வீதியில் மக்கள் போராட வருவார்கள்.
சிவசேனா மோடிக்கு எச்சரிக்கை.
நாட்டில் கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு முடங்கி போயிருக்கிறது. ஆனால் மத்திய அரசில் உள்ள பாஜகவோ பொருளாதார சரிவு, மக்களின் சுகாதாரம், வாழ்வாதாரம் என எது குறித்து கவலைப்படாமல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும், மக்கள் நலனுக்கு எதிரான அவசர சட்டங்களை பிறப்பிப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.
இது ஒரு புறமிறக்க, பாஜக எம்.பி பிரக்யா தாகூர் அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா போய்விடும் என மக்களிடையே வதந்திகளையும் அலட்சிய மனப்பான்மையையும் ஏற்படுத்தி வருகிறார்.
இவற்றையெல்லாம் கண்டித்துள்ள சிவசேனாவின் சஞ்சய் ராவத், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது.
“கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மாதச்சம்பளம் பெரும் ஏராளமான மக்கள் வேலையிழந்து அவதியுற்றிருக்கிறார்கள். தொழில் துறை, வர்த்தகத்துறை முடங்கியதால் ரூ.4 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படியாக இக்கட்டான சூழல் நிலவும் வேளையில் ரஃபேல் விமானம் மூலம் குண்டுகள் வீசுவதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலையும் பிரச்னைகளையும் தீர்த்துவிட முடியாது. பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தின் மூலம் மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது?
மத்திய அரசு அளிக்கும் வாக்குறுதிகளாலும், நம்பிக்கைகளால் மட்டுமே மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுவிடாது. ஏனெனில் மக்கள் தங்கள் எதிர்காலத்தின் பாதுகாப்பற்ற நிலை குறித்து கடுமையான கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. கொரோனாவால் உருவாகியுள்ள வேலையின்மையை அரசு தீர்க்காவிட்டால் பிரதமருக்கு எதிராக மக்கள் போராடும் சூழல் உண்டாகும்.
கொரோனா பரவலை சரிவரை கையாளாமல் பொருளாதார சிக்கலையும் இழுத்துவிட்ட இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடியது போன்று இந்தியாவிலும் நிகழலாம். பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்யக் கோரி மக்கள் முறையிடும் காலமும் கணியலாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிவசேனா எந்த வகையிலும் பா.ஜ.கவிற்கு இந்துத்துவா கொள்கையில் குறைந்ததல்ல.
-------------------------------------------------+
ஏன் வேண்டாம்
பா.ஜ.க கல்விக் கொள்(ளை)கை?
தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மும்மொழித்திட்டத்தைத் திணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் 'தேசிய கல்விக் கொள்கை-2020'-ஐ தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டுமெனவும் - செயல்படுத்திட மறுக்க வேண்டுமெனவும் - அனைத்துக் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைத்து இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.
இந்த கடிதம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், கொங்கு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் சார்பில் அனுப்பட்டுள்ளது.
அதில், “பொருள்: மும்மொழித்திட்டத்தைத் திணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் "தேசிய கல்விக் கொள்கை-2020"-ஐ தமிழக அரசு முழுமையாக எதிர்க்க - செயல்படுத்திட மறுக்க - அனைத்துக் கட்சிகள் சார்பில் கோரிக்கை - தொடர்பாக.
இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கும் எதிராகவும் - தமிழ்நாட்டில் பேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் இருமொழிக் கொள்கையை நிராகரித்து, மும்மொழிக் கல்வித்திட்டத்தை முன்னிறுத்தும் வகையிலும் அமைந்துள்ள "தேசிய கல்விக் கொள்கை-2020"க்கு அனைத்துக் கட்சிகளும், எவ்வித மறு சிந்தனையுமின்றி, கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொரோனா பேரிடர் இந்திய மக்களை வாட்டி அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தேசத்தின் இறுக்கமான இந்த வேளையில், தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய பா.ஜ.க. அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதில் இருந்தே, அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம். 2016-ல் தொடங்கி - திரு. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு, திரு. கஸ்தூரிரங்கன் குழு, என்றெல்லாம் அமைத்து - உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கை, கல்வியில் மதச்சாயம் பூசி - வணிகமயப்படுத்தி - சமஸ்கிருதம், இந்திக்கு முக்கியத்துவம் அளித்து - கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமை, சமத்துவம், சம வாய்ப்பு, பன்முகத்தன்மை ஆகிய அனைத்திற்கும் விரோதமாக அமைந்திருக்கிறது.
66 பக்கங்கள் கொண்ட "தேசிய கல்விக் கொள்கை 2020"-ன் முகவுரையின் பக்கம் 5-ல் "கற்பித்தலிலும், கற்பதிலும் பன்மொழியையும், மொழித் திறனையும் ஊக்குவிப்பதுதான் கல்விக் கொள்கையின் அடிப்படைத் தத்துவம்" (Promoting multilingualism and the power of language in teaching and learning) என்று கூறியிருப்பதற்கு மாறாக, மீதியுள்ள அனைத்துப் பக்கங்களிலும் நம் தமிழ்மொழிக்கு எதிரான எண்ணவோட்டமே பிரதிபலிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
உதாரணமாக:-
1. பாரா 4.11-ல், "எங்கெல்லாம் முடிகிறதோ" (Wherever possible) ஐந்தாம் வகுப்பு வரையாவது பயிற்றுமொழி தாய்மொழியாக இருக்க வேண்டும்" என்பதும், "முடிந்தால் 8-ஆம் வகுப்பு வரையிலும் தொடரலாம்" என்பதும் மத்திய அரசுக்கு மும்மொழித்திட்டத்தின் மீது இருக்கும் ஆர்வத்தையே அதிகம் வெளிப்படுத்துகிறது.
2. அதே பாராவில், "ஒரு மொழியைக் கற்பிக்கவும், கற்றுக் கொள்ளவும் அந்த மொழி பயிற்றுமொழியாக இருக்க வேண்டியதில்லை" என்று கூறுவதிலிருந்து, எப்பாடு பட்டாவாது இந்தி மொழியை தமிழகத்தில் திணித்து விட வேண்டும் என்பதில் மத்திய பா.ஜ.க. அரசு முனைப்புடன் செயல்படுவதாகவே தெரிகிறது.
3. "மூன்று மொழித்திட்டத்தை நிறைவேற்ற மற்ற மாநிலங்களில் இருந்து ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்" என்று பாரா 4.12-ல் அறிவுறுத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
4. பாரா 4.13-ல், "மூன்று மொழித்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது,
தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968-ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு - அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் இருமொழிக் கொள்கைக்கும், 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்புவரை தமிழ்மொழிப்பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டு - நடைமுறையில் உள்ள 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்திற்கும் முற்றிலும் எதிரானது.
5. பாரா 4.17-ல், "பள்ளி முதல் உயர் கல்வி வரை அனைத்து மட்டங்களிலும் - அறிவைப் பெற மிக முக்கியமானதாகக் கருதி - சமஸ்கிருதம் கற்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக மும்மொழித் திட்டத்தில் ஒன்றாக சமஸ்கிருதத்திற்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்" (Sanskrit will thus be offered at all levels of School and higher education as an important enriching options for students, including as an option in the three language formula) என்பது, இருமொழிக் கொள்கையை அடியோடு புறக்கணித்து - சமஸ்கிருதத்தை தமிழ்நாட்டில் திணிக்கும் பகிரங்க முயற்சியாகும்.
6. ஆனால் தமிழக மக்கள் அதிர்ச்சியடையும் வகையில் - அடுத்த பாரா 4.18-ல், "தமிழ் இலக்கியத்தைப் பாதுகாத்து வைக்கலாம்; இந்தியா முழுமையாக வளர்ச்சி பெற்ற பிறகு நாளைய தலைமுறை அந்த மொழி பற்றி பிற்காலத்தில் அறிவு பெற உதவும்" (Tamil literature must be preserved... As India becomes a fully developed country, the next generation will want to partake in and be enriched) என்று கூறியிருப்பது தமிழ்மொழியை - தமிழர்களை - ஏன், தமிழ்நாட்டையே நாக்கில் தேன் தடவி ஏமாற்றும் அடாவடிச் செயல்.
செம்மொழியாம் தமிழ்மொழியை, தேசிய கல்விக் கொள்கையில் இவ்வாறு சிறுமைப்படுத்தி - சமஸ்கிருதத்தைத் திணித்திடும் உள்நோக்கில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த தேசிய கல்விக் கொள்கை, தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடைமுறையில் இருந்து வரும் கல்வி முறையைச் சிதைத்து பின்னடைவை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. அதில் மேலும் தமிழகக் கல்விக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அவற்றுள்:
1. கல்வியில் வேதக் கலாச்சாரத்தைத் திணிப்பது,
2. இடஒதுக்கீடு குறித்து எதுவும் சொல்லாமல் சமூகநீதியைப் புறக்கணிப்பது,
3. பெண் கல்வி குறித்து கவலைப்படாது - பெண்ணுரிமையைக் காவு கொடுத்திருப்பது,
4. மூன்று வயதுக் குழந்தையை முறைசார்ந்த பள்ளியில் சேர்த்து குழந்தைகளின் உரிமையைப் பறிப்பது,
5. தொழில் கல்வி என்ற பெயரால், தமிழகத்தில் பல்லாண்டுகளுக்கு முன்னரே தோல்வி கண்ட குலக் கல்வியை மீண்டும் அமல்படுத்துவது,
6. மதிய உணவு வழங்கும் திட்டத்தை மாற்றியமைப்பது,
7. மாநில அளவில் 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு,
8. 10+2 என்று இருக்கின்ற வெற்றிகரமான 'பிளஸ் டூ' கல்வி முறையை 5+3+3+4 என்று மாற்றியமைப்பது,
9. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு,
10. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பறிக்கும் விதத்திலும் - மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் விதத்திலும் உயர் கல்வியை வகுத்திருப்பது,
11. தன்னாட்சியுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது; ஆகியவற்றை இப்போது அலட்சியப்படுத்தினால், எதிர்காலத் தமிழ்ச் சமூகம் தரம் தாழ்ந்து வீழ்ந்து விடும்.
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் - இந்த, "தேசிய கல்விக் கொள்கை-2020' தமிழ்நாட்டில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைபெற்று வரும் கல்வி முறைக்குச் சற்றும் பொருந்தாத - நமது தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பின்னுக்குத் தள்ளி - சமஸ்கிருதத்தை முன்னிறுத்துவதாக அமைந்துள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கைக்கு விரோதமான மும்மொழித்திட்டத்தைத் திணிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆகவே, தமிழக மக்களின் நலனுக்கும் - மாணவர் சமுதாயத்தின் நலனுக்கும் எதிரான - வருங்காலத் தலைமுறைக்கும் - பண்பட்ட நமது பன்முகக் கலாச்சாரத்திற்கும் ஊறுவிளைவிக்கும் உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த, "தேசிய கல்விக் கொள்கை-2020"-ஐ தமிழக அரசு முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அனைத்துக் கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட தமிழக மாணவர் சமுதாயத்தை - காவிமயக் கல்வியின் பக்கமும், பன்முகக் கலாச்சாரத்திற்கு எதிராகவும் திசை திருப்பும் இந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையும் - தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006 ஆகியவையே தொடரும் என்றும் பகிரங்கமாக அறிவித்து; அதுதொடர்பாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
-------------------------%--------------------------
புத்தர்- ராமர்- பாபர்.
குஜராத்தில் புனரமைக்கப்பட்டு சோம்நாத் கோயிலை திறந்துவைக்க 1951ஆம் ஆண்டு அப்போதைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அரசு சார்ந்த விடயங்களிலிருந்து மதத்தை தனித்து வைப்பதில் மிகவும் உறுதியாக இருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத்துக்கு இதுதொடர்பாக எழுதிய கடிதத்தில், "இந்த நிகழ்வுக்கு நீங்கள் தலைமை தாங்கவில்லை என்றால் அது நல்லது" என்று குறிப்பிட்டிருந்தார். பல்வேறு முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியின் கீழ் கேட்பாரற்று கிடந்த சோம்நாத் கோயில் முகலாய மன்னர் ஒளரங்கசீப்பால் தகர்க்கப்பட்டது.
1947ஆம் ஆண்டில் சர்தார் படேல் அதைப் பார்வையிட்டபோது, அதன் மறுகட்டமைப்பு தொடங்கி 250 ஆண்டுகள் கடந்திருந்தன. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற நிகழ்வில் அரசு சார்பில் ராஜேந்திர பிரசாத் கலந்துகொள்வது மேலும் பிரச்சனையை தீவிரமாக்கும் என்று நேரு கவலை கொண்டார். "துரதிர்ஷ்டவசமாக, இதனால் பல தாக்கங்கள் உள்ளன…" என்று நேரு எழுதினார். "இந்த நேரத்தில் சோம்நாத் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டாம் என்று நான் நினைத்தேன்." நேருவின் ஆலோசனையை புறக்கணித்து ராஜேந்திர பிரசாத் அந்த நிகழ்வுக்கு சென்றார். ஆனால், அங்கே அவர் முழுமையான சகிப்புத்தன்மை குறித்த காந்திய வழியை, மதங்களின் சாராம்சத்தில் கவனம் செலுத்துவதை, நல்லிணக்கத்தை அவர் வலியுறுத்தினார்.
ஆனால், வரும் ஆகஸ்டு 5ஆம் தேதி நடைபெறவுள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவையும், சோம்நாத் நிகழ்வையும் பொருத்திப் பார்க்க முடியாது. தலித் சமூகத்தை சேர்ந்த இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதே சமயத்தில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடும் கொரோனா வைரஸ் உலகத் தொற்றுப் பரவல், மோசமான நிலையில் இருக்கும் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தலில் இருக்கும் இந்தியாவின் கிழக்கு எல்லைப்பகுதி உள்ளிட்டவை இந்த விழாவில் பங்கேற்பதற்கு இந்திய பிரதமருக்கு எவ்வித வகையிலும் தடையாக இல்லை. மாறாக, இந்த நிகழ்வு ஏற்கனவே மிகைப்படுத்தப்பட்டு, அதற்காக நாட்டைத் தயார்படுத்துகிறார்கள்.
சரயு ஆற்றங்கரையில் உள்ள இந்தியாவின் மிக அழகான நகரங்களில் ஒன்றான அயோத்தி ஒரு செழிப்பான கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. இதை பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் சாகேத் என்று கூறுகின்றனர். ராம ஜென்ம பூமி வளாகம் ஒருகாலத்தில் புத்த மத தலமாக இருந்ததாக கூறிய பௌத்த பிக்குகள், அந்த இடத்தை யுனெஸ்கோ அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதையடுத்து, கடந்த ஜூலை 15ஆம் தேதி ஆசாத் பவுத் தரம் சேனா அமைப்பு சார்பில் அங்கு உள்ளிருப்பு போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
சமணர்கள் உரிமை கோரும் இந்த இடத்தில் சீக்கியர்களுக்கும் தொடர்பு உள்ளது. மேலும், இதே இடத்தில்தான் பாபர் மசூதி 400 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. இதை ராமர் பிறந்த இடமாக கூறுவதை விட இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் நல்லிணக்க மையமாக மாற்றியிருக்க முடியும்.
ஆனால் வேறு விதமான அரசியலை கூர்மைப்படுத்துவதற்கான கருவியாக இது பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் அமைதியற்ற இளம் தலைமுறையினரிடையே சமநிலையை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாக அல்லாமல், மத நம்பிக்கையை கசப்பான பிரிவினை உண்டாக்கும் கருவியாக மாற்ற இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த விவகாரத்தின் கடந்த காலம் கடுமையானது. இந்தியர்களை 'எழுப்ப' ஒரு ரத யாத்திரை ஒன்று 1990ல் எல்.கே. அத்வானியால் தொடங்கப்பட்டது. இந்த பிரசாரம் இந்தியாவின் எட்டு மாநிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்டது. ஆனால், இது இந்தியாவின் சாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்த மண்டல் கமிஷனின் அறிக்கையை வி.பி. சிங் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதை திசைதிருப்புவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டது.
1990ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் நடந்த இந்த பிரசாரத்தின் காரணமாக சுமார் 300 பேர் இறந்ததாகவும், மேலும் கலவரங்களும் வன்முறைகளும் ஏற்பட்டதாகவும் அரசியல் அறிஞர்களின் பதிவுகள் கூறுகின்றன. இதையடுத்து பீகாரின் அப்போதைய முதலமைச்சர் லாலு பிரசாத் சமஸ்திபூரில் அத்வானியின் வேனை நிறுத்தி இதை முடிவுக்கு கொண்டுவந்தார். இதைத்தொடர்ந்து, 1992இல் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட சம்பவம் இந்திய குடியரசை உலுக்கியது மட்டுமின்றி, இது மரணங்களுக்கும் சமூக பிளவுகளுக்கும் வித்திட்டது.
2019ஆம் ஆண்டில் அயோத்தி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், முழு நிலத்தையும் கோயிலுக்கு வழங்கிய போதிலும், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று மசூதியை இடித்தது "மிக மோசமான சட்ட விதிமீறல்" என்றும் "பொது வழிபாட்டுத் தலத்தை அழிக்கும் திட்டமிடப்பட்ட செயல்" என்றும் தெரிவித்திருந்தது.
இருந்தபோதிலும், அயோத்தி ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நாட்டின் பிரதமரே செல்வது, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு உலுக்கப்பட்டது என்றால், இந்த நிகழ்வு இந்திய குடியரசாக நாம் தற்போது அங்கீகரித்திருக்கும் கட்டமைப்பை வேறு ஏதோவொன்றாக மாற்றுவதாக அச்சுறுத்துகிறது.
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் நகரில் வசிக்கும் ஆய்வாளரும், 'தி எமர்ஜென்சி க்ரோனிகல்ஸ்' என்ற தனது புத்தகத்திற்காக விருது வென்ற எழுத்தாளருமான பேராசிரியர் ஞான் பிரகாஷ், "இந்த அடிக்கல் நாட்டு விழா என்பது சம குடியுரிமைக்கான அரசியலமைப்பு கொள்கையின் அடித்தளத்தின் மீதான தாக்குதலாகும். ஒரு மதச்சார்பற்ற குடியரசின் யோசனை ஒருபுறம் இருக்க, மதத்தைப் பொருட்படுத்தாமல் சம குடியுரிமையின் அடிப்படை ஜனநாயகக் கொள்கை கூட இனி பாதுகாப்பாக இருக்காது. பாஜக அரசாங்கமும், அச்சுறுத்தப்பட்ட நீதித்துறையும் ஒரு எதேச்சதிகார இந்து ராஷ்டிரத்திற்கு முறையாக அடித்தளம் அமைத்து வருகின்றன. அம்பேத்கரும் நேருவும் தங்கள் கல்லறைகளில் புரள்வார்கள்" என்று கூறுகிறார்.
நார்வேஜியன் ஸ்கூல் ஆஃப் தியாலஜியை சேர்ந்த ஆய்வாளரான எவியன் லீடிக், "இது ஒரு நீண்ட செயல்முறையின் புதிய தொடக்கம் என்பது மட்டுமின்றி இந்திய குடியரசு மாற்றியமைக்கப்படுவதும் ஆகும். ஆகஸ்டு 5ஆம் தேதி ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டுவது, 1992இல் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதுக்கு பிறகு இந்துத்துவா இயக்கம் சந்திக்கும் ஒரு வரலாற்று தருணத்தை பிரதிபலிக்கிறது.
ஒரு காலத்தில் கொடிய கலவரத்தால் மேற்கொள்ளப்பட்ட செயல், இன்று அரசாங்க ஆதரவுடைய முயற்சிகளால் சட்டபூர்வமானது. ராமர் கோயிலைக் கட்டுவது ஒரு பெரும்பான்மை தேசியவாதத்தைக் குறிக்கிறது. இதில் இந்து மதம் மற்ற எல்லா மதங்களுக்கும் மேலாக மதிப்பிடப்படுவதை போன்று தெரிகிறது. இது மோதி அரசிடமிருந்து நாம் சந்திக்கும் இந்துத்துவ பொருண்மை கொண்ட கடைசி நிகழ்வாக இருக்காது."
முதல் இந்திய குடியரசான 'நேரு' சகாப்தத்தில் சூரியன் மறைந்திருந்தால், இது இரண்டாவது இந்திய குடியரசின் உறுதியான சமிக்ஞை என்று சில வல்லுநர்கள் நம்புகிறார்கள். இந்த கட்டத்தில் நம்பிக்கை அல்லது இனத்தை குடியுரிமையுடன் தொடர்புபடுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இணைகிறது.
ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதை விட அது மேற்கொள்ளப்படும் தேதி இன்னும் அதிகம் உணர்த்துவதாக பேராசிரியர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் கூறுகிறார். "கடந்த ஆண்டு இதே நாளில்தான் ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் பறிக்கப்பட்டது. ஒரே தேதியில் மேற்கொள்ளப்படும் இரண்டு விடயங்களும் அரசியலமைப்பின் பன்முக கலாச்சாரத்தை முதலாக கொண்டு இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதையே நோக்கமாக கொண்டுள்ளன. இதன் மூலம், இஸ்ரேல், துருக்கி, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளின் வரிசையில் இந்தியாவும் காலடி எடுத்து வைக்கிறது."
மகாத்மா காந்தி, ஆகஸ்ட் 9, 1942இல் ஹரிஜனில் இவ்வாறாக எழுதினார் - "இந்துஸ்தான் இங்கு பிறந்து வளர்ந்தகள், வேறெந்த நாடும் இல்லாதவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது. எனவே, இது பார்சிக்கள், பெனி இஸ்ரேலியர்கள், இந்திய கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பிற இந்து அல்லாதவர்கள் என அனைவருக்குமானது. சுதந்திர இந்தியாவில் எந்த இந்து அரசும் இருக்காது, இது எந்தவொரு மத பிரிவினருக்கோ அல்லது சமூகத்தினருக்கோ அல்லாமல், மாறாக மத வேறுபாடு இல்லாமல் முழு மக்களின் பிரதிநிதிகளையும் அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசு ஆகும்."
எனவே, ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா என்பது இந்தியா அரசின் புதிய மற்றும் தனித்துவமான யோசனையின் அடித்தளமாகும். இதில் துன்பகரமான விடயம் என்னவென்றால், மிகச் சிறந்த மனிதனுக்கு அடையாளமாக கூறப்படும் ராமரின் பெயரில் இவையெல்லாம் நடக்கிறது.
தற்போது அவரை வேறொரு வகையில் பயன்படுத்துவதற்கான ஒரு புதிய உந்துதல் இது. இது ஒரு புதிய இந்தியா என்று அழைக்கப்படலாம். அல்லது இதனை புதிய இந்திய குடியரசின் கல்லறை வாசகம் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.