நிதி மூலதன ஆட்சி !

பொருளாதார மந்தத்தால் இந்திய மக்கள் அனுபவித்து வரும் வேதனைகளை, நெருக்கடிகளைக் கண்டு கொள்ளாத மோடி அரசு, இந்த மந்தத்தால் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு நேர்ந்துவிட்ட நெருக்கடிகளைக் களையக் கிடைத்த வாய்ப்பாக பட்ஜெட்டையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பெருநிறுவன வரிச் சீர்திருத்தங்களின் மூலமும், பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்குவதன் மூலமும், பொதுமக்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய மானியங்களுக்கும் சமூக நலத் திட்டங்களுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்திருப்பதன் மூலமும் நிதி மூலதனக் கும்பலின் மனதைக் குளிரவைத்து, தம்மை கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் தாசாதி தாசனாக, மற்ற ஆளும் வர்க்கக் கட்சிகளை விஞ்சிய முதலாளித்துவ சேவகனாகக் காட்டிக்கொண்டுவிட்டது.
பொருளாதார மந்தம் எனக் கூறப்படும் இந்த நிகழ்ச்சிப் போக்கின் உண்மையான பொருள் வேலையிழப்பு, ஆட்குறைப்பு, வேலையின்மை, கூலிவெட்டு ஆகியவைதான். இந்தப் பொருளில் மட்டும்தான் சாமானிய உழைக்கும் மக்கள் இந்த நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும்.
வேலையிழப்பும், வேலையின்மையும், கூலி வெட்டும் இந்திய உழைக்கும் வர்க்கத்தைத் தாக்கிய அதேவேளையில், கடந்த நவம்பர் மாதம் தொடங்கியே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வும் அவர்களைத் தாக்கியது. இது இந்திய உழைக்கும் மக்களின் மீது இறங்கியிருக்கும் இரட்டைத் தாக்குதல்.
இதனை மந்த வீக்கம் எனப் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அடித்தட்டு உழைக்கும் வர்க்கம் எந்தளவிற்கு வயிற்றைச் சுருக்கிக் கொள்கிறதோ அந்தளவிற்கு மட்டுமே அன்றாட வாழ்க்கையை ஓட்ட முடியும் என்பதுதான் மந்த வீக்கம் எனப்படுவதன் பொருள்.
ஓரிரு மாதங்களுக்கு முன்பாக வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி நாடே குமுறிக் கொண்டிருந்த வேளையில், “நான் வெங்காயமும் பூண்டும் அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயம் அதிகம் பயன்படுத்தாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான்” என நாடாளுமன்ற விவாதத்தின்போதே பார்ப்பன சாதித் திமிரோடு பதில் அளித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, மோடி அரசின் மனோநிலையே இதுதான். அதனைப் பிரதிபலிக்கும் விதமாக, உணவு மானியத்தையும் அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தையும் கைவிட வேண்டுமென பட்ஜெட்டுக்கு முன்பாக வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை ஆலோசனை கூறியிருக்கிறது.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் காய்கறி 60 சதவீதமும், பருப்பு வகைகள் 15 சதவீதமும், முட்டை 8.79 சதவீதமும், மீன், இறைச்சி உள்ளிட்டவை 9.57 சதவீதமும் விலை உயர்ந்துள்ளன. இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மோடி அரசு, உணவுப் பொருள் பதுக்கலையும் கள்ளச் சந்தை வியாபாரத்தையும் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தைக் கைகழுவிவிட விரும்புகிறது.
உணவு மானியத்தைக் கைவிடுவது என்பது நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பானது என்பதோடு, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கையை, வருமானத்தைச் சந்தை சூதாடிகளின் கையில் ஒப்படைப்பதாகும்.
இப்படிப்பட்ட “நல்லெண்ணம்” கொண்ட மோடி அரசிடமிருந்து உழைக்கும் மக்கள் “அச்சே தின்” – நல்ல காலம் எதையும் சிறிதளவும் எதிர்பார்க்க முடியாது.
அதனை நிரூபிக்கும் விதத்தில்தான், மந்த வீக்கத்தால் ஓர் அரைப்பட்டினி நிலையை இந்திய உழைக்கும் வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் இந்தப் பாரதூரமான நிலையில்கூட, ரேஷன் பொருட்களுக்குத் தரப்படும் உணவு மானியத்தையும், விவசாயிகளுக்குத் தரப்படும் இடுபொருட்களுக்கான மானியத்தையும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஊட்டச்சத்துத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியையும் அதிகரித்துக் கொடுக்க மறுத்திருக்கிறது மோடி அரசு.

***

கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதைத் தேசிய மாதிரி புள்ளிவிவர ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையே அம்பலப்படுத்துகிறது. இந்தப் பாரதூரமான வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்வதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலாளித்துவ நிபுணர்கள் பலரும் பட்ஜெட்டுக்கு முன்பிருந்தே மோடி அரசிற்குச் சுட்டிக் காட்டி வந்தனர். இந்தத் திட்டத்திற்குக் குறைந்தபட்சமாக 76,000 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என அவர்கள் கூறி வந்த நிலையில், மோடி அரசோ இந்த பட்ஜெட்டில், கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட (71,000 கோடி ரூபாய்) ஒதுக்காமல், 10,000 கோடி ரூபாயை வெட்டிவிட்டு 61,500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருக்கிறது.
கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப் பொருட்களின் விலைகள் ஏறியிருக்கும் நிலையில் உணவு, எரிபொருள் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, கடந்த பட்ஜெட்டைவிட 0.24 சதவீதம் மட்டுமே கூட்டி வழங்கப்பட்டிருக்கிறது.
இடுபொருட்களுக்கான விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிவரும் வேளையில் உரத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் மானியத் தொகை கடந்த பட்ஜெட்டை ஒப்பிடும்போது (79,997 கோடி ரூபாய்) 8,500 கோடி ரூபாய் வெட்டப்பட்டு, 71,309 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சியின்றி நோஞ்சான் குழந்தைகளின் தலைநகராக இந்தியா உருவாகியிருக்கும் சூழலில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைக்கான நிதி 27 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 22 ஆயிரம் கோடியாகவும்; மதிய உணவுத் திட்டத்துக்கான நிதி 11 ஆயிரம் கோடியிலிருந்து 9 ஆயிரம் கோடி ரூபாயாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.
குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கும் இந்த நிதியையும் மோடி அரசு முழுமையாகச் செலவு செய்யும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 27.86 இலட்சம் கோடி ரூபாய் நிதியில் 9.66 இலட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை. அதற்கு முந்தைய ஆண்டில் செலவழிக்கப்படாத தொகை 7.83 இலட்சம் கோடி ரூபாய். இப்படிச் சதித்தனமாக மிச்சம் பிடிக்கப்படும் நிதி, பற்றாக்குறையை ஈடுகட்டப் பயன்படுத்தப்படுகிறது.

***

பொதுமக்கள் விடயத்தில் பற்றாக்குறை என மூக்கைச் சிந்தி வரும் மோடி அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தள்ளுபடியோ சலுகையோ வழங்கும்போது எந்தக் கணக்கு வழக்கும் பார்ப்பதில்லை. பட்ஜெட்டுக்கு முன்பாகவே கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு 1.50 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருமான வரித் தள்ளுபடியை அறிவித்திருந்த மோடி அரசு, அதுவும் போதாதென்று இந்த பட்ஜெட்டில் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு பங்கு ஈவு வரியைத் தள்ளுபடி செய்திருக்கிறது. ஏகாதிபத்திய அரசுகள் இந்தியாவின் அடிக்கட்டுமானத் திட்டங்களில் முதலீடு செய்தால், அம்மூதலீடு ஈட்டும் இலாபத்தின் மீதான வரி மற்றும் பங்கு ஈவு வரிகளைத் தள்ளுபடி செய்திருக்கிறது.
வருமான வரி ஏய்ப்பு வழக்குகளை கிரிமினல் சட்டங்களின் கீழ் விசாரித்துத் தண்டிப்பதற்குப் பதிலாக அவ்வழக்குகளை சிவில் வழக்குகளாக நடத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், முதலாளி வர்க்கத்தினர் மீது வரி ஏய்ப்பு வழக்குகளைத் தொடுப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு வரி வசூலில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாக, பொது மன்னிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் வரித் தொகையைச் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மார்ச் 31, 2020 செலுத்த முன்வந்தால், அவ்வரித் தொகை மீதான வட்டி, அபராதத் தொகை மட்டுமின்றி, அந்நிறுவனங்களின் மீதான வழக்குகளும் கைவிடப்படும். வாய்ப்பு கிடைத்தால், இந்தியாவை வரியில்லாத சொர்க்க பூமியாக அறிவிக்கவும் நரேந்திர மோடி தயங்க மாட்டார் போலும்!
நரேந்திர மோடி இரண்டாம் முறையாகப் பதவியேற்ற இந்த ஆறேழு மாதங்களுக்குள்ளாகவே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இரண்டு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான வரித் தள்ளுபடிகள், சலுகைகளை வாரிக் கொடுத்திருக்கிறார். மேலும், 2019 நிதியாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வருமான வரியில் இரண்டு இலட்சம் கோடி ரூபாய் வரை துண்டு விழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் அரசிற்கு ஏற்படவுள்ள இழப்பை ஈடுகட்ட ஏற்கெனவே ரிசர்வ் வங்கியிடமிருந்து 1.75 இலட்சம் கோடி ரூபாயைப் பிடுங்கிக் கொண்டுவிட்டது மைய அரசு. மேலும், இந்த பட்ஜெட்டில் இரண்டு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டில் மட்டும் 48,436 கோடி ரூபாயை மதிப்பீட்டு உபரியாக ஈட்டியிருக்கும், 31.11 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான சொத்துக்களை நிர்வகித்து வரும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவு நிதி மூலதனக் கும்பலுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கறி விருந்து என்றுதான் சொல்ல முடியும்.

***

நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது சர்வதேச நிதி மூலதன நிறுவனங்களின் கட்டளை. இக்கட்டளையை நிறைவேற்றும் முகமாக நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம் என்றொரு சட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறது, இந்திய அரசு.
பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தி வரம்பிற்குள் வைப்பது என்பதன் பொருள் கார்ப்பரேட் முதலாளிமார்களுக்கும் சலுகை அளிக்கக்கூடாது என்பதல்ல. மாறாக, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைப் படிப்படியாக வெட்டி முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்பதுதான்.
பா.ஜ.க.விற்கு முந்தைய அரசுகளும் இந்தக் கட்டளைக்கு அடிபணிந்துதான் பட்ஜெட்டைத் தயாரித்தார்கள் என்றாலும், பார்ப்பன பாசிஸ்டுகளைப் பொருத்தவரை, பொதுமக்களுக்கு மானியம் வழங்குவது, மானிய விலையில், கட்டணத்தில் சேவைகளை வழங்குவதையெல்லாம் அடியோடு நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர்களது இலட்சியமும்கூட.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானியங்களைத் தண்டச் செலவு என்றும் இலவசங்கள் மக்களைச் சோம்பேறிகளாக்குகிறது என்றும் இழிவுபடுத்தி வரும் இக்கும்பல், முதலாளிகளுக்கு அளிக்கப்படும் மானியங்களையெல்லாம் வளர்ச்சிக்கான தூண்டுகோல்கள் (stimulus packages) என நாமகரணம் சூட்டிப் புனிதப்படுத்துகிறார்கள்.
சமையல் எரிவாயுவுக்கும் உரத்திற்கும் தரப்படும் மானியங்களை வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறையெல்லாம் மானியங்களை வெட்டும் நோக்கில்தான் கொண்டுவரப்பட்டிருக்கிறதே ஒழிய, முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்படவில்லை. தண்ணீரை விலைக்கு வாங்கப் பழக்கப்படுத்திவிட்டதைப் போல, இவற்றையும் சந்தை விலைக்கு வாங்கும் மனநிலைக்கு மக்களைத் தள்ளிவிடும் சூது நிறைந்தது இந்த நடைமுறை.
இந்த அடிப்படையில்தான் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் யார் குடி அழிந்தாலும் நிதி மூலதனக் கும்பலின், கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் இலாபம் சரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே பொது மக்களுக்கான மானியங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன; வரித் தள்ளுபடிகளும் வரி சீர்திருத்தங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இலாபமீட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் நிதி மூலதனக் கும்பலின் ஆதிக்கத்துக்கும் கொள்ளைக்கும் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.
“அனைவருடனும் அனைவருக்குமான வளர்ச்சி” எனத் தேனொழுகப் பேசி அதிகாரத்தைக் கைப்பற்றிய நரேந்திர மோடியின் ஆட்சியில் வலுத்தவர் மென்மேலும் கொழுத்ததைத்தான் கண்டோம். உண்மையில் நரேந்திர மோடி அரசு, நிதி மூலதனக் கும்பல் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு. மக்களுக்குப் புரியும் மொழியில் சொல்வதென்றால், ராகுல் காந்தி பயன்படுத்திய வார்த்தைகளைத்தான் திரும்பக் கூற வேண்டும் – “சூட்-பூட் கி சர்க்கார்!”

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?