சீரழிவு நிலையில் டாலர்தேசம்.
“எனது நிர்வாகத்திடம் உலக சுகாதார மையத்துக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை நிறுத்தி விடுமாறு நான் இன்றைக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனா வைரஸ் பரவலுக்கு அதன் மோசமான நிர்வாகம் எந்தளவுக்கு காரணமாக இருந்தது என்பதைக் குறித்த விசாரணை நடந்து வருகிறது. எல்லோருக்குமே இதில் என்ன நடந்தது என்று தெரியும்” என ஏப்ரல் 14ம் தேதி அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவுக்கெல்லாம் கொரோனா வராது என்று முதலில் சவடால் பேசி வந்த டிரம்ப், பிறகு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து தற்போது பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில் சீனா தான் அனைத்துக்கும் காரணம் எனப் பேசி வருகிறார். ஜனவரி மாதத்தின் மத்திய பகுதி வரை இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது என சீன அரசு சொல்லி வந்ததை உலக சுகாதார மையம் ஏற்று பிரச்சாரம் செய்ததாகவும், அந்நிறுவனத்தின் இது போன்ற சீனச் சார்பு நடவடிக்கைகளே வைரஸ் பரவலுக்கு காரணமாகி விட்டது என்றும் டிரம்ப் குற்றம் சுமத்துகிறார்.
மேலும் சீனாவில் வைரஸ் தொற்று அறியப்பட்டதும் அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள உலக சுகாதார மையம் தவறி விட்டது என்றும், சீன அரசின் இரும்புத் திரையைக் கடந்து தணிகை செய்யப்பட்டு வரும் செய்திகளை அப்படியே நம்பியது எனவும் குறிப்பிட்டுள்ளார். சீன அரசு சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்க தேவையில்லை என்று சொன்னதையும் உலக சுகாதார மையம் அப்படியே ஏற்றுக் கொண்டதாக டிரம்ப் சுட்டிக்காட்டுகிறார்.
டிரம்பின் இந்த முடிவை பல்வேறு சர்வதேச நாடுகளும் கடுமையாக எதிர்த்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் டிரம்பின் முடிவை விமரிசித்துள்ளன. குறிப்பாக ஜெர்மன் அரசு மிகக் கடுமையாக எதிர்த்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் ஒரு பேரழிவை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதோ மற்றவரை பலிகடா ஆக்குவதோ பலனளிக்காது என்றும் இந்த சூழலில் உலக சுகாதார மையம் போன்ற ஒரு பொதுவான அமைப்பை முடக்குவது சரியல்ல என்றும் இந்நாடுகள் குறிப்பிடுகின்றன.
அமெரிக்காவிற்கு உள்ளேயே டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. சில முதலாளித்துவ பத்திரிகைகள், பிப்ரவரி மாத இறுதி வரை டிரம்ப் சுமார் 14 முறை சீனாவின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியதை மேற்கோள் காட்டி, தற்போது அமெரிக்க கொரோனா நிலவரம் கைமீறிப் போவதை உணர்ந்த டிரம்ப் பழியை சீனாவின் மீது போட முயல்வதாக குற்றம் சாட்டுகின்றன. உலக சுகாதார மையத்துக்கு நிதிப் புரவலராக உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சும் டிரம்பின் முடிவு தவறானது என விமரிசித்துள்ளார்.
உலக சுகாதார மையத்திற்கான நிதியை அமெரிக்கா வெட்டவுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளது அந்நிறுவனத்தின் உதவியை பெரிதும் சார்ந்துள்ள இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளை கடுமையாக பாதிக்கும். எனினும், இவ்விசயத்தில் இந்தியா மிக மென்மையான எதிர்ப்பை பதிவு செய்துள்ள அதே சமயம், பல்வேறு ஆப்ரிக்க நாடுகளோ மிகக் கடுமையாக சாடியுள்ளன.
உலக சுகாதார மையத்திற்கு அதன் உறுப்பு நாடுகளும் நிதி உதவி அளிக்கின்றன. கடந்தாண்டு இந்தியா சுமார் 4.1 மில்லியன் டாலர் நிதி அளித்துள்ளது. அதே ஆண்டில் அமெரிக்கா சுமார் 500 மில்லியன் டாலர் நிதியளித்துள்ளது.
கொரோனா வைரசின் தோற்றம் என்னவென்பதைக் குறித்து இன்னமும் ஒரு தெளிவான முடிவுக்கு விஞ்ஞான உலகம் வந்தடையவில்லை. வௌவால்கள் மூலம் பரவியிருக்கலாம் அல்லது வேறு மிருகங்கள் மூலம் பரவி இருக்கலாம் என்பதெல்லாம் ஒரு கருதுகோள் அளவிலேயே உள்ளது. அதன் தோற்றம் குறித்தும், அதை வெல்வது எப்படி என்பதைக் குறித்தும் அறிவியல் உலகம் ஒரு முடிவுக்கு வர மேலும் சில காலம் ஆகலாம். எனினும், அது சீனத்துப் பரிசோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட உயிரி ஆயுதம் என்று வாட்சாப் விஞ்ஞானிகளும் இன்னபிற சதிக் கோட்பாட்டாளர்களும் பரப்பி வருகின்றனர்.
உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோசையும், சீனாவையும் டிரம்ப் குறிவைப்பதற்கு மேற்படி வில்லேஜ் விஞ்ஞானிகளின் கற்பனைக் கதைகள் மட்டும் காரணங்களாக இல்லை. டிரம்பின் முடிவின் பின் அவரது அரசியல் நலன் ஒளிந்துள்ளது. எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட இருக்கிறார் டிரம்ப். இந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வருகின்றது. மொத்த நாடும் முடங்கியுள்ள நிலையில் நோயால் அதிகரித்து வரும் மரணங்களும், அது உண்டாக்கும் அச்சமும் ஒரு புறம் என்றால் நொறுங்கிச் சரிந்து வரும் பொருளாதாரம் இன்னொரு புறம் மக்களை நெருக்கி வருகிறது. கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நிலவரம் மிக மோசமாக இருக்கும் என்றும், வேலையிழப்புகள் அதிகரிக்கும் என்றும் பல்வேறு பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
எனவே இதற்கெல்லாம் காரணமாக ஒரு எதிரியை சுட்டிக்காட்ட வேண்டிய அரசியல் தேவை டிரம்புக்கு உள்ளது. பல பத்தாண்டுகளாக “ரஷிய அரக்கனிடம்” இருந்து உலகைக் காக்கும் பொறுப்பை தலையில் சுமப்பதாக அமெரிக்க மக்களை வெறியூட்டி தமது ஏகாதிபத்திய சுரண்டலையும், ஆக்கிரமிப்புப் போர்களையும் நியாயப்படுத்திக் கொண்டனர் அமெரிக்க ஆளும் வர்க்கத்தினர். இப்போது “ரஷிய அரக்கனின்” இடத்தை “சீன டிராகன்” பிடித்துக் கொண்டுள்ளது.
தனது தோல்விக்கான காரணத்தை ஒரு அந்நியரின் மேல் சாட்டி அந்த அந்நியருக்கு எதிரானதாக தேச வெறியை கட்டமைப்பது பாசிஸ்டுகளின் வழக்கமான தந்திரம் – இந்தியர்களாகிய நாம் இந்த தந்திரத்தை பார்த்து வருகிறோம். அதன் அமெரிக்க வடிவம் தான் டிரம்பின் சீன எதிர்ப்பு அரசியல். ஆனால், பாசிஸ்டுகளின் இடம் எது என்பதை வரலாறு தொடர்ந்து பதிவு செய்தே வந்துள்ளது – இந்த முறை அதை கொரோனா வைரஸ் செய்யும்.
-----------------------------------------8என்ன விலை அழகே...?
இந்தியாவில் பரவி வரும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் தமிழகமும் ஒன்று. இந்நிலையில் தமிழக அரசு ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா நோய் பரவலை தடுக்கும் முயற்சியில் பெரும் எண்ணிக்கையிலான பாதிப்புகளை துரிதமாகக் கண்டறிய உதவும் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழக அரசு சீனாவிடம் ஆர்டர் செய்தது. அது பல்வேறு தாமதத்திற்கு பிறகு தற்போது தமிழகத்திற்கு வந்து சோதனைப் பணியும் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் விலை அதிகமாக இருப்பதாகவும், மற்ற மாநிலங்கள் குறைந்த விலைக்கு வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அமைச்சர் பதில் சொல்லாமல் அதிகாரிகளை பதிலளிக்க கூறினார். ஆனால், அதிகாரியோ சரியான பதிலை சொல்ல முடியாமல் தயக்கம் காட்டி பதறிப்போன சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத், ரேபிட் டெஸ்ட் கிட்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஏப்ரல் 2ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதற்கு அடுத்த நாளே ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கும் முயற்சியில் மத்திய அரசு கொடுத்த அதே விலையில் ஏப்ரல் 4ம் தேதி ஆர்டர் செய்தோம்.
குறிப்பாக மத்திய அரசு வாங்கிய இடத்தில் தான் வாங்கியதாக பதில் அளித்த உமாநாத், விலையை மத்திய அரசிடம் தான் கேட்கவேண்டும் என சம்பந்தமே இல்லாதது போல் பேசியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே அதிகாரியின் பேச்சுக்கு இடையில் குறுக்கிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
பின்னர் மீண்டும் பேசிய உமாநாத், நாம் ஆர்டர் செய்த போது அங்கு 7 நிறுவனங்கள் தான் இருந்ததாகவும் சட்டீஸ்கர் மாநிலம் ஆர்டர் செய்திருக்கும் கம்பெனிக்கு அப்போது ஒப்புதலே இல்லையென்றும் கூறிய அவர் நாம் ஆர்டர் செய்த பிறகுதான் கிட்களுக்கான சுங்கவரி, சுகாதார சிறப்பு வரி ஆகியவை நீக்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.
அப்போது குறுக்கிட்ட பத்திரிக்கையாளர்கள் ”கிட்களின் விலையை சொல்வதில் அரசுக்கு என்ன தயக்கம்? ஒரு கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியதாக சொல்லப்படுகிறதே, அது சரியான தகவல் தானா?” என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய உமாநாத், குறைந்த விலையில் வாங்கியதைக் குறைசொல்லக்கூடாது என கூறிவிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பின் முடிவில், தமிழக அரசு ஒரு கிட்டை 600 ரூபாய் விலைக்கு வாங்கியிருப்பது தொடர்பான ஆவணங்களை காண்பித்தார்.
தமிழக அரசு அதிக விலைக் கொடுத்து வாங்கியது தொடர்பாக கொடுக்கப்பட்ட விளக்கம் திருப்திகரமாக இல்லையென்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாகவே சட்டீஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோ, “75,000 கிட்களை ரூ.337 + ஜி.எஸ்.டி என்ற விலையில் தென்கொரிய நிறுவனம் ஒன்றிடமிருந்து வாங்கியிருக்கிறோம். இந்தியாவிலேயே இது மிகக் குறைந்த விலை” என குறிப்பிட்டிருந்தார்.
தமிழக அரசு மத்திய அரசு விலையில் வாங்கிருந்தாலும், பின்னர் அறிவிக்கப்பட்ட சலுகையை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழக அரசு கொரோனா பரிசோதனைக் கருவி வாங்கியதில் முறைகேடு செய்துள்ளதா? என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-------------------------------------------
உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது ?
உண்மையில் அமெரிக்காவில் காணப்படும் இந்தப் பட்டினிக் காட்சிகள் நம்மை திகைக்க வைக்கின்றன. இத்தனை நாள் நாம் கண்ட செல்வ செழிப்பான அமெரிக்கா எங்கே போனது?
அமெரிக்காவில்… கொரோனா வைரஸால் வேலையிழந்தோர், வீடற்றோர் என லட்சக்கணக்கானோர் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். இவர்களுக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இலவச உணவு விநியோகம் செய்கின்றன. இவற்றை வாங்குவதற்காக மக்கள் பல கி.மீ. தூரத்துக்கு வரிசையில் நிற்கிறார்கள்.
பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, நியூயார்க், கலிஃபோர்னியா, ஃப்ளோரிடா என பெரும்பான்மையான மாகாணங்களில்.. இலவச உணவுக்காக மக்கள் மணிக்கணக்காக காத்துக்கிடக்கின்றனர். இந்திய நிலைமைக்கும் அவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, இங்கே நம் மக்கள் நெருக்கி அடித்துக்கொண்டு கூட்டமாக நிற்கிறார்கள். அங்கு கார்களில் நிற்கிறார்கள். நியூயார்க் போன்ற நகரங்களில் இத்தகைய கார்களையும் காண முடியவில்லை. Food bank line-களில் பெரும் மனிதர் கூட்டம் வரிசையில் நிற்கிறது. வாங்கிய வேகத்தில் பசி பொறுக்க முடியமால் அங்கேயே சாப்பிடுகின்றனர்.
அமெரிக்கா பற்றி நமக்கு இருக்கும் மனச் சித்திரம் வேறு. ஆனால், ஒரு சின்னஞ்சிறு வைரஸ் அமெரிக்காவை பிய்த்து சிதைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் கொரோனாவின் உச்சத்தை இன்னும் அமெரிக்கா தொடவில்லை. இப்போதே இந்த நிலைமை என்றால், உச்சத்துக்குப் போகும்போது என்னவாகும்? இத்தகைய இக்கட்டான நிலைமைகளில் மக்களின் உணவை கூட உத்தரவாதப்படுத்த இயலாத நிலையில்தான் இருக்கிறது அமெரிக்க வல்லரசு.
குறைந்தபட்சம் ஒவ்வொரு மாகாணத்திலும் 10 ஆயிரம் பேர் இத்தகைய Food bank line-களில் நிற்பதாக செய்திகள் சொல்கின்றன. “நாங்கள் வாரம் 60 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறோம். ஆனால், எங்களின் சேவை பகுதியில் மட்டும் 12 லட்சம் பேருக்கு உணவு தேவைப்படுகிறது.’’ என்கிறார், The San Antonio Food Bank என்ற தன்னார்வ நிறுவனத்தின் சி.இ.ஓ., எரிக் கூப்பர்.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள San Antonio என்ற இடத்தில் இலவச உணவு பொருட்களை பெறுவதற்காக சுமார் 6,000 கார்கள் ஏழு கிலோமீட்டர் நீளத்துக்கு வரிசையில் நின்றன. சில குடும்பங்கள் 12 மணி நேரம் முன்னதாகவே வந்து வரிசையில் காத்திருந்தனர். ஏப்ரல் 10-ம் தேதி கலிஃபோர்னியாவில் உணவுப் பொருட்களை பெறுவதற்கு 5,000 கார்கள் வரிசையில் நின்றன.
இவ்வாறு உணவு வாங்க வரிசையில் நிற்கும் இவர்கள் அனைவரும் ஏழைகள் என்று சொல்ல முடியாது. பெரும்பான்மையானோர் பணிபுரியும் பிரிவை சேர்ந்தவர்கள். இப்படி ஒரு நிலை தங்களுக்கு ஏற்படும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்த்திராதவர்கள். “வரிசையில் நிற்பவர்களில் சுகாதாரத் துறை ஊழியர்கள் முதல் ஊபர் ஓட்டுனர் வரை பலரும் இருக்கின்றனர். பெரும்பாலும் வேலையிழந்தவர்கள்” என்கிறார் எரிக் கூப்பர்.
ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தன்னார்வ குழு உணவு விநியோகம் செய்கிறது. பெரும்பாலும் வாரம் ஒருமுறைதான் உணவு விநியோகம். அந்த தகவலை அறிந்துகொண்டு அங்கு மக்கள் கூட்டம் குவிகிறது. ஆனால், உணவு போதவில்லை. பல மணி நேரம் வரிசையில் நின்றவர்கள் உணவு கிடைக்காமல் ஏமாந்து திரும்புகின்றனர்.
***
1930-களில் கிரேட் டிப்ரஷன் என்று சொல்லப்படும் உலகப் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டது. அப்போது அமெரிக்கர்கள் ரொட்டித் துண்டுகளுக்காக வீதிகளில் வரிசையில் நின்றார்கள். அவை, breadlines என்று அழைக்கப்பட்டு பின்னர் கிரேட் டிப்ரஷ்னனின் குறியீடாகவும் அச்சொல் மாறியது. அந்த breadlines இப்போது neo-breadlines ஆக, food lines- என்ற பெயரில் உருவம் எடுத்துள்ளது.
உண்மையில் அமெரிக்காவில் காணப்படும் இந்தப் பட்டினிக் காட்சிகள் நம்மை திகைக்க வைக்கின்றன. இத்தனை நாள் நாம் கண்ட செல்வ செழிப்பான அமெரிக்கா எங்கே போனது? எல்லோரிடமும் கார் இருக்கிறது. அடுத்த வேலை உணவுக்கு காசு இல்லை; இருப்பது கை நிறைய கடன் அட்டைகள் மட்டுமே.
இனி என்ன செய்வது? இந்த நிலைமை எப்போது சரியாகும்? சரியாகும் வரையிலும் சாப்பாட்டுக்கு என்ன செய்வது? குடும்பத்தை எப்படி ஓட்டுவது? தவணைகளை எப்படி கட்டுவது? பைத்தியம் பிடித்தது போல் திரிகின்றனர். பி.பி.சி. வெளியிட்டுள்ள பல வீடியோக்களில் வேலையிழந்தோர், சில வார்த்தை பேசுவதற்குள் உடைந்து அழுகிறார்கள்.
கடந்த மூன்று வாரங்களில் மட்டும் அமெரிக்காவில் 1 கோடியே 70 லட்சம் பேர் வேலையில்லாதோருக்கான உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இதுவரை அரசின் உதவிகள் சென்று சேர்ந்துள்ளன. மீதியுள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்குப் பதிலாக வேலைக்குச் செல்வதற்கு மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறார்கள்.
வேலைக்குச் சென்றால் நோய் தாக்குமே? அதைப்பற்றி அரசுக்கு என்ன கவலை? உற்பத்தி பாதிக்கப்படக் கூடாது, அவ்வளவுதான்.
“தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்காக நாம் ஊதியம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்” என்று ட்ரம்ப் ‘கணத்த’ மனதுடன் கூறியதை இணைத்து இதைப் புரிந்துகொள்ள முடியும். அதிகாரிகள் மட்டத்தில் இதை வெளிப்படையாக கூறவும் செய்கின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக வேலைக்குச் செல்லாதோருக்கான வேலையின்மை உதவித் தொகையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. ‘செத்தாலும் பரவாயில்லை; வேலைக்குப் போ..’ என்கிறார்கள்.
இந்த நிலைமை தொடரும்போது, மிக விரைவில் சமூக அமைதியின்மை உருவாகும். உலகிலேயே குடிமக்கள் அதிகம் பேர் துப்பாக்கி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. இப்போதுவரை துப்பாக்கி கடைகள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டுவரப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. அங்கு வாங்கிக் குவிக்கப்படும் லட்சக்கணக்கான துப்பாக்கிகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.
இந்த துப்பாக்கிகளைக் காட்டிலும், பெரும்பகுதி மக்களை சூழ்ந்திருக்கும் வறுமை, வேலையின்மை, நிச்சயமற்ற நிலை… போன்றவை உருவாக்கும் சமூகக் கொந்தளிப்புதான் தீவிரமான பங்காற்றப் போகிறது.
“இத்தகைய நிலை தொடர்ந்தால் ஒரு சமூக புரட்சியை எதிர்கொள்ள வேண்டிய நிலை அரசுகளுக்கு ஏற்படும்” என்று ‘எச்சரிக்கிறார்’ புகழ்பெற்ற பொருளாதார ஊடகமான Bloomberg-ன் ஆசிரியர் குழுவில் இருக்கும் Andreas Kluth.
“இந்த கொந்தளிப்பானது, அமெரிக்காவை விட மக்கள் அடர்த்தி மிகுந்த ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக ஏற்படும்’’ என்று சொல்லும் Kluth, “இந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்ததும் உலகம் முன்பு போலவே இயங்கும் என எண்ணுவது அப்பாவித்தனமானது. இப்போது உருவாகியுள்ள இந்த கோபமும், கசப்பும் நாம் யூகிக்கவியலாத புதிய வழிமுறைகளில் வெளிப்படும். அவை, பெருந்திரள் மக்கள் இயக்கங்களாக அல்லது கிளர்ச்சி இயக்கங்களாக மாறக்கூடும். பழங்கால ஆட்சி முறைகளை எதிரி என கருதி மக்கள் ஒதுக்கி வைத்ததைப் போன்ற நிலைமை இன்றைய அரசுகளுக்கு உருவாகக்கூடும்” என்கிறார்.
வரப்போகும் நிலைமைகளை Andreas Kluth முன்னறிவிக்கிறார். அதேசமயம் கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தில் தொழிலாளர்களின் கொந்தளிப்பை கையாள்வதற்கு முதலாளிகளுக்கு புதிய வழிமுறைகள் எதுவும் தேவைப்படாது. அதற்கு இவ்வுலகின் ஆகப்பழைய ஆயுதம் ஒன்றே போதுமானது. அதன் பெயர் பட்டினி.
பசியுடன் பரிதவிக்கும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு வேலைக்கு எடுத்து, விட்டதை பிடிக்க மேலும் வெறியுடன் சுரண்டுவார்கள். மிச்சமிருக்கும் வளங்களை மானியங்களின் பெயரால்; சந்தையை ஸ்திரப்படுத்துவதன் பெயரால் அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும்.
அரசு என்பது பெரும் நிறுவனங்களின் திட்டவட்டமான அடியாளாக மாறும். கொரோனாவால் பிழைத்தவர்கள் யாரும் இவர்களிடம் தப்பிக்க முடியாது. அதற்கு மாஸ்க் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக இருக்கும் ‘மாஸ்க்’ கழட்டப்பட வேண்டும். இது மக்களுக்கான அரசு என்ற மாஸ்க்கையும், அப்படியான நம் நம்பிக்கைகளையும் கழற்றினால், அதன் பின்னே தென்படும் உண்மை நம் கண்களுக்கு புலப்படலாம்.
நன்றி : முகநூலில்– பாரதி தம்பி