யாருக்கு நன்மை.

தவணையை தவிர்ப்பதால் அரசுக்கு லாபமே ஒழிய மக்களுக்கு அதிக வட்டி,பணம் கட்ட வேண்டிய பாதிப்புதான்
கொரோனா வந்த பிறகு ரிசர்வ் வங்கி கடன்களில் EMI கட்டுபவர்களுக்கு ஒரு கரிசனம் காட்டியது. அதாவது மூன்று மாதங்கள் EMI கட்டுவதை தவிர்க்கலாம்.

தற்போதும் நிலைமையில் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டி உள்ளது.



நேற்றைய RBI கூட்டத்தில் கவர்னர் அறிவித்துள்ளார்.

முன்பை விட நிறைய நண்பர்கள் பயன்படுத்துவார்கள் என்று இனி எதிர்பார்க்கப்படுகிறது.

அரசானது கொரோனா காலத்தில் நிறுவனங்கள் கட்டாயம் ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற அரசாணையை திரும்ப பெற்று விட்டது. அதனால் வரும் மாதங்களில் நிறுவனங்கள் நெருக்கடி இல்லாமலே ஆட்குறைப்பு செய்யவும் வாய்ப்பு உள்ளது.

அந்த சூழ்நிலையில் நண்பர்கள் இந்த  EMI தவிர்ப்பு லாபமா? என்பதை தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது.


முதலில் EMI தவிர்க்கப்படுகிறது என்றால் கால தாமதமாக்கப்படுகிறது  என்று அர்த்தம் கொள்ளவும். இதில் தள்ளுபடி என்ற எதுவும் கிடையாது. அதாவது ஆறு மாதங்கள் EMI கட்டாமல் இருந்தால் அதனை பிறகு ஆறு மாதங்கள் கழித்து கட்ட வேண்டும். அல்லது EMI தொகையை மாதந்தோறும் அதிகமாக கட்டி இதனை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

இதில் மேலதிகமாக வட்டி தொகையும் தள்ளுபடி செய்யப்படவில்லை. அதனால் கடன் தொகையில் எவ்வளவு தொகை நிலுவையில் இருக்கிறதோ அதற்குடைய வட்டியும் உங்கள் அசல் தொகையில் சேர்த்து கொள்ளப்பட்டு வரும்.

அதனால் ஆறு மாதங்கள் தவிர்த்தால் மேலும் ஆறு மாதங்களுக்கு தான் அதிகமாக கட்ட வேண்டும் என்றில்லை. அது 9 அல்லது 12 மாதங்களாக கூட இருக்கலாம். அது உங்கள் நிலுவையில் இருக்கும் கடன் தொகையை பொறுத்தே உள்ளது.
சில உதாரணங்களை எடுத்துக் கொள்வோம்.

உதாரணத்திற்கு 30 லட்ச தொகை ரூபாய் 8% வட்டிக்கு ஒருவர் வங்கியில் கடன் எடுத்து இருக்கிறார். அவர் இது வரை மாதந்தோறும் 25,093 ரூபாய் வங்கியில் EMI கட்டி வருகிறார்.

அவர் ஆறு மாதம் EMI கட்டாமல் இருக்கிறார் என்றால் இந்த கட்டாமல் இருக்கும் ஆறு மாதங்களுடன் வட்டிக்காக இன்னும் நான்கு மாதங்கள் அதிகமாக EMI கட்ட வேண்டும். அதாவது மொத்தமாக 10 EMIகள் அதிகமாக கட்ட வேண்டும்.

அல்லது ஆயிரம் ரூபாய் அதிகமாக இனி வருங்காலங்களில் EMI கட்டி அதே வருட முடிவில் முடித்து விடலாம்.

கீழே உள்ள கணக்கீடுகள் மேலும் சில விவரங்களை அதிகமாக தரலாம்.




அதனால் மிகவும் நிவர்த்தி இல்லை என்ற சூழ்நிலையில் மட்டுமே இந்த EMI தவிர்ப்புகளை பயன்படுத்துகள்!

எப்பொழுதுமே நிர்மலாஜி ஒரு சலுகையை தருகிறார் என்றால் அதில் ஒரு உட்கூத்து இருக்கும். வருமான வரியை குறைக்கிறேன் என்று சொல்லி வரி விலக்குகளை தவிர்த்தார். அது  போல் தான் இது. கொடுப்பது போல் கொடுத்து வாங்கும் ஸ்டைல் இது.

ஆனால் நமக்கு அதில் இருக்கும் ஒரு ஆதங்கம் என்னவென்றால் ரிசர்வ் வங்கி மட மடவென்று வட்டி விகிதங்களை குறைத்து வருகிறது. நேற்று கூட 0.40% வட்டியை குறைத்துள்ளார்கள். அப்படி என்றால் கடனுக்கான வட்டி விகிதங்கள் ஆறு சதவீத அளவில் தான் இருக்க வேண்டும். ஆனால்  நிதர்சனத்தில் 9% அளவு கூட உள்ளது.

குறைந்த பட்சம் இந்த கொரோனா காலத்திலாவது நியாயமான வட்டியை வசூலித்தால் நடுத்தர மக்களுக்கு மிகவும் பலனாக இருந்து இருக்கும்.

ஒழுங்காக கடனை கட்டுபவர்களுக்கு அதற்கான வெகுமதி இந்திய வங்கி சிஸ்டமில் என்றுமே இருந்ததில்லை.
-------------------------------.
பணக்காரர்களுக்கு
 வரி போட மறுக்கும் மோடி அரசு.

லக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்திய அரசோ ஊரடங்கு மூலம் ஆகப் பெரும்பான்மையான மக்களை வீடுகளில் அடைத்து வைத்திருப்பதையே, நோய்த் தொற்று பரவலின் தாக்கத்தை குறைக்கும் முதன்மை நடவடிக்கையாக கடைபிடித்து வருகிறது. மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்பதோடு இத்தகைய சூழல் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கையும் பெரிய அளவில் முடங்கியுள்ளது.

குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் (FY 2019-2020) இறுதிக் காலகட்டத்தில் இந்த நோய்த்தொற்று பரவியதால், அரசின் வருவாய்க்கான மூலங்கள் முற்றிலும் சுருங்கின. பல்வேறு நிதி நடவடிக்கைகள், குறிப்பாக, நிதியாண்டுக்கான வரி செலுத்துவது / வாங்குவது தொடர்பான நடவடிக்கைகள் பெரிதும் முடங்கிப் போயுள்ளன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் நாள் டிவிட்டர் வலைதளத்தில் இந்திய வருவாய் துறையின் (Indian Revenue Service – IRS) அதிகாரபூர்வ பக்கத்தில், 50 இந்திய வருவாய்த் துறை அதிகாரிகளால் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஓர் அறிக்கை வெளியானது. நிதி திரட்டும் ஆதார வழிகள் மற்றும் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை (F.O.R.C.E) என்ற பெயரிலான இந்த அறிக்கையானது, பல்வேறு துறைகளில் வரி வருவாயை அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய ஓர் ஆய்வறிக்கை ஆகும்.

அந்த ஆய்வறிக்கை கூறும் பரிந்துரைகள் யாவை? மத்திய நிதியமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) ஆகியன மறுநாளே அதற்கெதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கான காரணம் என்ன?

F.O.R.C.E. – அறிக்கை வலியுறுத்தும் சில முக்கிய பரிந்துரைகள்:

1) பெரும் பணக்காரர்களுக்கான வரி விதிப்பு சதவீதத்தை உயர்த்துதல்:

43 பக்கங்களைக் கொண்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அவ்வறிக்கை, கொரோனா நோய்த் தொற்றின்போது பல்வேறு நாடுகள் தங்களது பொருளாதாரத்தை மீட்டெடுக்க, புனரமைக்க, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இந்தியாவில் அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான குறுகிய, இடைக்கால, நீண்டகால இடைவேளைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளை தமது பரிந்துரைகளாக அவ்வறிக்கை கொண்டிருந்தது.

அவற்றில் பிரதானமாக, ஒரு பரிந்துரையானது பெரும் பணக்காரர்களைப் பற்றியது. அவற்றில்,

  • ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு தற்போது இருக்கும் 30 சதவீத வரியை 40 சதவீதம் வரை உயர்த்தலாம். அல்லது,
  • ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கும் மேல் நிகர சொத்து மதிப்பு வைத்திருப்பவர்களுக்கு செல்வ வரி (Wealth Tax) மறு அறிமுகம் செய்வதன் மூலம் வரி விதிக்கலாம்.

– என இரு முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த வரி விதிப்பின் மூலம் இந்திய அரசிற்கு ரூ. 50,000 கோடி வரி வருவாய் வருவதை வைத்து, பொருளாதாரத்தில் தமக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த, அதிக செலவு தரும் 5 முதல் 10 திட்டங்களை அரசு கண்டறிய வேண்டும்; அந்தத் திட்டங்களுக்கான மொத்த செலவு மதிப்பையும் அரசு ஒரு பொது இணையதளம் உருவாக்கி வெளியிட வேண்டும்; அந்தத் திட்டங்களுக்கு ஆகும் மொத்த செலவையும், இந்த மேற்கூறிய வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, மொத்தமாக இந்த திட்டங்களுக்கு மட்டுமே தனியாகச் செலவிட வேண்டும்; மேலும், இந்தத் திட்டங்களுக்கு ஆகும் செலவினங்களையும் இந்த இணையதளத்தில் அரசு  வெளியிட வேண்டும் – எனப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய இந்த முக்கிய பரிந்துரையானது, பெரும் பணக்காரர்களுக்கு வரி விலக்கு செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ள நிதி அமைச்சகத்திற்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது ஆளும் பா.ஜ.க., இதற்கு முன்னர் ஆட்சி செய்த காலத்தில்தான் இந்தச் செல்வ வரியானது ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாகவே, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இந்தப் பரிந்துரை அறிக்கையைத் தயாரித்த 50 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளின் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

2) பரம்பரை சொத்து (Inheritance) வரியை மறுஅறிமுகம் செய்தல்:

அறிக்கையின் மற்றுமொரு முக்கிய பரிந்துரையானது, பரம்பரை சொத்து வரியை மறுஅறிமுகம் செய்வது பற்றியது. பரம்பரை சொத்து வரியானது, மேலை நாடுகளில் சுமார் 55 சதவீதம் வரை வரி விதிப்பு செய்யப்படுகின்றது. இந்தியாவிலும் கூட 1985 வரை நடைமுறையில் இருந்த பரம்பரை சொத்து வரி விதிப்பானது, நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளது என்று கூறி, பின்னர் ரத்து செய்யப்பட்டது.

இந்த வரி விதிப்பை மறுஅறிமுகம் செய்யும்போது, செல்வம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் குவிவது பெருமளவில் குறையும்; மேலும், இத்தகைய முடங்கியிருந்த செல்வம் வரி விதிப்பின் மூலம் பரவலான பயன்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புள்ளது; இதுதவிர, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் முன்னர் இருந்த பல்வேறு நடைமுறை சிக்கல்களின்றி, இவ்வரி விதிப்பை அமல்படுத்த முடியும் – என்பதாக ஒரு பரிந்துரை இடம் பெற்றுள்ளது.

மேற்கூறிய பரிந்துரை எந்த வர்க்கத்தின் நலனைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை அறிந்த மத்திய அரசும், மத்திய நேரடி வரிகள் வாரியமும் (Central Board for Direct Taxes) இந்திய வருவாய்த் துறையின் டிவிட்டர் வலைதளத்தில் வெளியான அறிக்கையானது, இத்துறையின் கருத்தாக கருத இயலாது – என அறிக்கை வெளியான மறுநாளே கூறியிருப்பதன் மூலம், இந்த அரசாங்கம் யாருக்கானது என்பதைத் தெளிவாக்கியது.

3) இணைய பயன்பாட்டுச் சேவைகள் / காம் சேவைகள் வழங்கும்  நிறுவனங்கள் மீதான வரி விதிப்பை உயர்த்துதல்:

ஊரடங்கின்போது ஆகப் பெரும்பான்மை மக்களை வீட்டுக்குள் முடக்கியபோது, அரசின் பல்வேறு பொருளாதார மூலாதாரக் கூறுகளும் முடங்கியபோது, கொரோனா பாதிப்பின்போது இயங்கிய பொருளாதாரம் என்பது டிஜிட்டல் / ஆன்லைன் / இணைய வர்த்தகத்தின் பொருளாதாரம் சார்ந்ததுதான். இச்சூழலானது, தமது தேவைகளுக்காகப் பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்கும் நிறுவனங்களான, அமேசான் (Amazon), நெட்பிளிக்ஸ் (Netflix), சூம் (Zoom), ஸ்விக்கி (Swiggy), சொமேடோ (Zomato) போன்ற நிறுவனங்களைத்தான் பெரிதளவில் மாத வருவாய் உள்ள மக்களை சார்ந்திருக்குமாறு செய்கிறது. ஆகவே, இந்தக் காலகட்டத்தில், அது தழைத்தோங்கும் பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது.

ஆகையால், தமது தொழிலைப் பெருமளவு விரிவுபடுத்த வாய்ப்புள்ள இத்தகைய நிறுவனங்களின் மீதான வரி விதிப்பை ஒரு சதவீதம் உயர்த்துவதன் மூலம், வரி வருவாயைப் பெருக்க இயலும் என அவ்வறிக்கை பரிந்துரை செய்திருப்பது மிகவும் ஏற்புடையதாகும். ஏனெனில், பல்வேறு அரசு / தனியார் துறைகளிலிருந்தும், கொரோனா நிவாரண நிதியாக பல்வேறு மக்களும் தம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்து வரும் வேளையில், இந்த நிலைமையில் இயங்கிவரும் ஒரே தொழிலான விளம்பரச் சேவைகளுக்கு 6-இலிருந்து 7 சதவீதம் வரி விதிப்பை அதிகரிப்பதும், இணைய வர்த்தக நிறுவனங்களிடம் 2-இலிருந்து 3 சதவீதமாக வரி விதிப்பை அதிகரிப்பதும் அநியாயமானது என்று கருத இயலாது.

அறிக்கை தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மேற்கொண்ட நடவடிக்கைகள்:

இந்த அறிக்கை டிவிட்டர் வலைதளத்தில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி இரவு 10 மணியளவில் மக்கள் கருத்திற்காக வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை வெளியான மறுநாள் மாலை 5 மணியளவில் மத்திய நேரடி வரிகள் வாரியமானது, இவ்வறிக்கை வெளியாவதற்கு காரணமாக இருந்த 50 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளின் மீது தன்னிலை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 28-ஆம் தேதி, இந்த அறிக்கையைத் தங்களுக்கு கீழுள்ள இளம் அதிகாரிகளைத் தயார் செய்யுமாறு கோரியதாக துபே மற்றும் பகதூர் ஆகிய இருவர் மீதும், மேலும் இந்த அறிக்கையை டிவிட்டர் வலைதளத்தில் மக்கள் அறியும்படி வெளியிட்ட பூஷண் என்பவர் மீதும் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசை அழுத்தும் வருவாய் பற்றாக்குறையும்நிலவும் கட்டமைப்பிற்கு அப்பால் இருக்கும் தீர்வும்:

இந்த அறிக்கை உருவாவதற்கு முன்னோடிகளாக இருந்த, வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த 3 அதிகாரிகளும் சுமார் 10 ஆண்டு காலமாக இந்த துறையில் பணியாற்றியுள்ளனர். மேலும், அவர்கள் இந்த அறிக்கையை ஏப்ரல் 23-ஆம் தேதி அன்றே மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு எந்தவித கருத்தையும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவிக்காத நிலையில், அவர்கள் ஏப்ரல் 26-ஆம் தேதி டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில், ஏற்கெனவே பல்வேறு மாநிலங்கள் போதிய வரி வருவாய் இல்லாமல் மத்திய அரசிடம் தொடர்ந்து அதிகளவு நிவாரண நிதியைக் கோரி நிர்பந்தித்து வரும் வேளையில், இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை ஏற்கத்தக்கவை / ஏற்கத்தகாதவை என்றுகூட பரிசீலிக்காமல் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

மேலும், இந்த அறிக்கை வெளியாவதற்கு உதவி புரிந்த 50 ஐ.ஆர்.எஸ். இளம் அதிகாரிகளில் கணிசமானோர் இத்துறைக்கு வந்து 2 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள். ஆக, தனது துறையின் (ஐ.ஆர்.எஸ்) வருவாயை அதிகரிப்பதற்கான சில பரிந்துரைகள் செய்வதென்பது, அந்தத் துறை இயங்குவதற்கான அடிப்படையான முன்முயற்சியாகும். அதனைக்கூட மறுப்பதென்பது, அரசின் அதிகாரத் திமிரையும், அரசின் பல்வேறு துறைகள் எவ்வாறு முடங்கியுள்ளன என்பதை உணர்த்துகிறது.

அமெரிக்காவில் வரி வருவாய் குறைந்துள்ளதன் விளைவாக, கொரோனா தாக்குதல் தீவிரமடைந்துள்ளதோடு, அடிக்கட்டுமான அமைப்பே நெருக்கடியில் இருப்ப்தை பல பொருளாதாரவாதிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இதன் விளைவாக, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் தீவிரமடைகின்றன. எனவே, முதலாளித்துவ நாடுகளில் கூட சந்தைகளை இயங்க வைக்க முடியாமல் அரசுகள் தடுமாறுகின்றன. எனவே, சந்தைகளை இயங்க வைக்கவும், சந்தைகளின் ஆதாயங்களைப் பரவலாக விநியோகிக்கவும் தவிர்க்கவியலாமல் பெருமுதலாளிகளது செல்வத்தின்மீதும், கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களின் மீதும் வரி விதிப்பு வீதத்தை அதிகரிப்பது மிகமிக அவசியத் தேவையாக உள்ளது.

அரசாங்கத்தால் வரி குறைவாக உறிஞ்சப்படும்போது, தொழில் நிறுவனங்கள் தங்கள் லாபத்திலிருந்து அதிகமாக மறுமுதலீடு செய்யும் என்று வரி அதிகரிப்பை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இது எந்த வகையிலும் உண்மையில்லை என்று ஏற்கெனவே பல பொருளாதாரவாதிகள் நிரூபித்துள்ளனர். தொழில் நிறுவனங்கள் தங்களது லாபத்தை மறு முதலீடு செய்யாமல், வெள்ளையாகவும் கருப்பாகவும் இந்தச் செல்வத்தை வரியில்லா சொர்க்க நாடுகளுக்குக் கடத்திச் சென்று பதுக்குகின்றன என்பதே உண்மை.

கோடீசுவர முதலாளிகள் மீதும், அவர்களது கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் உலகளாவிய குறைந்தபட்ச வரிவிதிப்பை அனைத்து நாடுகளும் செயல்படுத்தப்படுத்த வேண்டுமென கொரோனா தாக்குதல் நிலவும் இத்தருணத்தில் பல்வேறு பொருளாதாரவாதிகளும் ஜனநாயகவாதிகளும் கோரி வருகின்றனர். ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி மக்கள் வரிப் பணத்தை வாரிவழங்கிய மோடி அரசு, இந்த நோய்த்தொற்று நெருக்கடி காலகட்டத்தில், அவர்களிடம் இருக்கும் கொள்ளை லாபத்தில் ஒரு சிறு சதவீதத்தை வரி என்ற வகையில் போட்டு வசூலிக்க வேண்டுமென பரிந்துரைத்தால்கூட, அதைக் கண்டு பதற்றமடைந்து எதிர்வினையாற்றுகிறது.

இந்த அறிக்கை தொடர்பான மோடி அரசின் இந்த நடவடிக்கையானது, எவ்வாறு அரசின் அனைத்து துறைகளும் கார்ப்பரேட் நலன்களின் சேவகனாக, தொங்கு சதையாக மாற்றப்பட்டு வருகின்றது என்பதைப் பறைசாற்றுகிறது. ஆக, ஒட்டுமொத்ததில், இந்த அரசுக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு பெரும்பான்மை மக்களுக்கு குறைந்தபட்ச நன்மை செய்வதுகூட சாத்தியமற்றது என தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, அரசின் ஒவ்வொரு உறுப்பும், எவ்வாறு தான் ஏற்றுக்கொண்ட வேலைகளைச் செய்ய இயலாமல் போய், மக்களுக்கு எதிரானதாய் மாற்றமடைந்து வருகிறது என்பதை அரசின் தொடர்ச்சியான இந்த நடவடிக்கைகள் மேலும் மேலும் அப்பட்டமாகத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறது. ஜனநாயக சக்திகள் இதை புரிந்து கொண்டு மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பது குறித்து முன்வரவேண்டும்.

-----------------------------------------------

வீட்டில் வேலை மோசடி.

ந்தியாவின் ஐ.டி. துறையானது சுமார் 191 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடைய சேவைகளை உலகெங்கிலும் வழங்கி வருகிறது. ஏறத்தாழ 5 மில்லியன் மனித வளத்தைக் கொண்டது இத்துறை.

மீப்பெரும் மின்தரவு மற்றும் பகுப்பாய்வு முறைமைகள் (Big Data Analytics) முதல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வரை நான்காம் தொழில்நுட்பப் புரட்சிக்கான அடிப்படையைக் கொண்டிருப்பது இத்துறைக்கான தேவை வளர்வதற்கான அடிப்படையாக உள்ளது.

இத்துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஆகப் பெரும்பான்மை நடுத்தர வர்க்கம் கனவுகாணும் வாழ்க்கைத் தேவைகளை, வேலைக்குச் சேர்ந்த குறுகிய காலகட்டத்திலேயே பூர்த்தி செய்துகொள்வதற்கான வாய்ப்புகள் இத்துறையில் இருக்கின்றன.

நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளான சொந்தக் கார் வாங்குவது, வீடு வாங்குவது, வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவது முதலியன இத்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சில ஆண்டுகளிலேயே கிடைக்கப்பெறும் சாத்தியக்கூறு உள்ளது. இதற்கேற்ற வகையில், வங்கிகளும் தமது கிரெடிட் கார்டு சேவையை இத்துறையினரிடையே நன்கு பிரபலப்படுத்தி, அவர்களை இந்நுகர்வு கலாச்சாரத்தை நோக்கி இழுத்து இம்மோகத்தின் பின் ஓடத் தூண்டுகின்றன.

இவற்றுக்காகவே, தங்களை இயந்திரம் போல பாவித்து காலநேரம் பாராது உழைத்து வருகிறார்கள் ஐ.டி. ஊழியர்கள்.

மேலும், இத்துறையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளிடம் பிற துறையில் கணிசமாகக் காணவியலாத வேலைமுறை உண்டு. அதாவது, தான் வேலை செய்யும் அலுவலகத்திற்குச் செல்லாமல், மடிக்கணினி மூலம் அன்றைய தினத்திற்கான வேலையை வீட்டில் இருந்த படியே செய்ய முடியும்.

இந்த வேலை முறையானது, உற்பத்தித்துறை, கட்டிட வேலை போன்றவற்றிலோ அரசு வேலையில் ஈடுபடுவோருக்கோ கூட இதுநாள் வரை கிட்டியது இல்லை; கிட்டப்பெறுவதற்கான அடிப்படையும் இல்லை.

8 மணிநேரம் வேலை செய்யும் ஓர் ஆலைத்தொழிலாளி, தனது வேலைக்கு உரிய நேரத்தில் கிளம்பித் தயாராக வேண்டும். கால தாமதம் ஏற்பட்டு அவர் உரியநேரத்திற்கு வராமல் போனால், அவருக்கு அன்றைய தினத்திற்கான கூலி கிடைக்காது (ஆகப் பெரும்பான்மை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு). ஆனால், தனது சோர்வு காரணமாகவோ அல்லது தாமதமாக கிளம்ப நேரிட்டாலோ, ஓர் ஐ.டி. தொழிலாளி ஒரு முன்னறிவிப்பை மட்டும் தனது மேலாளரிடம் தெரிவித்து விட்டு, வீட்டில் இருந்தபடியே தனது வேலைகளைத் தொடர முடியும்.

அநேக நேரங்களில், தமது வீட்டுவேலைகளை கவனித்துக் கொள்ள வீட்டில் இருந்து வேலைசெய்யும் (WFH) இவ்வேலைமுறை  ஐ.டி. தொழிலாளர்களுக்கு ஒரு வரமாகவே இருந்து வருகிறது.

***

டந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்திலும் கூட, தமது பெரும்பான்மை தொழிலாளர்களை இந்த வேலைமுறை மூலம் வேலைசெய்யும் வலைபின்னலுக்கு ஐ.டி. நிறுவனங்களால் கொண்டுவர முடிந்தது.

ஊரடங்கின் துவக்கத்தில், ஐ.டி. துறையைச் சேர்ந்த பல்வேறு வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் தமது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கான நேரம் கிடைத்தது; தனது பிள்ளைகளின் படிப்பு மீது அக்கறை காட்ட இயன்றது என்றவாறெல்லாம் இவ்வேலைமுறையை விதந்தோதினர். ஆனால், ஊரடங்கு நீடிக்க நீடிக்க, வெளியே செல்ல இயலாமல் நான்கு சுவருக்குள் அடைபட்டிருப்பதும், பெருகிவரும் வேலை அழுத்தமும் சேர்ந்து ஒரு மன அழுத்தத்தை அவர்கள் மீது உருவாக்கின.

மேலும், முன்னர் சராசரியாக 7-8 மணிநேரம் வேலைசெய்த ஐ.டி தொழிலாளிகள் இப்போது ஊரடங்கு காலகட்டத்தில் 12-13 மணிநேரம் வேலைசெய்யப் பணிக்கப்பட்டனர். அலுவலகம் சென்ற நாட்களில் கூட அவர்களுக்கு தேநீர் இடைவேளை, உணவு இடைவேளை ஆகியவற்றிக்கு முறையே அரை மணிநேரம், ஒரு மணிநேரம் என்று இடைவேளை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஊரடங்கு காலகட்டத்திலோ, தலைமை நிர்வாகம் தனது கீழ் வேலைசெய்யும் அலுவலர்களுக்கு ஏற்படுத்திய வேலை அழுத்தத்தின் விளைவாக, தொழிலாளர்கள் சரியான நேரத்தில் உணவருந்தாமல்அதிக நேரம் கணினியில் – ஆன்லைனில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒரு சிறிய இடைவேளை எடுத்தால் கூட, உடனே ஒரு மின்னஞ்சல் அனுப்புவது, அதற்குக் குறிப்பிட்ட நிமிடத்தில் விடை தராவிடில் போன் செய்வது என இடைவெளியற்ற சுரண்டல் வடிவாக இந்த WFH வேலை முறை பரிணமித்துள்ளது.

ஒரு தொழிலாளி இந்த WFH வேலைமுறையில் முறையாக வேலை செய்கின்றாரா என்பதை பரிசோதித்தறிய பல்வேறு புதிய தொழில்நுட்பச் செயலிகள் வலம்வரத் துவங்கியுள்ளன. சாதாரணமாக, ஒரு புராஜெக்ட் முடிப்பதற்கு 2 வார காலம் ஆகுமென்றால், இந்த ஊரடங்கு காலகட்டத்தில், அந்தக் குறிப்பிட்ட வேலையை 10 நாட்களுக்குள் முடித்துக் கொடுக்க தனது அணிகளை நிர்பந்திக்குமாறு ஐ.டி நிறுவனங்களின் தலைமை நிர்வாகம் தமது மேலாளர்களுக்கு கட்டளையிட்டது. இதன் விளைவாக, குறிப்பிட்ட வேலைநேரம் என்ற வரைமுறை இல்லாமல் இராப்பகலாக, மேலாளர்களுக்குத் தனது வேலை குறித்து தெரிவிக்கும் சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். (புரொஜக்ட்டின் காலக்கெடுவைப் பொருத்து இவ்வழுத்தம் மாறுபடுகிறது).

இத்தகைய, ஒய்வு – உறக்கமில்லாத கடும் வேலைப்பளுவுக்கு இடையில் வேலை பார்க்கும் ஐ.டி. தொழிலாளிகள், தமது ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க இயலாது தவித்தனர். குறிப்பாக, சென்னையில் ஓர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த ஐ.டி தொழிலாளின் ஒருவர், ஏற்கனவே தனக்கு உடல் நிலை சரியில்லாத போதிலும் 12-13 மணி நேரம் பணிபுரிந்தார். அந்நிலையில் நிர்வாகத்தின் தொடர்ச்சியான, கடும் வேலைப்பளுவைத் தாங்க இயலாமல் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வேறேதும் தொழில்செய்து பிழைத்துக் கொள்வதாகக் கூறி தனது சொந்த ஊருக்கே சென்று விட்டார்.

இது போன்றதொரு பரந்துபட்ட வேலை பணிச்சுமை சூழல்தான் தற்போது ஐ.டி துறை எங்கும் நிலவி வருவதைக் காண முடிகின்றது. இச்சூழலுக்கு எந்த வகையிலும், குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட பதிவு செய்யாமல் பல ஐ.டி. தொழிலாளிகளை வேலைசெய்யத் தூண்டுவது எது?

***

தற்கான காரணம், நாம் ஏற்கனவே, குறிப்பிட்டுள்ள வெவ்வேறு வர்க்க அடுக்குகள் கொண்ட ஐ.டி தொழிலாளிகளிடம், தமது வாழ்வாதாரத்தைப் பேணிக்காப்பது, வங்கிக் கடன்களை அடைப்பது, கிரெடிட் கார்டு கணக்குகளை கட்டிமுடிப்பது என்பன போன்ற பல்வேறு காரணங்களால், எப்பாடுபட்டாவது வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருப்பது தான்.

ஐ.டி. தொழிலாளிகளின் ஓய்வு, உறக்க நேரம் உட்பட அவனது மொத்த மூளை உழைப்புச் சக்தியையும் இப்படி சக்கையாகப் பிழிந்து சுரண்டி எடுப்பதன் வாயிலாக, முதலாளித்துவ வர்க்கம் தனது தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை அதிகரித்துள்ளதாய் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாகவே, இன்போசிஸ், ஹெச்.சி.எல். போன்ற நிறுவனங்கள் இந்த ஊரடங்கு காலகட்டத்தில், தமது நிறுவனத் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் முன்னைக் காட்டிலும் கணிசமான சதவீதம் அதிகரித்துள்ளதை கண்டு புளகாங்கிதமடைந்துள்ளன.

மேலும், இந்த கொரோனா நோய்த்தொற்றுச் சூழல் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, ஏற்கனவே உலகெங்கிலும் மந்தமாகியிருந்த பொருளாதாரம், மேலும் தீவிரமாக வீழ்ச்சியடையத் துவங்கியது. இந்தச் சூழலைக் காரணம்காட்டி உலகெங்கிலும் உள்ள முதலாளி வர்க்கம் தமது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலைநீக்கம் செய்வது அதிகரித்துள்ளது. மேலும், இந்தப் பொருளாதாரம் மீண்டு எழுவதற்கான எந்தவித அறிகுறியும் தென்படாத நிலையில், வேலையிழந்தோருக்கு மீண்டும் வேலை கிடைப்பதற்கான எவ்வித அடிப்படையும் தென்படவில்லை.

இந்த உலகளாவிய புறச்சூழலை சாதகமாக்கி, இந்திய ஐ.டி. முதலாளி வர்க்கம், வேலை செய்ய மறுத்தாலோ, தயக்கம் காட்டினாலோ, எவ்வித முன்னறிவிப்புமின்றி வேலைநீக்கம் செய்துவிடுவதாக மிரட்டிப் பணிய வைத்து ஐ.டி. ஊழியர்களைச் சுரண்டி வருகின்றனர்.

8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்னும் உரிமையென்பது தொழிலாளி வர்க்கம் தனது வியர்வையும் இரத்தமும் சிந்திய போராட்டங்களின் விளைபயனாக உதித்தது.

ஆனால், ஐ.டி. தொழிலாளி வர்க்கம் ஆட்படும் இந்த நவீன சுரண்டல் முறையானது, தொழிலாளியின் தார்மீக ஒய்வு, உறக்க நேரத்தையும் உறிஞ்சிக் கொழுத்து, குறைந்த கூலி கொடுத்து, தனது மூலதனத்தைப் பெருக்க முனையும் முதலாளி வர்க்கத்தின் லாபவெறியை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. அத்துடன், தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை இழந்து ஒரு கொத்தடிமை போன்ற வேலைமுறைக்கு செல்லும் அபாயத்தை துலக்கமாக புலனாக்குகிறது.

“சொல்வதைச் செய்; இல்லையேல் வெளியேறு (Do as instructed else  get out)” என்று முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்தின்மீது தற்போது தொடுத்துவரும் தாக்குதலை முறியடிக்க, ஐடி துறை ஊழியர்கள் சங்கமாக அணிதிரள்வது முன்னெப்போதைக் காட்டிலும் அவசியமாக உள்ளது.

– புதியவன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?