போலீஸ் அதிகாரம் எதுவரை?
பிரிவு 144 மற்றும் ஊரடங்கு தடை உத்தரவுகளுக்கு இடையில் தொற்று நோய்க் காலங்களில் சட்ட விதிகள் நீர்த்துப்போய்விடக் கூடாது. தவறிழைத்தவர்களைக் காவல் துறையினர் பொது இடங்களில் தோப்புக்கரணம் போடச் சொல்வது போன்ற சில அத்துமீறல்கள் நன்மைக்காகச் செய்யப்படும் சாதாரண உடற்பயிற்சி போன்றது எனப் புறக்கணிக்கப்படுமாயின் அது பெரிய அத்துமீறல்களில் கொண்டு போய் சேர்க்கும்.
எந்தவொரு புதிய நிகழ்வும், புதிய சொற்களை வெளிக்கொணர்வது அல்லது பழைய சொற்களைப் புதுப்பித்தல் எனச் சொற்களஞ்சியத்தை விரிவுபடுத்துகிறது. 2004ஆம் ஆண்டு இந்தியாவில் சுனாமி தனது கோர தாண்டவத்தை நிகழ்த்தும் வரையில் சுனாமி என்ற சொல்லை ஒரு சிலரே அறிந்திருந்தனர். கொரோனா வைரஸ் தொற்றும் இதிலிருந்து வேறுபட்டதல்ல. சமூக இடைவெளி, லாக் டவுன், தொற்று நோய் வரைபட ஏற்றக்கோடு சமநிலை அடைதல் போன்ற சுனாமியைவிட பரந்த அளவில் பேசப்பட்டு வரும் சொற்கள் தொடர்புடைய பெருங்கொலையாளியான கொரோனாவுக்கு நன்றி.
ஊரடங்கு, 144 தடை உத்தரவு போன்ற பதங்கள் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஜனதா ஊரடங்குக்குப் பிறகு உரையாடல்கள், சமூக வலைதளங்களில் எனப் பல பரிமாணத்தில் உலா வருகின்றன. 144 என்பது குறிப்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ஐக் குறிக்கிறது. மாவட்ட செயல் நடுவர் (மாவட்ட ஆட்சியர்), கோட்டாட்சியர்கள், செயலதிகாரிகள் அரசால் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தின்படி தடை உத்தரவைப் பிறப்பிப்பார்கள். காவல் ஆணையரகம் இருக்கும் இடங்களில் அந்தந்த காவல் ஆணையர் செயலதிகாரியாகச் செயல்பட சிறப்பு அதிகாரம் பெற்றவராவார்.
144 தடை உத்தரவு என்றால் என்ன?
பிரிவு 144இன் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவானது ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது ஓர் இடம் அல்லது பகுதியில் வசிக்கும் நபர்களுக்கோ அல்லது ஓர் இடம் அல்லது பகுதிக்கு வந்துசெல்லும் நபர்களுக்கோ பொருந்தும். இந்த ஆணையானது செயலதிகாரியால் சட்டப்படி பணியமர்த்தப்பட்ட ஒருவருக்கு இடையூறு, எரிச்சல், காயம் விளைவிப்பதை தடை செய்யவோ, மனித உயிர், உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கலகம் அல்லது அவதூறு முதலியவற்றை தடுக்கவோ பயன்படுத்தப்படும்.
ஆகவே, ஊரடங்கை அமல்படுத்த இது ஒரு சிறந்த கருவியாகும். குறிப்பாக ஊரடங்கு விதிகளை அமல்படுத்த ஒரு தனிமனிதன் செய்ய வேண்டியது / செய்யக் கூடாதது எது என்பதை சொல்கிறது.
சாதாரண காலங்களில் இந்த ஆணையானது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பொதுக் கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவற்றை தடை செய்ய பிறப்பிக்கப்படுவதாகும் இந்த சூழ்நிலையில் இந்த ஆணையின்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவது தடை செய்யப்படுகிறது.
ஊரடங்கு, 144 தடை உத்தரவு வேறுபாடு
துரதிருஷ்டவசமாக அதே ஆணை ஊரடங்கு நேரங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கவே பல இடங்களில் பிறப்பிக்கப்படுகிறது. ஊரடங்கு என்ற வார்த்தை வந்ததுமே பொதுமக்கள் மட்டுமின்றி காவல் துறை அலுவலர்களும்கூட குற்ற நடைமுறைச் சட்டம் 144 பிரிவின் கீழ் வரும் அனைத்து ஆணைகளும் ஊரடங்கு எனப் பொருள் கொள்கின்றனர். பொதுமக்கள் நடமாட்டத்தைத் தடை செய்யும் ஊரடங்கு உத்தரவுக்கும், பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வழக்கமான உத்தரவுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாத நிலை ஏற்படுகிறது. இது தமிழகத்தைப் பொறுத்தவரை முற்றிலும் உண்மை. ஏனெனில், 1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தருணம் தமிழகத்துக்கு வரவேயில்லை.
ஊரடங்கு பற்றி தெரியாமல் சாலைகளில் நடமாடும் பொதுமக்களை நோக்கி விதிகளைப் பற்றித் தெரியாதா என தார்மீக மற்றும் சட்ட உணர்வுகளுடன் கொந்தளிக்கும் காவல் அலுவலர்கள் குறித்து பல வகை வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் காண்கிறோம். மாவட்ட ஆட்சியர் அல்லது செயலதிகாரியின் உத்தரவு உண்மையில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில் கூடுவதைத் தடை செய்வதாகும். சாதாரண மனிதனுக்கு இது பற்றி தெரியாது. துரதிருஷ்டவசமாக இதை அமல்படுத்த வேண்டிய அதிகாரிக்கும் இது தெரியாது.
முறையான காரணங்களுடன் சாலையில் நடமாடுபவர்களை முரட்டுத்தனமாக கையாள்வதும் மற்றும் பொது இடங்களில் தோப்புக் கரணங்கள் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுத்தும் வீடியோ பதிவுகள் பலவற்றையும் காண்கிறோம். விநோதம் என்னவென்றால் இவர்கள் யாரும் இடப்பட்ட ஊரடங்கு ஆணையை மீறியவர்கள் அல்லர்.
அதிகாரத்தை கையிலெடுத்த காவல் துறை.
சில நகரங்களில் காவலர்கள் சாலைகளில் காணப்படும் இருசக்கர வாகனங்களின் முன்பும் பின்பும் வண்ணப்பட்டை அடிப்பதுடன், குறிப்பிட்ட வண்ணம் தீட்டப்பட்ட வாகனங்கள் வாரத்தில் குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே வர வேண்டும் என்று சொல்கிறார்கள். இதன் நோக்கம் சாலைகளில் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதுதான். இது அர்த்தமுள்ள முயற்சி எனினும் இப்படி வண்ணப்பட்டை எந்த உத்தரவின் அடிப்படையில் செய்யப்படுகிறது என எவருமே கேட்டதில்லை. எந்த அடிப்படையில் வாகனங்களுக்கு வண்ணப்பட்டை தீட்டி, வாகனத்தை சேதப்படுத்தும் அதிகாரத்தை அவர்களாகவே எடுத்துக்கொண்டார்கள்?
இவ்வளவு கடுமையுடன் நடந்துகொள்வதை வாழ்த்துவதும், கைதட்டிப் பாராட்டுவதும் நிகழ்கிறது. சட்டத்தை மதித்து நடக்கும் குடிமக்கள் இந்த கொடுமையான நோய் பரவுதலின் தாக்கம் குறித்து கவலைகொள்வதுடன் கொரோனா என்னும் பெரிய எதிரியுடன் போராடிக்கொண்டிருக்கிறோம், அதற்கிடையில் வெறும் தொழில்நுட்பமும், சட்ட நுணுக்கங்களும் குறுக்கே நிற்கக் கூடாது என ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், காவலர்கள் இதுபோன்ற ஒரு நிலையை எடுக்க இயலுமா?
பிரிவு 144இன்படி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவானது ஒரு நபரை சில நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கச் செய்வது போன்ற தடை அல்லது ஒருவரது மேலாண்மையில் பொறுப்பில் உள்ள சில சொத்துகளின் மீது சில சட்டப்படியான உத்தரவை நிறைவேற்றுவது என்பதாகும். இதில் ‘சில’ என்ற சொல் மூன்று இடங்களில் வருகிறது. ஆணையைப் பிறப்பிக்கும் அதிகாரியின் இசைவுக்கேற்ப அதை எடுத்துக்கொள்ளலாம். சில என்பதற்கு சரியான விளக்கம் இல்லாத காரணத்தால் பல்வேறு பொருள்களில் பயன்படும்.
உச்ச நீதிமன்றம் பிகார் மாநில கே.கே.மிஸ்ரா வழக்கில், “சுதந்திரம் மற்றும் நீதிக்கான அடிப்படை கொள்கைகளை எதிர்க்கும் எந்தவொரு கட்டுப்பாடும் நியாயமானதாக இருக்க முடியாது” என்று கூறியுள்ளது. குறிப்பிட்ட நடவடிக்கை அல்லது செயல் அல்லது குறிப்பிட்ட ஆணை என்பதன் அடிப்படை பொருள் அவை சுதந்திரம் மற்றும் நீதிக்கான அடிப்படைக் கொள்கைகளுடன் கூடிய ஒத்திசைவைப் பொறுத்தே அமையும்.
பொதுமக்கள் ஒருவருடைய உயிர், உடல்நலம், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய சில செயல்களை செய்வது தடை செய்யப்பட வேண்டும் என அலுவலர்கள் நம்புகிறார்கள். பிரிவு 144 குற்ற நடைமுறைச் சட்டத்தில் உயிர், உடல்நலம், பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுவதைத் தடுக்க சில செயல்களில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்ற கருத்து அடங்கும்.
அதற்காக பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்கும் ஊரடங்கு உத்தரவு போன்ற தவறான உத்தரவை அமல்படுத்த அவசியமில்லை. நேரடியான உத்தரவே போதுமானது. ஆனால் உரிய தேவைக்கேற்ப விதிவிலக்குகளுடன் அமைவது நலம்.
குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவு 144இன் கீழ் பிறப்பிக்கும் ஆணை, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்ததற்கானது. எனினும், அதைச் செயல்படுத்தும் விதம் மனித உரிமைகளுக்கு எதிரானது என உடனே வழக்கு தொடரப்படலாம். கொலையாளியான கொரோனா நோய்க்காக இடப்பட்ட உத்தரவு அப்படி ஓர் எதிர்வினையை சந்திக்க வாய்ப்பில்லை. அப்படியே நடந்தாலும் குறைந்த அளவு அமர்வுகளுடன் நடக்கும் நீதிமன்றங்கள் குறித்த நேரத்தில் சமாளிக்க முடிவெடுக்கலாம். எது தடை செய்யப்பட வேண்டும் என்பதில் தெளிவும் தேவைக்கேற்ப தெரிந்தெடுத்த சொற்களுடன் கூடிய ஆணையாக இருக்க வேண்டும். பொதுமக்களும் எது தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும். செயல்படுத்தும் விளிம்பு நிலையிலுள்ள அதிகாரிகளுக்கும் தெரிந்திருக்க வேண்டும். வீட்டிலேயே தங்குவதற்கான முறையீடு பற்றி செவிசாய்க்க வேண்டும். ஆனால், அதை மீறும்போது எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கை உரிய உத்தரவுடன் எடுக்க வேண்டும்.
சிறிய அத்துமீறலும், பெரிய அத்துமீறல்களும்
“உடைந்த ஜன்னல்” கோட்பாடு காவலர்களுக்கும் பொருந்தும். பொதுமக்களை நடுவீதியில் தோப்புக்கரணம் போடவைக்கும் சிறிய அத்துமீறல்கள் குற்றமற்றதாகவும் நல்லெண்ணத்துடனும் பார்க்கப்படும். அதுவே மிகக் கொடுமையான அத்துமீறல்கள் அண்மையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு காலத்தில் கடைகளைத் திறந்து வைத்ததற்காக சாத்தான்குளத்தில் இரு நபர்கள் காவல் துறையினரால் கொண்டு செல்லப்பட்டு அது மரணம் வரை சென்றது போன்றதற்கு வழி வகுக்கும்.
சட்டத்தைக் கடைப்பிடிப்பது அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஒருவருக்கு மற்றொரு அரசு நிறுவன ஊழியரால் ரூ.100 அபராதம் கட்டச் சொல்லி ஒரு துண்டு சீட்டு அளிக்கப்பட்டது. அதில் குற்றம்: ஊரடங்கு விதிகளை மீறுவது, பிரிவு: காலை நடைப்பயிற்சி என இருந்தது. இது சமூக வலைதளங்களில் சித்திரித்தவையாக இருக்கலாம் அல்லது உண்மையிலேயே அரசு நிறுவன ஊழியராக இருந்து செய்த குற்றம், குற்றப்பிரிவு, அபராதம் விதிக்கும் அலுவலர் பெயர், பதவி எதுவும் குறிப்பிடாத ரசீது அளிக்கப்பட்டால் அது நல்லாட்சி என்பதற்கு சாபக்கேடாக அமையும்.
ஜியோவன்னி பொக்காசியோ தனது ‘தி டெக்கமரான்’ என்னும் நாவலில் 1348ஆம் ஆண்டு ஏற்பட்ட கொடுமையான பிளேக் நோய் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். “வேதனையும் துன்பமும் மிக்க எங்கள் நகரத்தில் மனித மற்றும் ஆன்மிகம் குறித்து சட்டமியற்ற தகுதி படைத்தவர்கள் அனைவரும் தன்னிலை தாழ்ந்து அழிவைத் தேடிக்கொண்டனர். அமைச்சர்களும் அலுவலர்களும் பிற மனிதரைப் போன்றே இறந்தோ அல்லது நோயுற்றோ அல்லது கவனிப்பார் யாருமின்றி கைவிடப்பட்டவர்களாகவோ அலுவலகங்களில் எவ்வித பணியும் ஆற்றாமல் அழிந்து போயினர். எனவே அனைவருக்கும் அவரவருக்கு விருப்பமானதைச் செய்ய உரிமை உள்ளது” என்று குறிப்பிட்டார்.
தற்போது அமைச்சர்கள், நிறைவேற்றும் அலுவலர்களுக்கு குறைபாடு ஏதும் இல்லை. எனவே, சட்டம் இயற்றுபவர்களின் மரியாதைக்குரிய அதிகாரம் சிதைவடைவதற்கு எந்த காரணமும் இல்லை. மாட்சிமை தாங்கிய சட்டத்தை இயற்றுபவர்களுக்கு அந்த மாட்சிமை, சட்டத்தை செயல்படுத்துபவர்களாலும், குடிமக்களாலும் அளிக்கப்படுகிறது. சட்ட விதிகளின் கோட்பாடு கொடுநோய் தாக்கக்காலத்தில்கூட மங்காது நிலைபெறட்டும்.
க.ராமானுஜம்
ஓய்வு டி.ஜி.பி்
நன்றி: அவுட் லுக்
தமிழில்: எம்.பி.நடராஜன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி.
---------------------------------------
குற்றவாளி முதலமைச்சர்.
"ஒரு காவல் நிலையத்தையே நிர்வகிக்க முடியாமல் தோல்வியடைந்த- காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொலைகளை, “உடல்நலக்குறைவால் மரணம்” என்று மனசாட்சி இல்லாமல் மறைத்த பழனிசாமி முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கு விசாரணையை உடனடியாக சி.பி.சி.ஐ.டி மேற்கொள்ள வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மாண்புமிகு நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு, கணவரையும் - மகனையும் இழந்து நிற்கும் அந்தக் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நீதி.
இந்த வழக்கினை விசாரணை செய்ய சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குச் சென்ற நீதிபதியை, முதலமைச்சர் பழனிசாமியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் மிரட்டியிருப்பது, “பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள்” என்பதை நினைவுபடுத்துகிறது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைப் பதிவாளரிடம் கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் 29.6.2020 மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள அறிக்கை - ஒரு நீதித்துறை நடுவருக்கே காவல் நிலையத்தில் இந்தக் கொடுமை என்றால், ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தியிருப்பார்கள்; எப்படியெல்லாம் விடிய விடிய லத்தியால் அடித்துத் துன்புறுத்தியிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.
கோவில்பட்டி நீதிமன்ற நடுவரின் அறிக்கையில்,
“1) “காவல் நிலையத்தில் இருந்த குமார் கூடுதல் டி.எஸ்.பி எவ்வித முறையான வணக்கமும் செய்யாமல் தனது உடல்பலத்தை காட்டுவதற்கான உடல் அசைவுகளுடன் மிரட்டும் தொனியிலான பார்வையுடனும் உடல் அசைவுகளுடன் நின்றார்.
2) காவல் நிலைய பொது நாட்குறிப்பேடு மற்றும் இதர பதிவேடுகளை கேட்டபோது அவற்றை சமர்ப்பிக்கவில்லை.
3) அங்குள்ள சி.சி.டி.வி. ஹார்ட்டிஸ்க் தினப்படி தானாகவே அழிந்து போகும் அளவிற்கு ஏற்பாடு (Settings) செய்யப்பட்டிருந்தது.
4) சம்பவம் நடைபெற்ற 19.6.2020 தொடர்பான காணொளிப் பதிவுகள் அழிக்கப்பட்டு இருந்தன.
5) நீதிமன்ற ஊழியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் அங்கு நின்ற காவலர்கள் கிண்டல் செய்த காரணத்தால், சம்பவ இடத்து சாட்சியத்தை பதிவு செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
6) விடிய விடிய லத்தியால் அடிக்கப்பட்டு- லத்தி மற்றும் டேபிளில் இரத்தக்கறை படிந்துள்ளது.
7) லத்திகளைக் கொடுக்கும்படி கூறியும் அங்கிருந்த காவலர்கள் காதில் ஏதும் விழாதது போல் இருந்தார்கள். மகாராஜன் என்னைப் பார்த்து “உன்னால ஒன்னும் புடுங்க முடியாது” என்று கூறினார். லத்தியைக் கேட்ட போது “வரேன் இரு” என்று ஒருமையில் பேசினார்.
8) போலிஸ் சூழ்ந்து கொண்டு நடக்கும் நிகழ்வுகளை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டும், நீதிமன்ற ஊழியர்களை மிரட்டிக் கொண்டும் இருந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ள அதிர்ச்சி தரும் வரிகள்- நீதிபதியையே அ.தி.மு.க. ஆட்சியில் மிரட்டுவார்கள் என்பதற்கான சாட்சியமாக அமைந்துள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் மாண்புமிகு நீதியரசர்கள், “நீதித்துறை நடுவர் விசாரணை செய்வதைத் தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் தன்னிடம் உள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது” என்று தாங்களாகவே முன்வந்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது, போலிஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமி வெட்கித் தலைகுனிய வேண்டிய பெருத்த அவமானம்.
கூடுதல் டி.எஸ்.பி என்பவர் தூத்துக்குடி மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட அளவிலான அதிகாரி. அவர் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு எப்படிச் சென்றார்?
உயர்நீதிமன்றம் அனுப்பிய ஒரு நீதிபதியை ஒரு காவலர் தானாகவே மிரட்டினார் என்பதை எப்படி நம்புவது?
மன உளைச்சல் இருந்தால் யாரை வேண்டுமானாலும் மிரட்டலாமா?
இந்த மிரட்டல் - உருட்டல், ஆவணங்கள் தர மறுப்பு, காவல் நிலையத்தில் கொலைக்கான சாட்சியங்கள் அழிப்பு ஆகிய அனைத்தும் கூடுதல் டி.எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோரளவில் முடிவு எடுத்து அரங்கேற்றப்பட்டவை என்பதை நம்ப முடியாது.
உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரிக்கும் ஒரு வழக்கில், துறை அமைச்சரான முதலமைச்சர் பழனிசாமிக்குத் தெரியாமல் இவை அனைத்தும் நடந்து விட்டன என்பதைத் துளியும் நம்ப முடியவில்லை!
“ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் தரையில் அமர்ந்து புரண்டதால் ஊமைக் காயம் ஏற்பட்டது” என்று போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை பொய்யானது என்பதற்கு ஆதாரமாக, ஜெயராஜின் பக்கத்துக் கடையில் இருந்த கேமிராவில் உள்ள வீடியோ காட்சிகள் நேற்றைய தினம் வெளியானது. இப்போது காவல் நிலையமே ரத்தக்களறியாக இருந்திருக்கிறது என்பது போன்ற நீதித்துறை நடுவரின் அறிக்கை அதை நிரூபித்துள்ளது.
இருவரும் “உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்” “மூச்சுத் திணறல் ஏற்பட்டதால்” மருத்துமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்தார்கள் என்று முதலமைச்சர் சொன்னதன் பின்னணி இந்த “ரத்தக் களறியை” மறைக்கத்தானே!
குறிப்பாக, “காவல் நிலைய மரணம் அல்ல” – இது ஏதோ நீதிமன்றக் காவலில் ஏற்பட்ட விவகாரம் என்று திசை திருப்பத்தானே!
உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகு கூடுதல் டி.எஸ்.பி.,யும், டி.எஸ்.பி.,யும் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு- மகராஜன் என்ற காவலர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட எஸ்.பி.,யை கடைசிவரை காப்பாற்ற நினைத்து- இன்று அவரையும் மாற்றியிருக்கிறார்கள்.
உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கினை எடுத்த பிறகுதான் இவை அனைத்தும் நடந்துள்ளதே தவிர- பாதிக்கப்பட்ட ஜெயராஜ் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்ற உணர்வுடன் அ.தி.மு.க. அரசே தானாகவும் செயல்படவில்லை; பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் போராடிய பிறகும் செய்யவில்லை.
“சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறை அதிகாரிகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்” என்று உயர்நீதிமன்றமே மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டது தமிழகக் காவல்துறை வரலாற்றில் மிகப் பெரியதொரு கரும்புள்ளி! பிறகு போலிஸ் துறையை முதலமைச்சர் இன்னும் வைத்திருப்பது ஏன்?
“நீதித்துறை நடுவர் அறிக்கையும், உடற்கூராய்வு அறிக்கையும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின்கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரங்களாக உள்ளன” என்று உயர்நீதிமன்றமே கண்டுபிடித்துச் சொல்லியுள்ள நிலையில்- துறை அமைச்சராக இருந்த முதலமைச்சர் பழனிசாமி எப்படி அவர்கள் “உடல்நலக்குறைவால்” இறந்தார்கள் என்று மறைத்து, அபாண்டமாக அறிக்கை வெளியிட்டார்?
ஆகவே, இரட்டைக் கொலையை மறைக்க சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகளுடன் முதலமைச்சரும் இணைந்தே செயல்பட்டார் என்பதைத் தவிர, இதற்கு வேறு என்ன அர்த்தம்?
இவ்வளவுக்குப் பிறகும், அங்குள்ள சில காவல்துறை அதிகாரிகளின் அராஜகம், வெறியாட்டம் குறித்து உயர்நீதிமன்றம் இவ்வளவு கண்டிப்புடன் உத்தரவுகளைப் பிறப்பித்த பிறகும், முதலமைச்சர் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. பெண் எஸ்.பி. ஒருவரே பாலியல் புகார் அளித்து- வழக்கு நிலுவையில் உள்ளவரும், முதலமைச்சர் உள்ளிட்ட பல அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் புகார்களை திட்டமிட்டு நீர்த்துப் போக வைத்தவருமான முருகன் தென் மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி.,க்கள் டி.கே. ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் சிக்கியுள்ள “குட்கா வழக்கில்” விசாரிக்கப்பட்ட ஜெயக்குமாரை, தூத்துக்குடி எஸ்.பி.,யாக நியமித்திருக்கிறார். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, உள்நோக்கத்துடன் இதுபோன்ற அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்த முதலமைச்சருக்கு என்ன அக்கறை பாருங்கள்!
இரட்டைக் கொலை நடந்த பிறகும்- நேர்மையான திறமையான காவல்துறை அதிகாரிகளை சட்டம்- ஒழுங்குப் பணிகளில் நியமிக்க வேண்டும்- பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் பழனிசாமிக்கு எள்முனையளவு கூட இல்லாதது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஆகவே, போலிஸ் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு காவல் நிலையத்தையே நிர்வகிக்க முடியாமல் தோல்வியடைந்த- காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொலைகளை, “உடல்நலக்குறைவால் மரணம்” என்று மனசாட்சி இல்லாமல், உண்மையை வேண்டுமென்றே மறைத்த பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார். எனவே, அவர் உடனடியாக முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
“கமிஷன்” “கரெப்ஷன்” “கலெக்ஷன்” என்பதால், “பதவியை” விட்டுச் செல்ல மனமில்லை என்றால்- குறைந்தபட்சம் போலிஸ் துறையின் பொறுப்பையாவது வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இ.த.ச. 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து உடனே சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்வதோடு- அவர்களுக்கு உதவியாக இருந்து- இந்த இரட்டைக் கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் தவறிழைத்தோர் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்- அப்பாவிகளாக காவல் நிலையத்திற்கு வந்து, பிரேதங்களாக அனுப்பப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்." என திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------