நி(க)லவரம்

ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திருப்பி உள்ளனர். இதனால், இந்த ஐந்து மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் என மேற்கு மண்டலத்தில் 4 மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு யாருக்கு தொற்று கண்டறியப்படவில்லை. இதனால், ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக மாறி உள்ளது.வெளி ஊர்களில் இருந்து வருபவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதோடு, சோதனைச் சாவடிகளை கடக்காமல் குறுக்கு வழியில் மாவட்டத்திற்குள் நுழைபவர்களையும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 144 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், கடந்த பத்து நாட்களாக கோவையில் யாருக்கும் புதிய பாதிப்பு கண்டறியப்படவில்லை. தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், வெளியே வரும் மக்கள் முககவசம் அணிவதோடு, தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் வருபவர்களை கண்காணிக்க சோதனை சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், அறிகுறிகளுடன் வருபவர்கள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 114 பேரில், 112 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் மட்டும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர்களும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், கடந்த 9 நாட்களாக திருப்பூரில் புதிய தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை.அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 77 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 15 பேர் குணமடைந்தனர்.

இதைதவிர்த்து, நீலகிரி – 3, தர்மபுரி – 4 பேர், புதுக்கோட்டை- 4 பேர், திருவாரூர் – 4 பேர், சேலம் – 5 பேர்,, கன்னியாகுமரி- 9, தூத்துக்குடி -9 பேர், திருப்பத்தூர் 10 பேர் என இந்த 8 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர்.-

-------------------------------------------)(-------------------------------------------

வெறுங்கையிலே முழம் .

மோடி நேற்று பெரிய அளவிலான மீட்புத் திட்டம்20 லட்சம் கோடிகள் என முழங்கியதற்கும், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட செயல்திட்டத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை; ஏழை - எளிய, நடுத்தர மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ என்ற ஏமாற்றத்தையே தருகிறது. 

“கோவிட்-19” நோய்த் தொற்றினால் கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரத்தை அடியோடு தொலைத்துவிட்டுத் துயரத்தில் மூழ்கியிருக்கும் ஏழை - எளிய மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு - குறு நடுத்தர நிறுவனங்களின் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தரப் பிரிவு மக்கள் ஆகியோர்க்கு, நெருக்கடி மிகுந்த இந்தக் காலக்கட்டத்தில் கூட மனிதநேயத்துடன் உதவிசெய்ய மத்திய பா.ஜ.க. அரசு மனமிரங்கவில்லை என்பது உள்ளபடியே மிகுந்த வேதனையளிக்கிறது.

கொரோனாவிற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, “ரூ.20 லட்சம் கோடி மீட்புத் திட்டம்” என்று, வழக்கம்போல் சில முழக்கங்களையும் இணைத்து முன்வைத்தார். ஆனால், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள “செயல்திட்டம்”, பிரதமர் செய்த அறிவிப்பின்மீது பெருத்த ஏமாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தியிருக்கிறது; இரண்டுக்கும் தொடர்பில்லாமல் நீண்ட இடைவெளி இருக்கிறது.

உணவுக்கும், மருந்துக்கும், தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவும், அப்படித் தப்பித்தவறி திரும்பிச் சென்றவர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், 5000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கிற்கே அனுப்பும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம்கூட இல்லை என்பது, ஏற்கனவே சூழ்ந்துள்ள சங்கடங்களுக்கிடையே சலிப்பை உருவாக்கி இருக்கிறது. ஆக மொத்தத்தில், “ஏழை - எளிய மக்களுக்கு எதுவுமில்லை; நடுத்தர மக்களுக்கு ஒன்றும் இல்லை. அவர்களெல்லாம் கைவிடப்பட்டு விட்டார்களோ”என்ற அளவில்தான் இன்றைய நிதியமைச்சரின் பத்திரிகையாளர் கூட்டம் நிறைவு பெற்றிருக்கிறது.

மாநிலங்கள் வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கிச் சீரழிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மாநிலமும் ஒரு லட்சம் கோடி வரை நிவாரணம் வேண்டும் என்று கோரியுள்ள நிலையில் - மாநில நிதி ஆதாரத்தை வலுப்படுத்த ஏற்ற நிதி ஒதுக்கீடு இல்லை என்பதால் “கூட்டாட்சித் தத்துவத்தின்” கடமையையும் பொறுப்பையும் மத்திய அரசு நிறைவேற்ற இப்போதும்கூட எண்ணிப்பார்க்கவில்லை. 6.30 கோடிக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருந்தும், 45 லட்சம் நிறுவனங்களுக்காக, சில “நிவாரணங்களை” மட்டும் அறிவித்து - மற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ‘அம்போவென்று’ கை கழுவியிருப்பது கவலையளிக்கிறது.

கொரோனா பேரிடரால் ஒவ்வொரு துறையும் கடுமையான தாக்கத்திற்குள்ளாகி - தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டுள்ள இந்த மோசமான தருணத்தில், அந்தத் துறைகளைத் தூக்கி நிறுத்துவதற்கான எந்த முயற்சிகளையும் நிதியமைச்சர் மேற்கொள்ளவில்லை. தொழிலாளர்களும், விவசாயிகளும் இந்த நாட்டின் முதுகெலும்பு என்ற அடிப்படையை மறந்துவிட்டு, மத்திய அரசு செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரின் துயரங்களையும் துடைத்து - சிறுதொழில் முதல் அனைத்துத் துறைகளிலும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கான அர்த்தமுள்ளதொரு நிவாரணத் திட்டத்தை ஏனோ பிரதமரும் அறிவிக்க முன்வரவில்லை; நிதியமைச்சரும் தன் செயல்திட்டத்தில் கூறிடவில்லை.

கொரோனா பேரிடரினால் இழந்த வாழ்வாதாரம், வருமானம், தொழில் முன்னேற்றம், மாநிலங்களின் நிதி நிலைமை என எதையும் மீட்கும் திட்டம் - குறிப்பாக, கொரோனாவை விட்டு வெளியே வரும்போது, இந்தப் பேரிடரால் நலிவடைந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தேவையான அணுகுமுறை, மத்திய பா.ஜ.க அரசிடம் இல்லாமல் - வெறுங்கையால் முழம் போடும் வேலையில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் அனைவரிடமும் வலுப்பட்டுள்ளது.

இது பேரிடர் நேரம்; பேரிடரிலிருந்து பொருளாதாரத்தை மீட்க வேண்டிய காலம். “வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன்; 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன்” என்ற நிறைவேறாத தேர்தல் வாக்குறுதிகள் போல், கொரோனா பேரிடரிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்ய ஆக்கபூர்வமான செயல்திட்டம் எங்கே எங்கே என்று தேடிப் பார்க்கும் நிலைதான் இப்போதும் நீடிக்கிறது!

வேலையிழப்பும் - வருமான இழப்பும் ஒவ்வொரு குடும்பத்திலும் தாண்டவமாடும் இந்த நேரத்தில் மனிதநேயத்திற்கும் - மனிதாபிமானத்திற்கும் மதிப்பளித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் நேரடியாக பணமாக வழங்கிடும் திட்டத்தை முதலில் அறிவித்து, ஆறுதல் தர வேண்டும்.

                                                          - மு.க.ஸ்டாலின்.


----------------------------------(0)----------------------------------

ஊறுகாய் வாங்கக் கூட உதவாத உதவி.

மோடி தொலைக்காட்சி வழியாக 5வது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது, கொரானா நெருக்கடி காலத்தைச் சமாளித்து, முன்னேற மத்திய அரசு ரூபாய் 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என ஆரவாரமாக முழங்கினார்.

முழுமையான விபரங்களை இன்று (13.05.2020) நிதியமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

நிதியமைச்சர் ஊக்குவிப்பு திட்டத்தை நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்தது. மாலை 4 மணிக்கு நிதியமைச்சரும், இணை நிதி அமைச்சரும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்கத் தொடங்கினர்.

இந்திய அரசின் ரூபாய் 200 கோடி மதிப்பு வரையான பணிகளின் ஒப்பந்த ஏலத்தில் சர்வதேச ஒப்பந்ததார்கள் அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்து, உள் நாட்டு ஒப்பந்ததாரர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடிவு எடுத்துள்ளது. சிறு குறு தொழில்கள் முதலீட்டு வரம்புகளை திருத்தி உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இருந்த முதலீட்டு வரம்பில் இருக்கும் சிறு குறு நிறுவனங்கள், அவைகளை விட அதிக முதலீட்டு நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள வேண்டும்.

மின்சார நிறுவனங்களுக்கு ரூபாய் 90.000 கோடியும், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் வழங்க ரூபாய் 30ஆயிரம் கோடியும், வாராக் கடன்கள் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு புதிய கடன் வழங்க ரூபாய் 50 ஆயிரம் கோடி, பொது முடக்க காலத்தில் நஷ்டம் அடைந்த நிறுவனங்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி, சிறு குறு தொழில்களுக்கு பிணையில்லா கடன் ரூபாய் 3 லட்சம் கோடி வழங்கப்படும், பிபிபி திட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கு மேலும் 6 மாத கால அவகாசம் தருவது, வரி செலுத்த கால அவகாசம், வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான பி.எப். தொகையை 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்து அரசு செலுத்தும் இதற்காக ரூபாய் 6 ஆயிரத்து 500 கோடி செலவாகும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.


பிரதமரின் அறிவிப்பு ஏற்படுத்திய நம்பிக்கையை நிதியமைச்சர்கள்அறிவிப்பு தகர்த்துவிட்டது. “கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது” போல் வங்கி உத்தரவாத நீடிப்பது, கடன் வழங்குவது என்ற அறிவிப்புகள் மட்டுமே இருக்கின்றன. இவைகள் நடைமுறையில் பெரும் பயனளிக்காது என்பதே கடந்த கால அனுபவமாகும்.

இந்த அறிவிப்பில் இரண்டு மாதங்களாக வேலை இழந்து, வருமானம் இல்லாமல் துயர நிலையில் வாழ்ந்து வரும் தொழிலாளர்கள், ஊர் திரும்ப வேண்டும் என 50 நாட்களுக்கு மேலாக நெடுஞ்சாலைகளில், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில், கதறி அழுது வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள், ஜவுளித்துறையில் கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, ஆயத்த ஆடை தொழில்கள் போன்ற பெரும் பகுதியின் உணர்வுகளை நிதியமைச்சர் பிரதிபலிக்கவில்லை.

‘கன்னித் தீவு‘ கதை போல் அறிவிப்புகள் தொடரும் என்ற மற்றொரு அறிவிப்பு தவிர நிதியமைச்சர் வேறு எதுவும் இல்லை. நிதியமைச்சர் ஊக்குவிப்பு ஊறுகாய் அளவுக்கும் உதவாத ஏமாற்றம், பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

                                                            - முத்தரசன்.

                                                                   (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

---------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?