எல்லாவற்றுக்கும் கொரோனாதானா பழி.

 இந்திய பொருளாதாரத்தில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட கொரோனா மட்டுமே காரணமல்ல என்றும் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் சரிவில் இருந்து பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது என்றும் விமர்சிக்கிறார் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன்.

கடந்த ஆண்டின் காலாண்டு ஜிடிபி புள்ளிவிவரங்களோடு இந்த ஆண்டு வெளியாகியுள்ள முதல் காலாண்டு தகவல்களை ஒப்பிட்டு கூறும் ஜெயரஞ்சன், இந்த ஆண்டு இந்தியா சந்தித்துள்ள வீழ்ச்சியின் தாக்கம் பல ஆண்டுகள் நீடிக்கும் என்கிறார்.

கேள்விஇந்தியா பொருளாதாரம் 24 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளதற்கு கொரோனா ஊரடங்கு முக்கிய காரணமா?

ஜெயரஞ்சன்
படக்குறிப்பு,

ஜெயரஞ்சன்

இன்று இந்தியா சந்தித்துள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா ஒரு காரணம் ஆனால் அதுமட்டுமே காரணம் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் கீழ்நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தது என்பதை கவனியுங்கள். கொரோனா முடக்கத்தால் மேலும் பாதிப்படைந்து (மைனஸ்)-23.9சதவீதத்திற்கு சென்றுவிட்டது. ஏற்கனவே இருந்த பொருளாதார மந்தநிலை, கொரோனா முடக்கமும் சேர்ந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் ஆதாரப்பூர்வமாக நமக்கு சொல்வது இதைதான். முன்பே ஏற்பட்ட சுனக்கம் தற்போது அதிகரித்துள்ளது. குறைந்தபட்சம் முந்தைய காலத்தில் நாம் சரியான பொருளாதார முடிவுகளை எடுத்திருந்தால், கொரோனாவால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்திருக்கலாம். ஆனால் தற்போது சரிவில் இருந்து பாதாளத்திற்கு சென்றுவிட்டோம்.

கேள்விஇந்தியா இதுவரை இல்லாத அளவு நிலைகுலைந்துவிட்டதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். இதற்கு காரணமாக அமைந்த பொருளாதார கொள்கை முடிவுகள் என்னென்ன?

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மோசமான சரிவை இந்தியா சந்திக்க தொடங்கியது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முக்கிய காரணங்கள். ரூ.1,000 மற்றும் ரூ.500 செல்லாது என அரசாங்கம் அறிவித்தவுடன், பணத்தை நேரடியாக கொடுத்து புழங்கும் முறையில் சிக்கல் ஏற்பட்டது. சாதாரண மக்களிடம் பணபுழக்கம் குறைந்தால், அது நேரடியாக நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். அது நடந்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஜிஎஸ்டி அறிவித்தார்கள். இதனால் சிறு மற்றும் குறுவியாபாரிகள், சுயதொழில் செய்பவர்கள் முற்றிலுமாக பாதிப்படைந்தார்கள். இந்த இரண்டின் தாக்கத்தை தான் தற்போது நாம் ஜிடிபி சரிவு புள்ளிவிவரங்களில் பார்க்கிறோம்.

ஜிடிபி

கொரோனாவுக்கு முன்னர், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கட்டுமான தொழிலாளர்கள் வேலை செய்வதை பார்க்கமுடிந்தது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் முதலீட்டை அதிகரிக்க வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார்கள். ஆனால் ஏன் கட்டுமான தொழில், ஏற்றுமதி இறக்குமதி குறைந்துள்ளது?வேளாண்துறைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள துறை கட்டுமானத்துறை. முறைசாரா, அமைப்புசாராத கூலி தொழிலாளர்களை மையமாக கொண்டு கட்டுமான துறை உள்ளது. இதில் நேரடியான பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. பணமதிப்பிழப்பு காரணத்தால் கட்டுமான தொழில் முடங்கிவிட்டது. இந்த வீழ்ச்சி உடனே ரியல் எஸ்டேட் வளர்ச்சியை பாதித்தது.

கடந்த ஆண்டு முதல் காலாண்டுடன் இந்த ஆண்டின் முதல் காலாண்டை ஒப்பிட்டுப் பார்த்தால், சிமெண்ட் நுகர்வு 38 சதவீதம் குறைந்துள்ளது. பொருளாதார நடவடிக்கை வேகம் எடுத்தால், சிமெண்ட் நுகர்வு அதிகரிக்கும். இந்த ஆண்டு சிமெண்ட் நுகர்வு 38 சதவீதம் குறைந்துவிட்டது. அதேபோல உற்பத்தி மற்றும் கட்டுமான துறையில், இரும்பின் பயன்பாடு 57 சதவீதம் குறைந்துள்ளது. சரக்கு லாரி உள்ளிட்ட வணிகரீதியான வாகனங்களின் விற்பனை 85 சதவீதம் குறைந்துவிட்டது. நிலக்கரியின் உற்பத்தி மற்றும் நுகர்வு 15 சதவீதம் குறைந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார மந்தநிலை நீடிப்பதோடு, புதிய தொழில்கள் தொடங்கவில்லை என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மக்கள் போதுமான அளவு பொருட்கள் மற்றும் சேவைகளை நுகரவில்லை என்றால் சரிவு ஏற்படும். அதன் விளைவு ஏற்றுமதி, இறக்குமதி குறைந்துவிட்டது.

கேள்விவிவசாயதுறையில் 3.4 சதவீதம் முன்னேற்றம் உள்ளது. விவசாயிகள் நஷ்டத்தை சந்திப்பதாக கூறும் நேரத்தில், இந்த முன்னேற்றம் எப்படி சாத்தியம் ஆனது? மற்ற துறைகளில் வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது?

நல்ல மழை காரணமாக உணவு தானிய உற்பத்தி அதிகரித்தது. வரலாறு காணாத அளவு உணவு தானிய உற்பத்தி இருந்ததால் இந்தியாவின் உணவு நிறுவனத்தில் சேமிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இது நேரடியாக விவசாயிகளுக்கு பயன் தராது. அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு விலை கிடைக்கவில்லை என்பது தொடர்கதையாகதான் உள்ளது. மாறாக, உணவு தானிய சேமிப்பு அதிகரித்துள்ளது.

ஜிடிபியில் முக்கியமாக கவனிக்கவேண்டியது தனிநபர் நுகர்வு குறியீடு. அதாவது ஒவ்வொரு தனிநபரும் பொருட்களை வாங்குவதற்கு செலவிடும் பணம் தனிநபர் நுகர்வு என கணக்கிடப்படும். இந்த நுகர்வுதான் ஜிடிபியில் 58 சதவீதத்தை தீர்மானிக்கும். இந்த நுகர்வு பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட 1/4பங்கு நுகர்வு குறைந்துவிட்டது. மக்கள் செலவு செய்யவில்லை. வங்கிகளில் முதலீடு அதிகரித்துள்ளது. அதாவது மக்கள் இருக்கும் பணத்தை சேமித்துவிட்டார்கள். செலவு செய்ய தயாராக இல்லை என்பதை உணர்த்துகிறது.

தனிநபர் நுகர்வு செலவு குறையும்போது, அரசாங்கத்தின் செலவு அதிகரிக்கவேண்டும். ஆனால் அதிகரிக்கவில்லை. அதோடு, தொழில் முதலீடுகள் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு தொழில் முதலீடுகளின் அளவு சுமார் 11 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது அதுவெறும் ஐந்து லட்சம் கோடியாக சுருங்கிவிட்டது. அரசாங்கம் கடன் கொடுத்து தொழில் முதலீடுகளை அதிகப்படுத்துவதாகவும், அதன் மூலம் பொது மக்களின் பொருட்களை வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்று கூறியது. ஆனால் கடன் வாங்கவும், முதலீடுகளை செய்யவும் பலரும் தயாராகவில்லை. இதன் விளைவு மிகவும் கடுமையானதாகவும், நீண்ட காலத்திற்க்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்துவிட்டது.

,-----------+-----------+---+---------------------------

கடவுள் செயலா?

முன்னீள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசை, கொரோனா பெருந்தொற்றை கையாள்வதில் திறனற்று உள்ளதாகவும், அதன் விளைவு, உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியை ஆழமான சரிவுக்கு கொண்டு சென்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

"நாங்கள் ஏற்கெனவே அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறோம். உலகெங்கிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவை எச்சரித்தனர். மூன்று நாட்களுக்கு முன்புதான், இந்திய ரிசர்வ் வங்கி தனது ஆண்டு அறிக்கையில் என்ன நேரப்போகிறது என முன்னறிவித்தது" என்று சிதம்பரம் கூறினார்.

இந்த ஆண்டின் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகக் குறைவான அளவாக -23.9% ஆக சரிந்தது. இது கோவிட் -19 பெருதொற்றின் விளைவு மற்றும் பொது முடக்கத்தால் ஏற்பட்டதாகவும், ஏற்கெனவே மந்தமாக இருந்த இந்திய பொருளாதாரத்தில் அது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்தது.

இந்திய பொருளாதார மொத்த உற்பத்தி வளர்ச்சி, இதுபோன்ற ஆழமான பாதாளத்துக்கு செல்லும் என்பதை பிரதமரையும் இந்திய நிதியமைச்சரையும் தவிர அனைவரும் அறிந்திருந்தார்கள் என்று சிதம்பரம் கூறினார்.

மோதி அரசின் குட்டு வெளிப்பட்டதுசபட மூலாதாரம்,

"அவர்களின் செயல்பாட்டால் நாடு, ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய விலையை செலுத்தி வருகிறது. ஏழைகளும் பாதிக்கப்படக்கூடியவர்களும் விரக்தியில் உள்ளனர். மோதி அரசு மட்டுமே கட்டுப்பாடற்று அக்கறையற்று உள்ளது. யதார்த்தத்தை உணராமல் அரசாங்கம் ஒரு போலி விளக்கத்தை கூறி வந்தது. ஆனால் அந்த குட்டு தற்போதைய உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பீடுகளால் வெளிச்சத்துக்கு வந்து விட்டது," என்று சிதம்பரம் தெரிவித்தார்.

மோதி அரசு, பெருந்தொற்றுக்கு முன்னும் பின்னும் குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அறிவித்துள்ளது குறித்தும் அவை செயலாக்கம் பெற சிறிது காலமாவது தேவைப்படாதா? என்று கேட்டபோது, கடுமையாகவே பதிலளித்தார் சிதம்பரம்.

"மோதி அரசு செய்ய வேண்டியதை சரியாக செய்தது அல்லது போதுமானதாக செய்தது என எந்த பொருளாதார வல்லுநரும் கூற மாட்டார். ரிசர்வ் வங்கியின் அறிக்கையைப் படியுங்கள். மோதி அரசு கொரோனா தொற்றுக்கு முன்னும் பின்னும் என்ன செய்திருக்கிறது என தெரிய வரும். அதன் பிறகும் மோதி அரசுக்கு இன்னும் நேரம் தேவைப்படும் என நீங்கள் நினைத்தால், நான் உங்களுக்காக வருந்த மட்டுமே முடியும்" என்று சிதம்பரம் கூறினார்.

மேலும் அவர், விவசாயம், வனத்துறை மற்றும் மீன்பிடித்தொழில் ஆகிய துறைகள் மட்டுமே 3.4% வளர்ச்சியடைந்தவையாக என்றும் சுட்டிக்காட்டினார்.

"பொதுவாகவே, விவசாயத்துறையில் அரசுக்கு இருக்கும் பொறுப்பு மிகக் குறைவு. அது தவிர, ஒவ்வொரு துறையின் செயல்பாட்டை அரசாங்க கொள்கையே தீர்மானிக்கும். எதை உற்பத்தி செய்வது, எதை விற்பது, எதை வாங்குவது என அனைத்தும் அந்த கொள்கைப்படியே நடக்கும்.

கொரோனா கடவுளின் செயலா?

அதிர்ஷ்டவசமாக விவசாயம் இந்த நாட்டின் விவசாயிகளுக்கும், அவர்களை ஆசீர்வதித்த கடவுளுமே தங்களின் உற்பத்தி, விற்பனையை தீர்மானிக்க விடப்பட்டுள்ளனர். பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுளின் செயல் என குற்றம்சாட்டிய இந்திய நிதியமைச்சர், இந்த நாட்டின் விவசாயிகளையும்  அவர்களை ஆசீர்வதிக்கும் கடவுளுக்கும்தான் ரகசியமாக நன்றி தெரிவிக்க வேண்டும். காரணம், தற்போது விவசாயத்தைத் தவிர மற்ற எல்லா துறைகளும் கடுமையாக சரிந்துள்ளன. உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், ஹோட்டல் அனைத்தும் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைந்துவிட்டன, "என்று சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.

ஜிடிபி சரிவு: "வெட்கமில்லாத, தவறுகளை ஒப்புக்கொள்ளாத மோதி அரசு" - ப. சிதம்பரம் பேட்டி

2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த சரிவு, பெரும் மந்தநிலை மற்றும் உலகளாவிய நிதி நெருக்கடியை (2008 இல் இருந்ததை விட) விட ஆழமாகவும் அழிவுகரமாகவும் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறதே என கூறியபோது, அதை தாமும் ஏற்பதாக சிதம்பரம் ஒப்புக்கொண்டார்.

"ஆமாம். ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை சரியானது. ஆனால் அது மிகவும் தாமதமாக வந்தது. அதன் அறிக்கை மூன்று நாட்களுக்கு முன்புதான் வெளிவந்தது. கடந்த 6 மாதங்களாக, கொரோனா தொற்று பரவலுக்கு நீண்ட காலம் முன்பே இப்படிப்பட்ட நிலை வரும் என நாங்கள் எச்சரிக்கை செய்தோம். பொது முடக்கத்தை அறிவித்த பிறகு கடந்த மூன்று மாதங்களாக எச்சரிக்கை செய்தோம். அனைத்து எச்சரிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மறுஆய்வு செய்து இப்போது அனைத்தையும் தனது அறிக்கையில் பிரதிபலித்துள்ளது.

இந்த நாட்டில் தேவை நுகர்வு அதிர்ச்சி தரும் வகையில் பாதிக்கப்படும் என நாங்கள் கூறவில்லையா, நுகரும் தேவை கடுமையாக பாதிக்கப்படும் என நாங்கள் கூறவில்லையா, நுகரும் தேவை ஊக்குவி்க்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தவில்லையா, ஏழை மக்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என நாங்கள் கூறவில்லை?" என சிதம்பரம் வாதிட்டார்.

மேலும் அவர், "இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் மற்றும் பிற பொருளாதார வல்லுநர்கள் இப்போது ஊக்கத்தொகுப்புதவி அவசியம், ஊதிய பாதுகாப்பு, தேவை நுகர்வை அதிகரிக்க வேண்டும் என குரல் கொடுக்கிறார்கள். இந்த திடீர் ஆத்மாக்கள் கடந்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு முன்பு எங்கே போனார்கள்" என்று கேள்வி எழுப்புகிறார்.

இந்திய பொருளாதாரத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும் என கேட்டபோது, சிதம்பரம் உறுதியாகவே பதிலளித்தார்.

"குறுகிய காலத்தில் எந்தவொரு வளர்ச்சியையும் என்னால் பார்க்க முடியவில்லை. தற்போதைய நிலைமை சீரடைந்து, மீண்டும் புத்துயிர் பெற நீண்ட காலம் ஆகலாம் என்பது ரிசர்வ் வங்கியின் பார்வை. என்னைப்பொருத்தவரை, முதலாவது சாதகமான வளர்ச்சியை நாம் பெற இன்னும், பல மாதங்கள் ஆகக்கூடும். ஆனால், ஆட்சியில் இருக்கும் இந்த அரசாங்கமும் அதன் கணிக்க முடியாத தன்மையும் அது மேலும் மேலும் தவறுகளைச் செய்யக்கூடியதாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. அப்படி மேலும், மேலும் தவறு செய்தால் பொருளாதாரத்தை மீட்க இன்னும் அதிக காலம் ஆகக்கூடும்" என்கிறார் சிதம்பரம்.

இரண்டு தீர்வு, ஆனால் பலன் இல்லை

அப்படியென்றால் பெருந்தொற்று காலத்தில் உலக அளவில் நாடுகள் பொருளாதார தாக்கத்தை அனுபவிக்கும் வேளையில் இந்தியா எதிர்கொண்டுள்ள நிலைமைக்கு என்னதான் தீர்வாக இருக்கும் என சிதம்பரத்திடம் பிபிசி செய்தியாளர் கேட்டார்.

"கொரோனா பெருந்தொற்று நமது பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இதை நாங்களும் கூறி வருகிறோம். அதனால்தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ள சரியான எதிர் நடவடிக்கைகளை முன்மொழிந்தோம்.

சிதம்பரம்

உலக அளவில் பெருந்தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா ஒன்றும் விதிவிலக்கு அல்ல. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். இங்கே கேள்வி என்னவெனில், நீங்கள் எவ்வளவு விரைவில் மீளப்போகிறீர்கள் என்பதுதான். அதற்கு இரண்டே காரணிகள் மட்டுமே தீர்வாக இருக்கும். ஒன்று, பெருதொற்றின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உங்களுக்கு திறன் இருக்க வேண்டும். இரண்டாவதாக, பெருந்தொற்றுநோயின் விளைவை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் திறன் உங்களுக்கு இருக்க வேண்டும். முதலாவது தீர்வை ஆராயும்போது, சில விஷயங்கள் அரசின் கட்டுப்பாட்டை மீறி இருக்கும் என்றாலும் பெருந்தொற்றை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கையை அரசு எடுத்தே ஆக வேண்டும்.

இரண்டாவது தீர்வை ஆராய்ந்தால், அரசு எல்லா எதிர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பெருந்தொற்றை கட்டுப்படுத்தியாக வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் எந்தவொரு எதிர் நடவடிக்கையையும் எடுப்பதில்லை. மோதி அரசாங்கத்துக்கு வெட்கமும் இல்லை. தனது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் செய்யாது. இவை எல்லாம் எதிர்பார்த்தவைதான் என்கிறார் சிதம்பரம்.

----------------------------+---------------------------------

டாலரை ஓய்க்கும் 

சீனா& ரஷ்யாகூட்டணி.

டாலரின் அதிகாரம் வீழ்கிறத? சீனா மற்றும் ரஷ்யா செய்யும் அரசியல்

அமெரிக்க நாணய மதிப்பான டாலர், "உலகளாவிய நாணயம்" என்ற அடையாளத்தை பெற்றுள்ளது. டாலர் மற்றும் யூரோ - சர்வதேச வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானவை மற்றும் ஏற்றுக்கொள்ளப்படுபவை. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் வைத்திருக்கும் அன்னிய செலாவணி இருப்பில் 64 சதவிகிதம், அமெரிக்க டாலர்களாகும்.

அத்தகைய சூழ்நிலையில், டாலரே உலகளாவிய நாணயமாக உள்ளது. இது, அதன் வலிமை மற்றும் அமெரிக்க பொருளாதார பலத்தின் அடையாளமாகும்.

சர்வதேச தர நிர்ணய அமைப்பின் (இண்டர்நேஷ்னல் ஸ்டாண்டர்ட் ஆர்கனைஸேஷன்) பட்டியலின்படி, உலகளவில் 185 நாணயங்கள் உள்ளன. இருப்பினும், இந்த நாணயங்களில் பெரும்பாலானவை, தனது நாட்டிற்குள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் ஒரு நாணயம் எத்தனை பிரபலமாக உள்ளது என்பது, அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் வலுவை பொறுத்தது.

உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த நாணயம் யூரோ. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளின் அந்நிய செலாவணி இருப்புக்களில் 19.9 சதவீதம் யூரோ ஆகும்.

டாலரின் வலிமை மற்றும் அங்கீகாரம், அமெரிக்க பொருளாதாரத்தின் வலிமையை பிரதிபலிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. மொத்த டாலரின் 65 சதவீதம் , அமெரிக்காவிற்கு வெளியே பயன்படுத்தப்படுகிறது.

உலகளவில் 85 சதவிகித வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கம் உள்ளது. உலகில் 39 சதவிகித கடன்கள், டாலர்களில் கொடுக்கப்படுகிறது. ஆகவே, வெளிநாட்டு வங்கிகளுக்கு, சர்வதேச வர்த்தகத்திற்கு டாலர்கள் தேவை.

டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ரஷ்யாவும் சீனாவும் ஒன்றிணைந்து வருகின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு 'நிதி கூட்டணிக்கு' வழிவகுக்கும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

டாலர் உலகளாவிய நாணயமாக இருப்பது ஏன்?

1944 ஆம் ஆண்டு, பிரெட்டன் உட்ஸ் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து டாலரின் நடப்பு வலுவடைதல் ஆரம்பமானது. அதற்கு முன், பெரும்பாலான நாடுகள் தங்கத்தை மட்டுமே ,சிறந்ததாகக் கருதின. அந்த நாடுகளின் அரசுகள் தங்கத்தின் தேவையின் மதிப்பின் அடிப்படையில், தங்கள் நாணயத்தை முடிவு செய்வதாக உறுதியளித்தன.

டாலரின் அதிகாரம் வீழ்கிறத? சீனா மற்றும் ரஷ்யா செய்யும் அரசியல்

நியூ ஹாம்ஷயரின், பிரெட்டன் உட்ஸில் உலகின் வளர்ந்த நாடுகள் கூடி, அமெரிக்க டாலருக்கு எதிரான அனைத்து நாணயங்களின் பரிமாற்ற வீதத்தை நிர்ணயித்தன. அந்த நேரத்தில், உலகின் மிக அதிக தங்க இருப்பு , அமெரிக்காவிடம் இருந்தது. தங்கத்திற்கு பதிலாக, டாலரின் மதிப்பிற்கு ஏற்ப தங்கள் நாணயத்தை முடிவு செய்ய, இந்த ஒப்பந்தம் மற்ற நாடுகளுக்கு அனுமதி அளித்தது.

1970 களின் முற்பகுதியில், பல நாடுகள் டாலருக்கு பதில் தங்கம் கோரத் தொடங்கின, ஏனெனில் ,பணவீக்கத்தை எதிர்த்துப் போராட இது தேவைப்பட்டது. அந்த நேரத்தில், அமெரிக்காவின் ஃபோர்ட் நாக்ஸ் (தங்க காப்பகம்), தனது இருப்புக்களை கலைக்க அனுமதிப்பதற்கு பதிலாக, டாலரை தங்கத்திலிருந்து பிரித்தார், அதிபர் நிக்சன்.

அதற்குள், டாலர் உலகின் மிகவும் பாதுகாப்பான நாணயமாக மாறியது.

  • சீனா மற்றும் ரஷ்யாவின் திட்டம்

ரஷ்யாவின் மத்திய வங்கி மற்றும் பெஃடரல் கஸ்டம் சர்வீஸ் மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் , ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகத்தில் டாலரின் பங்கு , முதல் முறையாக 50 சதவீதத்திற்கும் கீழே சென்றுள்ளது என்று ஏஷியா நிக்கி ரெவ்யூவின் அறிக்கை தெரிவிக்கிறது.

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான 46 சதவிகித வர்த்தகத்தில், டாலர் பயன்படுத்தப்பட்டது.. அதே நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் யூரோவின் பங்கு படிப்படியாக அதிகரித்து இப்போதுவரை 30 சதவீதத்தை அடைந்துள்ளது. அதே நேரத்தில் சொந்த நாணயங்களை பயன்படுத்தி 24 சதவிகித வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, இதுவரை இல்லாத மிக அதிக அளவாகும்.

கடந்த சில ஆண்டுகளாக, ரஷ்யாவும் சீனாவும் இருதரப்பு வர்த்தகத்தில் டாலர்களின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்ளன. 2015 ஆம் ஆண்டுவரை இரு நாடுகளுக்கும் இடையிலான 90 சதவிகித வர்த்தகத்தில், டாலர் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போருக்குப் பின்னர், குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவின் டாலர்கள் மூலமான வர்த்தகத்தைக் குறைக்கும் சிந்தனைக் கொள்கையின் கீழ், 2019 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் 51 சதவீதம் மட்டுமே , டாலர்களில் இருந்தது.

ரஷ்ய அறிவியல் அகாடமியின் ஃபார் ஈஸ்ட்டரன் ஸ்டடீஸ் நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸே மஸ்லோவ், நிக்கி ஏசியன் ரிவியூவிடம் பேசுகையில்,டாலர்கள் மூலமான வர்த்தகத்தை படிப்படியாக முடிவுக்கு கொண்டுவரும் ரஷ்யா மற்றும் சீனாவின் திட்டம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை, ஒரு கூட்டணியாக மாற்றக்கூடிய சூழலை உருவாக்கும் என்று தெரிவித்தார்.

நிதித்துறையில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பானது , இரு நாடுகளும் இடையே ஒரு புதிய கூட்டணிக்கான அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படுவதை காட்டுகிறது என்று அலெக்ஸே மஸ்லோவ் குறிப்பிட்டார்.

"இது ஒரு ராணுவக் கூட்டணி அல்லது வணிக கூட்டணியாக இருக்கும் என்று பலர் நம்பினர், ஆனால், இப்போது அது வங்கி மற்றும் நிதி கூட்டணியின் திசையில் செல்கிறது. மேலும் இது இரு நாடுகளும் தங்கள் முடிவுகளை எடுப்பதன் சுதந்திரத்தையும் உறுதி செய்யும்", என்று அவர் கூறினார்.'

ரஷ்யா மற்றும் சீனாவைப் பொருத்தவரை, 2014 முதல் டாலர்களின் பயன்பாட்டைக் குறைப்பதே முன்னுரிமையாக உள்ளது. கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்த பின்னர், மேற்கத்திய நாடுகளுடனான அதன் உறவு மோசமடைந்தது, அதன் பின்னர் ரஷ்யாவும் சீனாவும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கத் தொடங்கின. ரஷ்யா மீதான அமெரிக்க பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்கு, வர்த்தகத்தில் டாலர்களின் பயன்பாட்டை நிறுத்துவது அவசியமாகும்.

டாலரின் அதிகாரம் வீழ்கிறத? சீனா மற்றும் ரஷ்யா செய்யும் அரசியல்

"உலகில் டாலர் மூலமான ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் எங்கு நடந்தாலும், ஏதோ ஒரு வழியில் ஒரு அமெரிக்க வங்கி அதை அங்கீகரிக்கிறது. அதாவது சில பரிவர்த்தனைகளை நிறுத்துமாறு அமெரிக்க அரசாங்கம் வங்கிக்கு உத்தரவிடக்கூடும்," என்று ஐ.என்.ஜி வங்கியின் ரஷ்யாவின் தலைமை பொருளாதார நிபுணர் டிமிட்ரி டோல்கின் தெரிவித்தார்.

உலகின் வலுவான நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பை அளவிடும் அமெரிக்க டாலர் குறியீடு, மார்ச் மாதத்தில் ஒன்பது சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2011 க்கு பிறகு, ஒரு மோசமான நிலையை அடையும் விளிம்பில் உள்ளது. .

கொரோனா தொற்றுநோய் மற்ற பொருளாதாரங்களை விட அமெரிக்க பொருளாதாரத்தின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுவதால் டாலர் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது.

உலகின் மத்திய வங்கிகளும் அரசுகளும், தொடர்ந்து பொருளாதார நிவாரண உதவிகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பில், டாலரின் தொடர்ச்சியான பரிவர்த்தனைகள், சந்தை ஏற்றம் பெற வழிவகுக்கக்கூடும். ஆனால் டாலர் மேலும் சரிந்தால், அது ஐரோப்பாவிற்கும் ஜப்பானுக்கும் மோசமான செய்தியாக இருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், டாலரின் மதிப்பு அதிகரிப்பதாகக்காணப்பட்டது, ஆனால் டாலரின் மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது மூன்று சதவிகிதம் குறைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில், டாலர் 10 சதவீதத்தை இழந்தது. டாலரின் மதிப்பில் குறைவு, அமெரிக்க ஏற்றுமதிக்கு நன்மை அளிக்கிறது. இது அமெரிக்க பன்னாட்டு நிறுவனம், தன் லாபத்தை,உள்நாட்டு நாணயமான டாலர்களாக மாற்றிக்கொண்டுவர உதவும். சமீபத்திய சில வாரங்களில் சரிவு காணப்பட்ட அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்றம் கொண்டுவரும் ஒரு நல்ல செய்தியாக இது இருக்கும்.

எஸ் அண்ட் பி 500 இன்டெக்ஸ் (அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 500 நிறுவனங்களின் நிலையை குறிப்பிடும் அமெரிக்க பங்குச் சந்தை குறியீடு) 2.6% வருமானத்தை அளித்துள்ளது. டாலரின் மதிப்பில் கடுமையான வீழ்ச்சி ; தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் மிகச் சிறப்பான செயல்பாடு ஆகியவற்றுக்கு இடையே, இது நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவைகள் பன்னாட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டாலரின் 10 சதவீத வீழ்ச்சியானது , 2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு பங்கிலும் மூன்று சதவிகித அதிகரிப்பை அளிக்கும் என்று கோல்ட்மேன் கூறுகிறது. அடுத்த 12 மாதங்களில் டாலர் மதிப்பு மேலும் ஐந்து சதவீதம் குறையும் என்று கோல்ட்மேனின் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற முயற்சிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, டாலர் மதிப்பின் வீழ்ச்சியால் எந்த அரசியல் நன்மையும் இருக்காது என்று தோன்றுகிறது. ஆயினும், அதிக டாலர் மதிப்பு காரணமாக அமெரிக்க தயாரிப்பாளர்களும், உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுவதாக , டிரம்ப் எப்போதும் கூறிவருகிறார்.

"டாலரின் மதிப்பு குறைவின் நன்மை தொழில்துறையை அடைய குறைந்தது ஒரு வருடம் ஆகும், ஆகவே இது, நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு பயனளிக்காது." என்று டாய்ச்செ வங்கியின் சர்வதேச திட்டமிடல் பிரிவின் தலைவர் , ஆலன் ரஸ்கின் கூறியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?