PM-CARES : கொரோனா நிவாரண நிதி மர்மங்கள்

கொரோனா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து மீள, இந்திய அளவில் நிதியைத் திரட்ட “பிரதம மந்திரி – அவசரகால நிலைமைகளுக்கான குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி (Prime Minster Citizens Assistance and Relief in Emergency Situations fund – PM CARES)” எனும் தனியார் அறக்கட்டளையை மத்திய அமைச்சரவை உருவாக்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மத்திய மாநில அரசு ஊழியர்கள், பெரும் முதலாளிகள், நடிகர் – நடிகைகள் பொதுமக்கள் என பல தரப்பினரிடமிருந்து பணம் பெறும் இந்த அறக்கட்டளை மத்திய தலைமைக் கணக்காளரின் கண்காணிப்பின் கீழ் வராது என்று தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. மேலும் இத்தகைய வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் தனியார் அறக்கட்டளைகள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வருமா என்பதும் தீர்க்கப்படாத பிரச்சினையாக நீதிமன்றத்தில் தேங்கி நிற்கிறது.
PM CARES திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிமுகப்படுத்தி, கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தாராளமாக நிதி உதவி செய்து துணை நிற்குமாறு கோரியிருந்தார். அதைத் தொடர்ந்து சினிமா நட்சத்திரங்கள், முதல் கார்ப்பரேட் முதலாளிகள் வரை அனைவரும் வாரி வழங்கினர். பே-டிஎம் போன்ற செயலிகளின் வழியே சிறிய அளவிலான தொகைகளையும் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதுபோக அனைத்து அரசு மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்திலிருந்தும் இந்த நிதிக்கு பெரும் தொகைகள் செலுத்தப்பட்டன. பல இடங்களில் இது நிர்பந்திக்கப்பட்டும் மிரட்டியும் பெறப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு டெல்லி பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில், மார்ச் 2020 ஊதியத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு (PMNRF) வழங்குமாறு கோரி அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரின் ஒருநாள் ஊதியம் சேர்ந்து ரூ. 4 கோடி திரட்டப்பட்டது. ஆனால் PMNRF திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியை பல்கலைகழக துணைவேந்தர் PMCARES திட்டத்திற்கு திருப்பிவிட்டுள்ளார். இதற்கு டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்திலிருந்து வந்த நெருக்குதலின் பெயரிலேயே PMNRF-க்கு ஒதுக்கப்பட்ட பணம் PM-CARES திட்டத்திற்கு திருப்பிவிடப்பட்டது என தி ஹிந்து நாளிதழுக்கு அடையாளத்தை தெரிவிக்க விரும்பாத டெல்லி பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதே போல டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பயிற்சி மருத்துவர்களின் ஒருநாள் சம்பளத்தை கட்டாயப் பிடித்தம் செய்து பிரதமரின் PM CARES நிதிக்கு அளிக்கும்படி சுற்றறிக்கை அனுப்பியதை பயிற்சி மருத்துவர் சங்கம் நிராகரித்துள்ளது. மேலும் இந்த நிதிக்குத்தான் நன்கொடை வழங்க வேண்டும் என்று வற்புறுத்துவது தவறானது என்பதையும், ஏற்கெனவே மருத்துவர்கள் பலரும் தாமாகவே பல்வேறு அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மற்றும் PMNRF ஆகியவற்றின் மூலம் நன்கொடை வழங்கியிருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
ஆகையால் தானாக முன் வந்து யாரேனும் கொடுக்க விரும்பினால் மட்டுமே கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நிவாரண நிதி பங்களிப்பை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யும் தங்களது உரிமையை பறிக்கக் கூடாது என்றும் பயிற்சி மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்லி பல்கலை, எய்ம்ஸ் மருத்துவமனை வரிசையில் வருவாய்த்துறை ஒரு படி மேலே சென்றிருக்கிறது. இங்கு பணிபுரியும், அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ஏப்ர்ல 2020-லிருந்து மார்ச் 2021 வரை ஒவ்வொரு மாதமும் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து 1 நாள் ஊதியத்தை PM-CARES திட்டத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 17 அன்று வருவாய்த்துறையின் இயக்குனர் மற்றும் தலைவரிடமிருந்து அனுப்பப்பட்ட அந்த சுற்றறிக்கையில் முன் வைக்கப்பட்ட இந்த கோரிக்கைக்கு ஆட்சேபணை ஏதும் இருந்தால் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் அதனை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதாவது அந்த சுற்றறிக்கையைப் படித்துவிட்டு அமைதியாக இருந்தால், PMCARES நிதிக்கு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதாமாதம் நிதி தானாக எடுத்துக் கொள்ளப்படும். மறுப்பு இருந்தால், தனிக் கடிதத்தில் பெயரையும் பணியாளர் அடையாள எண்ணையும் சேர்த்து எழுதித் தர வேண்டும்.
பிற அரசாங்க நிறுவனத்தின் மூலமோ, லாக்டவுன் சமயத்தில் தொண்டு செய்யும் வேறு ஒரு தன்னார்வ நிறுவனத்தின் மூலமோ கொடுக்க வழியிருக்கும் போது, PM-CARES-க்கு ஏன் நன்கொடை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு அலுவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த சுற்றறிக்கையில் நன்கொடையே அதிகாரத் தொனியில்தான் கேட்கப்பட்டிருப்பதாகவும், நன்கொடை தராதவர்களை மறைமுகமாக மிரட்டும் தொனியிலும் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இங்கு மட்டுமல்ல, பல இடங்களில் நீதிமன்றங்களே இது போன்று PM CARES நிதிக்கு ஆள் சேர்த்துவிடும் வேலையைச் செய்திருக்கின்றன. ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் பிணை வழங்குவதற்கான நிபந்தனையில் PM-CARES நிறுவனத்திற்கு ரூ.35,000 வழங்க வேண்டும் என்றும் அரசின் ஆரோக்ய சேது நிரலை கைபேசியில் தரவிறக்கம் செய்து அதற்கு ஆதாரம் காட்டிய பின்னரே பிணை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் ஒரு நீதிபதி.
அரசாங்கம் இவ்வாறான சூழலில் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாகக் கேட்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இந்த நிதி பொதுத் தணிக்கைக்கு உட்படுத்தப்படாது என்பதுதான் பிரச்சினையே! PMCARES பொதுத்துறை நிதி அல்ல என்பதை இதுகுறித்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர், இயற்கைப் பேரிடர் காலங்களில் நன்கொடை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட PMNRF பணத்தை இயற்கைப் பேரிடருக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், PMCARES என்ற தனியார் அறக்கட்டளை துவங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது அரசு. ஆனால், PMNRF உருவாக்கபட்ட நோக்கம் அதுவாக இருந்தாலும், “மருத்துவ ரீதியான அவசரத் தேவைகளுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றும் அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது. அந்த விதியைப் பயன்படுத்தியோ, அல்லது அதன் விதிகளில் கொள்ளை நோய்க் காலங்களிலும் இந்தப் பணத்தைப் பயன்படுத்தலாம் என்று மாற்றம் செய்வதன் மூலமோ அப்பணத்தைப் பயன்படுத்த முடியும். அப்படி செய்யாமல் PMCARES என்ற புதிய நிதி அறக்கட்டளையை மோடி அரசு துவங்கியிருப்பதன் பின்னணி என்ன ?
இயற்கைப் பேரிடர் நிவாரணத்துக்காக உருவாக்கப்பட்ட PMNRF மூலம் வரும் பணமும் கூட பொதுப்பணக் கணக்கில் வருமா வராதா என்பது குறித்த வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் வெள்ள சமயத்தின் போது தொடுக்கப்பட்டது. அதே போல, அதன் கணக்கு வழக்குகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டிருந்தது. அந்த வழக்கின் மேல் முறையீட்டு மனு 2018 முதல் இப்போது வரை தீர்வு காணப்படாமல் நீதிமன்றத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள PM CARES திட்டமும் இது போன்று எதற்குக் கீழும் வராத போது, வெளிப்படைத்தன்மை என்பது இங்கு எவ்விதத்திலும் உறுதி செய்யப்படவில்லை. தனியார் அறக்கட்டளைகளை தணிக்கை செய்ய தமக்கு அதிகாரம் இல்லை என மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) தெரிவித்துள்ளார்.
பெருமளவிலான தொகையை நன்கொடையாகப் பெறும் PM-CARES அறக்கட்டளையின் அறங்காவலர்களாக இருக்கும் மத்திய நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் யாரைக் கை காட்டுகிறார்களோ அவர்கள்தான் தணிக்கை செய்ய முடியும்.
கார்கில் போரில் மரணமடைந்த இராணுவ வீரர்களின் சவப்பெட்டி தொடங்கி ரஃபேல் உள்ளிட்ட இராணுவத் தளவாடங்கள் கொள்முதல் வரை அனைத்திலும் ஊழல் செய்த ஒரு கட்சியின் அமைச்சர்களின் கீழ் செயல்படும் இந்த PMCARES அறக்கட்டளைக்கு மக்கள் வழங்கும் கோடிக்கணக்கான நன்கொடைத் தொகை, உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கவும், மருத்துவ சேவையை செழுமைப்படுத்தவும் பயன்படுமா? அல்லது கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப் பயன்படுமா?
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளைக் கையாளும் PM-CARES அறக்கட்டளை, அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அல்லது குறைந்தபட்சம், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு அமைக்கப்பட்டு அவர்களின் கண்காணிப்பிலாவது கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் இவை எதற்கும் மோடி அரசு தயாராக இல்லை. கடந்த ஏப்ரல் 21 அன்று விக்ராந்த் தொகாட் என்ற சுற்றுச் சூழல் ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் PM-CARES நிதி தொடர்பான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனக் கேட்டதற்கு, சப்பைக் காரணங்களைக் கூறி அந்த விவரங்களை வெளியிட மறுத்துள்ளது பிரதமர் அலுவலகம்.
வெளிப்படைத்தன்மை என்றால் கிலோ என்னவிலை எனக் கேட்கும் மோடி அரசு, நிதி கையாளுதலில் மட்டும் கண்காணிப்புக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளுமா என்ன ?
-நந்தன்.
----------------------------------------
மே-17 வரை ஊரடங்கித்தான் இருக்கவேண்டும்.

ஊரடங்கு மே 3-ம் தேதி நிறைவு பெற இருந்த நிலையில் இதனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 35 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,523 ஆக உள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1,183 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலப் பகுதிகளுக்கு ஏற்ப விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
விதிமுறைகளும் தளர்வுகளும்!
* மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை யாரும் வெளியே வரக்கூடாது.
* அனைத்து மண்டலங்களிலும் கல்வி நிறுவனங்கள் மால்கள் திறக்கக்கூடாது என்ற தடை தொடரும்
பச்சை மண்டல பகுதிகளில் 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி.
பச்சை மண்டல மாவட்டத்தில் அனைத்து பணிகளுக்கும் அனுமதி.
தங்கி இருந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொண்டு நகர்ப்புற பகுதிகளில் கட்டுமான பணிகளை துவக்கலாம்.

ஆரஞ்சு மண்டல மாவட்டங்களில் ஒரு பயணியுடன் வாடகை கார்கள் இயங்க அனுமதி.
மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.
சொந்த கார்களில் ஓட்டுநருடன் சேர்த்து 3 பேர் மட்டும் பயணிக்கலாம். இருசக்கர வாகனங்களில் இருவர் செல்லலாம்.
* சிவப்பு மண்டலத்தில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன், நிபந்தனைகளின்படி இயங்கலாம்.
* ஊரகப் பகுதிகளில் அனைத்து வகை தொழிலகங்கள், கட்டுமானப் பணிகள், கடைகள் செயல்படலாம்.
* நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை நடத்துவதற்கு அனுமதி.
-----------------------------------------
சில இணைய தளங்கள்.
இன்று உழைப்பாளர் தினம். தொழிலாளர்கள் நலனுக்காக 
போராடி வரும் தொழிற்சங்க அமைப்புகளுக்கான மையமான சி.ஐ.டி.யூ. அமைப்பின் இணையதளத்தை பார்க்கலாம். http://citucentre.org/
கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் சவாலான சூழலில், வேலையிழப்பு எனும் வார்த்தையை அதன் எடை தெரியாமல் பலரும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், முன் எப்போதையும் விட இப்போது தான் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பின் தேவை உணரப்படும் சூழலில், இந்த இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்வது பொருத்தமாகவே இருக்கும்.
சி.ஐ.டி.யூ இணையதளம் எளிமையான வடிவமைப்பை கொண்டிருந்தாலும், ஈர்ப்புடையதாக அமைந்துள்ளது. தற்போது முகப்பு பக்கத்தில், மே தின வாழ்த்துகளுடன் வரவேற்கிறது. கொரோனா சூழலை முன்னிறுத்தி, பெரும் பணக்காரர்களுக்கு வரி விதியுங்கள், ஏழைகளை காபாற்றுங்கள் எனும் சுவரொட்டி வாசகம் முழங்குகிறது. 12 மணி நேர வேலையும் கூடாது, வேலையிழப்பும் கூடாது, சம்பள குறைப்பும் கூடாது எனும் வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
அருகே, சி.ஐ.டி.யூ தொடர்பான செய்தி வெளியீடுகள் இடம்பெற்றுள்ளன. அமைப்பின் வரலாறு மற்றும் பொறுப்பாளர்கள் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். சி.ஐ.டி.யூ பேஸ்புக் பக்கத்தில் இடம்பெறும் தகவல்களுக்கான பகுதியும் அமைந்துள்ளது.
சி.ஐ.டி.யூ சார்பில் வெளியாகும் சஞ்சிகைகள், புத்தகங்களையும் அணுகலாம். இதன் சர்வதேச சகோதர அமைப்பான, உலக தொழிற்சங்க கூட்டமைப்புகளின் இணையதளத்திற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது: http://www.wftucentral.org/

வீடியோ சந்திப்பிற்கான ஓபன் சோர்ஸ் இணையதளம்
லாக்டவுன் காலத்தில் பலரும் வீடியோ வழி உரையாடல்களை நாடி வரும் நிலையில், வீடியோ சந்திப்பு சேவையை வழங்கும் இணையதளங்களை தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது. வீடியோ சந்திப்பிற்காக முதன்மையான அறியப்படும் ஜும் சேவை சர்ச்சைக்குறியதாகவும் இருப்பதால் மாற்று சேவைகளை அறிந்து கொள்வது முக்கியமாகிறது.
இத்தகைய மாற்று வீடியோ சந்திப்பு சேவைகளில் ஜிட்சி (Jitsi Meet ) தனித்து நிற்பதை உணரலாம். ஏனெனில், இது பயனாளிகள் கையில் உரிமையை அளிக்கும் ஓபன் சோர்ஸ் தளமாக இருப்பது தான்.
EUTOCOAXgAAKaEl
ஜூம் சேவையுடன் ஒப்பிட்டு பார்த்தாலும், ஜிட்சி சிறப்பானதாக இருப்பதாகவே கருதப்படுகிறது. முதலில், ஜூம் சேவை போலவே இதுவும் பயன்படுத்த எளிமையானது. ஜிட்சி சேவையை பயன்படுத்த எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை. உறுப்பினராக பதிவு செய்யும் அவசியமும் இல்லை. ஜிட்சி மீட் தளத்தில் நுழைந்து, புதிய சந்திப்பை துவக்கும் வசதியை நமது பிரவுசரிலேயே உருவாக்கி கொள்ளலாம்.
அதன் பிறகு, இதற்கான இணைப்பை இமெயில் அல்லது சமூக ஊடகம் வழியே பகிர்ந்து கொண்டு, உரையாட விரும்புகிறவர்களை வீடியோ அறையில் இணைத்துக்கொள்ளலாம். இப்படி எத்தனை பேரை வேண்டுமானாலும் சந்திப்பில் இடம்பெறச்செய்யலாம்.
அழைப்புகளுக்கு பாஸ்வேர்டு பூட்டி போட்டு, அனுமதி இல்லாமல் யாரும் நுழைந்து வில்லங்கம் செய்வதை தடுக்கலாம்.
பின்னணியை மங்கச்செய்வது, திரையை பதிவு செய்வது பகிர்வது போன்ற வசதிகளும் உள்ளன. வீடியோ சந்திப்பை அப்படியே நேரலையாக்கி யூடியூப் வீடியோவாக மாற்றிக்கொள்லாம் அல்லது டிராப்பாக்சில் சேமித்துக்கொள்ளலாம். இதெல்லாம் ஜூமில் இல்லாத வசதிகள்.
வீடியோ சந்திப்பில் பங்கேற்பவர்கள், கையுர்த்தி கருத்து தெரிவித்து உரையாடலிலும் பங்கேற்கலாம்.
இன்னும் பலவிதங்களில் மேம்பட்டது என்றாலும், ஜிட்சியின் தனித்தன்மை அதன் ஓபன் சோர்ஸ் தன்மை. இதன் காரணமாகவே இது மிகவும் பாதுகாப்பானது. எப்படி எனில், பயனாளிகள் விரும்பினால், ஜிட்சி மெப்பொருளை தரவிறக்கம் செய்து தங்கள் கம்ப்யூட்டரிலேயே அதை இயக்கி கொள்ளலாம். வேறு யாரும் அதில் மூக்கை நுழைக்க முடியாது. விஷயம் தெரிந்தவர்கள், தங்கள் தேவைக்கேற்ப இந்த சேவையின் நிரலிலும் மாற்றம் செய்து கொள்ளலாம்.
மேலும் ஜிட்சி உரையாடல்கள் இரு முனையிலும் என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் விட, ஜிட்சிக்கு இன்னொரு பெருமையும் இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில், அரசுகளின் கண்காணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வரும் எட்வர்ட் ஸ்னோடன் பரிந்துரைக்கும் சேவையாக இது இருக்கிறது. அமெரிக்க அரசின் வலையில் சிக்காமல் தலைமறைவாக இருக்கும் ஸ்னோடன், ரஷ்யாவில் பதுங்கியிருந்த போது, பத்திரிகையாளர்களுக்கு வீடியோ பேட்டி அளிக்க ஜிட்சியை பயன்படுத்தியதாக அறிய முடிகிறது.
இணையதள முகவரிhttps://meet.jit.si/

தாயகம் திரும்ப உதவும் தளம்
கொரோனா பாதிப்பு சூழலில், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் பலவித இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதே போல பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களும், தமிழர்களும் லாக்டவுன் காலத்தில் தாயகம் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கி அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள், சர்வதேச விமான போக்குவரத்து துவங்கியதும் தமிழகம் திரும்பி வர வழி செய்யும் வகையில் அவர்கள் பதிவு செய்து கொள்வதற்கான இணையதளத்தை தமிழக அரசு அமைத்துள்ளது: https://www.nonresidenttamil.org/home
இணைய மலர் மின்மடலில் சைபர் சிம்மன்.

----------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?