிகளைக் காப்பாற்ற  அ.தி.மு.க. அரசு முடிவு செய்துவிட்டது என்பதற்கான அடையாளமே இந்த மிரட்டல்.
ஒப்பீட்டு அளவில் பணிப் பாதுகாப்பும், ஊதிய உத்தரவாதமும், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பும் மட்டுமின்றி, சமூகத் தகுதியும் அரசு வேலைகள் மூலம் கிடைப்பதால்தான், தனியார் துறை வேலைகளைவிட அரசு வேலைகளுக்கு இளைஞர் பட்டாளம் ஆளாய்ப் பறக்கிறது. துப்புரவுப் பணியாளர் வேலைக்கும்கூட எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ. உள்ளிட்ட உயர் படிப்புகளை முடித்த இளைஞர்களும் விண்ணப்பிக்க முன்வருவது வேலையில்லா திண்டாட்டத்தின் கோர முகத்தை மட்டும் காட்டவில்லை. அரசு வேலை குறித்து இளைஞர்கள் மத்தியில் உள்ள மயக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது. இந்த மயக்கத்தைத்தான் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள், தரகர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மோசடிக் கும்பல் தூண்டில் முள்ளாய்ப் பயன்படுத்திக் கொள்கிறது.
தொகுதி 4 தேர்வின் விடைத்தாட்களைத் திருத்துவதற்கு நடந்த அத்துமீறல்கள், முறைகேடுகள்; 2017 நடத்தப்பட்ட தொகுதி 2ஏ தேர்வில் “வெற்றி” பெற்றுப் பணியில் சேர்ந்த 26 அதிகாரிகள் திடீரெனத் தலைமறைவாகியிருப்பது; 2008 நடந்த தொகுதி 1 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் சென்னை  தி.நகரிலுள்ள பயிற்சி மையத்திற்கு இருந்த தொடர்பு; தேர்வாணையத்தில் உறுப்பினராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராமின் மகன் தனது முதல் முயற்சியிலேயே தொகுதி 1 தேர்வில் தேர்வாகி வணிக வரித்துறையில் துணை ஆணையர் ஆனது உள்ளிட்ட பல முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. இவையாவும் இம்முறைகேடுகளின் பின்னே அமைச்சர்- அதிகார வர்க்கம் –  பயிற்சி மையம் – என்றொரு வலைப் பின்னல் இருப்பதை அம்பலப்படுத்துகின்றன. சுருக்கமாகச் சொன்னால், இது தமிழகத்தில் அ.தி.மு.க. நடத்தியிருக்கும் “வியாபம் ஊழல்!”
2011-ஆம் ஆண்டில் ஜெயா தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு தேர்வாணையம் கிரிமினல் கூடாரமாக மாற்றப்பட்டது. குறிப்பாக, 2016-ஆம் ஆண்டில், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்கு கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுத்தது அம்பலமாகி, ஜெயா அரசால் நியமிக்கப்பட்ட 11 தேர்வாணைய உறுப்பினர்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. எனினும், நீதிமன்றத்திற்கே சவால் விடும் வகையில் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுள் 5 பேரை மீண்டும் உறுப்பினராக நியமித்தது,  ஜெயா அரசு. சம்பளமில்லாத கவுரவப் பதவியான டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் ஆவதற்கு, இலட்சங்களில் சம்பளம் வாங்கிய நீதிபதி பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற இராமமூர்த்தி, “நீதிபதிக்கான சம்பளத்தைவிட இதில் எத்தனை மடங்கு சம்பாதிப்பார்?” எனக் கேள்வியெழுப்பியது உச்ச நீதிமன்றம்.!
தொகுதி 1 முதன்மைத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக அத்தேர்வில் பங்கேற்ற ஸ்வப்னா என்ற திருநங்கை பொதுநல வழக்கு தொடர்ந்தார். குறிப்பாக, அத்தேர்வில் சென்னை மனிதநேயம், அப்பல்லோ பயிற்சி மையங் களிலிருந்து மட்டும் 62 பேர் (மொத்த வெற்றியாளர்கள் 74 பேர்) வெற்றி பெற்று அதிகாரிகளாகி இருக்கிறார்கள். அத்தேர்வே மிகப்பெரும் மோசடி என்பதை இந்த 62 பேரின் தேர்வு எடுத்துக் காட்டுகிறது. இதனைத் தொடர்ந்து பயிற்சி மைய இயக்குநர் சாம் மற்றும் தேர்வாணையத்தைச் சேர்ந்த ஓரிரு கீழ்நிலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். எனினும், சாம் சிறைக்குச் செல்லும் முன்பே முன் பிணை கொடுத்துக் காப்பாற்றப்பட்டார். மேலும், விசாரணை மனித நேயப் பயிற்சி மையத்தை நடத்திவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சைதை துரைசாமி உள்ளிட்டு மேல்மட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளை நோக்கி நகருகிறது எனப் புரிந்துகொண்ட அ.தி.மு.க. அரசு 2018-இல் விசாரணை அதிகாரிகளை அதிரடியாக மாற்றி, அவ்விசாரணையை முடக்கிப் போட்டுவிட்டது.
முறைகேடுகளின் மூலம் நிரப்பப்படும் நியமனங்கள் நியாயமான முறையில் தேர்வெழுதிக் காத்திருக்கும் இளைஞர்களை மட்டும் ஏமாற்றவில்லை. அதனைவிட முக்கியமாக, மோசடிகளின் மூலம் அரசுப் பதவிகளைப் பெறுபவர்கள், குறிப்பாக வட்டாட்சியர், போலீசு துணைக் கண்காணிப்பாளர், வணிக வரி அதிகாரிகள் என அதிகாரமிக்க பதவிகளைப் பெறுபவர்கள் சட்டப்படியும் நியாயப்படியும் நடந்துகொள்வார்கள் என்பதற்கு அடிப்படையே கிடையாது. இப்படிப்பட்ட நியமனங்கள் சிவில் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் குரூரத் தாக்குதலாகும். இப்படிப்பட்ட அதிகாரிகள், அவர்களது மோசடி நியமனங்கள் அம்பலமாகி பிற்பாடு பதவி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர்கள் பதவியில் இருந்த காலத்தில் போட்ட உத்தரவுகள், எடுத்த நடவடிக்கைகள் செல்லுபடியாகும் என்றால், அதனைவிட குரூர நகைச்சுவை வேறு எதுவும் இருக்க முடியாது.
படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாதவர்கள், அதற்கான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்தும் திராணியற்றவர்கள் தமது தோல்வியை மறைக்கவே போட்டித் தேர்வு முறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். வேலை தேடும் இளைஞர்களுள் தகுதியும் திறமையும் கொண்டவர்களைக் கண்டுபிடிக்கத்தான் போட்டித் தேர்வுகளை நடத்துவதாக அவர்கள் கூறுவதெல்லாம் நாடகம், மோசடி என்பது தேர்வாணையத் தேர்வுகளில் நடந்திருக்கும் முறைகேடுகளின் வழியாக மட்டுமல்ல, வியாபம் ஊழல், நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடிகள், மத்தியப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வினாத்தாட்கள் வெளியானது என வெவ்வேறு நிகழ்வுகளின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
இவையாவும் இந்தக் கட்டமைப்பு எவ்வளவு தூரத்திற்குத் திருத்த முடியாத அளவிற்குச் சீரழிந்து நிற்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றன. இந்த நிலையில் முறைகேடுகளைத் தடுப்பதற்கு புதிய புதிய கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கி இந்த அமைப்பு முறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த முனைகிறார்கள். அவையெல்லாம் புற்று நோய்க்கு பாரசிட்டமால் மாத்திரை கொடுப்பதைப் போன்றதாகும்.
கைகளில் புத்தகக் கட்டுகளோடும், கண்களில் கனவுகளோடும், மனதில் நம்பிக்கையோடும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களே, இனி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். பாரசிட்டமால் மாத்திரை போதுமா, அல்லது அறுவைச் சிகிச்சை தேவையா என்பதை முடிவெடுங்கள்.
தமிழ்ச்சுடர்.(வினவு)தமிதம
--------------------------------------------
அரசியல் கொரோனா....
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அமெரிக்காவிற்கே அதிர்ச்சி தான், இவர் எப்படி வென்றார் என்று.
பி.பி.சி பத்திரிகை இவ்வாறு எழுதியது அப்போது. "மிகச் சிலரே அவர் போட்டியிடுவார் என நினைத்தார்கள், அவர் போட்டியிட்டார். உள்கட்சி தேர்வில் வெல்லமாட்டார் என நினைத்தார்கள் அவர்கள், ஆனால் வென்றார். அவரால் முதன்மைத் தேர்வில் வெல்ல முடியாது என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால் வென்றார். குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டியிடும் வாய்ப்பை வெல்லமாட்டார் என்றார்கள் அவர்கள், ஆனால் அதையும் வென்றார்". கடைசியில், அவரால் பொதுத் தேர்தலை வெல்லமுடியாது என்றார்கள் அவர்கள். இப்போது அவர் தான் அதிபர்".
ஆமாம், இப்படி பலரின் கணிப்பையும் பொய்யாக்கி, ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபர் ஆனார்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வென்றிருந்தாலும், ட்ரம்ப் பொதுமக்கள் வாக்குகளில் வெல்லவில்லை என்ற உண்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்க தேர்தல் ஒரு குழப்பமான தேர்வு முறையைக் கொண்டது. மக்கள் வாக்களிக்கும் தேர்தலுக்குப் பிறகு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட எலெக்டர்கள் வாக்களிக்கிற எலெக்டோரல் காலேஜில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றவர் டிரம்ப்.
ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி, சீர்திருத்தக் கட்சி, ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி, சுயேட்சை, குடியரசுக் கட்சி. இது என்ன வரிசை என்று பார்க்கிறீர்களா. டொனால்ட் டிரம்ப் 1987 ஆம் ஆண்டு துவங்கி இப்போது வரை சுற்றி வந்த அரசியல் பாதையில் கடந்து வந்த கட்சிகளின் வரிசை.
இராணுவத்தில் பணிபுரிந்த அனுபவமோ, அரசு சார்ந்து பணியாற்றிய அனுபவமோ இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க குடியரசுத் தலைவர். எந்தவித அரசியல் முன்அனுபவமும் இல்லாத ட்ரம்ப்பை தேர்ந்தெடுத்ததன் பலனை இப்போது அமெரிக்கா அனுபவிக்கிறது.




தேர்தலின் போது ட்ரம்ப்க்கு இருந்தது ஒரே ப்ளஸ் பாயிண்ட் தான். என்.பி.சி தொலைக்காட்சியில் "தி அப்ரெண்டிஸ்" என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரை நடத்திய அறிமுகம்தான் அது. தொழிலதிபர்களை வைத்து நடத்திய அந்த நிகழ்ச்சியில், ட்ரம்பின் நடவடிக்கைகள் அவர் மீதான பிம்பத்தை பெரிதாக கட்டமைத்தது. ஒரு மயக்கத்தை நிகழ்ச்சியை பார்த்தவர்கள் மனதில் ஏற்படுத்தியது.
"ஒரு முதலாளியாக, ஒரு முதன்மை செயல் அலுவலராக, மக்களை வேலைக்கு அமர்த்துபவராக, ஒரே வார்த்தையில் வேலையை விட்டு நீக்குபவராக, எதையும் முடிவு செய்யக் கூடியவராக, எல்லாம் தெரிந்தவராக, பெரிய சர்வாதிகார ஆணாதிக்க மனிதனாக ட்ரம்ப் பார்க்கப்பட்டார். அது தான் அவர் பலமானது", என ட்ரம்பின் வரலாற்றை எழுதிய க்வெண்டா ப்ளேர் கூறியுள்ளார்.
அமெரிக்க கப்பல் படை தலைவராக இருந்து, அரசியல்வாதியான ஜான் மெக்கெயினை அவமானப்படுத்தியது, பாக்ஸ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி நடத்துனர் கெல்லியிடம் வம்பிழுத்தது, பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டது என தேர்தல் நேரத்தில் ட்ரம்பிற்கு தொடர் சிக்கல்கள் தான்.
இதேபோல் இன்னும் பல பின்னடைவுகள், ட்ரம்பிற்கு. ஆனால் அத்தனை பிரச்னைகளையும் எதை வைத்து சமாளிப்பது என்ற சூட்சுமத்தைக் கண்டுபிடித்தார் ட்ரம்ப்.
அமெரிக்க மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. அது அவர்கள் மனதில் மறைந்து கிடக்கும் "தேசபக்தி". அதை சமயம் பார்த்து கிளறி விட்டார் டிரம்ப். அடுத்து வெள்ளை மக்கள், கறுப்பு மக்கள் என்ற பிரிவினையை நைச்சியமாகத் தூண்டி விட்டார்.
"அதற்கு முன் இருந்த அதிபர்கள், நாட்டு மக்களைவிட, வெளியாட்களுக்கு கருணையோடு நடந்து கொண்டார்கள். அதனால் அமெரிக்கர்களுக்கு இழப்பு. அமெரிக்காவுக்கு இழப்பு", என முழங்கினார்.




இந்தியர்கள் மற்றும் பல தேசத்தவர்கள் அமெரிக்காவில் முக்கியமான பணிகளில் இருப்பது ஏற்கனவே அமெரிக்களுக்கு உறுத்தல். அவர்கள் ட்ரம்ப் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டார்கள்.
முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் வாக்குறுதியான "make America great again" ( அமெரிக்காவை மீண்டும் முதன்மையாக்குவோம்) என்ற சொற்றொடரை கையிலெடுத்தார்.
"மற்ற தலைவர்கள் வெளிநாட்டினர் குடியேற்றத்தை கண்டு கொள்ளவில்லை, வர்த்தகத்தை அமெரிக்காவிற்கு சாதகமாக திருப்பவில்லை. நாட்டைக் கைவிட்டுவிட்டனர்" என்ற குற்றச்சாட்டுகள் எடுபட்டன. நாட்டை மீண்டும் வசந்தகாலத்தை நோக்கி கொண்டு வர, ட்ரம்ப் தான் வழி என நினைத்தனர்.
நாட்டின் பிரச்னைகளை சுமூகமாக தீர்க்க வழி இல்லை. ட்ரம்ப் அதிரடியாக எல்லாவற்றையும் சரி செய்து விடுவார் என்ற மயக்கத்தை ஏற்படுத்துவதே தேர்தல் பிரச்சாரமாக அமைந்தது. தனது அடாவடி பேச்சுகள், ஏறுக்குமாறான வாதங்கள் மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்தார். மக்களின் ஒரு பகுதி மயங்கியது.
தேர்தலில் வெற்றி பெற்ற தனது அடாவடித்தனமே எப்போதும் வெல்லும் என்ற மனநிலைக்கு ட்ரம்பை, அதிபர் தேர்தல் வெற்றி கொண்டு சென்றது. பதவிக்கு வந்த பிறகும் அதைத் தொடர்ந்தார்.
இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு, தடாலடியாக பயணத் தடை விதித்தார். அதற்கு எதிர்ப்பை கண்டார். 2020 அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற, உக்ரைன் நாட்டை குறுக்கு வழியில் பயன்படுத்தினார் என விசாரணை நடந்து சபை கண்டன தீர்மானம் வரை சந்தித்தார். எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை. ஏடாகூடமாக பதில் சொல்வதையே வழக்கமாக கொண்டிருந்தார்.




சீனாவில் கொரோனா வைரஸ் பரவியபோது, எதிர்க்கட்சிகள் எச்சரித்தன, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது, அமெரிக்காவின் உயர் அறிவு சமூகம் எச்சரித்தது.
ஆனால் அதுகுறித்து கவலை கொள்ளாமல் தனது தேர்தல் பணிகளில் கவனமாக இருந்தார் ட்ரம்ப். "கொரோனா ஒரு பிரச்னையே இல்லை, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன" என்ற வசனத்தை தன் பாணியில் பேசினார்.
ட்ரம்ப் பேசிய வசனத்திற்கு விலை 23,000க்கும் மேற்பட்ட உயிர்கள். 5 லட்சத்து எழுபதினாயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"வலதுசாரிகள் எப்போதும் தனக்குத் தோன்றியதை மாத்திரம் பேசுவார்கள், செய்வார்கள், மக்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்" என்பதற்கு ஹிட்லருக்கு அடுத்த உதாரணமாக ட்ரம்ப் உருவெடுக்கிறார்.
இப்போதும் சீனாவை குற்றம்சாட்டுகிறார், உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டுகிறார், இந்தியாவை மருந்து கேட்டு மிரட்டுகிறார். தங்களது நாட்டுக்கு வரவேண்டிய மருந்துப் பொருட்களை திருடுகிறார் என கனடா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சொல்லின.
கடைசியில், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய, கொரோனா வைரஸை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டன என தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் சொல்கிறார். ட்ரம்ப் ஓர் அரசியல் கொரோனா.

சிவசங்கர் எஸ்.எஸ்
------------------------------------------
 WHO க்கு நிதியை நிறுத்தினால் 
உண்டாகும் விளைவு?
உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியை நிறுத்தப் போவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த் பரவல் விவகாரத்தில் அந்த நிறுவனம் "தன் அடிப்படைக் கடமையைச் செய்யத் தவறிவிட்டதால்'' இந்த நிதி உதவியை நிறுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் என்பது என்ன, அதன் பணிகள் என்ன?
சுகாதாரம் மற்றும் மருத்துவ விவகாரங்களில் அதுதான் உலகின் தலையாய அமைப்பு.
ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைகக் கட்டடத்துக்குள் நுழையும் போது வண்ணங்களின் கலவையை தலைக்கு மேலே பார்க்கலாம்.
அதன் 194 உறுப்பு நாடுகளின் கொடிகளும் அங்கு இருப்பதால், நல்ல வெளிச்சமான நாட்களில் அந்த இடமே வண்ணங்களின் கலவையாக இருக்கும்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து இதுதான் உலகின் மருத்துவ தலைமை அலுவலகமாக வர்ணிக்கப்படுகிறது.
ஐ.நா.வின் இந்த அமைப்பு 1948ல் உருவாக்கப்பட்டது. "உலகப் பொது சுகாதாரத்தின் காவலன்'' என்று இது வர்ணிக்கப்படுகிறது.
"அனைத்து மக்களுக்கும் அதிகபட்ச அளவில் எட்டக் கூடிய மருத்துவ வசதிகளைப் பெற்று தருவதை" உறுதி செய்வது இதன் லட்சிய நோக்கமாகக் கருதப்படுகிறது. அது பெரிய பணி.
கடந்த 11 ஆண்டுகளில் ஆறு சர்வதேச சுகாதார அவசர நிலைகளை இந்த அமைப்பு சந்தித்துள்ளது. 2014ல் மேற்கு ஆஃப்ரிக்காவில் இபோலா, 2016ல் ஜிகா வைரஸ் பரவல், இப்போது கோவிட்-19 நோய்த் தொற்று உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.
பின்வரும் பணிகளையும் இந்த அமைப்பு செய்கிறது:
· நோய்த் தொற்றுகள் ஏற்படும்போது "உலக அளவில் எச்சரிக்கையை'' எப்போது தருவது என முடிவு செய்தல்
· புதிய சிகிச்சைகள், தடுப்பூசி மற்றும் மருந்துகளை உருவாக்குவதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குதல
· நோய் உருவான பகுதிக்கு நிபுணர்களை அனுப்பி, இந்த சிகிச்சையில் எந்த அணுகுமுறை சரியாக வரும், எது சரிப்பட்டு வராது என்பதைக் கண்டறிதல்
பின்வருவன உள்ளிட்ட பல்வேறு சுகாதார விவகாரங்களுக்கும் உலக சுகாதார நிறுவனம் பொறுப்பாக உள்ளது:
· உலக அளவில் உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோய் பிரச்சனைகளைக் கையாளுதல்
· சாலை விபத்துகளில் மரணங்களைக் குறைத்தல்
· போலியோ போன்ற தடுப்பூசிகளால் ஒழிக்கக் கூடிய நோய்களை ஒழிப்பது
· பிரசவத்தின் போது தாய், சேய் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பணியாற்றுதல்.

அதிகாரம் இல்லை; ஆலோசனை மட்டும்

உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை கூறும் அமைப்பு மட்டுமே. தங்கள் குடிமக்களின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்தலாம், நோய்த் தொற்றை எப்படி தடுக்கலாம் என்று நாடுகளுக்கு இந்த அமைப்பு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். அந்தப் பரிந்துரைகளை இந்த அமைப்பு அமல் செய்ய முடியாது. முடிவெடுத்து அமலாக்கும் அதிகாரம் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே உண்டு.
அந்த ஆலோசனைகளை அமலாக்கும்போது அந்தந்த நாட்டு அரசுகள் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பங்காற்றலாம் அல்லது ஆலோசனை கூற மட்டுமே பயன்படுத்தலாம்.
யாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள் என்பதைப் பொருத்து இதற்கான பதில் அமையும்.
டொனால்ட் டிரம்ப்பிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், அழுத்தமாக ஆமாம் என்றுதான் பதில் வரும்.
ஆனால் அமெரிக்காவில் இந்த நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதில் எப்படி கையாண்டார் என்பது குறித்து டிரம்ப் மீதே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அங்கு இப்போது 600,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 26 ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கோவிட்-19க்கு முன்னதாகவே அவருக்கு சீனாவுடன் அரசியல் ரீதியில் பெரிய மோதல் இருந்து வந்தது.
இருந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பைத் தடுப்பது தொடர்பாக ஆரம்பத்தில் தாங்கள் கூறிய கருத்துகள் எப்படி மௌனமாக்கப்பட்டன என்று அந்த நாட்டில் உள்ள மருத்துவர்களும், மற்ற நாடுகளும் சீனாவின் மீது வருத்தங்கள் கொண்டிருந்த நிலையிலும், இந்த விஷயத்தில் சீனாவின் செயல்பாடுகளைப் பாராட்டி உலக சுகாதார நிறுவனம் கருத்து கூறியதை, விமர்சிக்கும் முதலாவது நபராக அமெரிக்க அதிபர் இல்லை.
சீனாவைப் பாராட்டிய கருத்தில் தாம் உறுதியாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் முனைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ் கூறியுள்ளார்.
சீனாவின் செயல்பாடுகளால் சர்வதேச அளவில் இந்த வைரஸ் பரவும் வேகம் குறைந்தது என்றும், வரக் கூடிய சூழ்நிலையை எதிர்கொள்ள மற்ற நாடுகள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள அவகாசம் கிடைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த வைரஸ் குறித்த மரபணுக் குறியீடுகளை சீனா தானாகவே முன்வந்து பகிர்ந்த காரணத்தால், மருத்துவப் பரிசோதனை முறைகளை மற்ற நாடுகள் உருவாக்கத் தொடங்கின என்றும், தடுப்பூசி மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கின என்றும் அவரும், பல அறிவியலாளர்களும் கூறியுள்ளனர்.
Image captionஉலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ்
இருந்தபோதிலும், சீனாவின் செயல்பாடு குறித்து பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.
"நோய்த் தொற்றின் ஆரம்ப நிலைகள் பற்றி உலகிற்கு சீனா சொன்னது பெரிய விஷயமல்ல, அதில் தாமதங்கள் இருந்தன என்பது தெளிவாகத் தெரிகிறது'' என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உலக பொது சுகாதாரத் துறை பேராசிரியராக இருக்கும் தேவி ஸ்ரீதர் கூறியுள்ளார்.
"ஆரம்பகட்டத்தில், இந்த விஷயத்தை மறைத்துவிட முயற்சித்தார்கள்,'' என்கிறார் அவர்.
மேற்கு ஆஃப்ரிக்காவில் இபோலா நோய் பரவியபோது உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் ஸ்ரீதர், தாமும்கூட உலக சுகாதார நிறுவனத்தின் "கடும் விமர்சகர்தான்'' என்று கூறினார்.
``எல்லா நாடுகளையும் உள்ளடக்கி, நோய்த் தொற்று பாதிப்பு உள்ள நாடுகளில் தீவிர நடவடிக்கை எடுக்கச் செய்யும் சமநிலையான முயற்சிகளை எடுப்பதில் உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிகளில் நிறைய குறைபாடுகள் உள்ளன'' என்று அவர் கூறுகிறார்.
உலக சுகாதார நிறுவனத்தின் பெரும்பகுதி பணி, அரசாங்க உறவுமுறை ரீதியிலானது. ஏனெனில், நோய்த் தொற்று குறித்து தகவல்களைப் பகிர வேண்டும் என்று நாடுகளை அது கட்டாயப்படுத்த முடியாது. அந்த நாடுகளாகவே முன்வந்து தரும் தகவல்களைத் தான் நம்ப வேண்டியுள்ளது.
சீனாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக டாக்டர் டெட்ரோஸ் கூறியிருந்தால் அந்த அமைப்புக்கு ``ஐந்து நிமிட நேர புகழ்'' கிடைத்திருக்கும். ஆனால், கோவிட்-19க்கு எதிரான உலக நாடுகளின் முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கும்.
"எதை சாதித்திருக்க முடியும், ஒரு வாரம் கழித்து அவர் சீனாவை அணுகி, தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்க வேண்டியிருக்கும்.''
நோய்த் தொற்றின் ஆரம்ப நாட்களில் தகவல்களைத் தெரிவிக்குமாறு சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் நிறைய அழுத்தம் கொடுத்தது என்று ஸ்ரீதர் நம்புகிறார். ஆனால் அவை திரைமறைவில் நடந்த விஷயங்கள்.
``ஊடகங்களுக்குத் தெரியும் நிலையில் வெளிப்படையாக இதுபோன்ற விஷயங்களைச் செய்வதில் அரசாங்க முறையிலான உறவுகளில் பெரிய வித்தியாசம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஓர் அமைப்பாக தனிப்பட்ட முறையில் செயலாற்றுவது, நடவடிக்கைகளை முன்னெடுப்பது மற்றும் காரியங்களை நடக்கச் செய்வதில் வித்தியாசம் உள்ளது'' என்கிறார் அவர்.

முந்தைய நோய்த் தொற்றுக் காலங்களில் என்ன நடந்தது?

உலக சுகாதார நிறுவனம் விமர்சனத்துக்கு ஆளாவது இது முதல்முறையல்ல.
2014-ல் இபோலா நோய்த் தொற்று பரவியபோது, ஐ.நா.வின் இந்த அமைப்பு மெதுவாகத்தான் செயல்பட்டது என்று கூறப்பட்டது. கினியில் முதலில் அந்த நோய் கண்டறியப்பட்டு ஐந்து மாதங்கள் கழித்துதான் சர்வதேச அவசரநிலையை இந்த அமைப்பு அறிவித்தது.
ஆனால் 2009ஆம் ஆண்டில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டபோது, சீக்கிரமாகவே செயலாற்றியது, தேவையில்லாமல் உலக அளவிலான நோய்த் தொற்றாக அறிவித்தது.
"இந்த வைரஸை அரசியலாக்க வேண்டாம்'' என்று முனைவர் டெட்ரோஸ் உலக நாடுகளை கேட்டுக் கொண்டதை அடுத்து, உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதி உதவியை நிறுத்திவைக்கப் போவதாக கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

இந்த நோய்த் தொற்று விஷயத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடு பற்றி மறு ஆய்வு நடத்த வேண்டும் என்ற யோசனையை அவர் வரவேற்றார். ஏனெனில் ``நமது தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு, நமது பலங்களுடன் முன்னேறிச் செல்ல வேண்டும்'' என்று அவர் கூறினார்.
ஆனால் இப்போது நமது கவனம் ``இந்த வைரஸை எதிர்த்துப் போரிடுவதில்தான்'' இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கையால் என்ன தாக்கம் ஏற்படும்?
நாடுகளின் வளம் மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர் கட்டணங்கள் மற்றும் உலக நாடுகள் தாமாக முன்வந்து வழங்கும் பங்களிப்புகளை நம்பி செயல்படும் உலக சுகாதார நிறுவனத்துக்கு, அதிக நிதி கொடுக்கும் தனியொரு நாடாக அமெரிக்கா உள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர பட்ஜெட் 220 கோடி அமெரிக்க டாலர்களில் பெரும் பகுதி அந்த தன்னார்வ அடிப்படையிலான நன்கொடைகள் மூலம் கிடைக்கிறது.
கடந்த ஆண்டு அமெரிக்கா 40 கோடி டாலருக்கும் அதிகமாகக் கொடுத்துள்ளது.
இந்த நோய்த் தொற்றை சமாளிக்க உலக சுகாதார நிறுவனத்திற்கு ``அதிக நிதி தேவைப்படுகிறது, குறைவாக அல்ல'' என்று பிரிட்டனின் வெல்கம் அறக்கட்டளையின் டைரக்டர் டாக்டர் ஜெரெமி பர்ரர் கூறியுள்ளார்.
``நமது வாழ்நாளில் மிகப் பெரிய சவாலை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பு செய்யும் பணியை வேறு எந்த அமைப்பும் செய்ய முடியாது."'
``இது நமது ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டிய நேரமே தவிர, பிரிவினையைக் காட்டும் நேரம் அல்ல. தேவையில்லாமல் சிக்கலை உண்டாக்கும் செயலில் அமெரிக்கா ஈடுபடுகிறது," என்று பேராசிரியர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
``இதனால் உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், கோவிட்-19 தடுப்பு திறன் மட்டும் பாதிக்காது, மலேரியா, காசநோய், போலியோ தடுப்பு நடவடிக்கைகளும் பாதிக்கும். கடந்த காலத்தில் ஒழிந்துவிட்டதாக நாம் நினைத்திருக்கும் எல்லா வகையான நோய்களும் மீண்டும் தாக்கும்'' என்று அவர் எச்சரிக்கிறார்.
--------------------------------------------------------------

குளோரோகுயின் ஆற்றல் உள்ள சூப்பர் பவர் ஆயுர்வேத மருந்துகள்

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் விதமாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் HCQ என்ற மருந்தை அமெரிக்காவுக்கு உதவி இருக்கிறது ..
மலேரியாவுக்கு பயன்படக்கூடிய இந்த மருந்தை சின்கோனா மரத்தின் பட்டையை தான் மூல பொருளாக உபயோகிக்கிறார்கள் என்பது நாம அறிந்த ஒன்றே ..

ஹோமியோபதியில் இந்த மருந்தை பயன்படுத்தி தான் அடிப்படை கொள்கையே நிரூபிக்கபட்டது என்பதும் -ஹோமியோபதியில் இந்த மருந்து உள்ளது என்பதும் எல்லோருக்கும் தெரியும்..
ஆயுர்வேத மருந்துகளில் இந்த #சின்கோனா_பட்டை உள்ள ஹைட்ராக்ஸி குளோரோகுயின் HCQ ஆற்றல் உள்ள மருந்துகள் உள்ளதா என்றால் ..ஆமாம் உள்ளது ..
அவை ..
1 . மகா_சுதர்சன_சூரணம் / மகா சுதர்சன மாத்திரை..
மூலிகை பாராசிட்டாமால் என்கிற சுதர்சன சூர்ண மாத்திரையை சில நாட்களுக்கு முன் தான் விரிவாக பதிவிட்டு இருந்தேன்.

அந்த சுதர்சன சூரணத்துடன் சிங்கோனா சரியான அளவுகளில் சேர்த்தால் அது மகா சுதர்சன மாத்திரை ஆகிறது.
2. ஜ்வர_முராரி என்கிற விஷ காய்ச்சலுக்கு உதவுகிற மருந்து . இந்த மருந்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆயுர்வேதமருத்துவம் என்கிற வலை தளம் செல்லவும் .. இந்த மருந்தில் திரிகடுகு மற்றும் நிலவேம்பு சேர்ந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு .
கோரோனா சிகிச்சை அளிக்க #ஹைட்ராக்ஸி_குளோரோகுயின் #HCQ போன்ற மருந்துகளை பயன்படுத்தும் போது .. இதற்க்கு தாய் மருந்தான மூல பொருளான சின்கோனா பட்டை உள்ள அதை போன்ற பல ஆயுர்வேத மருந்துகள் உள்ளது .... இந்தியா ஆயுஷ் துறை இப்போது மேலும் வீரியம் கொண்டு கொரோனாவை ஒழிக்க பாடுபடும் இந்த வேளையில் இந்த அற்புத மருந்துகளை தெரிந்து கொள்வது நல்லது
மேலும் விவரம் அறிய, ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA
ஆயுர்வேத மருத்துவர்
#AL_SHIFA_AYUSH_HOSPITAL*

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?