முகக்கவசம் முதல் மருத்துவமனைகள் வரை

மத்திய- மாநில அரசுகளின்
முட்டாள்தனங்கள்!
இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலும், இறப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிலைமை இப்படியே சென்றால் மே மாத காலத்தில் 10 லட்சம் பேர் நேரடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என ஆய்வுகள் கணிக்கின்றன. 'இந்தியாவில் சமூக பரவல் தொடங்கிவிட்டது. 55% மக்கள் தொகை பாதிக்கப்படும் சூழல் உள்ளது' என எச்சரித்திருக்கிறார் இந்தியாவின் சிறந்த தொற்றுநோயியல் நிபுணரும், வேலூர் CMC முன்னாள் முதல்வருமான ஜெயப்பிரகாஷ் முலியில்.
டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனா, பிப்ரவரி மத்தியில் உலகையே உலுக்கிக்கொண்டிருந்தபோது குடியுரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியால் அடித்துக் கொண்டிருந்தது பா.ஜ.க அரசாங்கம். கொரோனாவின் தாக்கம் குறித்தும், அச்சம் குறித்தும் பிப்ரவரி 12ம் தேதியே ராகுல் காந்தி ட்விட்டரில் எச்சரித்திருந்தார். ஆனால், ராகுலின் எச்சரிக்கையை இணைய போலிக்கணக்குகள் மூலம் மலிவான உத்திகளால், கொச்சையாக எதிர்கொண்டது பா.ஜ.க.
உலகம் முழுக்க நிலைமை மோசமாகிக் கொண்டிருந்த நிலையில் பிப்ரவரி 27ம் தேதி உலக சுகாதார மையம் 'கொரோனா தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்' சந்தையில் வேகமாக தீர்ந்து வருவதாகவும், போலியான தகவல்கள் மக்கள் பீதியடைவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் வருகின்ற நாட்களில் மிக அதிகமான தேவை உருவாகும் எனவும் எச்சரித்திருந்தது. WHO அறிவிப்பு வெளியிடப்பட்ட அடுத்த 5 நாட்களுக்குள் மார்ச் 2ம் தேதி இந்தியாவில், சுமார் ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு 2 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதிசெய்யப்பட்டது. இருவருமே கொரோனா தொற்று உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்தவர்கள். அப்போதே இந்தியா சுதாரித்திருக்க வேண்டும்.
ஆனால், மார்ச் 20ம் தேதி கொரோனா தொற்று குறித்து பிரதமர் மீடியா முழக்கம் செய்து, கைதட்டல் movement-ஐ அறிவிக்கும் நாள் வரை பெரிதாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. மார்ச் 13 அன்று சுமார் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் 'நெருக்கடி நிலை அறிவிக்கும் நிலைக்குச் செல்லவில்லை' என்றார். அடுத்த இரண்டு நாட்களில் தொற்றுற்றோர் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது. பிறகு அவசரநிலையை அறிவித்தார்கள்.



ஆனால், அவசர நிலை அறிவித்த பின்னரும், மோடி மீடியா விஜயம் செய்வதற்கு முதல் நாள் வரை, மார்ச் 19 வரை, 'கொரோனா தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்' இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளது. விளைவு? மோடி 'சுய ஊரடங்குக்கான' அழைப்பு விடுத்தபிறகு, ஓரளவு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் மாஸ்க்குக்காகவும், அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களுக்காகவும், 'sanitizer'-க்காகவும் கடைகளுக்குச் சென்ற போது சந்தையில் போதுமான பொருட்கள் இல்லை. இருந்த பொருட்கள் கொள்ளை விலைக்கு அநியாய வியாபாரம் செய்யப்பட்டது.
வீட்டு வாசலில் இந்திய குடிமக்களை கைதட்ட அழைத்து கொரோனாவுக்கு 'தேசியவாத பித்தை' மருந்தாக அறிவித்தார் மோடி. பிரதமர் கேட்ட கைதட்டல், 'களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவ பணியாளர்களுக்காக; உயிர் காப்பு சேவையாளர்களுக்காக'. ஆனால், உண்மை என்னவென்றால், இந்தியாவே தெருவில் கூடி நின்று, தட்டு - கரண்டி - அண்டா - கேஸ் அடுப்பு - தகர டப்பா - துருப்பிடித்த இரும்புக்கூரை போன்ற நாராச ஒலி எழுப்பும் உலோகங்களை உருட்டிக்கொண்டிருந்த போது களத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள் பலருக்கு அடிப்படைத் தேவையாகவும், நோயாளிகளை காக்கும் தாங்களே நோயாளிகளாக மாறிவிடாமல் தடுத்துக் கொள்வதற்காகவும் தேவைப்படும் 'தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவில் இல்லை.
வாடிய முகத்துடன், தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுக் கொண்டிருந்தனர். அஸ்ஸாம் மாநிலத்தில் பாதுகாப்பு உடைகூட இல்லாமல் ப்ளாஸ்டிக் உரையை அணிந்துகொண்டு மருத்துவர்கள் பணி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சுய ஊரடங்குக்கு முன்பும், பின்பும் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வேலையிடத்திலிருந்து, சொந்த ஊருக்குச் சென்றனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய ஓட்டுநர்களுக்கோ, ஒழுங்குபடுத்த வேண்டிய காவல்துறைக்கோ அடிப்படையான எந்த பாதுகாப்பு உபகரணமும் கொடுக்கப்படவில்லை. தொற்றிலிருந்து பாதுகாக்கும் உயிரற்ற மாஸ்க், உயிருள்ள மருத்துவர்கள் இரண்டின் மீது மோடி அரசு காட்டிய அக்கறை இவ்வளவுதான்.



சரி தொற்றைச் சோதித்து அறியும் நிலைமையும், வெளிப்படைத்தன்மையும் எப்படி இருக்கிறது? கொரோனா தொற்றை பரிசோதிப்பதற்கான எந்திரம் 'USFDA மற்றும் ECE' தரச்சான்றிதழ் பெற்ற சோதனை உபகரணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவித்தது மத்திய அரசு. USFDA என்பது அமெரிக்க உணவு மற்றும் மருந்தக ஆய்வுச் சான்றிதழ். ECE என்பது ஐரோப்பிய தரச்சான்றிதழ். சுய ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமைக்கு முதல் நாள், மார்ச் 21 சனிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது இந்திய அரசு. இந்திய அரசின் இந்த அறிவிப்பு Covid-19 சோதனைக்காக இயங்கிக்கொண்டிருந்த ஆய்வகங்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. காரணம், இந்த அறிவிப்பு வெளியாகும் நொடி வரை, Covid 19 வைரஸை சோதித்துக் கொண்டிருந்த உபகரணங்கள் 'இந்தியன் வைரலாஜி இன்ஸ்டிட்யூட்' தரச்சான்றிதழ் பெற்றவையே.
தொற்று அதிகமாகி வந்த நிலையில், அதுவரை வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை மட்டுமே பெரும்பாலும் இந்திய அளவில் சோதித்துக் கொண்டிருந்தது அரசாங்கங்கள். இந்திய அளவில் ஊரடங்கும், விழிப்புணர்வும் பிரதமராலேயே அறிவிக்கப்பட்ட நிலையில் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை' நிராகரித்தால் சோதனை எப்படி நடைபெறும்? ஒரே இரவில் திடீரென அமெரிக்க, ஐரோப்பிய தரச்சான்றிதழ்களை எப்படி பெற முடியும்? ஏனெனில், COVID 19 பாதிப்பால் உலக நாடுகள் பிறநாடுகளிலிருந்து ஏற்றுமதி - இறக்குமதியை நிறுத்திவிட்டன.
உடனடியாக சான்றிதழ் பெறுவதற்கு தங்கள் உபகரணங்களை பிற நாடுகளுக்கு அனுப்பக்கூட முடியாத நிலையில் கைபிசைந்து நின்றன இந்திய நிறுவனங்கள். இந்திய உற்பத்தி மட்டுமல்ல, கொரோனா சோதனைக்காக தென் கொரியா உள்ளிட்ட பிறநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட உபகரணங்களையும் ஒரே அறிவிப்பில் பயனற்றதாக்கியது அரசாங்கம். இந்தியாவில் USFDA தரச்சான்றிதழை பெற்ற ஒரே நிறுவனம் குஜராத்தைச் சேர்ந்த Cosara diagnostics மட்டுமே. அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் கூட்டுணர்வு கொண்ட அந்த நிறுவனத்தால் அதிகபட்சம் 10,000 உபகரணங்கள் தயாரிக்க முடியும் அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த உபகரணங்கள் மூலம், நோயாளிகளின் மாதிரிகளை சோதிக்க இரண்டரை மணிநேரம் ஆகும்.



ஆனால், தென்கொரியாவைச் சேர்ந்த 'sugentech' என்ற நிறுவனத்தில் உபகரணத்தால் 10 நிமிடத்தில் மாதிரிகளை சோதிக்க முடியும். ஆனால், அவற்றிற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால், குஜராத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு சாதகமாக அரசு செயல்படுகிறது என்கிற கடுமையான அழுத்தங்களும், புகார்களும் எழுந்த பிறகு, அவசர அவசரமாக திங்கட்கிழமை அன்று, டெல்லி - ஐ.ஐ.டி, அல்டோனா, மை லாப் போன்ற 9 நிறுவனங்களின் உபகரணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு மருத்துவப் பேரழிவு நேரத்தில், முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய அரசாங்கத்தின் 'திட்டமிடல்களுக்கும்', ' நேர்மைக்கும்' சான்றுகள் இவை.
பரந்துபட்ட ஆய்வுக்கான சூழலும், உடனடியாக நோயாளிகளின் மாதிரிகளை சோதிக்கும் சூழலும் இல்லாத நிலையில், இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாகவும், முறையான சோதனைகளே இன்னும் செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பரபரப்பான அறிவிப்புகள், டாம்பீகமான முறுக்குகள் என திடீர் அறிவிப்புகளோடு இயங்கும் தமிழக அரசு நோயாளிகளின் எண்ணிக்கையை மறைப்பதாகவும், தற்போது சொல்லப்படும் எண்ணிக்கயை நம்பமுடியவில்லை என்றும் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியின் மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸே குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையின் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி மருத்துவமனையில் 52 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஆனால், விஜயபாஸ்கர் தலைமையிலான சுகாதாரத்துறை அதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 'தங்கள் அம்மாவைப் போல இன்னும் 3 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டும், அவை வெளியில் அறிவிக்கப்படவில்லை' என பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் பிள்ளைகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாஸ்க் முதல் மருத்துவமனை வரை தேவையான திட்டமிடல்களோ, வெளிப்படைத்தன்மையோ இல்லாமல் முட்டாள்தனங்களை கைபிடித்துக் கொண்டிருக்கிறது மத்திய - மாநில அரசுகள். பேருந்து நிலையங்களிலும், மளிகைக்கடை வாசல்களிலும் பதற்றத்துடன் நிற்கிறார்கள் சாமானியர்கள்.
- விவேக் கணநாதன்


-------------------------------------------------------
வறுமைக்குள்ளாக இருக்கும் 
நாற்பது கோடி இந்தியர்கள்.
உலக தொழிலாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள, ஊரடங்கு உத்தரவால் உலகம் முழுக்க 270 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 கோடி இந்திய முறைசாரா தொழிலாளர்கள், வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளது.

மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸால், ஏற்கனவே லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியா, நைஜீரியா, பிரேசில் ஆகிய நாட்டின் தொழிலாளர்கள் கணிசமாக பாதிப்படைந்துள்ளனர்.குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், முறைசாரா தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களுக்கான சுகாதார சேவைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அம்சங்களும் குறைவாகவே உள்ளது. பொருத்தமான கொள்கை இல்லை என்றால், தொழிலாளர்கள் வறுமையில் வீழ்வதற்கான அதிக ஆபத்தை எதிர்கொள்வார்கள். தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெறுவதிலும் அதிக சவால்களை அனுபவிப்பார்கள்.
இந்தியாவில், முறைசாரா பொருளாதாரத்தில் பணிபுரியும் 90 சதவீத மக்கள், அதாவது 40 கோடி பேர், இந்நெருக்கடியான நிலையால் வறுமையை சந்திக்கும் அபாயத்தில் உள்ளனர். தற்போதைய ஊரடங்கால் பலர் கிராமப்புறங்களுக்கு திரும்பி உள்ளனர்.
முழு ஊரடங்கு மற்றும் பகுதி ஊரடங்கால் 270 கோடி தொழிலாளர்கள் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 81 சதவீதம் ஆகும். மேலும், தொழிலாளர்களுக்கு ஊதியக் குறைப்பு, பணிநேரம் குறைப்பு, தகுதிக்கும் குறைந்த பணி போன்ற சிக்கல்கள் ஏற்படும். முக்கிய துறைகளான சில்லறை வர்த்தகம், தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள் துறை, உற்பத்தி துறை ஆகியவை வேலைவாய்ப்பில்லாதவைகளாக மாறியுள்ளன. துரித கதியிலான நடவடிக்கைகள் தான் மக்களை காப்பாற்றும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
---------------------+++++-------------------------
நூறு கோடிகள் நன்கொடை.
உலகை உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கு டுவிட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி (43) ஒரு பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.100 கோடி) நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது,"சர்வதேச கொரோனா நிதிக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி அளிக்க உள்ளேன். ஸ்கொயர் நிறுவனத்தில் தனக்கிருக்கும்  பங்குகளை ஸ்மார்ட்ஸ்மால் நிறுவனத்திற்கு மாற்ற உள்ளேன். (இது அவரது சொத்து மதிப்பில் 28 சதவீதம்) கொரோனா முடிந்த பின்னர், பெண்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்படும்.கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் .இந்த நன்கொடை மிகவும் சிறியது எனவும் தெரிவித்துள்ளார். ஜாக்டோர்சிக்கு  சுமார் 93.9 பில்லியன் சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
-------------------------0----------------------
கொரோனா தாக்குதலுக்குள்ளான அதிக ஆபத்து உள்ளவர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள், கொரோனா வைரஸ் சந்தேகத்துக்கு இடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பராமரிப்பில் ஈடுபடுபவர்கள், ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியவர்களுடன் வீட்டு தொடர்பில் உள்ளவர்கள் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து எதற்கெல்லாம் பயன்படும்?
உலக அளவில் விநியோகம் செய்யப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தில், சுமார் 70 சதவீதம் இந்தியாதான் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 40 டன் அளவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறு உற்பத்தி செய்யப்படுகிறது.அதற்கு தேவையான வேதியல் பொருட்களை சீனாதான் உற்பத்தி செய்கிறது.
இது 200 மில்லி கிராம் அளவிலான 20 கோடி மாத்திரைகளை தயாரிக்க உதவுகிறது. குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின், மலேரியா, முடக்குவாதம், லூபஸ் உள்ளிட்ட சில நோய்களுக்கான எதிர்ப்பு வைரசாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தயாரிப்பில் இப்கா ஆய்வகங்கள் நிறுவனம் சர்வதேச அளவில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முறைப்படி 14 மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அந்தவகையில் சுகாதாரத்துறை அமைச்சகம் இதை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.தற்போதுள்ள மாத்திரைகளால் ஞுமார்  65லட்சம் பேருக்குத்தான் சிகிச்சை அளிக்க முடியும்.மக்கள் தொகையோ 132 கோடிகள்.
அதனால்தான் தடை.ஆனால் அமெரிக்க டிரம்ப் மிரட்டல் கடிதத்திற்கு அடிபணிந்து ,56 " நொஞ்சுரம் உள்ள மோடி அமெரிக்காவுக்கு மாத்திரைகளை அனுப்பிவிட்டார்.
இனி முழு அளவில் உற்பத்தி செய்தால்தான் இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பு மாத்திரைகள் என்ற நிலை.
இம்மருந்து ஏற்றுமதிக்கு தடைவிதிக்கவும் பற்றாக்றைதானே காரணம்.
அதைத்தான் இந்திய சுகாதாரத்துறை மருத்துவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்தியர்களின் உயிரை விட அமெரிக்கர்கள் நலன்தான் மோடிக்கு முக்கியம்.
அமெரிக்காவுக்கு கொடுக்கவே கூடாதென்பதல்ல.
நம் வீடு தீப்பற்றி எரியும் போது,அடுத்ததெருவில் எரியும் வீட்டை அணைக்க கையிருப்பு நீரை எடுத்துக் கொண்டு ஓடுவது அறிவீனம் என்கிறோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?