செல்போன் டாரச் அடியுங்க,கொரோனாவை விரட்டுங்கள்.

கோவை ஈஷா யோகா மையத்தில் 150 பேர் தனிமை படுத்தப் பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவிலும் 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா உண்மையில் பரவ காரணம் என்ன? என்பதை கவனத்தில் கொள்ளாத அரசும் ஊடகங்களும் தேவையில்லாத தகவல்களை பரப்பி மக்களை குழப்பிக் கொண்டிருப்பதையே தொடர்ந்து செய்து வருகின்றன.
பிப்ரவரி 15 ஆம் தேதியே இந்தியாவிற்குள் கொரோனா உள் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது. அப்படியிருக்க, கொரோனா பரவுவது அதிகமாக கூட்டம் சேரும் இடத்தில்தான் என்பதை கூடவா அரசு உணரவில்லை? அதன் பிறகு இந்தியாவில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுவிட்டன. அதில் ஒன்றுதான் கோவை ஈஷா மைய்யத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். அதில் பலர் வெளிநாட்டினர். கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்துள்ள இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கூட இங்கு பலர் வந்துள்ளனர். பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இரவு முழுக்க சிவராத்திரி அன்று, இந்த விழா நடந்தது. அங்கு அப்போது உரிய சோதனை மேற்கொள்ளாமல் இப்போது பதறுகின்றது அரசு.
அதுவும் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அப்படி இல்லை.அறிகுறி இருந்தால் ஆய்வோம் என்று மழுப்பியநிலையில் பலரும் டெல்லி மாநாட்டில் ஆயிரம்பேர்கள்தான் கலந்து கொண்டனர்.ஆனால் சிவராத்திரியில் லட்சக்கணக்கில் கலந்து கொண்டனர்.இது மிக ஆபத்து.முஸ்லீம்களுக்கு ஒரு நீதி,ஜக்கிக்கு ஒருநீதியை அரசு வைத்திருக்கலாம்.
ஆனால் கொரோனாவுக்கு சாதி,மதம் ,ஆண்,பெண் வேறுபாடு பார்க்கத்தெரியாது என கோபமாக கேட்டதுதான், ஈஷா மையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என்று பயத்தைஅரசுக்கு உண்டாக்கியது.
 முக்கியமாக வெளிநாட்டு பயணிகள் மூலம் இங்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அங்கு எத்தனை வெளிநாட்டு பயணிகள் உள்ளனர், வெளி மாநில பயணிகள் எத்தனை பேர் தங்கி இருக்கிறார்கள் என்று சோதனை செய்யப்பட்டது.
இது இப்படியிருக்க கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்றவர்கள் எவரையும் ஈஷா மைய்யம் மகா சிவராத்திரி விழாவிற்கு அனுமதிக்கவில்லை. கொரோனா பாதித்த நாட்டின் விமான நிலையத்தில் இறங்கி ஏறியவர்களை கூட அனுமதிக்கவில்லை. என்று மொட்டையாக ஒரு அறிக்கையை வெளியிட்டது ஈஷா மையம். ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களையும் காட்டவில்லை.
இந்த நிலையில் நேற்று நடந்த சோதனைக்கு பின் 150 வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் உடன் தொடர்பு கொண்ட உள்நாட்டு பயணிகள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அங்கு பலர் தனிமை படுத்தப் பட்டுள்ளதும். ஈஷா மையத்தில் நடைபெற்ற விழாவிற்கு இத்தாலி போன்ற நாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டமையும், அப்பகுதி பொதும்க்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நாடெங்கும் இவ்விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
---------------%--------------------------------0
இணைய முன்தயாரிப்பு.
இணையம் இப்போது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை இணையம் எப்படி எதிர்கொள்கிறது என்பது நம்முடைய நலனுக்கு முக்கியமானது. அதனால் தான், இணையம் தாக்குப்பிடிக்குமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
ஒரு விதத்தில் இதை இணையத்திற்கு வைக்கப்பட்டுள்ள சோதனை என்று தான் சொல்ல வேண்டும். அதைவிட நம்முடைய இணைய தயாரிப்புக்கும், இணைய முன்னெச்சரிக்கைக்குமான சோதனை என்று கருதலாம்.
கொரோனா அச்சம், நம்மை தற்காப்பு நிலைக்கு கொண்டு வந்து, பல்வேறு மாற்றங்களை செய்ய நிர்பந்தித்துள்ளது. வீட்டில் இருந்தே பணியாற்றுவதும், சமூக தொலைவை கடைப்பிடிப்பதும் இவற்றில் முக்கியமாக அமைகிறது.
வீட்டில் இருந்தே பணியாற்றும், ரிமோட் வொர்க் என்பது கொஞ்சம் பழைய கருத்தாக்கம் தான். வேலை செய்ய லேப்டாப்பும், தொடர்பு கொள்ள இணைய வழியும் இருப்பதால், அலுவலகம் வராமல் வீட்டில் இருந்தே வேலை செய்யும் சாத்தியமே, ரிமோட் வொர்க் எனும் தொலைதூர பணி கருத்தாக்கத்திற்கு வித்திட்டது.
நிறுவனங்கள், ஊழியர்கள் என இரு தரப்பினர் மத்தியிலுமே, தொலைதூர பணிக்கான சாத்தியம் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், இது முழுவீச்சில் நடைமுறைப்படுத்தப்படும் நிலை இன்னும் வந்துவிடவில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் தான், கொரோனா தாக்கம், தொலைதூர பணி கருத்தாக்கத்தின் மீது கவனத்தை குவித்துள்ளது.
கொரோனா புதிய வகை வைரஸ் என்பதால், அதை பரவாமல் தடுப்பதே கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழியாக கருதப்படுகிறது. வைரஸ் பராமல் தடுக்க வேண்டும் என்றால், அதற்கான பாதைகளை எல்லாம் அடைத்தாக வேண்டும். மனிதர்கள் மூலமே இது வேகமாக பரவுவதால், முடிந்தவரை மனிதர்களுக்கு இடையிலான தொடர்புகளை குறைத்துக்கொள்வது அவசியம்.
இந்த நோக்கில் தான், பொது இடங்களில் திரள்வதை தவிர்க்கவும் என்கின்றனர். எனவே தான், தொழில்நுட்ப மாநாடுகளும், நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன. பலரும் பயணங்களை தவிர்த்து வருகின்றனர். பொதுமக்களும் பரஸ்பரம் முடிந்தவரை விலகி நிற்பது நல்லது என்கின்றனர். இதுவே சமூக தொலைவை கடைப்பிடிப்பதாகிறது.
இந்த பின்னணியில் தான், ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுவதை தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. இந்த இடத்தில், நீங்கள் ’ஜூம்’களையும், ‘ஸ்லேக்’களையும் அறிமுகம் செய்து கொள்வது பொருத்தமாக இருக்கும். இவை எல்லாமே, தொலைதூர பணிக்கு கைகொடுக்கும் புதுயுக இணைய சேவைகள்.
ஜூம் (https://www.zoom.us/ ), இணைய வீடியோ சந்திப்பு மேடையாக அமைகிறது. அதாவது, வீடியோ கான்பிரன்சிங் என சொல்லப்படும் வீடியோ வழி சந்திப்புகளை மேற்கொள்வதற்கான இணைய மேடையாக விளங்குகிறது. ஏற்கனவே, ’ஸ்கைப்’ வழி உரையாடலுக்கு பழகியவர்களுக்கு ஜூம் போன்ற சேவையின் அருமை எளிதாக விளங்கும். தொலைவில் உள்ளவர்களோடு வீடியோவில் உரையாடுவதோடு, குழுவாக குறிப்பெடுப்பது, ஆலோசனை செய்வது என பலவித வசதிகளை இது அளிக்கிறது.
தொலைதூர பணிக்கான முக்கிய கருவியாக இருப்பதோடு, விமான பயணங்களை தவிர்க்க வேண்டிய சூழலில், நேர் சந்திப்புகளுக்கான மாற்றாக வீடியோ உரையாடல்கள் அமைகின்றன.
இதே போல, ஸ்லேக் (https://slack.com/intl/en-in/ ), தொழில்முறை மேசேஜிங் சேவையாக அமைகிறது. அலுவலக பயன்பாட்டிற்கான வாட்ஸ் அப் போன்றது என வைத்துக்கொள்ளலாம். அலுவலக சூழலில், ஊழியர்கள் உரையாடலை மேற்கொள்ளவும், கருத்துக்களை பரிமாறவும் ஸ்லேக் வழி செய்கிறது. நவீன அலுவலகங்கள் ஸ்லேக் சேனல்கள் என்பது மிகவும் பிரபலம். ஸ்லேக் பரிமாற்றத்திற்கு பழகியவர்கள் இமெயிலை பழைய சங்கதியாக கருதுவதாகவும் பேசப்படுகிறது.
இந்த வகையில் இன்னும் பல இணைய சேவைகள் இருக்கின்றன. இணைய கண்டறிதல் சேவை வழங்கும் பிராடக்ட் ஹண்ட் இணையதளம் இதற்கான பட்டியலை அளிக்கிறதுL https://www.producthunt.com/e/tools-for-remote-teams). பெரும்பாலும், டிஜிட்டல் நாடோடிகளால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த சேவைகளை, அனைத்து தரப்பினருமே அறிந்து கொள்ள வேண்டிய தேவை கொரோனாவால் ஏற்பட்டுள்ளது.
இது தவிர, வீட்டிலேயே முடங்கி கிடப்பதால், நெட்பிளிக்சில் படம் பார்ப்பதும், வீடியோகேம் ஆடுவது போன்றவையும் அதிகரிக்கலாம். இவை எல்லாம், கூடுதல் இணைய பயன்பாட்டை நோக்கி கைகாண்பிப்பதால் தான், இணையத்தின் ஆற்றல் தொடர்பான கேள்வி எழுகிறது. அதாவது, உலகம் முழுவதும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வீடியோ சந்திப்புகளையும், இணையம் வழி உரையாடல்களையும் நாடும் போது, அதிகரிக்கும் சுமைக்கு இணையத்தால் ஈடு கொடுக்க முடியுமா? எனும் கவலை உண்டாகிறது.
இந்த கேள்விக்கான பதிலை பார்ப்பதற்கு முன், டவுன்டிடெக்ட்டர் (https://downdetector.in/ ) எனும் இணைய சேவை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். இணையம் சுமை தாங்காமல் திண்டாடுகிறதா? என்பதை கண்டறிவதற்கான சேவை இது. பேஸ்புக், டிவிட்டர், கூகுள் உள்ளிட்ட இன்னும் பிற இணைய சேவைகள் இயல்பாக செயல்பட்டு வருகின்றனவா அல்லது, அவற்றை அணுகுவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்பதை இந்த தளம் அடையாளம் காட்டுகிறது.
இணைய பயன்பாடு தொடர்பாக பயனாளிகள் சமர்பிக்கும் தகவல்கள் அடிப்படையில் இந்த தளம் செயல்படுகிறது. மேலும் பலர் தொலைதூர பணியில் இணையும் சூழலில், நீங்கள் பயன்படுத்தும் இணைய சேவையின் நிலை அறிய டவுன்டிடெக்ட்டர் உதவியாக இருக்கும். அதோடு, எப்படியும் இணையத்திற்கு இத்தகைய கண்காணிப்பு தளம் தேவை தான் இல்லையா!
இனி விஷயத்திற்கு வருவோம். கொரோனாவால் அதிகரித்திருக்கும் இணைய பயன்பாட்டிற்கு, இணையம் எந்த அளவு ஈடு கொடுக்கும்? இணைய சேவைகளை அணுகுவது மந்தமாகலாமேத்தவிர, பெரிய அளவில் எந்த பிரச்சனையும் வராது என்பதே இந்த கேள்விக்கான பதிலாக அமைகிறது. மேலும், அடிப்படையில் இணையம் எனும் வலைப்பின்னலே, அணு ஆயுத தாக்குதலுக்கும் தாக்குப்பிடித்து நிற்க வேண்டிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதால் அதன் உள்கட்டமைப்பு இது போன்ற சோதனைகளுக்கு எல்லாம் ஈடு கொடுக்கும் என்றே கருதப்படுகிறது.
இருப்பினும், ஒரே நேரத்தில் பயன்பாடு அதிகரிப்பது சில சிக்கல்களை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு, நிறுவன கம்ப்யூட்டர்களை அல்லது பாதுகாப்பான பரிமாற்றத்திற்கான வி.பி.என் அமைப்பை பலரும் ஒரே நேரத்தில் அணுகினால், அதன் செயல்பாடு பாதிக்கப்படலாம். இது போன்ற தேவையை எதிர்பார்த்து முன் கூட்டியே வலைப்பின்னல் ஆற்றலை அதிகமாக்கியிருந்தால் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. இதை தான் இணைய முன் தயாரிப்பு என்கின்றனர்.
ஆக, கொரோனா போன்ற வைரஸ்களுக்கான முன் தயாரிப்பு சமூகத்திற்கு அவசியம் என்பதைப்போலவே, தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இணைய முன் தயாரிப்பு அவசியம்.
                                                               - சைபர் சிம்மன்.
---------------------#-----------------------
கொரோனாவை விரட்ட செல்போன் விளக்கடியுங்கள்.
சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,166 ஆக உயர்ந்துள்ளது. அதேப்போல், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,014,499 -ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனாவால் உலக நாடுகளின் நிலை தற்போது என்ன? இந்தியா பிரதமரின் நடவடிக்கை பற்றிய செய்தி தொகுப்பு இது..
ஸ்பெயினில் 9 லட்சம் பேர் வேலையிழப்பு:
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் மட்டும் 950 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இது மார்ச் 27 அன்று இத்தாலியில் ஒரேநாளில் பதிவான 919 மரணங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஊரடங்கால், ஸ்பெயினில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 9 லட்சம் பேரின் வேலைகள் பறிபோயுள்ளன.
இது மிக மிக துயரமான நாள் - பிரிட்டன் பிரதமர்
பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் வரும் நவம்பரில் நடைபெற இருந்த ஐ.நா. காலநிலை மாற்ற மாநாடு கொரோனா பாதிப்பு காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் புதனன்று ஒரே நாளில் 563 கொரோனா மரணங்கள் பதிவாகின. அந்நாட்டில் இது ஒரே நாளில் நேர்ந்த அதிகபட்ச மரணம் ஆகும். இது மிக மிக துயரமான நாள் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு உதவி செய்யும் ரஷ்யா!
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,062 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,44,320-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 968 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் வெளியேற முடியாமல் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் விசா காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவுக்கு கொரோனா பாதிப்பில் உதவி செய்ய ரஷ்யா ஏராளமான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. முன்னதாக டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் பரஸ்பரம் தொலைபேசியில் உரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா!
இஸ்ரேலின் சுகாதாரத் துறை அமைச்சர் யாகோவ் லிட்ஜ்மான் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்கொரியாவில் நாடாளுமன்ற தேர்தல்:
தென்கொரியாவில் ஏப்ரல் 11 அன்று 300 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு நோயாளிகள் இத்தேர்தலில் மருத்துவமனையில் இருந்தவாறே வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியில் யார் நடமாடினாலும் சுட்டுக் கொல்ல உத்தரவு:
பிலிப்பைன்ஸில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியில் யார் நடமாடினாலும் அவர்களை சுட்டுக் கொல்லுமாறு அந்நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே, கொடூரமான உத்தரவினை காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு பெரிய அபிறப்பித்துள்ளார்.
காலநிலையில் மாற்றம் ஏற்படபோவதில்லை:
காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனையில் கொரோனா பாதிப்பால் உலக அளவில் அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் தொழிற்சாலைகள் இயங்காத சூழல் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும், நிலைமை சரியானவுடன் மீண்டும் அதே அளவுக்கு கரியமில வாயு கழிவுகள் வெளியேற்றப்படும் என்றும் ஐ.நா. காலநிலை அமைப்பு கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் கொள்ளை நோய் பாதிப்பின் விளைவாக, உலகின் பல நடவடிக்கைகள் இன்னும் அதிகமாக டிஜிட்டல்மயத்தை சார்ந்ததாக மாறப் போகிறது என்றும், செயற்கை நுண்ணறிவுத் துறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குடிரஸ் கூறியுள்ளார்.
காட்டு விலங்கு உணவுக்கு தடை:
சீனாவில் உள்ள சென்சென் நகர நிர்வாகம், மே 1 முதல் காட்டு விலங்குகளை உணவாக கொள்வதை தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு சூழலில் காட்டு விலங்குகள் வணிகத்தை ரத்து செய்துள்ளது.
பரிசு தாருங்கள்; கடனாக தராதீர்கள்!
மிகப் பெரும் மரண துயரம் மற்றும் நிதி துயரத்தில் ஐரோப்பிய நாடுகளை கொரோனா வைரஸ் தள்ளியுள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு ஐரோப்பிய யூனியன், உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்குவதாக கூறியுள்ளது. அதை கடனாக தராதீர்கள், எங்களுக்கு பரிசாக தந்துவிடுங்கள் என்று நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் ஒரு நபர் கூட பாதிக்கப்படவில்லை!
உலக நாடுகளிலேயே வடகொரியாவில் கோவிட் 19 நோயால் ஒரு நபர் கூட பாதிக்கப்படவில்லை என்று வடகொரிய சுகாதாரத்துறை மூத்த அதிகாரி பாக் முயோங் சூ தெரிவித்துள்ளார்.
துவக்கத்திலேயே எல்லைகள் அனைத்தையும் மூடி நாடு முழுவதும் விரிவான பரிசோதனை மற்றும் சந்தேகத்திற்கிடமான சுகாதார நிலைமைகளை சரி செய்து நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.
செல்போன் டார்ச் அடியுங்கள்!
உலக நாடுகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேலையில் இந்தியாவில் பிரதமர் மோடி நாட்டு மக்களை செல்போன் டார்ச் அடியுங்கள் என்று பிரச்சனைய மூடிமறைக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.
இன்றைய தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி, ஊரடங்கை கடைபிடித்து வருவதில் இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது. வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
ஊரடங்கு உத்தரவைக் கடைபிடித்து வரும் நாட்டு மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி உரையாற்றினார்.
வீட்டின் நான்கு மூலைகளிலும் ஔியை பரப்பும் வகையில் டார்ச், அகல் விளக்கு மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பு நாட்டுமக்களிடையே  மட்டுமல்ல உலக நாடுகளிடையையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிட்லர் பாதையில் ஆட்சி செய்யும் மோடிக்கு"ஹிட்லர் ஜெர்மனியை கொலைகார நாடாக்கினார்.
மோடியோ இந்தியாவை கோமாளிகள் நாடாக்கனார்" என்றுதான் வரலாறு சொல்லும்.
----------------------+--------------------------+-------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?