தப்பிக்க வழி?
கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
அவற்றின் மேற்பரப்பில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை தொற்றிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர். ஆனால், எந்தெந்த பொருட்கள் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்?
காற்றில் உயிர்வாழும் நேரம்
இருமல் மற்றும் தும்மலின்போது மூக்கு மற்றும் வாய் வழியாக, மிகச்சிறிய, சுமார் 3,000 எண்ணிக்கை அளவிலான உமிழ்நீர்த் துளிகள் வெளிவரும்.
இந்தத் துளிகளின் அளவு 1-5 மைக்ரோ மீட்டர் மட்டுமே. அதாவது மனிதர்களின் சராசரி மயிரிழை ஒன்றின் அகலத்தில் 30இல் ஒரு பங்கு.
ஆடைகள், பொருட்கள் மீது மட்டும் படியாமல் காற்றிலும் கலக்கும் இந்தத் துகள்கள், காற்றில் மூன்று மணிநேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும்.
ஒரு துளியில் எத்தனை வைரஸ்கள் இருக்கும் என்பது குறித்த சரியான தரவுகள் இல்லை.
இன்ஃபுளூயென்சா வைரஸ்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பாதிக்கப்பட்டவரின் தும்மலில் வெளியாகும் ஒரு சிறு துளியில் பல பத்தாயிரம் வைரஸ் கிருமிகள் இருப்பது தெரிந்தது.
இந்த அளவு ஒவ்வொரு வகை வைரஸுக்கும் வேறுபடலாம்.
கொரோனா வைரஸ் மலத்தில் எவ்வளவு நேரம் உயிர்வாழும்?
மனித மலத்தின் மீதும் நீண்ட நேரம் இந்த வைரஸ் உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பான நேர அளவு எதுவும் இல்லை.
இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ள கழிவறையை பயன்படுத்திய ஒருவர், முழுமையாக கைகளை சுத்தம் செய்யாமல் எந்தப் பொருட்களைத் தொட்டாலும் அவற்றின்மீது இந்த வைரஸை பரவச் செய்ய முடியும்.
அதைவிட முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது, வைரஸ் தொற்றியுள்ள இடத்தை தொட்டுவிட்டு முகத்தை தொடுவதுதான் மனித உடலுக்குள் இந்த Sars-CoV-2 கொரோனா வைரஸ் செல்வதற்கான முக்கியமான வழியாக உள்ளது என்பது.
உலோகங்கள், பிளாஸ்டிக், கண்ணாடி
கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு வைரஸ்களும், முறையாக சுத்தம் செய்ய்யப்படாத உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் மீது ஒன்பது நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.
குளிர்ச்சியான சூழல்களில் அவை 28 நாட்கள் வரைகூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.
அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தற்போது பரவி வரும் Sars-CoV-2 வகை கொரோனா வைரஸ் உலோகம், பிளாஸ்டிக் ஆகியவற்றின் மேற்பரப்பில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை உயிர்ப்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.
எனினும், தாமிர உலோகத்தால் ஆன பொருட்களின் மேற்பரப்பில் நான்கு மணி நேரம் மட்டுமே இவை தாக்குப்பிடிக்கின்றன.
கொரோனா வைரஸ் ஆடைகள் மீது எவ்ளவு நேரம் இருக்கும்?
துணிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
எனினும், ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு விரைவில் காய்ந்துவிடும் தன்மையுடைய கார்டுபோர்டு அட்டைகளின் மேற்பரப்பில் பிளாஸ்டிக், உலோகம் ஆகிவற்றைவிட குறைவான நேரமே இந்த கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும்.
சுற்றியுள்ள காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றில் உண்டாகும் மாற்றம் இந்த நேர அளவின் மீது தாக்கம் செலுத்தும்.
Sars-CoV-2 கொரோனா வைரஸை பொருட்கள் மீது அழிப்பது எப்படி?
தற்போது பரவி வரும் Sars-CoV-2 கொரோனா வைரஸ் 62-71% ஆல்கஹால் அளவுள்ள கிருமி நாசினி அல்லது 0.5% ஹைட்ரஜன் பெராக்ஸைடு பிளீச்சிங் பவுடர் அல்லது 0.1% சோடியம் ஹைட்ரோகுளோரைட் உள்ள வீட்டுப் பயன்பாட்டுக்கான பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்து ஒரு நிமிடத்துக்கும் குறைவான காலத்தில் ஒழித்து விடலாம்.
------------------------------------------------------------------------------,
சரிபாதி வீழ்ச்சி?
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. இந்த ஊரடங்கால் மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் தளர்வுகள் அளித்தாலும் நிறுவனங்கள் முழுமையாகச் செயல்படமுடியாத சூழலே உள்ளது. தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்பு காரணமாக கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பை இந்திய சேவைத் துறை சந்தித்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கான சேவைகள் கொள்முதல் மேலாளர்கள் அட்டவணையில் (services Purchasing Managers’ Index (PMI)) கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.4 ஆக குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 49.3 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக சேவைகள் குறித்தான பர்சேஸிங் மேனேஜர்ஸ் இண்டெக்ஸ் (services Purchasing Managers' Index) கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.4 ஆக குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 49.3 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தரவு பகுப்பாய்வு நிறுவனமான IHS Markit கடந்த டிசம்பர் 2005ல் இருந்து தரவுகளை சேமிக்கத் தொடங்கியதில் இருந்து, சேவைத் துறை குறித்தான வெளியீட்டில் மிகக் கடுமையான சரிவினைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், அதில் சேவைத் துறையின் மந்தநிலை, உற்பத்தி துறையின் மந்த நிலையைவிட அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது மாதாந்திர உற்பத்தி குறியீட்டு அறிக்கையான பிஎம்ஐ குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் வளர்ச்சிக்கான அறிகுறியாகவும், 50 புள்ளிகளுக்குக் கீழாக சரிந்தால் அது சரிவாகவும் கணக்கிடப்படும்.
அந்த வகையில், மார்ச் மாதத்தில் 51.8 புள்ளிகளாக இருந்த குறியீடு, கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு அமலுக்குப் பிறகு ஏப்ரலில் 27.4 புள்ளிகளாக சரிந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் இந்தியப் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சியினைக் காணும் என்பதை அறிய முடிகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
----------------------------------------------------------------;
ஊடகங்கள் மறைத்த
8 படுகொலைகள்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக் கசிவால் அதைச் சுற்றியுள்ள ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த ரசாயன வாயுவை சுவாசித்த ஒரு சிறுமி உள்பட 8 பேர் பலியாகியுள்ளது இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மூவரின் உடல்கள் ரசாயன ஆலைக்கு அருகிலுள்ள பகுதியிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் ஐவர் மருத்துவமனையில் இறந்துள்ளதாகவும் பிபிசி தெலுங்கு சேவை தெரிவிக்கிறது.
இன்று அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ரசாயன வாயுவை சுவாசித்த மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ரசாயன வாயு கசிவு நடந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வாயுக் கசிவால் சுமார் 200 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வினய் சந்த் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று விசாகபட்டினம் செல்கிறார்.
ரசாயன வாயுவை சுவாசித்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோசமாக பாதிக்கப்பட்ட 15 முதியவர்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் சுமார் ஐம்பது அவசர ஊர்திகள் ஈடுபட்டுள்ளன. பலரும் மயக்க நிலையில் உள்ளனர்.
ஸ்டைரீன் எனும் ரசாயன வாயு
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஸ்டைரீன் (styrene) எனும் ரசாயன வாயு வெளியேறியதாக, விசாகப்பட்டினத்தில் பணியாற்றும் ஆந்திரப் பிரதேச மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ராஜேந்திர ரெட்டி என்பவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, வருவாய்த் துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
ஆர்.ஆர் வெங்கடபுரம் எனும் பகுதியில் அமைந்துள்ள எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா எனும் தெர்மாகோல் உற்பத்தி ஆலையில் இந்த ரசாயன வாயுக் கசிவு நிகழ்ந்துள்ளது.
அதை சுற்றியுள்ள நாயுடு கார்டன், பத்மநாபபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துகொண்டு வாகனங்களில் வெளியேறி வருகின்றனர்.
தென்கொரிய நிறுவனம்
1961ம் ஆண்டு ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் எனும் பெயரில் இந்த ஆலை நிறுவப்பட்டது. 1978இல் யூபி தொழில் குழுமத்தால் இந்த நிறுவனம் வாங்கப்பட்டது.
அந்த தொழில் குழுமத்திடமிருந்து 1997இல் தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி நிறுவனம் ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் ஆலையை வாங்கி அதற்கு எல்.ஜி பாலிமர்ஸ் என்று பெயரை மாற்றியது.
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அரசு அனுமதி அளித்ததால் இந்த நிறுவனம் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
அதிகாலை 3 மணிக்கு இந்த வாயு கசிவு நடந்தது என்பதால் உறக்கத்திலிருந்த பல மக்களுக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே உடனடியாக தெரியாமல் போனது.
வாயுவை நிறுத்துவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
கொரோனாவை காட்டி மக்களைப் பயமுறுத்தி வரும் ஊடகங்கள் இந்த தொழிற்சாலை நச்சுக் காற் று படுகொலைகளைப் பற்றி வாயே திறக்கவில்லை என்பதுதான் வேதனை.
இவை யாருக்கான ஊடகங்கள் எனத் தெரிகிறதா?8 பேர்கள்தான் பலி என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டாலும் பலி எண்ணிக்கை பல மடங்காக இருக்கும் என்பது அங்கிருந்து வரும் காணொலிகள் மூலம் தெரியவருகிறது.
---------------------------------------------------------8