முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கே போகும் இந்தப் பாதை

அகண்ட நெடுஞ்சாலை. நிழல் படாத சாலைகள். உடலில் உள்ள நீரை உறிஞ்சியெடுக்கும் கோடை வெயில். உணவில்லை, குடிநீர் இல்லை, வாகன வசதி இல்லை ஆனால எதுவுமே அவர்களை தடுக்கவில்லை. சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில், இப்படி ஒரு கொடுமையான சூழலில் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி நெடும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் சென்னையில் தங்கி பணியாற்றி வந்த வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்த் தொழிலாளர்கள்.

பீகார், ஒரிசா, ஜார்கண்ட, சட்டிஸ்கர், அசாம், மேற்கு வங்கம் என அவர்கள் செல்ல வேண்டிய தூரம் 2000 கிலோ மீட்டர்களுக்கும் மேல். இவ்வளவு தூரத்தையும் நடை பயணம் மூலமும், மிதிவண்டிகள் மூலம் கடக்க இவர்கள் துணிந்து நடந்து வருகின்றனர்.

சென்னையை நம்பி வந்த இப்புலம்பெயர் தொழிலாளர்களின் கொடும்பயணத்தை நாம் பதிவு செய்யச் சென்றிருந்தோம். அங்கு நாங்கள் கண்டதை இங்கே பதிவு செய்கிறோம்.

எப்படி இருக்கிறது NH16:

சென்னை அண்ணாநகர் பேருந்து டிப்போ தொடங்கி, கொல்கத்தா நெடுஞ்சாலை முழுவதும், வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தலையிலும், முதுகிலும் குறைந்தது 10 கிலோ எடை கொண்ட உடமைகளை சுமந்து கொண்டு குழுக்களாக நடந்து செல்வதை நம்மால் பார்க்க முடிந்தது. இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொரு குழுக்களும் வெவ்வேறு வயதினருடையதாக இருந்தது.

சிலர் தாங்கள் பாடுபட்ட மிச்சம் பிடித்த பணத்தில் புதிய மிதிவண்டிகளை வாங்கியும், சில தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் வாங்கிக் கொடுத்த மிதிவண்டிகளில் மூட்டை முடுச்சுகளைக் கட்டிக் கொண்டும், நெடுஞ்சாலைப் பாலங்கள மூச்சிரைக்க சிரமம் கொண்டு கடக்கின்றனர்.

பெரும்பாலும் இவர்களது பயணம் பிற்பகலைத் தாண்டி தான் தொடங்குகிறது. வழியில் இத்தொழிலாளர்களுக்கு, உணவு, நீர், திண்பண்டங்கள், மாஸ்க் என தங்களால் முடிந்த உதவிகளை சில தன்னார்வலர்கள் கொடுத்து உதவுகின்றனர். இது போன்ற தன்னார்வலர்கள் உதவினால் மட்டுமே உணவுக்கு வழி. அது வரை அடுத்த வேளை உணவு எப்போது கிடைக்கும் என்பது உறுதியில்லை.

போரூர், பள்ளிக்கரணை, ஶ்ரீ பெரும்புதூர், ஓ.எம்.ஆர் என சென்னையைச் சுற்றி பல பகுதிகளில் இருந்து இரண்டு நாட்களாக நடந்து வரும் இவர்கள் அனைவரும், கும்மிடிப்பூண்டி அருகே, புதுவாயல் என்ற இடத்தில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தற்காலிக முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டனர். அந்த முகாமும் கூட, சமூக ஆர்வலர்களின் முயற்சியின் பேரிலேயே உருவாக்கப்பட்டது. கிட்டத்த 3000 வட மாநிலத் தொழிலாளர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பல தன்னார்வ குழுக்கள் மூலம் உணவு வழங்கப்பட்டது. தன்னார்வலர்களாலும் ஒரு அளவுக்கு மேல் உணவு உதவி வழங்க முடியாது சூழல் நிலவியது. தமிழக அரசிடம் இருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை.

அதே நேரம் தொழிலாளர்கள் தொடர்ந்து வந்தபடி இருந்தனர். செவி வாயிலாக கிடைத்த தகவல் மூலம், சாரை சாரையாக தமிழக எல்லை நோக்கி வரத் தொடங்கினர் என்பது அவர்களிடம் பேசியதில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. இன்னும் சிலர் அந்த தனியார் கல்லூரியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் நம்பினர். அதன் காரணமாகவும், ஏராளமானோர் அங்கு குவியத் தொடங்கினர். ஆனால் அவர்கள் நாள் முழுவது மேற்கொண்ட நடைபயணம் வீண் என்பது அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

களைத்து தோய்ந்த அவர்களுக்கு அந்த தனியார் கல்லூரி ஆஸ்வாசப்படுத்திக் கொள்ள உதவியாக இருந்தது. ஆனால், இரண்டாம் நாள் அதுவும் இல்லாமல் போனது. கல்லூரிகள் செப்டம்பர் மாதமே திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த குறிப்பிட்ட தனியார் கல்லூரி, "நாங்கள் கல்லூரியை திறக்கப் போகிறோம்" என்று கூறி இடத்தை காலி செய்யச் சொன்னதாக போலிஸார் தெரிவித்தனர். அங்கிருந்து, தொழிலாளர்களை அருகில் உள்ள மற்றொரு பள்ளிக்கு பேருந்து மூலம் போலிஸார் அழைத்துச் சென்றனர். பேருந்தில் ஏற்றியவுடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு தான் செல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு ஆரவாரம் செய்தபடி சென்றனர்.

முகாமில் இடமில்லாமல், ஏதாவது உதவி வரும் என்று எதிர்பார்த்து, சாலையோரமாக காத்திருந்த சிலரிடம் பேசினோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் பணியாற்றும் சிலருக்கு தமிழ் பேசத் தெரிந்திருந்தது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நந்தி கிஷோர் ராமிடம் பேசினோம். " எனக்கு ஊர்ல அம்மா, அப்பா, மனைவி, ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. இங்க நான் 5 வருசமா வேலை பாத்துட்டு இருக்கேன். இங்க இருக்க கான்டிராக்டர் என்ன வேலைக்கு கூப்டாரு. பில்டிங் வேலை தான். ஒரு நாளுக்கு 580 ரூ சம்பளம் கொடுப்பாங்க. அது என் செலவுக்கே சரியா போகுது. ஊருக்கு பணம் அனுப்புறதே இல்ல. என் சாப்பாட்டுக்கு மட்டும் தான் வேலை பாத்துட்டு இருந்தேன். ஊர்ல விவசாயக் கூலி வேலை செஞ்சு வாழ்க்கைய ஓட்டுறாங்க. இந்த ரெண்டு மாசமா வேலையே இல்லை. 5 நாள் மட்டும் தான் வேலை கொடுத்தாங்க. அந்த காச வச்சு இத்தன நாள் சாப்டேன். இப்போ வேற வழியில்லாம ஊருக்கு கிளம்பிட்டேன். புதுப்பேட்டையில் இருந்து நடந்தே வரேன். இங்க காலை 12 மணிக்கு வந்தேன். மணி இப்போ 5 ஆச்சு இப்போ வரைக்கு சப்பாடு கிடைக்கல. போலிசு, கவர்மென்டும் எதுவும் சொல்லல. வெயில்லயே தான் நிக்குறோம். நாங்க ஊருக்கு போக வழி பண்ணனும். இல்லன்னா சண்ட போடுறது தான் வழி." என்றார் விரக்தியுடன்.

வடமாநிலத் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதற்கு நந்திக் கிஷோர் ராம் ஒரு சாட்சி. குறைந்த கூலி கொடுத்தால் போதும் மாடு போல வேலை பார்ப்பார்கள் என்பதே வட மாநிலத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதற்கு சொல்லப்படும் காரணம். அந்த குறைந்த கூலியே அவர்களுக்கு பெரிது என்று, ஏதோ நாம் அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தது போல பெருமிதம் கொள்வோரும் உண்டு. ஆனால், தினமும் கிடைக்கும் 500 ரூபாயை வைத்து இந்த சென்னை மாநகரில் தங்கள் செலவை பார்த்துக் கொள்வதே கடினம் என்ற நிலையில், இவர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவே இல்லை என்பதே உண்மை. இவர்களின் குடும்ப பிள்ளைகளுக்கு கல்வி, மூன்று வேளை உணவு, சுகாதாரம் என்பது இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடும் உழைப்பைக் கொட்டியும் வாய்க்கும் வயிற்றுக்கும் என்றே இவர்களின் வாழ்க்கை நிலை நகர்கிறது.

ஜன்தன் யோஜ்னா வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்கில் 500 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டதாக கூறுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்கிறார்கள் பாட்னாவுக்கு நடந்து செல்ல காத்திருந்த இளைஞர்கள் சிலர். " எங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கு. பேங்க் அக்கவுண்ட் இருக்கு. ஆனால், அதுல எந்த பணமும் வரல. ரெட்ஹில்ஸ் பகக்த்துல கவரப்பேட்டையில தங்கி பில்டிங் வேலை பாத்துட்டு இருந்தோம். 2 மாசமா வேலை இல்ல. பில்டிங் ஓனர் எதுவும் உதவல. ஊராட்சி தலைவர் அரிசி , காய்கறி கொடுத்தார். அத வச்ச தினமும் ஒருவேளை சாப்டுட்டு இருந்தோம். இனிமேலும் இங்க இருக்க முடியாது. அதான் ஊருக்கு நடந்தே கிளம்பிட்டோம்." என்கின்றனர்.

சரி ஊருக்கு போனால், அங்கும் அவர்களுக்கு பணி இருக்காதே, அப்படி கஷ்ட்டப்பட்டு ஏன் போக வேண்டும் என்ற கேள்விக்கு " பரவாயில்ல. அங்க போய் இருக்குறத வச்சு சாப்டு பொழச்சுக்குவோம். ஊருக்கு போனா போதும்." என்று பதில் அளித்தனர்.

நினைத்துப் பார்க்க முடியாத தூரம், வெயிலில் உணவில்லாமல் நடந்து இவர்கள் விருந்துக்குச் செல்லவில்லை. இங்கிருந்ததை விட அங்கு மோசமான நிலையே. கையில் பணமும் இல்லை. அப்படி இருந்தும் இவர்கள் ஊர் செல்ல முயற்சிப்பது ஏன்?. "செத்தாலும் எங்க ஊருக்கு போய் சாகுறோம்." என்பதாகவே பதிலாக இருந்தது.

2 மாதங்கள் வேலை இல்லை, உணவில்லை, பணமில்லை, வாடகை கொடுக்காததால் சாலைக்கு வரவேண்டிய சூழல், தங்களை கண்டு கொள்ளாத அரசாங்கம், கேட்ட போதெல்லாம் உழைத்துக் கொட்டிய இவர்களை கைவிட்ட முதலாளிகள், கொரோனா நோய் அச்சம், இதற்கு மேல் நிலைமை எப்படி இருக்குமோ என்ற கவலை, தனித்து ஒதுக்கப்பட்ட வேதனை, அயல் மண்ணில் உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை என இவை எல்லாம் சேர்ந்தே அவர்களை இந்த கொடும்பயணத்துக்கு கட்டாயப்படுத்தியுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கொரோனா ஊரடங்கு அறிவித்தவுடன் சென்னையில் இருந்து அரசு இ-பாஸ் மூலம் பலர் குறிப்பாக சென்னையில் தங்கி பணிபுரியும் இளைஞர்கள் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். நோய் பரவும் அபாயத்தை பார்த்த குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை பார்க்கத் துடித்தன. அது போன்ற குடும்பங்கள் இந்த புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கும் உண்டு. அதே பதற்றம் இந்த குடும்பங்களுக்கும் உண்டு. நாம் எதற்கு ஊருக்குச் சென்றோமோ அவர்கள் ஊருக்குச் செல்லவும் அதுவே காரணம்.

ஆனால் தமிழக அரசின் எண்ணமோ வேறாக இருக்கிறது. ஊரடங்கு தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நேரத்தில் இத்தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் சென்றால், இங்கு யார் வேலை செய்வது என்று சிந்திக்கிறது. அதனால் இந்த தொழிலாளர்களை எல்லையில் தடுத்து நிறுத்துகிறது. இவ்வளவு தூரம் அவர்கள் மேற்கொண்ட நடைபயணம் வீணாக முடிகிறது. அவர்களின் இருப்பிடத்தில் அல்லது இருக்கும் பகுதிகளில் போதிய தங்கும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் அவர்கள் ஏன் நடக்கப் போகிறார்கள்.

கும்முடிப்பூண்டி கடந்து எழாவூர் அருகே முடியும் தமிழக எல்லையிலும், காவல் துறை இத்தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி முகாம்களுக்கு அனுப்புகிறது. இல்லையேல் அங்கேயே அமரவைக்கின்றனர். போலிஸிடம் இருந்து தப்பிக்க, நெடுஞ்சாலையில் இருந்து விலகி, பொட்டல் காடுகள் வழியாக, ஆற்றைக் கடந்து, மீண்டும் காட்டில் நடந்து ஆந்திர எல்லைக்குள் சென்று மீண்டும் சாலைப் பகுதிக்கு வருகின்றனர்.

கழுத்தளவு தண்ணீரில் மிதிவண்டிகளையும், மூட்டை முடிச்சுகளையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணம் நம்மை பதற வைக்கிறது. தமிழக எல்லையைக் கடந்தால் தொல்லை முடிந்துவிட்டது என நினைக்க வேண்டாம். ஆந்திர போலிஸ் இவர்கள் மீது தடியடி நடத்தி சைக்கிள்களை பிடுங்கி வைத்துக் கொள்வதாகவும் தகவல் வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, சட்டிஸ்கர், ஒரிசா, பீஹார்,மேற்கு வங்கம் வரை இவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

மறுபுறம், ஷர்மிக் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏறக்குறைய 55000 தொழிலாளர்கள் சென்னையில் காத்திருக்கின்றனர். ஆனால் இவர்களுக்காக இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. சிறப்பு ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்கிறது தமிழக அரசு. எப்படியோ உதவிகளைப் பெற்று, அதையும் செய்திருக்கின்றனர். படிவம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என அரசிடம் இருந்து வந்த மெசேஜ்ஜை, ரயில் டிக்கெட் என நினைத்துக் கொண்டு பலர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வாசலில் குவிந்து இருப்பதையும் பார்க்க முடிந்தது.

ஆயிரக்கணக்கான புலம்பெயர்த் தொழிலாளர்களை நாங்கள் சந்திக்க நேரிட்டது. அதில் உன்னிப்பாக ஒரு விஷயம் கவனிக்க வேண்டியிருந்தது. அதில் ஒருவர் கூட எங்களுக்கு உணவு வேண்டும் என்றோ, பணம் வேண்டும் என்றோ கேட்டு, தங்கள் தன்மானத்தை இழக்கவில்லை. எங்களுக்கு ஊருக்கு போக வேண்டும். அதற்கு வழி செய்து கொடுங்கள், இல்லையேல் வழியை விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதே அவர்களின் திடமான குரலாக இருந்தது.

அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் திரும்பினோம். வீடு வந்ததும் ஒரு செய்திச் சேனலின், ஸ்கராலில் " சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்த் தொழிலாளி, சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில், பசியால் சுருண்டு விழுந்து மரணம்." என்ற செய்தி சட்டெனக் கடந்தது.

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் பகுதி பழன்வாவைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் சாஹிர் அன்சாரி. இவர் தங்கள் மாவட்டத்தை சேர்ந்த 7 நண்பர்களுடன் தில்லியில் பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடிவெடுத்த இவர்கள், சைக்கிளில் மே 5-ஆம் தேதி பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

“கார் மோதி சைக்கிளில் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர் பலி” : மோடி அரசால் தொடரும் அவலம் - அதிர்ச்சி தகவல்!

சுமார் 1,000 கி.மீ தூரத்தை சைக்கிள் மூலமாகவே அனைவரும் கடக்க முடிவெடுத்தனர். லக்னோ வரை பாதி தூரத்தை கடக்கவே அவர்களுக்கு 5 நாட்கள் ஆகியுள்ளது. மே 10-ஆம் தேதி காலை 10 மணியளவில் உணவு உண்பதற்காக சாலையின் தடுப்பில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் அன்சாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது, மற்றவர்கள் அருகில் இருந்த மரத்தில் தூக்கி எறியப்பட்டதால் ஓரளவு காயத்துடன் தப்பினர்.

காரில் இருந்து இறங்கிய ஓட்டுநர், இழப்பீடு பணம் கொடுப்பதாக கூறி பின்னர் மறுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அன்சாரியை, நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

மோதிய கார் லக்னோவை சேர்ந்த பதிவு எண்ணை கொண்டதாகவும், அடையாளம் தெரியாத டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த அன்சாரிக்கு, மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். இறந்த சாஹிர் அன்சாரியின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ரூ. 14 ஆயிரம் ரூபாய் கேட்பதாக அவரது நண்பர் அன்சாரி கூறினார்.

சாப்பிடவே காசில்லாமல்  ஆங்காங்கே சில நல்லவர்கள் தரும் உணவை சாப்பிட்டு நடக்கும் நாங்கள் அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது? எனத்தெரியவில்லை.


------------------------------------------------------------------------- 

மோடி வசூல்  மர்மம்.

சோனியா மீது வழக்கு.

கொரோனா நிவாரண நிதியைப் பெறுவதற்காக PM Cares எனும் நிதி அளிக்கும் திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி. PM Cares எனப்படும் சேரிட்டபிள் ட்ரஸ்ட் அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல என்றும் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெறலாம் என்றும் சர்ச்சை கிளம்பியது.

PM Cares மூலம் பெறப்படும் நிதி குறித்த கணக்கை இவர்கள் யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட். இது தனியார் நிதி என்பதால் RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது.

இந்த நிதி மத்திய தணிக்கை குழு (CAG)யின் வரம்புக்கு வெளியே இருப்பதால் அரசின் எந்த தணிக்கையாளர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தைக் கேள்வி கேட்கவே முடியாது எனத் தகவல் வெளியானதால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி ட்விட்டர் பக்கத்தில், “பிஎம் கேர்ஸ் நிதியில் முரண்பாடுகள் இருக்கின்றன. வெளிப்படைத்தன்மை இல்லை. ரகசியம் எப்போதும் கெட்ட விஷயங்களுக்கான வழி.” எனப் பதிவிட்டது.

இந்நிலையில், பிரதமரின் PM Cares நிதி தொடர்பாக மக்களிடம் தவறான கருத்துகளை, காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பக்கங்கள் செய்தி பரப்பியதாக குற்றச்சாட்டின் பெயரில் கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

PM Cares நிதி குறித்து கேள்வி எழுப்பியதற்காக காங். தலைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு - பா.ஜ.க அராஜகம்!

வழக்கறிஞர் பிரவீன் என்பவர் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பொதுமக்களை குழப்பி இந்த பேரிடர் காலத்தில் அரசுக்கு எதிராக சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த தகவல் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்த புகாரின் பேரில், சோனியா காந்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது கர்நாடக காவல்துறை. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை, சோனியா காந்தி பராமரிப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் அரசை விமர்சித்ததால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. PM Cares குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. இந்த வழக்கின் முடிவிலாவது மோடி வசூல் விபர மர்மம் வெளியாகுமா?


----------------------------------------------------

தினக்கூலிகளான

தனியார் பள்ளி ஆசிரியர்கள்,ஐ.டி ஊழியர்கள்,

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால், மக்கள் நேரடி பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தை கணிசமாக குறைத்துவிட்டன. பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தெலங்கானா மாநிலம் யாத்ரி புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி - பத்மா தம்பதி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்படாததால் அவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் தங்கள் குழந்தைகளையும், பெற்றோரையும் காப்பாற்றுவதற்காக அவர்கள் இருவரும் அங்குள்ள கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாயக் கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாய்க கூலி வேலை செய்யும் ஆசிரியர் சிரஞ்சீவி கூறும்போது, “சம்பளம் கிடைக்காததால் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சிரமமாக இருந்தது. குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதற்காகவே விவசாயக் கூலிகளாக பணிபுரிகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இவர்களைப்போன்று ஏராளமான ஆசிரியர்களும், ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்த ஐ.டி. ஊழியர்களும் ஊதியமிழந்து, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கின்றனர்.

கடந்த 8 ஆண்டுகளாக ஆசிரியராக பணிசெய்து வந்த ஜெயராம் என்பவர் 300 ரூபாய் தினக் கூலிக்கு பெயிண்டர் வேலை செய்து வருகிறார். கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் மணி என்பவர் ஏரி தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

-------------------------------------- 

திடீரென உங்களுக்கு எரிச்சல், குழப்பம், கோபம் ஏற்படுகிறது என்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

* 7-9 மணி நேரம் தூக்கம் அவசியம் என மருத்துவ உலகம் அறிவுறுத்துகின்றது. தேவையான அளவு தூக்கம் கிடைக்காத பொழுது மேல் கூறிய பாதிப்புகள் எளிதில் ஏற்படும்.

* மறதி அதிகம் ஏற்படும்பொழுது அதிக எரிச்சல் ஏற்படும்.

* ஏதாவது வலி&மூட்டுவலி, முதுகு வலி என தொடர்ந்து இருக்கும்போது சிறு விஷயங்களும் ஒருவரை கோபப்படுத்தும்.

* மன உளைச்சல் உடையவர்கள் எப்போதும் குழப்பத்துடனே இருப்பர்.

* அதிக காபி, டீ, படபடப்பு & எரிச்சலை உண்டாக்கும்.

* நோய் பாதிப்பு, மாத விலக்கிற்கு ஓரிரு நாள் முன்னர் போன்றவைகள் ஒருவருக்கு எரிச்சலை உண்டாக்கும்.

* மாதவிலக்கு நிற்கும் காலத்தில் பெண்கள் ஒருவித படபடப்பு, எரிச்சல், கோபத்துடன் இருக்கும் வாய்ப்புகள் உண்டு.

* ‘டயட்டிங்’ என்ற பெயரில் முறையற்ற வகையில் பட்டினி கிடப்பது எரிச்சல், குழப்பத்தை ஏற்படுத்தும்.

* தைராய்டு சுரப்பி குறைபாடு, தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரந்தாலும் படபடப்பு, வியர்த்தல், எரிச்சல் ஆகியவை இருக்கும்.

குறைபாட்டினை மருத்துவர் மூலம் சரி செய்து கொள்வது அவசியம்.

துளசி, கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், பூண்டு, புதினா இவற்றினை சமையலறை பக்கம் வைத்து தேவைக்கு ஏற்ப சிறிது சிறிதாக பயன்படுத்திக் கொள்வது நலம் பயக்கும்.

------------------------------------------------




176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் !

பத்திரிக்கைகள் உருக்கமாக எழுதும் விழுமியங்கள், கருணைகள், அன்பு இவற்றிற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஒரேயொரு அர்த்தத்தைத் தவிர. அதுதான் லாபம்.

அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள் !

1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி 4 மணிக்கு நான் சங்க அலுவலகத்திலிருந்த போது நான் உட்பட 5 பேரின் வேலைநீக்க உத்தரவு தரப்பட்டது. ஆனால், நாங்கள் வேலைநீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே இருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைக்காக அந்த வேலைநீக்கம் நடைபெற்றது. அன்றைய தினம் எங்களுக்கு அது ஒன்றும் பேரதிர்ச்சியாக இல்லை.

ஏனென்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஏறக்குறைய 90 சதவிகிதமான தொழிலாளிகளும் அவர்களது குடுத்தினர்களும் அதை தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதாலாகவே உணர்ந்தார்கள். மீதமுள்ள 10 சதவிகிதம் பேரும் இந்தப் பெருவாரியான கருத்துக்களுக்கு முன்பு தங்களது கருத்தை வெளியில் சொல்லவில்லை. அந்த 10 சதவிகிதம் பேரில் பெருவாரியானவர்கள் சங்பரிவாரின் ஆதரவாளர்கள்.

நாங்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட அன்று மாலை வாயிற்கூட்டத்தில் நான் பேசினேன். பைபிளில் உள்ள ஒரு வாசகத்தை அப்போது நான் அவர்களிடம் சொன்னேன். உத்தேசகமாக அந்த வார்த்தை இயேசு சிலுவையேற்றி அழைத்துச் செல்லப்பட்ட போது அவருக்காக அழுத மக்களைப் பார்த்து அவர் எனக்காக அழாதீர்கள், உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளுக்காகவும், உங்கள் சந்ததியினருக்காகவும் அழுங்கள் என்று பேசியதாக என் நினைவில் இருந்ததைச் சொன்னேன்.

எல்லோர் தலையும் கவிழ்ந்திருந்தது. பலர் கண்ணீர் வடித்தார்கள். அப்போது எங்களில் யாருக்கும் 35 வயதைத் தாண்டவில்லை. எனக்கு வயது 32. எங்களில் இளையவருக்கு 29 வயது இருக்கும். திருமணமாகி 6 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால், நாங்கள் எல்லோரும் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தோம். எங்களை வருடுகிற பார்வைகள், தங்களை விடவும் எங்களை நேசித்ததை நாங்கள் அறிவோம்.

நாங்கள் பணிபுரிந்த நிறுவனத்தையும் அதேசமயம் நாங்கள்தான் வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் என்று தெரியாமலும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘உங்க கம்பெனில கொஞ்ச பேர டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களாமே, அவர்களை கொஞ்சம் நல்லா பாத்துகோங்கப்பா’ என்று சொன்னபோது உலகமே எங்களுக்கு ஆதரவாக நிற்பது போன்ற உணர்வை நாங்கள் பெற்றோம். இதையெல்லாம் சொல்வதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. இன்று அதுபோல ஒரு நிலை இருக்கிறதா?

இன்று ஊடகங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பு இவையெல்லாம் தூக்கத்தைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறது. சம்மந்தப்பட்டவர்களின் குடும்பங்கள் என்ன மாதிரியான மனஉளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளாவார்கள் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

எங்கள் விசயத்தில் ஒரு போராட்டம். ஒரு நீண்ட நெடிய விசாரணை. அதன்பிறகு விளக்கம் கேட்பு. அதன் பின்பு வேலைநீக்கம் என்றிருந்தது. ஆனால், நேற்றைய தினம் ஆனந்த விகடன் குழுமத்திலுள்ள தொழிலாளிகளை திடீரென அழைத்து நாளை முதல் உங்களில் 176 பேரை வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

சுமார் 600 பேர் வேலை செய்கிற அந்த நிறுவனத்தில் இந்த முடிவுகளை எடுத்த சில பேரைத் தவிர, கடந்த 24 மணி நேரமாக ஒவ்வொரு குடும்பத்திலும் அது தங்கள் பெற்றோராக, தங்கள் பிள்ளையாக, தனது கணவராக அல்லது தனக்கு மருகமளாகவோ, மருமகனாகவோ இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருப்பார்கள்.

இது எத்தனை பெரிய கொடூரம். 176 பேர் என்று நிச்சயிக்கப்பட்ட பிறகு, வேறு யாருக்காகவாவது வந்துவிட வேண்டும் என்று மனிதத்தைச் சிதைக்கிற ஒரு சிந்தனைக்கு தூண்டும் இந்த முடிவை எவ்வித தயக்கமுமின்றி அந்த நிர்வாகம் எடுத்திருக்கிறது.

மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இவர்கள். கடந்த மாதமோ அதற்கு முன்பாகவோ இந்த நிறுவனம் தொழிலாளிகளை அழைத்து உங்களில் யாரையும் வீட்டிற்கு அனுப்பப் போவதில்லை. அதன் காரணமாகவே 30 சதவிகிதம் வரை சம்பளத்தை வெட்டுகிறோம் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். இப்போது மூன்றில் ஒரு பகுதியை வெளியேற்றப் போகிறார்கள். இது திடீரென இறங்கிய இடி. யாரும் எதிர்பாராத ஒரு பெரும் திடீர் தாக்குதல்.

விகடன் சைத்தான்தங்களின் எந்த நேரடிக் காரணத்திற்காகவும் அவர்கள் வேலையை விட்டு அனுப்பப்படவில்லை. லாபம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வேலையை விட்டு அனுப்பப்படுகிறார்கள்.

பத்திரிக்கைகள் உருக்கமாக எழுதும் விழுமியங்கள், கருணைகள், அன்பு இவற்றிற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஒரேயொரு அர்த்தத்தைத் தவிர. அதுதான் லாபம். அந்த லாபத்திற்கு முன்பாக அனைத்து மனித மாண்புகளும் விழுமியங்களும் அடித்து நொறுக்கப்படும். சிதைத்து அழிக்கப்படும்.

அந்த நிறுவனத்தின் தலைவர் சொன்னதாக சமீபத்தில் ஒரு கருத்தை பார்க்க நேர்ந்தது. “உங்கள் தொழிலாளிகளை வைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை எனில் அவர்கள் எத்தனை நல்லவர்களாக இருந்தாலும் அவர்களைக் குறைப்பதற்கு இரண்டு முறை கூட யோசிக்காதீர்கள்”. இதன் பொருள் உங்கள் லாபத்திற்கு பாதிப்பு வருமெனில் அவர் எத்தனை திறமையானவராக இருந்தாலும் சரி, எத்தனை நல்லவராக இருந்தாலும் அவரை வெளியே துரத்திவிடுங்கள், தாமதிக்காதீர்கள், இன்னொரு முறை கூட யோசிக்காதீர்கள் என்பதுதான்.

மனிதர்கள் முக்கிமல்ல, லாபம் மட்டும்தான் முக்கியம் என்பதுதான். ஒப்பீட்டளவில் நிரந்தரமான வேலை ஆனந்த விகடனில் பணிபுரிவது என்று ஊடகவியலாளர்களால் நம்பப்பட்டது. ஆனால், அந்த நிறுவனமே இப்படி செய்கிறது. மற்ற நிறுவனங்கள் இதையெல்லாம் செய்யாது என்று நம்புவதற்கு எந்தவிதமான தர்க்கமும் இடமளிக்கவில்லை.

இந்தப் பின்னணியில் இப்போதுள்ள நிலையில் இதிலுள்ள பலராலும் மாற்று வேலை தேடுவது சாத்தியமா என்ற கேள்விக்கு நம்பிக்கையோடு ஒரு பதிலை சொல்ல முடியவில்லை.

மத்திய பாஜக அரசு ஏதோ தொழிலாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போன்று கொரோனா காலத்தில் யாரையும் வேலைநீக்கம் செய்யக் கூடாது, சம்பளப் பிடித்தம் செய்யக் கூடாது என்று உபதேசித்துவிட்டு தன் பணி முடிந்ததாக ஒதுங்கிக் கொண்டது.

உலகின் பல முதலாளித்துவ நாடுகள் 60% முதல் 100% வரை தொழிலாளர்களின் சம்பளத்தை, இன்னும் சொல்லப்போனால் தொழிலாளர்களுக்கு ஆகிற செலவைக் கூட ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவில் தொழிற்சங்க இயக்கமும், ஊடகவியலாளருக்கான அமைப்புகளும் பெருமளவிற்கு போராட்ட குணங்களை அதற்கு தேவையான அளவில் கொண்டிருக்காத நிலையில் மிக இயல்பாக கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

இதை அனுமதிப்பது சரியல்ல, நியாயமல்ல. அவர்கள் எல்லாம் யார் வீட்டுப் பிள்ளைகளோதான். ஆனால், அவர்கள் தாக்கப்படும்போது, நிராதரவாக விடப்பட்டால், நாளை நமது பிள்ளைகளுக்கு ஏற்படும்போது கேட்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்.இவையெல்லாவற்றையும்விட இந்த வேலைநீக்கங்கள் சட்ட விரோதம்.

வாசகர்களும் விளம்பரதாரர்களும் குறைந்தபட்சம் அவர்களின் செயலியிலாவது தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.

இதற்கெதிராக அனைவரும் சாத்தியமான அனைத்து வகைகளிலும் வழிகளிலும் குரல் எழுப்ப வேண்டும்…

கே.கனகராஜ், 

மாநிலச் செயற்குழு உறுப்பினர். CPIM

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?