வெற்றி தொடரட்டும்......

  • 1993ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதனால் அங்கு எதிர்ப்புக் கிளம்பியதால் வேறு இடத்திற்கு மாற்றத் திட்டமிடப்பட்டது.
  • 1994ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஆலையை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. நாளடைவில் ஆலை அமைக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு அதிகளவில் உடல் நிலை மோசமடைந்ததால் தேசிய அறக்கட்டளை என்ற அமைப்பு 1996ஆம் ஆண்டு ஆலையை மூடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

சட்டப் போராட்டங்கள்:

  • அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 1998ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது. அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
  • அதனால் 1998ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆலையை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஆலை இயங்க அனுமதி பெற்றது.
  • அதன்பின் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்ட விதிமீறல்களை சுட்டிக்காட்டி, ஆலையை மூடும்படி உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. அந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டது.

ரூ. 100 கோடி இழப்பீடு:

  • 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் விஷவாயு கசிவு காரணமாக பலர் பாதிப்படைந்தனர், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. அதனால் ஆலையை மூட உத்தரவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாகவும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடாகவும் 100 கோடி ரூபாயை வழங்க ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

13 பேர் உயிரிழப்பு:

  • மீண்டும் 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஆலையில் பணிகள் நடப்பதாக எழுந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
  • அதன் விளைவாக 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி காற்றையும், நீரையும் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாடு அரசும் உத்தரவிட்டது.
  • அந்த ஆண்டே அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்தது.
  • அந்த அறிக்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதேபோல ஆலையைத் திறக்க அனுமதி கோரி, ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுதாக்கல் செய்தது.

பசுமை தீர்ப்பாயம் உத்தரவு ரத்து:

  • அதில் உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்து, வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்:

  • 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

39 நாள்கள் விசாரணை:

  • 2019ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி முதல் அமர்வில் வழக்கு விசாரணை தொடங்கியது. 39 நாள்கள் தொடர் விசாரணை நடைபெற்றது. 2020ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி, இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாவது அமர்வில் ஆலையைத் திறக்க அனுமதி கோரிய வழக்கில் நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
  • அதன்பின்னர் நீதிபதி சத்ய நாராயணன், மதுரைக் கிளைக்கு மாற்றப்பட்டார். அதனால் அவ்வழக்கு, நீதிபதி சசிதரன் (ஓய்வு பெற்றுவிட்டார்) தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், அவர் இவ்வழக்கை விசாரிக்க இயலாது எனக் கூறி, வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தார்.

வழக்கு அமர்வு மாற்றம்:

  • வழக்கை விசாரிக்க நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி பவானி சுப்புராயன் அடங்கிய சிறப்பு அமர்வு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 18ஆம் தேதி வழங்குவதாகத் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும்:

  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 18) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து, ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தீர்ப்பின் முழு விவரம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதாந்தா நிறுவனம் மேல் முறையீடு:

  • இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவை சட்டமாகப் பிறப்பிக்க வேண்டும் என்றும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் தீர்ப்பிற்குத் தடை ஏதும் விதிக்கப்படாமலிருக்க உடனடியாக 'கேவியட்' மனுவினைத் தாக்கல்செய்ய வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?