திங்கள், 13 ஏப்ரல், 2020

குழம்பி,குழப்பும் அரசு...

"பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றனஎன்றும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்த அறிவிப்பு, பின்னர் அறிவிக்கப்படும் "என்று தமிழ்நாடு கல்வித்துறை அறிவித்துள்ளது.
-----------------------------------
தடையை உடை.
தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்குவதற்குத் தடை இல்லையென்றும் வழிமுறைகளில்தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், புலம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள், ஆதரவற்றோர் என சில தரப்பினருக்கு அரசு, உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை உணவு வழங்குவது போன்ற உதவிகளைச் செய்துவருகின்றன.
இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது, அந்த அறிவிப்பில், "மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதையும் கூட்டம் கூடுவதையும் தவிர்த்து அதன் மூலம் சமூக இடைவெளியைப் பின்பற்றி வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில அமைப்புகளும் சில நபர்களும் அரசியல் கட்சிகளும் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளுக்கு புறம்பாக பல்வேறு இடங்களில் உணவுப் பொருட்களையும் சமையல் பொருட்களையும் வழங்குவது தடை உத்தரவை மீறும் செயலாகும். இது போன்ற நடவடிக்கைகள் வைரஸ் தொற்று பரவ வழிவகுக்கும்.
உதவிசெய்ய விரும்பினால் பொருட்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடமோ மாநகராட்சி கமிஷனர்களிடமோ ஊராட்சிகளில் செயல் அலுவலர்களிடமோ கொடுக்க வேண்டும். இதனை மீறி யாராவது செயல்பட்டால் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாகக் கருதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தப்படுகிறார்கள்" எனக் கூறப்பட்டிருந்தது.


எதிர்க்கட்சியான தி.மு.க. நேற்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவும் நிவாரணப் பொருட்களும் வழங்கியது. 
அரசின் இந்த அறிக்கையை அடுத்து, தி.மு.கவின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. "தானும் செய்யமாட்டேன், மற்றவர்களும் செய்யக்கூடாது என்பது இந்த ஆட்சியின் வஞ்சகம். கூட்டம் சேர்வதை ஒழுங்கு படுத்தலாம். உதவியே செய்யக்கூடாது என்று எப்படி உத்தரவிட முடியும்? மக்களின் கண்ணீர் துடைக்க தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது அதைத் தடுக்க எவராலும் இயலாது. தடுக்க நினைப்பது சர்வாதிகாரத்தனம்" என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மக்களிடமிருந்தும் "அரசும் ஒன்று செய்யவில்லை.உதவி செய்பவர்களையும் கேவலமான அரசியல் செய்து தடுப்பது அநியாயம்" என எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் தி.மு.க அரசின் மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க அதிமுக அரசு விதித்தத் தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்றது.

நாலாப்பக்கமும் எழுந்த எதிர்ப்பைக் கண்ட நிலையில், இன்று காலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. 
இதற்குப் பிறகு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் செய்வதைப் போல தற்போது உதவிசெய்ய ஆரம்பித்துவிட்டால் நோய்த் தொற்றுதான் அதிகமாகும் என பொது சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். அதனால்தான் எந்த ஒரு அமைப்பு நிவாரணம் வழங்கினாலும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது உள்ளாட்சி அதிகாரிகளிடம் வழங்கும்படி கூறப்பட்டது. தன்னார்வலர்கள் வழங்கும் மளிகைப் பொருட்களோ, பிற பொருட்களோ வழங்குபவர்கள் சொல்லும் பகுதிக்கு, அல்லது சொல்லும் நபர்களுக்கு வழங்கப்படும்.
இந்தப் பணியில் தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு இணைந்து செயல்படலாம். நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் உள்ள சில அம்சங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படத்தான் அரசு கேட்டுக்கொண்டுள்ளதே தவிர, யாருக்கும் தடை விதிக்கவில்லை. இதில் அரசு எந்தவிதமான அரசியலும் செய்யவில்லை" என்றும்
கொரோனாவைத் தடுக்கும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் தற்போது இருந்து வரும் ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதிவரை நீடிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-----------------------------------------------------------------
அந்த24 மணி நேரம்.
தமிழக அரசியலில் கடந்த 24 மணி நேரத்தில் முக்கியமான சில அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளது. அதிமுகவின் அறிவிப்பு ஒன்றும் அதை தொடர்ந்த திமுகவின் இணைய போராட்டமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவின் ஐடி விங் பெரிய அளவில் தங்கள் பணிகளை செய்யவில்லை என்று திமுகவிற்குள் ஒரு சின்ன வருத்தம் இருக்கிறது.
திமுக ஆதரவு நெட்டிசன்களே இதை வெளிப்படையாக பலமுறை டிவிட்டர் உட்பட தளங்களில் குறையாக சொல்லி இருக்கிறார்கள். அந்த அளவிற்குத்தான் திமுகவின் ஐடி விங் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது திமுக ஐடி விங்தான் புதிய வேகம் எடுத்து தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது.
திமுகவின் ஐடி விங் தீவிரமாக செயல்பட காரணம் கொரோனா என்று கூட கூறலாம். முதலில் கொரோனா தாக்கிய தொடக்கத்தில் திமுக பெரிய அளவில் இணைய பிரச்சாரம் எதையும் செய்யவில்லை. 
தாங்கள் செய்யும் பணிகளை வெளியே சொல்லாமல் இருந்தது. அதாவது மக்களுக்கு உதவி செய்தாலும் கூட அதை பெரிதாக விளம்பரம் செய்யவில்லை. 
அப்போது அதிமுகவில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி முதல்வர் பழனிசாமி வரை எல்லோரும் நன்றாக ஸ்கோர் செய்து கொண்டு இருந்தனர். இதனால் திமுக இருக்கிறதா என்றே தெரியாத நிலை ஏற்படும் சூழ்நிலை உருவானது. திமுக எங்கே போனது என்றும் கேட்கும் நிலை உருவானது .
இதை புரிந்து கொண்ட திமுக அதன்பின்தான் சமூக வலைதளத்தில் தீவிரமாக களமிறங்கி தாங்கள் செய்யும் பணிகளை வெளியே சொல்ல தொடங்கியது. எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என்று எல்லோரும் களமிறங்கி பணிகளை செய்தனர். அதை உடனுக்குடன் ஒவ்வொரு மாவட்ட திமுக ஐடி விங் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள். மக்களுக்கு உடனுக்குடன் திமுகவின் உதவிகளை சமூக வலைத்தளம் மூலம் ஒருங்கிணைத்து வழங்க தொடங்கினார்கள்.

ஒரு பக்கம் மக்களுக்கு உதவி செய்யும் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் அரசுக்கு எதிராகவும் திமுக கடுமையாக பிரச்சாரம் செய்தது. 
முக்கியமாக தமிழக அரசு கொரோனாவிற்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைவை சந்திக்கிறது. போதிய டெஸ்ட் செய்யப்படுவது இல்லை. வெளிப்படைத்தன்மை இல்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக திமுக பிரச்சாரத்தை முன்னெடுக்க தொடங்கியது. இதற்கான அதிரடி ஆதாரங்களை அடுக்க தொடங்கியது.
அப்போதுதான் முதல்வர் பழனிசாமி அதிரடியாக களமிறங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி கொரோனா காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் என்ஜிஓ அமைப்புகள் மக்களுக்கு உதவி செய்ய கூடாது என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்தது. 
மக்கள் தனிமனித விலகலை கடைப்பிடிக்க வேண்டும். அதனால் அரசியல் கட்சிகள் மக்களுக்கு உதவி செய்ய கூடாது என்று அரசு கூறியது. திமுகவின் சோஷியல் மீடியா விளம்பரங்கள் வைரல் ஆனதை அடுத்து முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்கிறார்கள்.
இந்த வாய்ப்பை திமுக சரியாக பயன்படுத்திக் கொண்டது என்றுதான் கூற வேண்டும். மக்களுக்கு உதவி செய்வதை அரசு தடுக்கிறது. 
திமுக மக்களுக்கு உதவி செய்ய கூடாது என்று அதிமுக நினைக்கிறது என்று இணையம் முழுக்க பிரச்சாரம் செய்யப்பட்டது. இதற்காக பல ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு வைரல் செய்யப்பட்டது. அரசுக்கு எதிராக, முக்கியமாக முதல்வருக்கு எதிராக முக்கியமான சில டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டன. 
களமிறங்கிய ஸ்டாலின்.
இன்னொரு பக்கம் ஸ்டாலின் இந்த ஜோதியில் ஐக்கியமாகி அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். நேற்று மதியமே ''அரசு செய்லபட வேண்டும்.. இல்லையென்றால் செயல்பட வைப்போம்'' என்று கூறினார். அதன்பின் நேற்று இரவு அரசின் தடை அறிவிப்பிற்கு பின் டிவிட் செய்த ஸ்டாலின், காலத்தில் துயருறும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது; தானும் செய்யாது அடுத்தவர்களையும் தடுப்பது வஞ்சகம்!
இது ஜனநாயக நாடு; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம். கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!, என்று குறிப்பிட்டு இருந்தார். 
அதோடு அரசுக்கு வரிசையாக கேள்விகளை அடுக்கி இருந்தார். மேலும் ஏப்ரல் 15ம் தேதியில் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழக அரசு கொரோனாவிற்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திமுக சார்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது என்று அறிவித்தார்.
ஒரே நாளில் அரசு மாற்றம்
இதெல்லாம் நடந்தது வெறும் 24 மணி நேரத்தில். இந்த சமூக வலைதள பிரச்சாரம், வைரலான ஹேஷ்டேக்குகள், ஸ்டாலினின் அனைத்து கட்சி கூட்டம் எல்லாம் தமிழக அரசை யோசிக்க வைத்தது. 
இதனால் பின்வாங்கிய தமிழக அரசு, நாங்கள் யாரும் உதவி செய்வதை தடுக்கவில்லை. மக்களுக்கு உதவி செய்ய நினைத்தால் யார் வேண்டுமானாலும் உதவலாம். அரசு தடுக்காது என்று முதல்வர் பழனிச்சாமி இன்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். தமிழக அரசு தனது முடிவை மாற்றியுள்ளது.
இந்த 24 மணி நேரத்தில் நடந்த மாற்றத்தை திமுக தங்கள் பிரச்சாரத்தின் வெற்றியாக பார்க்கிறது. அரசை செயல்பட வைப்போம் என்று ஸ்டாலின் கூறினார். தற்போதே அதேபோல் செய்துவிட்டார் என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள். அதாவது திமுக செய்த தீவிரமான இணைய விமர்சனத்தின் நேரடி பலன்தான் இந்த மாற்றம். திமுக இனி செய்யப்போகும் அரசியல் இதை மையமாக வைத்துதான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
------------------------------------------------
.