முயற்சிப்போம்.....

இனி வரும் காலம்…..
ப்ரல் இறுதி வரை லாக் டவுனை நீட்டிப்பது என்று பல மாநிலங்கள் அறிவித்து விட்டன – தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் மோடியின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றன.
லாக் டவுன் தளர்த்தப்படுவதையே கார்ப்பரேட் முதலாளிகள் பலர் விரும்புகிறார்கள். இதற்கு மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் தொழில்கள் திவாலாகிவிடும் என்றும் 22 வயது முதல் 39 வயது வரை உள்ளவர்களுக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு குறைவென்பதால் மக்கள் தொகையில் சுமார் 15 கோடி அளவில் உள்ள அவர்களை வேலைகளில் ஈடுபடுத்தலாம் என்று முதலாளிகள் சங்கமான பிக்கி கோரியிருக்கிறது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இரண்டாவது நாளிலேயே பிரதமரின் தொகுதியான வாரணாசியில் குழுந்தைகள் பசிக்கு புல்லைத் தின்னும் வீடியோக்கள் வெளிவந்தன. அவர்கள் செங்கல் சூளையில் வேலை செய்யும் தலித் சமூகத்தினரின் குழந்தைகள்.
உயிருக்கும் வாழ்வாதாரத்துக்கும் (life and livelihood)  தொடர்பு இருக்கிறது என்ற உண்மை, அதைப் பார்த்த பின்னரும் பிரதமருக்குப் புரியவில்லை. முதலாளி வர்க்த்தின் முறையீடு ஒலிக்கத் தொடங்கிய பின்னர்தான், “ஜான் பி ஜஹான் பி” என்று பஞ்ச் டயாலாக் மாறியிருக்கிறது. ஏப்ரல் மத்தியில் வட மாநிலங்களில் ரபி பருவ அறுவடைக்காலம் தொடங்குகிறது. எனவே, விவசாயிகளின் பெயரைச் சொல்லி பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்படக் கூடும்.
இது உலகு தழுவிய பெருந்தொற்று (Pandemic). எனவே இது விசயத்தில், எல்லா அறிவிப்புகளும் இடைக்கால ஏற்பாடுகளாக மட்டுமே இருக்க முடியும்.
0000


ஸ்பானிஷ் ப்ளூ.

லகு தழுவிய பெரும் தோற்று நோய்களை பொருத்தவரை கடைசியாக  உலகம் எதிர்கொண்ட பேரழிவு – ஸ்பானிஷ்  ப்ளூ. 1918  மார்ச் முதல் 1920 வரை  அந்த நோயின் தாக்கம் உலகெங்கும் வெவ்வேறு அளவுகளில் நீடித்திருக்கிறது.
1918 ஆம் ஆண்டு மே மாத இறுதியில்   முதல் உலகப்போரில்  ஈடுபடுத்தப்பட்ட பிரிட்டிஷ் ராணுவத்தின் இந்திய சிப்பாய்கள் மும்பை துறைமுகத்தில் வந்து இறங்கினார்கள்.  அவர்களில் 7 பேர் வழியாகத்தான்  இந்தக் காய்ச்சல் இந்தியாவுக்குள் வந்தது.  அதன் பின்னர்  ரயில் போக்குவரத்தின் வழியாக இந்தியா முழுதும் இந்த வைரஸ் பரவியது.
மூன்று அலைகளாக உலகம் முழுதும் இந்த காய்ச்சல் பரவியது.  முதல் அலை 1918 ஜூலை வரை நீடித்தது. இரண்டாவது அலை ஆகஸ்டில் தொடங்கி 1918 இறுதி வரை நீடித்தது. முடிந்தது என்று கருதி கட்டுப்பாடுகளை பல நாடுகள் தளர்த்திய நிலையில், மூன்றாவது அலை 1919  சனவரியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கி அமெரிக்கா பிரான்சு, ஜப்பான் எனப் பரவியது.  1920 மார்ச் வரை இது நீடித்தது என்று மதிப்பிடுகிறார்கள்.
இந்த இரண்டாவது,  மூன்றாவது அலைகளில்தான் பெருந்தொகையான மக்கள் இறந்தனர். இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களில்  காந்தியும் ஒருவர் இரண்டாவது அலையில்  நோய்த் தொற்று ஏற்பட்ட  ஆயிரம் பேரில் 4.7 பேர் பிரிட்டனில்  இறந்தனர்.  அதே நேரத்தில் இந்தியாவைப் பொருத்தவரை நோய்த் தொற்று ஏற்பட்ட ஆயிரம் பேரில் 20 பேர் இறந்திருக்கின்றனர்.
இந்தியாவின் மரண விகிதம் மிக அதிகமாக இருந்ததற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு.  அன்று மருத்துவ வசதிகள் அனேகமாக இல்லாமல் இருந்தன. இந்தியாவில் இருந்த மருத்துவர்களையும் போர்முனைக்கு அனுப்பிவிட்டது பிரிட்டிஷ் அரசு.
1918 இந்தியாவைத்  தாக்கிய மாபெரும் பஞ்சம் இதனுடன் சேர்ந்து கொண்டது
உணவுப் பஞ்சத்தின்  விளைவாக  நோய் எதிர்ப்பு ஆற்றல் இழந்த மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். பஞ்சம் தலைவிரித்தாடிய நிலையிலும்   தானியங்கள் அனைத்தையும் போர்முனைக்கு அனுப்பி மக்களைப் பட்டினியில் தள்ளியது பிரிட்டிஷ் அரசு.
“அன்றைய  நிலையை காட்டிலும் இன்று   மருத்துவம் மேம்பட்டிருக்கிறது  உணவு உற்பத்திக்கும் குறைவில்லை. ஆனால்   வர்க்க  ஏற்றத்தாழ்வுகள் ஆழமாகி இருக்கின்றன.  சமூக இடைவெளியை பராமரித்தல்,  ஊரடங்கை கடைப்பிடித்தல்,  தரமான மருத்துவம் ஆகிய அனைத்துமே வசதிபடைத்தவர்களுக்கு எளிதில் கிடைத்துவிடும்.  சாதாரண இந்திய மக்களைப் பொறுத்தவரை இவை இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன.
அன்றைக்கு இருந்தது காலனி அரசாங்கம்.  இன்று இருப்பது ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் . இந்த வேறுபாடு நடை முறையில் என்ன மாற்றத்தைக் காட்டப் போகிறது என்பதைக்  காலம் தான் கூற வேண்டும்”  என்று  எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் எழுதியிருக்கிறார்  ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் அமித் கபூர்.
“காலம்” என்பது இதையெல்லாம் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கும் நாம்தான்.
கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று  கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான தேசிய அவசர நிலையை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்தார். அதே நாளில் அமெரிக்க பெடரல் அரசின் சார்பில், இந்த நோய்த்தொற்றை சமாளிப்பதற்கான 100 பக்கத் திட்டம்  ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது  பொதுமக்களின் பார்வைக்கு அல்ல என்ற தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் அந்த அறிக்கையின் படி  இயல்புநிலை திரும்புவதற்கு குறைந்தபட்சம்   18 மாதம் பிடிக்கும் என்று குறிப்பிடுகிறது. https://www.nytimes.com/2020/03/17/us/politics/trump-coronavirus-plan.html
ஏப்ரல் 14 அன்று ஊரடங்கு விலக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் எந்தெந்த அளவில் கடைப்பிடிக்கப்பட்டால், எத்தனை லட்சம் பேருக்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் இருக்கிறது என்று  கேரளா மாநில அரசின் பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஏப்ரல்10 ஆங்கில இந்து  நாளேட்டில் வெளியாகியிருக்கிறது. https://www.thehindu.com/news/national/kerala/coronavirus-3-pronged-steps-post-lockdown/article31303428.ece
இந்தியாவிலேயே இந்த நோயை கட்டுப்படுத்துவதில் முன் மாதிரியாக செயல்பட்டுள்ள மாநிலம் என்ற வகையில் கேரள மாநிலத்தில் இந்த அறிக்கையை நாம் கவனத்துடன்  பரிசீலிக்கலாம்.  எல்லாவிதமான கட்டுப்பாடுகளும் மிதமான அளவில் கடைப்பிடிக்கப் பட்டால் ஏப்ரல்  2021 இல்தான் இப்பிரச்சனையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு “இயல்பு நிலைக்கு” திரும்ப இயலும்  என்று கணிக்கிறது அந்த அறிக்கை.
ஸ்பானிஷ் ஃபுளூவுக்குப் பிந்தைய ஒரு நூற்றாண்டில், உலக முதலாளித்துவம் இயற்கையை அழிக்கும் வேகமும், நாடு கடந்து செல்வோரின் வேகமும் அதிகரித்திருப்பதால், புதிய நோய்கள் உருவாகும் வேகமும், தொற்றுப் பரவலின் வேகமும் அதிகரித்திருக்கிறது. அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக மருத்துவத்துறை ஆய்வின் வேகமும் அதிகரித்திருக்கிறது. தகவல் பரிமாற்றத்தின் மீது ஏகாதிபத்திய வல்லரசுகள் செலுத்தும் நேரடி, மறைமுக செல்வாக்கின் காரணமாக, பொய்களையும் வதந்திகளையும் பரப்பும் வேகமும் அதிகரித்திருக்கிறது.
எனவே, நமது கணிப்புகள் இந்த வரம்புகளுக்கு உட்பட்டவையாகவே இருக்க முடியும்.
000
ஸ்பானிஷ் ஃபுளூவுக்கு அந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்பது குறித்து ஒரு செய்தி உண்டு. அந்த காய்ச்சல் ஸ்பெயினில் தோன்றவில்லை. முதல் உலகப்போரில் ஈடுபட்டிருந்த நாடுகளில், குறிப்பாக இராணுவத்தினர் மத்தியில் இந்தக் கொள்ளை நோய் பரவி லட்சக்கணக்கானவர்களை பலி கொண்டிருந்தது. இருப்பினும் உண்மையை வெளியிட்டால், சிப்பாய்களின் கலகத்துக்கும், புரட்சிக்கும் அது வழி வகுத்துவிடும் என்பதால் “தேச நலனை முன்னிட்டு” அன்றைய ஏகாதிபத்திய அரசுகள் உண்மையை இருட்டடிப்பு செய்தன.
ஸ்பெயின் அரசு அந்தப் போரில் ஈடுபடவில்லையாதலால் தங்கள் நாட்டில் பரவிவரும் விநோத காய்ச்சல் பற்றிய செய்தியை அந்நாட்டு பத்திரிகைகள் வெளியிட்டன. எனவே அது “ஸ்பானிஷ் ஃபுளூ” வாகிவிட்டது. அன்று உலகமுழுவதும் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 4 முதல் 5 கோடி. அதில் இந்தியாவில் மட்டும் 1.7 கோடி. மரண விகிதத்தின் அடிப்படையில் அந்த நோய்க்கு பெயரிடுவதாக இருந்தால், அதனை இந்தியன் ஃபுளூ என்றுதான் அழைத்திருக்க வேண்டும்.
“தேச நலனை முன்னிட்டு” செய்யப்படும் இருட்டடிப்புகள் தொடரத்தான் செய்கின்றன.
இன்றைக்கும் கூட  இந்த விநோதக் காய்ச்சல் பற்றி டிசம்பர் 30 அன்றே அபாயச் சங்கு ஊதிய லி வென் லியாங் என்ற கண் மருத்துவரை சீன அரசு  ஒடுக்கத்தான் செய்தது.  பிப்ரவரி 7 அன்று கொரோனாவுக்கு அவரே பலியானார்.
அமெரிக்காவில் டிரம்பின் வர்த்தகத்துறை ஆலோசகர் பீட்டர் நெவாரோ ஜனவரி 29 அன்றே இந்தக் கொள்ளைநோய் 5 லட்சம் அமெரிக்கர்களை காவு கொள்ளும் என்று டிரம்பை எச்சரித்திருக்கிறார். ஜனவரி 30 அன்று சுகாதாரத்துறை செயலர் அலெக்ஸ் எம் அசார் எச்சரித்திருக்கிறார். தேவையில்லாமல் பீதியைக் கிளப்புவதாக டிரம்ப் அவரை  எள்ளி நகையாடியிருக்கிறார். இவையனைத்தையும் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2020/04/11/us/politics/coronavirus-trump-response.html
ஜனவரி 30 ஆம் தேதியன்றே இந்தியாவின் முதல் கொரோனா தொற்று கேரளத்தில் கண்டறியப்பட்டு விட்டது. ஆனால் மார்ச் 25 அன்றுதான் மோடியின் 21 நாள் ஊரடங்கு தொடங்குகிறது. இந்த ஊரடங்கை அறிவிக்காமல் இருந்திருந்தால் பல லட்சம் பேர் தொற்றுக்கு இலக்காகியிருப்பார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது பெருமையுடன் அறிவிக்கிறது. இது ஒரு ஊகம். போதுமான அளவுக்கு  பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்படாத வரை நோய்த் தொற்று  பரவவில்லை என்ற கூற்றை எந்த அடிப்படையில் நம்புவது?
மருத்துவமனையின் வாசலில் பல்லாயிரக்கணக்கில் நோயாளிகள் கூடவில்லை.  இந்த நோயினால் ஆங்காங்கே மக்கள் இறப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்தி வரவில்லை. இந்த அடிப்படையில்  நோய் பரவல் இல்லை என்று  நாம் ஆறுதல் கொள்ளலாம். ஏதோ சில காரணங்களினால் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் போல இங்கே பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் நிம்மதி தான்.  இல்லையேல் வரவிருக்கும் நிலைமையை எண்ணிப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.
இயல்பு நிலை திரும்ப ஓராண்டுக்கு மேல் ஆகும் என்று கூறுகின்ற கணிப்புகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட பீதியூட்டும் நடவடிக்கைகள் என்று சிலர் கருதிக்கொள்ளலாம்.
பெருந்தொற்றுகள் அலை போல வரக்கூடியவை, கோவிட் கிருமி உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவும்போது பிறழ்வு (mutate) க்கு உள்ளாவதால், தடுப்பு மருந்தை உருவாக்குவது மிகவும் கடினமாக இருக்கிறது, சோதனைக்கான கருவிகள் போதுமானவையாக இல்லை என்பன போன்ற பல காரணங்கள் பிரச்சனையை சிக்கலாக்குகின்றன. எனவே நாளை லாக் டவுன் அகற்றப்பட்டால், நாளை மறுநாள் இயல்பு நிலை திரும்பி விடும் என்று நம்புவது மிகையானது.
எனவேதான், இடைவெளியின் காலத்தைத் துல்லியமாக கணிப்பதைக் காட்டிலும், இந்த இடைவெளி நம் மீதும் சமூகத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்று பரிசீலிப்பது பயனுள்ளதாக இருக்கும். வருங்காலத்தில், பல அரசியல், சமூக விவகாரங்களை பரிசீலிப்பதற்கு கொ.மு – கொ.பி என்ற புதியதொரு அளவுகோல் வந்தே தீரும்.
முதலாளித்துவ சமூக அமைப்பும், அரசுகளும் நமது சிந்தனையிலும் செயல்பாட்டிலும் உருவாக்கி வைத்திருக்கின்ற வரம்புகளைத் தாண்டி சிந்திப்பதற்கான சூழலை, இந்த பெருந்தொற்று நோய் ஏற்படுத்தியிருக்கிறது.
சமூக ரீதியான பிரச்சனைகளான பொதுச் சுகாதாரம், ஆரோக்கியம் போன்றவற்றுக்கு தனிநபர் சார்ந்த தீர்வுகளை முன்தள்ளி வந்த மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள், மருத்துவமனைகளை தற்காலிகமாகவேனும் தேசிய மயமாக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.
“பக்கத்து வீட்டுக்காரன் செத்தாலும், சக தொழிலாளி வேலைநீக்கம் செய்யப்பட்டாலும் அது அவன் பாடு, நீ கவலைப்படாதே” என்று உபதேசித்து வந்த முதலாளித்துவம், “ஆப்பிரிக்காவில் யாரேனும் தும்மினால் அமெரிக்கா கவலைப்படவேண்டும் என்ற அறவுணர்ச்சியை” திடீரென்று கண்டுபிடித்திருக்கிறது.
அறிவுச்சொத்துடைமையைக் காட்டி பல உயிர் காக்கும் மருந்துகளின் உற்பத்தியை தடுத்து வந்த அமெரிக்க வல்லரசு ஒரு மாத்திரைக்காக இந்தியாவை சார்ந்து நிற்கிறது.
மையப்படுத்துதலும் கண்காணிப்பும் பாசிச மயமாவதும் அதிகரிப்பதை கொரோனா சாத்தியமாக்கியிருக்கிறது. நோய்த் தொற்று முடிந்த பின்னரும் சமூக இடைவெளி அதிகரிக்கவிருக்கிறது. கொரோனாவுக்குப் பிந்தைய உலகத்தின் மீதான மேலாதிக்கத்துக்கான போட்டி தீவிரமடையவிருக்கிறது. வரைமுறையற்ற பல்லுயிர் அழிப்பின் விளைவாக விதவிதமான தொற்றுநோய்கள் வரவிருக்கின்றன. அணு ஆயுதங்களோ, புவி சூடேறுதலோ மனித குலத்தை அழிப்பதற்கு முன் தொற்று நோய்கள் அழிக்கும் சாத்தியம் அதிகரித்திருக்கிறது. உழைக்கும் வர்க்கம் பல முனைத் தாக்குதலை எதிர்பார்க்க வேண்டும்.  எது எதிர்பாராத நிகழ்வு  எது முதலாளித்துவத்தின் திட்டமிட்ட சதி என்று பிரித்தறிய முடியாத சூழலில் சிக்கி இருக்கிறோம்.
உருவாகி வரும் புதிய அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளைப் புரிந்து கொள்வதும், அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டு பிடிப்பதும், செயல்படுத்துவதும், கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதை விடக் கடினமான முயற்சிகள்.
முயற்சிப்போம்…
-------------------------------------------------------
------------------------------------------------------
பட்டினி சாவகள்,கொரோனா சாவுகளை விட
பன்மடங்காகும் .


கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதுமாக இரண்டு கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் நிறைவு செய்திருக்கிறோம். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில் இன்று முதல் நான்கு நாட்கள் கட்டாய முழு ஊரடங்கை சென்னை, சேலம், திருப்பூர்,கோவை,மதுரை ஆகிய மாநகராட்சிகளில் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து திருவாரூர், நாகை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.
இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் கடந்து வந்த முட்கள் நிறைந்த பாதையை பார்ப்போம்.
கொரோனா உயிர்கொல்லி நுண்ணுயிர் கிருமியை அழிப்பதற்கு உலக நாடுகள் எங்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதினால் இதனை கட்டுப்படுத்த ஒரே தீர்வு ஊரடங்குதான் என்று உலக நாடுகள் தீர்மானித்தன. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி திடீரென்று 21 நாள் ஊரடங்கை பிரதமர் அறிவித்தார். அதற்கு முன்னராகவே தமிழக அரசு கடந்த மார்ச் 16ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்தையும் மூட முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த நாடு முழுவதுமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் மாதம் 14ம் தேதி முடிவடைந்துவிடும் என்ற நம்பிக்கையில் வெகுஜன மக்கள் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். ஆனால் ஏப்ரல் 14ம் வந்தது பிரதமர் மோடியும் வந்தார். மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவும் பிறப்பித்தார். மக்கள் துயரக் கடலில் மூழ்கினர். ஊரடங்கு அமல் படுத்துவது சமூக தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் என்பது அனைவரும் அறிந்ததே! இதில் என்ன விசித்திரம் என்றால் சமூக விலகல் அவசியம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அறிவுறுத்தும் அரசே நேற்று முன்தினம் (ஏப்ரல் 24) அன்று தமிழகத்தில் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு 4 நாட்களுக்கு அமல்படுத்தப்படும், தற்போதைய தளர்வுகள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது.

மக்கள் துயரம் புரிகிறது - பிரதமர் மோடி: “அழுத கண்ணீரும் அழிந்த சாம்ராஜ்யமும்!”
அறிவித்ததோ மதியம் 2 மணிக்கு. மக்கள் பதட்டத்திற்கு உள்ளானார்கள். ஏனென்றால் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மளிகை கடைகள், காய்கனி அங்காடிகள் செயல்பட அனுமதித்திருந்தது. நேற்று (ஏப்ரல் 25) சமூக விலகல்; சமூக இடைவெளி; இத்தனை நாள் கடைபிடித்து வந்த ஊரடங்கு அனைத்தும் காற்றில் பறக்கவிட்டது போல் மக்கள் மாமாங்கமென கடைகளில் கூடினர். இதற்கெல்லாம் யார் காரணம்? சேலத்து சேக்கிழார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிபுத்திசாலித்தனத்தினால் உதித்த அறிவியல் ஆலோசனகளினால் போடப்பட்ட உத்தரவுகளே காரணம். இந்த மாதிரியான சரியான செயல்திட்டம் இல்லாத உத்தரவுகள் மக்களைக் காப்பாற்றப் போகிறதா? காவு வாங்கப் போகிறதா? என்றே தெரியவில்லை.!
மக்கள் பிரச்சனை தெரிகிறது; மக்கள் துயரம் புரிகிறது என்று சொன்ன பிரதமருக்கு என்ன பிரச்சனை தெரிந்தது; என்ன துயரம் புரிந்தது என்று தெரியவில்லை. அவர் இருக்கும் உயரத்திற்கு அடித்தட்டு மக்களின் துயரம் ஒருபோதும் புரியப்போவதில்லை.
இந்தியாவில் சுமார் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருந்தது. போக்குவரத்து, சுற்றுலாத்துறை மற்றும் ஓட்டல் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த துறைகளில் சுமார் 5 சதவிதம் சரிவு காணப்பட்டாலே, இந்தியாவின் மொத்த வளர்ச்சி சுமார் 1 சதவிதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ரசாயன தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்தை பொறுத்தவரை, நாள் ஒன்றிற்கு சுமார் 80 முதல் 90 சதவிதம் வரை சரக்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நிறுவனங்கள் , பொருளாதாரம் சார்ந்த இழப்புகள்.

மக்கள் துயரம் புரிகிறது - பிரதமர் மோடி: “அழுத கண்ணீரும் அழிந்த சாம்ராஜ்யமும்!”
சாமானிய மக்கள் படும் சொல்லொணா துயரங்கள் பல உள்ளன. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 12 கோடி பேர் கடந்த 4 வாரங்களில் வேலையை இழந்திருக்கிறார்கள். தினக்கூலிகள் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்திருக்கிறார்கள். லக்னோவில் ஒருவர் சாலையில் கொட்டப்பட்டுள்ள பாலை நாய்களுடன் சேர்ந்து சேகரித்த செய்தி பலரும் கண்டும் கேட்டும் அறிந்திருப்போம். இந்த செய்தியே ஊரடங்கு உத்தரவு மக்களை எந்த நிலைக்கு தள்ளியுள்ளது என்பதை உணர்த்துகிறது. சாலையோரத்தில் வசிக்கும் ஏழை மக்கள் சிலர் தொலைக்காட்சி ஒன்றில் பேசியதை பதிவிடுகிறேன் : “ஐயா நாங்க கொரோனாவால சாவோமாண்ணுத் தெரியல, ஆனா பசில செத்துடுவோம் போல இருக்கு” என்பதுதான் அந்த குரல்.
எந்த வித முன்னறிவிப்புமின்றி திடீர் ஊரடங்கு அறிவித்ததினால் ஏற்பட்ட பிரச்சனைகள் இன்னும் பற்பல. மார்ச் 26ம் தேதி டெல்லியில் உணவு கொண்டு சென்று வீடுகளில் ஒப்படைக்கும் டெலிவரி பாயாக பணியாற்றிய ரன்வீர் சிங் தனது சொந்த ஊரான மத்திய பிரதேசத்திற்கு நடத்தே சென்றுள்ளார். அப்போது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ உதவியையும் பெற முடியாமல், ஆக்ராவில் உயிரிழந்தார். 62 வயதான குஜராத்தின் சூரத்தை சேர்ந்த கங்காதரன் போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளார். அப்போது மயக்கம் அடைந்த நிலையில், திரும்பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
மக்கள் துயர் புரிந்துக்கொண்ட பிரதமரின் நிர்வாகத்தின் கோளாறுகள் நாடு முழுவதும் பரவியிருந்தது. ஏப்ரல் 14ம் தேதி இரயில்கள் இயக்கப்படும் என பரவிய வதந்தியை நம்பிய வடமாநிலத் தொழிலாளர்கள் மும்பை பாந்த்ரா இரயில் நிலையத்தில் ஆயிரக் கணக்கில் குவிந்துள்ளனர். பாந்த்ரா இரயில் நிலையத்தை அடுத்துள்ள சேரிப் பகுதிகளில் தங்கியுள்ள பீகார், உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மதியம் 3:45 மணி அளவில் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி இரயில் நிலையம் நோக்கி விரைந்துள்ளனர். நான்கு மணிக்குள் சுமார் 1500 பேர் கூடியுள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.

மக்கள் துயரம் புரிகிறது - பிரதமர் மோடி: “அழுத கண்ணீரும் அழிந்த சாம்ராஜ்யமும்!”
அதே நாளில் மும்ப்ராவில் உள்ள ரஷீத் காம்பவுண்ட் பகுதியில் சுமார் 300 இடம் பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கூடி தங்களுக்கு உணவும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்க வேண்டும் என போராடியுள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நன்கு செழித்து வளர்ந்த காலிபிளவர் தோட்டங்களுக்கு தேவையான பூச்சி மருந்து மற்றும் உரம் போன்றவை ஊரடங்கு நடவடிக்கையால் கிடைக்காமல் போனதால் பூக்களை புழுக்களே உண்டுவிட்டன. பிரதமர் மக்கள் பிரச்சனையை தெரிந்துக்கொண்டாரா?
எந்த திட்டமிடலும் இன்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் விளைவாக கூலித் தொழிலாளர்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர் – இதில் வடமாநிலங்களைச் சேர்ந்த இடம் பெயர்ந்த கூலித் தொழிலாளர்களின் நிலையோ எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல், இவர்களை போலீஸ் குண்டாந்தடிகளைக் காட்டி மிரட்டி அடக்க முடியாது – பசியின் வலிமைக்கு முன் குண்டாந்தடிகள் தாக்குப் பிடிக்க முடியாது. அந்த நிலையை நோக்கி மெல்ல மெல்ல நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
சரி போகட்டும்! மக்கள் துயர் துடைக்க மத்திய அரசு வெளியிட்ட அறிவுப்புகளையும் பார்ப்போம்.. கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் பொருளாதாரச் சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள், மூன்று மாதங்களுக்கு தலா ரூ.1,000, பெண்களுக்கு ரூ.500 எனப் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. மத்திய நிதி அமைச்சர் கூறுகையில் “ஏழை மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு 2,000, அடுத்த மூன்று மாதங்களுக்கு கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு இலவசம் உட்பட 1.70 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டங்கள் வழங்கப்படும்” என்றார்.

மக்கள் துயரம் புரிகிறது - பிரதமர் மோடி: “அழுத கண்ணீரும் அழிந்த சாம்ராஜ்யமும்!”
மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஷா அல்லது அரசு சுகாதார பணியாளர்களுக்கு தலா 50 லட்சம் வரையிலான காப்பீடு வழங்கப்படும். பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் முதல் கட்டமாக ₹2,000 உடனடியாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும். இதன் மூலம் 8.69 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள். ஏழ்மை நிலையில் உள்ள மூத்த குடிமக்கள், கணவனை இழந்தவர்கள், மாற்று திறனாளிகளுக்கு 1,000 கருணைத்தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும். இதனால் 3 கோடி பேர் பயன் அடைவார்கள். இவை அனைத்தும் அறிவுப்புகளே.
இந்த அறிவிப்புகள் குறித்து சென்னை பல்கலைக் கழக பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம் கூறீயதாவது: "1.70 லட்சம் கோடி ரூபாய் இதற்காக செலவழிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஆனால், இதற்கான பணம் எங்கேயிருந்து வரும் என்பதை அவர் அறிவிக்கவில்லை. கடந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போதே, கிட்டத்தட்ட மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை இருந்தது. அதற்குப் பிறகு திருத்தப்பட்ட மதிப்பீடுகள் வந்தபோது, பற்றாக்குறை மேலும் 1.15 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட 4.15 லட்சம் கோடி ரூபாய் ஏற்கனவே பற்றாக்குறை உள்ளபோது, இந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வரும் என்ற கேள்வியெழுகிறது".
அறிவிப்புகள் வெளியிடுவதும் ; பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துவதும் ; ஒவ்வொரு கட்டத்திலும் ஊரடங்கு முடிவடைய போகும் காலத்தில் டி.வி . யில் தோன்றுவதும் பிரதம் மோடிக்கு பிரசித்தமே. ஆனால் மக்களின் பிரச்சனைகளும் அவருக்கு தெரியவில்லை அவர்களின் துயரமும் அவருக்கு புரியவில்லை. மக்களின் துயர் புரிந்தவரானால் தான் இராஜ்ய பரிபாலனம் செய்வதற்காக பாராளுமன்றக் கட்டடத்தை புனரமைக்கவும் ராஜபாதையை புனரமைக்கவும் ஒதுக்கப்பட்ட நிதி 20000 கோடியை ரத்து செய்து பசியாலும் பட்டிணியாலும் அவதிப்படும் மக்களுக்கு கொடுத்திருக்க வேண்டும்; வேலையிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளித்திருக்க வேண்டும்.

மக்கள் துயரம் புரிகிறது - பிரதமர் மோடி: “அழுத கண்ணீரும் அழிந்த சாம்ராஜ்யமும்!”
அரசுகளுக்கு அரசியல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. மக்களுக்கு உதவ அரசுகளிடம் பணமும் இல்லை; மனமும் இல்லை. இப்போது சாமானிய மக்களுக்கு பெரிதும் உதவியாக கரம் கொடுப்பது தன்னார்வலத் தொண்டு நிறுவனங்கள்தான். மக்களின் தேவையறிந்து அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று எத்தனையோ இளைஞர்கள்; தொண்டு நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து பணமாக; பொருளாக ; உணவாக பெற்று அதனை பாகுபாடின்றி துயர் கடலில் கரைந்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி கரை சேர்க்கிறார்கள்.
மோடியின் கொடிய ஆட்சி இந்தியா முழுவதும் வேரூன்ற விட்டதின் பலனை மக்களுக்கு கொரோனா உணர்த்தியிருக்கும் அதற்கு விரைவில் மக்கள் வெந்நீர் ஊற்றுவார்கள் என்பது மோடிக்கும் கொரோனா உணர்த்திருக்கும். அது மட்டுமின்றி, மனிதன் மரித்தாலும் மனிதம் மறிப்பதில்லை என்ற தத்துவத்தை கொரோனா உணர்த்தியிருக்கிறது.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை – வள்ளுவர் அன்றே கூறியிருக்கிறார். ஒரு சாம்ராஜ்யத்தை அழிக்க படை தேவையில்லை நாட்டு மக்களின் கண்ணீர் போதுமென்று. அந்த குரலுக்கேற்ப ; கொடுங்கோல் ஆட்சி செய்யும் மோடி அரசு மிக விரைவில் அஸ்தமனமாகப் போவது உறுதி.
பிரதமர் மோடிக்கு மக்கள் பிரச்சனை தெரியப் போவதுமில்லை; மக்கள் துயரம் புரியப்போவதுமில்லை!
- அஜய் வேலு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?