மோடி அரசின் மக்கள் விரோதச் செயல்கள்!

பசிப்பிணியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க அரசு தவறியது என்பதே அந்தப் பேரிடரின் தீவிரம் தெரியத் தொடங்கிய சமயத்தில் அரசின் மீது வைக்கப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டு. அரசு எந்த முனைப்பும் காட்டாமல், மக்கள் மீது அக்கறை கொள்ளாமல், சிக்கனம் என்ற பெயரில் செலவுகளைக் குறைத்துக் கொண்டிருந்தது; அல்லது, முற்றிலும் திராணியற்றதாக இருந்தது என்றும்கூட சொல்லலாம். நாட்டின் மற்ற பகுதிகளில் எக்கச்சக்கமாக உணவுதானியங்கள் இருந்தபோதும், சந்தை பார்த்துக்கொள்ளும் என்ற அபார நம்பிக்கையால், வேண்டுமென்றே நிவாரணத்தை வழங்க மறுத்தது அரசு.”

இது COVID-19 நெருக்கடியின்போது நிராதரவாக நிற்கும் மக்களுக்கு இந்தியாவின் ஒன்றிய அரசு போதியளவு நிவாரணத்தை வழங்கத் தவறியதைப் பற்றிய சமகாலக் குறிப்பு என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், இது 1876-1879 காலத்தில் இந்தியாவின் தெற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின்போது காலனிய அரசு எப்படி நடந்துகொண்டது என்பதைப்பற்றிய வரலாற்றுப் பதிவு. நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியபோதும், கொஞ்சம்கூட ஈவிரக்கம் காட்டாத காலனிய அரசு எப்படியெல்லாம் விமர்சிக்கப்பட்டது என்பதை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் வரலாற்றாசிரியர் சுனில் அம்ரித், Unruly Waters: How Mountains, Rivers and Monsoons Have Shaped South Asia’s History எனும் புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில் நமக்கு சொல்கிறார்.


ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்யும் மோடி அரசின் நெருக்கடி மேலாண்மை வியூகம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பஞ்சத்தின்போது மக்கள்நலன் பற்றி காலனிய அரசு கொண்டிருந்த அணுகுமுறையைப் பிரதிபலிப்பதற்கான காரணத்தை இக்கட்டுரையில் அலசுவோம்.

கள நிதர்சனம் பற்றி ஆய்வுகள் வழங்கும் தரவுகள்

இந்திய மக்களின் பணிப்பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு நூலிழையில் தொங்குவதைக் கடந்த இரண்டு மாதங்களாக ஊடகங்கள் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு போடப்பட்ட ஊரடங்கால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை மற்றும் வருமானம் இழந்து, எவ்வகை நிவாரணமும் கிடைக்காமல் அவதிப்படுவதைப் பற்றிய செய்திகள் ஓயாமல் வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்கள், இந்திய நாட்டில் நிலவும் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் எவ்வளவு மோசமான நிலையை அடைந்துள்ளன என்பதற்கு தவிர்க்கமுடியாத ஆதாரமாகத் தோன்றியுள்ளது.

மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு உடனடியாகத் தோன்றிய Stranded Workers Action Network (SWAN) எனும் தன்னார்வக் குழு, தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கியது. முதற்கட்ட ஊரடங்கு (மார்ச் 25 - ஏப்ரல் 14) முடிந்தவுடன் அந்த குழு வெளியிட்ட அறிக்கை, ஆய்வு செய்யப்பட்ட 11,000 த்திற்கும் மேற்பட்ட உழைக்கும் மக்களின் நிலை கவலைக்கிடமாக இருந்ததைத் தெரியப்படுத்தியது:

50 விழுக்காடு தொழிலாளர்களிடம் ஒரு நாளைக்கு தேவையான உணவுதானியக் கையிருப்பு கூட இல்லை

🡪 78 விழுக்காடு தொழிலாளர்களிடம் ரூ. 300 க்கும் குறைவான பணம் மட்டுமே இருந்தது

🡪 98 விழுக்காடு தொழிலாளர்களுக்கு அரசிடம் இருந்து எவ்வகைப் பண உதவியும் கிடைக்கவில்லை

🡪 96 விழுக்காடு தொழிலாளர்களுக்கு அரசிடம் இருந்து உணவு தானியம் கிடைக்கவில்லை.

70 விழுக்காடு தொழிலாளர்களால் அரசிடமிருந்தோ, பொது உணவுக்கூடங்களில் இருந்தோ, தொண்டு நிறுவனங்களிடம் இருந்தோ சமைக்கப்பட்ட உணவைப் (cooked food) பெறமுடியவில்லை

🡪 89 விழுக்காடு தொழிலாளர்களுக்கு அவர்கள் செய்த வேலைக்கான ஊதியம் வழங்கப்படவே இல்லை

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான Center for Sustainable Employment, 12 தன்னார்வ சேவை நிறுவனங்கள்/குழுக்களோடு இணைந்து, 12 மாநிலங்களில் 5000 தொழிலாளர்களைக் கைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு ஏப்ரல் 13 – மே 23 வரை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. வேலையிழப்பு, பசிப்பிணி மற்றும் குடும்பங்களின் பொருளாதாரச் சுமை பரவலாக, சமீபகாலத்தில் கண்டிராத அளவிற்கு அதிகரித்திருக்கிறது என்பதை அவர்களின் ஆய்வு தெரிவிக்கிறது.

உணவு தானியங்களாக, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் பணமாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரணம் மக்களின் துயர்துடைக்க போதவே போதாது என்பதுமட்டுமின்றி, அறிவிக்கப்பட்ட சிறியளவு நிவாரணமும் கணிசமான பகுதியினருக்கு சென்று சேரவில்லை என்பதும் தெரியவந்திள்ளது. இதை சுயேச்சையாக மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமமற்ற பொருளாதார வளர்ச்சி, மாநிலங்களுக்கு இடையே சமூக-பொருளாதார இடைவெளிகளை அதிகரித்துள்ளது. பின்தங்கிய பகுதிகளில் இருந்து முன்னேறிய பகுதிகளுக்கு ஏற்படும் வேலை சார்ந்த புலம்பெயர்வு இந்த சமமற்ற வளர்ச்சியின் வெளிப்பாடாக இருக்கிறது. இதன் விளைவாக நாட்டின் பெருநகரங்களில் ஏழ்மையில் வாழும் உழைப்பாளி மக்களின் என்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த போக்குகளோடு சேர்ந்து, பொது சுகாதாரம், மருத்துவ வசதிகள் மற்றும் சாமானிய மக்களுக்கு தரமான குடியிருப்புகளை உருவாக்குவதற்கு தேவையான முதலீடுகளை செய்யத்தவறியதால், ஒரு நெருக்கடி என்று வரும்போது உழைக்கும் மக்கள் எந்த அளவிற்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர் என்பது தற்போது தெளிவாகியுள்ளது” என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் The India Forum தளத்தில் எழுதியுள்ளனர்.

மக்களுக்கு பெரியளவில் நிவாரணம் வழங்க வேண்டுமென்றால் பொது விநியோக அமைப்பை (Public Distribution System) விரிவுபடுத்தி அனைவருக்கும் இலவசமாக உணவுதானியம் வழங்க வேண்டும்; நலத்திட்டங்களின் பயனாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்த வேண்டும்; ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் போலவே நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை நாடெங்கும் அமல்படுத்த வேண்டும் என்பது இவர்களுடைய வாதமாக உள்ளது. இவை புதிய பரிந்துரைகள் இல்லையென்றாலும், மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளாமல் இருப்பதைக் கவனப்படுத்த இவை அவசியமாகின்றன. பலதரப்பட்ட பொருளாதார அறிஞர்கள் இந்த திட்டங்களின் அவசியத்தை வலியுறுத்தி கட்டுரைகள் எழுதியுள்ளபோதும், கடன் வாங்கி கூடுதல் செலவு செய்யப்போவதில்லை எனும் நிலைப்பாட்டில் மோடி அரசு உறுதியாக உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் சட்டம்/திட்டத்திற்கு (MGNREGA) கூடுதலாக ரூ. 40,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது ஒன்றுதான் ஆறுதலான செய்தி.

நாட்டில் பசி மற்றும் பட்டினிச்சாவுகள், கிடங்குகளில் உபரி உணவுதானியங்கள்

டெல்லியில் இருக்கும் Society for Social and Economic Research எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள நெடிய ஆய்வுக்கட்டுரை ஒன்று, ஊரடங்கு காலத்தில் ஒன்றிய அரசின் உணவுதானிய மேலாண்மை படுமோசமாக இருந்ததைக் காட்டுகிறது. பொது விநியோகத் திட்டத்திற்காகவும், அவசரகாலப் பயன்பாட்டிற்காகவும் இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India) எல்லா நேரங்களிலும் குறைந்தபட்சம் 210 லட்சம் டன் உணவுதானியங்களைக் கையிருப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது அதன் கிடங்குகளில் இருக்கும் உணவுதானியங்களின் அளவு 878 லட்சம் டன். அதாவது 668 லட்சம் டன் உபரி உணவுதானியங்களைக் கைகளில் வைத்துக்கொண்டும், அவற்றை மக்களுக்கு வழங்காமல் மோடி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

நாட்டில் பல குடும்பங்கள் ஊரடங்கு காலத்தில் தாங்கள் உண்ணும் உணவின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது என்பதைப் பல ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர். எத்தனையோ பகுதிகளில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய பட்டினிச்சாவுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. விநியோகிப்பதற்கு லாயக்கற்ற உணவுதானியங்களின் அளவு இந்த ஆண்டு ஜனவரி 1 – மே 1 காலத்தில் 7.2 லட்சம் டன்னில் இருந்து 71.8 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது Pradhan Mantri Garib Kalyan Yojana (PMGKAY) என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட ரூ. 1.70 லட்சம் கோடி மதிப்பிலான முதல் பொருளாதாரத் தொகுப்பின்கீழ் ஏப்ரல், மே மாதங்களில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 55 லட்சம் டன் உணவுதானியங்களைவிட அதிகம் என்பதை இந்த ஆய்வுக்கட்டுரை அடிக்கோடிட்டு காட்டுகிறது. ‘மிகவும் சுமாரான பராமரிப்பு வசதிகளைக் கொண்ட கிடங்குகளில் உணவுதானியங்கள் அழுகி வீணாகிப்போனாலும் பரவாயில்லை, அதை மக்களுக்கு விநியோகிக்க மாட்டோம்’ என்ற மனப்பான்மையை என்னவென்று சொல்வது ?

மோடி அரசின் உணவுதானிய மேலாண்மை மக்கள்நலனைச் சார்ந்ததாக இருந்ததில்லை என்பதற்கு ஆதாரம், தொடர்ந்து அதிகரிக்கும் இந்திய உணவுக் கழகத்தின் கடன்சுமை. விநியோகம் செய்வதற்காக உணவுதானியங்களை வெளியே எடுக்கும்போது, அவற்றைக் கொள்முதல் செய்வதற்கும், பராமரிப்பதற்கும் இந்திய உணவுக் கழகம் செலவு செய்த தொகையை அரசு உணவுக் கழகத்திடம் செலுத்தும். அப்படி செலுத்தும் பணம் அரசு வழங்கும் உணவு மானியமாக கணக்கு காட்டப்படும்.

உணவு மானியத்தை குறைந்த அளவில் வைத்துக் கொள்வதற்காக ஒன்றிய அரசு ஒரு உத்தியைக் கையாண்டு வருகிறது. ஒருபுறம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (National Food Security Act) உணவு மானியத்திற்கு பட்ஜெட் வழியாக செய்யும் செலவை ஒன்றிய அரசு குறைத்துக்கொண்டு வந்துள்ளது. மறுபுறம், இந்திய உணவுக் கழகம் உணவுதானியங்களைக் கொள்முதல் செய்து பராமரிப்பதற்கு தேவைப்படும் பணத்தை சந்தையிலிருந்து அல்லது தேசிய சிறுசேமிப்புத் தொகையிலிருந்து (National Small Savings Fund) அதிக வட்டிக்கு கடனாக வாங்கிக்கொள்ளும் ஏற்பாடு மோடி ஆட்சியில் நடைமுறையில் இருக்கிறது. பொதுவெளியில் இருக்கும் தரவுகளின்படி, கடந்த சில ஆண்டுகளாக இந்திய உணவுக் கழகத்திற்கு ஏற்படும் செலவில் அரசு பட்ஜெட்டிலிருந்து ஏற்றுக்கொண்ட செலவின் பங்கு 60 விழுக்காட்டுக்கும் குறைவு.

உபரி உணவுதானியங்களை விநியோகம் செய்வதற்கு கிடங்குகளில் இருந்து வெளியே எடுத்தால்தான் அரசின் உணவு மானியம் அதிகரிக்கும். உணவுதானியங்களை வெளியே எடுக்காமல், அவற்றைப் பராமரிக்கும் சுமையை உணவுக் கழகமே கடன் வாங்கி ஏற்றுக்கொண்டால்? அப்படி ஏற்றுக்கொண்டால் உணவுக் கழகத்தின் கடன் சுமை அதிகரிக்கும்; பட்ஜெட்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை (fiscal deficit) குறையும். இதன் விளைவாக உணவுக் கழகம் திருப்பி செலுத்த வேண்டிய கடன் சென்றாண்டு டிசம்பர் மாத நிலவரப்படி ரூ. 2.36 லட்சம் கோடியாக இருந்தது.

மாநில அரசுகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திலும் சரி, பொருளாதார முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் சரி, மாநில அரசுகள் தங்களிடம் உள்ள குறைந்த நிதியாதாரங்களை வைத்துக்கொண்டு சமாளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்திய மாநிலங்களின் சொந்த வருவாயில் (own tax revenue) மாநில ஜிஎஸ்டி எனப்படும் SGSTயின் பங்கு சராசரியாக 45 விழுக்காடு. ஊரடங்கால் அந்த வருவாய் இல்லாமல் போய்விட்டது. சாராயம், பெட்ரோல் மற்றும் டீசல், பத்திரப் பதிவு மீது போடப்படும் வரியிலிருந்து மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வருமானத்தின் பங்கு, அவர்களின் சொந்த வருவாயில் சராசரியாக 15 விழுக்காடு. அதுவும் காணாமல் போய்விட்டது.

ஜிஎஸ்டி அமலாக்கதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்காக முதல் ஐந்தாண்டுகளுக்கு compensation cess வழியே திரட்டப்படும் வருவாய் பயன்படுத்தப்படும் என்று தனியாக ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு அவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படும். ஆனால் சில மாநிலங்களுக்கு சென்றாண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களுக்கான இழப்பீடே இன்னும் வழங்கப்படவில்லை; பல மாநிலங்களுக்கு டிசம்பர்-ஜனவரி மாதங்களுக்கான இழப்பீடு வழங்கப்படவில்லை.

மாநில அரசுகள் ஒரு நிதியாண்டில் வாங்கும் கடன், அவர்களுடைய மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் (Gross State Domestic Product – GSDP) 3 விழுக்காடாக மட்டுமே இருக்க முடியும் என்ற சட்டம் ஒன்று உண்டு. ஒரு மாநில அரசு சந்தையிலிருந்து கூடுதலாகக் கடன் வாங்க வேண்டும் என்றால் அதற்கு ஒன்றிய அரசின் அனுமதி வேண்டும். கடன் வாங்குவதற்கான இந்த உச்சவரம்பை 5 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை பல முதலமைச்சர்கள் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே வைத்திருந்தனர். அந்த கோரிக்கையை மே மாதம் ஏற்றுக்கொண்ட ஒன்றிய அரசு, கூடுதல் கடன் வாங்குவதற்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளது.

மாநில அரசுகள் அவர்களுடைய மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3.5 விழுக்காடு வரை கடன் வாங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், ஒன்றிய அரசு சொல்லும் சில “சீர்திருத்தங்களை” மேற்கொண்டால் மட்டுமே சந்தையிலிருந்து வாங்கும் கடனின் அளவு மொத்த உற்பத்தி மதிப்பில் 3.5 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக உயர்த்த அனுமதி வழங்கப்படும். இந்த நிபந்தனைகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மாநில அரசுகள் சந்தையிலிருந்து கடன் வாங்குவதற்கு ஒன்றிய அரசு இதுவரை நிபந்தனைகள் விதித்ததே இல்லை. அதிலும், நிதியாதாரங்கள் எல்லாம் காணாமல்போயுள்ள நிலையில் வேறுவழியின்றி கூடுதல் கடன் வாங்க மாநில அரசுகள் அனுமதி கேட்கும்போது, தேவையற்ற நிபந்தனைகள் விதிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது. மாநில அரசுகள் அதிக வட்டிக்குதான் சந்தையிடமிருந்து கடன் பெற முடியும். அதனால், இந்த நெருக்கடியை எதிர்கொள்ள, ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி, அந்த பணத்தை மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருந்திருக்கும். அதைச் செய்வதை விட்டுவிட்டு, சந்தையிலிருந்து கடன் வாங்குவதற்கு நிபந்தனைகள் விதிப்பது, மாநில அரசுகளின் குரல்வளையை நெரிக்கும் செயல்.அரசு நமக்கு நன்மையே செய்யும் என நம்பும் மக்களுக்கு தீமை உண்டாக கும் செயல்.

-நா. ரகுநாத்

------------------------------------------------

மியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து!

பங்குச்சந்தைக்கு முதலீடு செய்ய வருபவர்களுக்கு தொடக்க புள்ளி என்பது மியூச்சல் பண்ட் தான்.

புதிதாக வரும் நமக்கு அவ்வளவு தெரியாததால் நமக்கு பதிலாக விவரம் தெரிந்தவர்கள் நமது பணத்தை பார்த்துக் கொள்வார்கள் என்பதால் அதிக அளவில் பிரபலமாக இருந்தது.



ஆனால் சில மியூச்சல் பண்ட் மேனேஜர்கள் செய்த தவறுகள், நிறுவனங்கள் செய்த தவறுகள் போன்றவற்றின் காரணமாக அண்மையில் இந்த பரஸ்பர நிதிகளின் தோல்வி என்பது மிக அதிகமாகவே இருக்கிறது.

பொதுவாகவே இந்தியாவில் வங்கிகளை தவிர மற்ற எதில் வைக்கும் பணத்திற்கு  உத்தரவாதம் காகிதங்களில் தான் இருக்கும். சட்டத்தின் ஆயிரம் ஓட்டைகள் வழியாக பெரிய கைகள் தப்பிக்க, பணம் போட்டவர்களின் ஆவென்ற வாய் பிளப்பு தான் அதிகம் இருக்கும்.

மியூச்சல் பண்ட்டும் அந்த வகையில் தான் வருகிறது.

பொதுவாக மியூச்சல் பண்ட்டில் வைத்து இருக்கப்படும் நிதி மற்ற நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படும். பங்குகளின் ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப இந்த நிதியின் மதிப்பும் மாறும்.

ஆனால் இந்த அதிகப்படியான மாற்றங்கள் முதலீட்டின் மதிப்பில் நேர், எதிர் என்று இரு திசையிலும் செல்ல வாய்ப்பு இருக்கும் என்று கருதியதால் மியூச்சல் பண்ட்டில் இன்னொரு உட்பிரிவான Debt Fund என்பது அதிக பாதுகாப்பானதாக கருதப்பட்டது.

ஆனால் தற்போது அந்த நிலைமையும் மாறி விட்டது.

சொல்லப் போனால் Debt Fund என்பதை விட மற்ற பண்ட்கள் பரவாயில்லை என்று மாறி விட்டது.
இதற்கு அண்மை காலமாக நிறுவனங்கள் வெகு விரைவாக திவாலாகி வருவதும் ஒரு காரணம். 

Debt Fund என்பதில் போடப்படும் நிதி நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் தான் முதலீடு செய்யப்படுகிறது. இந்த கடன் பத்திரங்கள் பங்குகளை போல் அல்லாது ஒரு நிலையான வட்டியை அளித்து வந்தன.

ஆனால் நிறுவனங்கள் திவாலாகும் போது நிலை வரும்போது 
NCLT கோர்ட் வழியாக NPA சொத்துக்களை விற்று தான் இந்த கடன் பத்திரங்களில் உள்ள பணத்தை பெற முடியும்.

அண்மை காலமாக Jet Airways, Vodafone, Yes Bank என்று பிரபல நிறுவனங்களே திடீர் என்று Default அறிவிப்புகளை செய்து விடுகின்றன. அந்த சூழ்நிலையில் ஒரே நாளில் பண்ட் மதிப்பும் பெரிய அளவில் குறைந்து விடுகிறது. அண்மையில் 90% மதிப்பு குறைந்த வரலாறும் உள்ளது.

அப்படி தான் Franklin Templeton நிறுவனமும் தனது ஆறு Debt Fundகளை மூடுவதாக கூறி உள்ளது. அதற்கு அந்த பண்ட் வழியாக முதலீடு செய்த நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் செயல் இழந்ததும் ஒரு முக்கிய  காரணம்.

Franklin நிறுவனத்தை பொறுத்தவரை மியூச்சல் பண்ட் துறையில் பல தசாப்தங்களாக இயங்கி வரும் நிறுவனம். அந்த நிறுவனமே இவ்வாறு அறிவித்தது மியூச்சல் பண்ட் துறையில் இருந்த நம்பிக்கையை தளர்த்துள்ளது என்றே சொல்லலாம்.

அதாவது தற்போதைக்கு அந்த பண்ட்களை  வாங்க முடியாது. விற்கவும் முடியாது. பணத்தை திருப்பி எடுக்கவும் முடியாது. சில செய்திகள், போட்ட பணம் கிடைக்க ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம் என்று சொல்கின்றது.

நீதி மன்றமும் தவறு எங்கே நடந்துள்ளது என்பதை அறிய விசாரணையை முடுக்கி உள்ளது.

ஆக, முதலீடு செய்த பணம் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை. அந்த முதலீடுகள் மீதான வளர்ச்சியும் எதுவுமில்லை. இதற்கு நாமே முதலீடு நேரடியாக செய்து விடலாம் என்று தூண்டுகிற வகையில் தான் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளும் இருக்கின்றது.

தற்போதைய நிலையில் அரசு கடன் பாத்திரங்களில் முதலீடு செய்யும் மியூச்சல் பண்ட்கள் மீது கண் வைப்பது மட்டும் நல்லது.
நன்றி: முதலீடு.


------------------------------------------
பா.ஜ.க.பெண்ணின் 
அடங்காப் பிடாரித்தனம்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் சோனாலி போகட். இவர் கடந்தாண்டு நடைபெற்ற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோற்றவர். அதன்பிறகு பா.ஜ.கவில் தன்னை முழுமையாக இனைத்துக்கொண்ட சோனாலி போகட், அடிக்கடி தனது தொகுதிக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்தவகையில், நேற்றைய தினம் அப்பகுதியில் உள்ள விவசாயச் சந்தையை ஆய்வு செய்தார். அப்போது சில விவசாயிகள் அளித்த புகாரை அங்கிருந்த வேளாண் உற்பத்தி சந்தைக் குழு உறுப்பினர் சுல்தான் சிங்கிடம் கொடுக்கச் சென்றார். புகாரைப் பெற்றுக்கொண்ட சுல்தான் சின்ங்கிடம் சோனாலி போகட் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வாக்குவாதத்தின் போது திடீரென தனது காலில் இருந்த செருப்பைக் கழட்டி சுல்தான் சிங்கை சரமாரியாக சோனாலி போகட் தாக்கத் தொடங்கினார். தன்னை விட்டுவிடும்படி கேட்ட சுல்தான் சிங்கை தொடர்ந்து அடித்து கொலை மிரட்டல் விடும் வகையில் சோனாலி போகாட் பேசினார். இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் தற்போது அது வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து சுல்தான் சிங் கூறும்போது, “சோனாலி போகாட் புகார் கொடுத்தும் அதனை வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தேன். அவர் அடுத்த கணமே என்னை யார் என தெரிகிறதா? ஏன் ஆதம்பூர் தேர்தலில் என்னை எதிர்த்தாய் என கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டார். அப்போது நான் எந்த தவறு செய்யவில்லை என சமாதானம் செய்ய முயற்சிக்கும் போதே செருப்பால் அடிக்கத் தொடங்கிவிட்டார்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே இந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் சிங் சுர்ஜேவாலா, சோனாலி போகட் மீது உரிய நடவடிக்கையை எடுக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து சுல்தான் சிங் மற்றும் சோனாலி போகட் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா.ஜ.க எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு அதிகாரியை தாக்குவது இது முதல் முறையல்ல. பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் பல அதிகாரிகளை கொடூரமாக பா.ஜ.கவினர் தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

---------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?