ஒளிரு மா இந்தியா?
பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு தற்போதுவரை நாட்டுமக்களிடையே மூன்று முறை உரையாற்றியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் மக்களிடையே உரையாற்றிய மோடி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மாறாக மருத்துவ உபகரணமின்றி, கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைபணியாளர்களுக்கு கைதட்டி நன்றி செலுத்துங்கள் என அறிவித்தார். அவர் அறிவித்த அதே நேரத்தில் நாடுமுழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணம் இல்லை என சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பலரும் அவர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதே அவர்களுக்கு அளிக்கும் மிகப் பெரிய நன்றி என தெரிவித்திருந்தனர்.
இரண்டாவது முறையாக உரையாற்றிய பிரதமர் மோடி, எந்த வித முன்னேற்பாடுகளும் செய்யாமல் நாடுமுழுவதும் ஊரடங்கை கொண்டுவந்தார். அதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நிர்கதியாக நின்றனர்.
மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையில்லாமல் 600 கி.மீ நடந்தே தங்கள் சொந்த கிராமத்திற்கு செல்லும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். உணவின்றி, சோர்வுடன் 500 கி.மீ தூரம் நடந்துச் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களில், 25-க்கும் மேற்பட்டோர் பசி கொடுமையாலும் சாலை விபத்திலும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுவும் ஒருவகையான தற்கொலைக்குத் தூண்டும் முயற்சிதானே பிரதமரே!
மூன்றாவது அறிவிப்பில், 9 நிமிடம் உரையாற்றிய மோடி, ஊடரங்கை கடைபிடிக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதோடு இல்லாமல், நாடே இருளில் உள்ளது, கொரோனாவை விரட்ட ஒளியேற்றுவோம் எனக் கூறி, வீட்டில் இல்லாதவர்கள் செல்போன் டார்ச் லைட் மூலமும், வீட்டில் உள்ளவர்கள் அகல்விளக்கு மூலமும் ஒளியேற்றுங்கள் என அறிவியலுக்கும் புறம்பான ஒரு செயலை செய்ய சொல்லியிருக்கிறார் இந்திய பிரதமர்.
பிரதமர் எதை அறிவித்தாலும் அதில் எதிர்கட்சிகள், ஜனநாயக அமைப்பினர் அரசியல் செய்யும் வேலையை செய்வதாக பா.ஜ.க மற்றும் இந்துந்துவா கும்பல் கூறிவருகின்றது. அதுமட்டுமின்றி, மோடி அறிவித்த அறிவிப்பின் பின்னால் முன்னோர்கள் கடைபிடித்த விஞ்ஞானம் ஒழிந்துள்ளது என கட்டுகதைகளை திரித்துக்கூறும் வேலையிலும் இறங்கியுள்ளனர். மோடி அறிவிப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கை இல்லை என்பதே முற்போக்காளர்கள் வாதம்.
சரி மோடி அறிவிப்பினால் என்ன ஆகப்போகிறது. விளக்கை 9 நிமிடம் அணைப்பதால் மின்சாரம் சேமிக்கப்படுகிறதே இதில் ஏன் குறைக் கூறுகிறீர்கள் என கேட்கும் அதிமேதாவிகளுக்கு விளக்குவதற்காக தமிழக மின்சாரத்துறைச் சேர்ந்த மூத்த அதிகாரியிடம் விளக்கம் கேட்டோம். மோடியின் அறிவிப்பு இக்கட்டான சூழலில் பெரும் சிக்கலை ஏற்படுத்தப்போகிறது என்பதே அவர் முன்வைத்த கருத்து.
இதுதொடர்பாக பெயரை தெரிவிக்க விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில், “மத்திய அரசு பொறியாளர்களை கலந்து ஆலோசிக்காமல் எடுத்துள்ள முட்டாள் தனமான முடிவுதான் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடம் அனைவரும் விளக்கை நிறுத்த வேண்டும், என்ற அறிவிப்பு.
இந்த அறிவிப்பு அரசியல் ஆதாயத்திற்காக விடப்பட்ட ஒன்று. இந்த அறிவிப்பை அரசு கைவிட வேண்டும் என்றுதான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். தற்போது தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் மொத்தமும் மூடப்பட்டுள்ள நிலையில் வீட்டு மின் நுகர்வு மட்டுமே உள்ளது. அனைவரும் வீட்டு விளக்குகளை நிறுத்தினால், Frequency அதிகமாகி Grid (மின்சார விநியோக அமைப்பு) சீர்குலைவு அடைந்து மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் Pull out ( உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் பின் இழுக்கப்படும்) ஆகிவிடும்.
உதாரணமாக தமிழகத்தில் மட்டும் வீட்டு உபயோகம், அதுமட்டுமல்லாது தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் என சேர்ந்து 17 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் இயக்கப்படும். ஆனால் தற்போது ஊரடங்களால் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 9,500 மெகாவாட் மட்டுமே. சுமார் 50 சதவீதத்திற்கு கீழாக மின்சார பயன்பாடு குறைந்துள்ளது.
இந்நிலையில் வீடுகளில் பெரும்பாலும் அதிகம் மின்விளக்குகளை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தீடிரென மின்விளக்கை அணைக்கும் போது, அதுவும் நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் என்பதால் மின் அழுத்தம் (வேல்டேஜ்) அதிகமாகிவிடும். இந்த அதிக மின் அழுத்ததால் மின் உற்பத்தி நிலையங்ளில் உள்ள மின் பகிர்வு சாதனங்களில் பழுது ஏற்படும். இது விளக்கை அணைப்பதால் மட்டும் ஏற்படும் பெரிய பிரச்சனை.
இதுஅல்லாமல் ஒரேநேரத்தில் மின்விளக்கை எரியவிடும் போது, மின் அழுத்தம் உடனே அதிகரித்து மீண்டும் சீர்குழைந்துப்போகும். இதனால் மின்சார விநியோக அமைப்பு பழுதாகி மின் தட்டுப்பாடு ஏற்படும். அந்த நேரத்தில் மின் உருவாக்கத்தில் பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்யவேண்டும். ஆனால் அதற்கு குறைந்தது மூன்று மணிநேரமாகும். இதனால் வீட்டில் உள்ள மின் சாதனப் பொருள்களுக்கும் பழுது ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதை தடுக்க வேண்டுமானால் 1 மணி நேரத்துக்கு முன்னதாகவே பெரும்பான்மையான மின்நிலையங்களை அதாவது ஏப்ரல் 5-ம் தேதி இரவு 8 மணிக்கே நிறுத்தி வைத்து நாட்டை இருளாக்க வேண்டும். இதில் நாடு முழுவதும் எவ்வளவு பேர் விளக்கை அணைப்பார்கள் என்பது தெரியாது.
எனவே இதனால் இந்திய மின்கட்டமைப்பு (Grid) சீர்குலையும், மத்திய அரசு பொறியாளர்களை கலந்தாலோசிக்காமல் எடுத்துள்ள தவறான முடிவு. இதில் மின் உற்பத்தி நிலையங்களில் ஏதேனும் சாதனம் செயலிழந்தால் அதனை சரி செய்ய குறைந்தது மூன்று மணி நேரம் முதல் சில நாட்கள் வரை ஆகலாம்.
மருத்துவமனைகள் உள்ளிட்ட பல பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த மின் சீர்குலைவால் நாடே இருளாகும். அதுமட்டுமில்லாமல், வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டிய சூழலும் உள்ளது.
05.04.2020 அன்று இந்த அதி மேதாவிகள் சொல் படி மின் விளக்கை வேண்டுமானால் அணைத்து கொள்ளட்டும். அதற்கு பதிலாக வீட்டில் உள்ள வேறு மின் சாதனங்களை, மின் விசிறி, Fridge's, ironbox, washing machines, Ac, water heater போன்ற மின் சாதனங்களை தேவையே இல்லாமல் இருந்தாலும் பயன்படுத்தி பவர் கிரிட்டின் செய்ல்பாடு பாதிக்காத வகையில் முடிந்த அளவு தடுப்பதே ஒரே வழி" என்றார்.
ஆக மொத்தம் இந்த முறையும் பிரதமர் மோடி அறிவிப்பு நாட்டு மக்களுக்கு பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது என்று தெளிவாகிவிட்டது.
+--------------+---------------+---------------+
ஆட்சி செய்யும் அழகு..
கொரோனா ருத்ரதாண்டவத்திலும் உல்லாச சுற்றுலாவுக்கு வெளிநாட்டு பயணிகளை அரசு அனுமதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இரண்டு சொகுசு பேருந்துகளில் சென்றுள்ளனர். இதனை ஸ்வராஜ் எக்ஸ்பிரஸ் என்ற தொலைக்காட்சி சேனல் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது.
அந்த சேனலின் செய்தியாளர் சுற்றுலா பயணிகளிடமும், சுற்றுலா வழிகாட்டியிடமும் “இந்த நெருக்கடியான சூழலில் எப்படி வெளியே வந்தீர்கள்? எப்படி சுற்றுலா செல்ல முடிந்தது?” என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு அவர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனால் விமான நிலையம் செல்வதாகவும் அதற்கு வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் பதில் வந்தது. விமான நிலையங்கள் மூடப் பட்டுள்ள நிலையில் அந்த சுற்றுலா பயணிகள் எப்படி விமான நிலையம் செல்ல முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது.
டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தப்லீக் ஜமாத்தினர் கூட்டம் சேர்த்தது குறித்தும், அவர்கள் ஒருவருக்கும் இன்னொருவருக்கும் இடையே உள்ள இடைவெளியை சரிவர பின்பற்றவில்லை என்றும் அரசும், ஊடகங்களும் குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அரசு எப்படி இரு பேருந்துகளில் பயணிக்க அனுமதி அளித்தது? என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் கொரோனா வெளிநாட்டு பயணிகளிடமிருந்தே இந்தியாவிற்கு பரவியது என்ற கருத்து நிலவும் நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தனிமைப் படுத்தாமல் அவர்களை வெளியே செல்ல இந்திய வெளியுரவுத்துறை அனுமதி அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
,----------------------------#-----------------------------
,----------------------------#-----------------------------
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் தீவிரத்தைக் காட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடெங்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏற்கெனவே இருமுறை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார்.
அதில் பிரதமர் மோடி பேசும்போது, “ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடங்கள், வீட்டின் நான்கு மூலைகளிலும் டார்ச், அகல் விளக்குகள், மொபைல் டார்ச் லைட், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். அப்போது நாட்டு மக்கள் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும்.” என அறிவுறுத்தியுள்ளார்.
மோடியின் இதுபோன்ற அறிவியல்பூர்வமற்ற அறிவிப்புகளால் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள முடியாது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் உள்ள 33.5 கோடி குடும்பங்கள், ஒரு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி வாங்கினால், அதற்கு 670 கோடி ரூபாய் செலவாகும். அதற்கு ஈடாக பிரதமர் நரேந்திர மோடி, சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க உடனடியாக 670 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும்.
உலகளவில் சுகாதார அவசரநிலை நிலவும் சூழலில், பிரதமர் மோடி, தட்டுப்பாடாக இருக்கும் முகக் கவசங்கள் பற்றியும், மருத்துவ உபகரணங்கள் பற்றியும், நிவாரண உதவிகள் பற்றியும் பேசியிருக்க வேண்டும்.
ஆனால், பிரதமர் மோடியோ மெழுகுவர்த்திகள் பற்றியும் விளக்குகள் பற்றியும் அறிவித்துள்ளார். மரணங்களைவிட நாடகம்தான் பெரிதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-------------