வியாழன், 1 அக்டோபர், 2020

சராசரி 79

 இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் 28,918 கொலைகள் நடந்துள்ளதாகவும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 79 பேர் கொல்லப்பட்டுள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிபிஆர்) தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றம் பற்றிய தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிபிஆர்) புள்ளிவிவரத்துடன் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நாடுமுழுவதும் கடந்த 2018ம் ஆண்டில் சுமார் 29,017 கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், 2019ம் ஆண்டில் 28,918 கொலைகள் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் நாள்தோறும் சராசரியாக 79 பேர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கொலைகளில், தகராறு காரணமாக 9,516 பேர் கொல்லப்பட்டதாகவும், தனிப்பட்ட பகை, பழிக்குப் பழிவாங்குதல் போன்ற காரணங்களினால் 3,833 கொலைகளும், ஆதாயத்திற்காக மட்டும் 2,573 கொலைகள் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த 2019ம் ஆண்டின் நடைபெற்ற கொலைக் குற்றங்கள் 2018ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2019-ல் கொலைக் குற்றங்கள் எண்ணிக்கை வெறும் 0.3 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

அதேப்போல், 2019ம் ஆண்டில் 1,05,037 கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த கடதல் வழக்கில் 23,104 பேர் ஆண்கள் என்றும் 84,921 பேர் பெண்கள் என்றும் சுமார் 71,264 பேர் குழந்தைகள் எனவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

-------------------------------------------+/+-------

காவியான நீதி.

-----------------------------

பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை. நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று கூறி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் லக்னோ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர்6 ஆம் தேதி சங்பரிவார கரசேவகர் களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்பட 49 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.பாஜக தலைவர்கள் மீது தனிவழக்கு, லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது தனி வழக்கு என்று இரண்டு வழக்குகளாகப் பிரிக்கப்பட்டன. தலைவர்கள் மீதான வழக்கு உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி நீதிமன்றத்திலும், கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோவிலும் நடந்து வந்தது.

1993 அக்டோபர் 5 அன்று எட்டு தலைவர்கள் உட்பட 40 பேர் மீது சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இரண்டு வருட விசாரணைக்குப் பிறகு சிபிஐ, ஒரு பெரிய சதி மற்றும் பாபர் மஸ்ஜித்மீது திட்டமிட்ட தாக்குதல் என்றுகுற்றம் சாட்டி 1996 ஜனவரி 10அன்று ஒரு துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.  மொத்தம் 45 முதல் தகவல் அறிக்கைகள் (எப்ஐ ஆர்) இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டன. குற்றம்சாட்டப்பட்டவர்களில் 17 பேர் இறந்துவிட்டனர்.  எஞ்சிய 32 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இதில், ரேபரேலி சிறப்பு நீதிமன்றம்அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு மீது விசாரணை நடந்து வந்தது.  சிறப்பு நீதிமன்றம் அளித்த  தீர்ப்பைஅலகாபாத் உயர்நீதிமன்றமும் கடந்த2010 ஆம் ஆண்டு உறுதி செய்தது.அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பிலும், ஹாஜி மெஹபூப் அகமது என்பவர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ் மற்றும் ரோஹின்டன் நாரிமன் அடங்கிய அமர்வு, 2017ஏப்ரல் 19அன்று அளித்த தீர்ப்பில், மீண்டும்  இந்த வழக்கை விசா ரிக்க உத்தரவிட்டது. இதன்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக சுரேந்திர குமார் யாதவ் என்பவர்நியமிக்கப்பட்டு, லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில்உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நாள்தோறும் விசாரணை  நடந்துவந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் சிஆர்பிசி 313-ன் கீழ் நீதிபதி முன் காணொலி மூலம் வாக்குமூலம் அளித்தனர். இதில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி காணொலி மூலம் வாக்குமூலம் அளித்தார். அதற்கு முந்தைய நாள் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வாக்குமூலம் அளித்தார். இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.

இந்நிலையில் வழக்கில் இதுவரை 351 சாட்சியங்கள், 600 பக்க ஆவணங்களை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடப் படாமல் தீர்ப்பு  ஒத்திவைக்கப் பட்டது. தீர்ப்பு தினத்தன்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சுரேந்திர குமார்யாதவ் ஏற்கெனவே உத்தரவிட்டிருந் தார்.நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மசூதி வழக்கில் செப்டம்பர் 30 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ள உமா பாரதிக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் ஆஜராகவில்லை.இது தவிர பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் ,ராம ஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் நிர்தியாகோபால் தாஸ் ஆகியோரும் நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இவர்கள் காணொலி மூலம் ஆஜராகினர்.குற்றம் சாட்டப்பட்டுள்ள வினய் கத்தியார், தரம்தாஸ், வேதாந்தி, லாலு சிங், சம்பத் ராய், பவன் பாண்டே உள்பட 26 பேர் ஆஜராகினர்.

 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ்வாசித்தார். தீர்ப்பில்“ கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர்மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை. அசோக் சிங்கால் உள்ளிட்ட சங்பரிவார் தலைவர்கள் குழந்தை ராமர் சிலையைப் பாதுகாக்க விரும்பினர். பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதற்கு போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அந்த கும்பலைத் தடுக்க முயன்றனர். அவர்களைத் தூண்டவில்லை: குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகஆதாரங்கள், சாட்சியங்கள் திடமாக இல்லை.  ஆகவே வழக்கில் தொடர்புடைய அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்”   என்று உத்தரவிட்டார்


--------------------------------------------------------------

கறை படிந்த மேலும் ஒரு நாள்...

அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்குச்  சொந்தமானது என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியதீர்ப்பு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றால்பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும், நீதி வழங்கும் முறை மீதுபல்வேறு கேள்விகளையும் எழுப்புவதாகஅமைந்துள்ளது. 

மத்திய புலனாய்வுக் கழகம் எந்தளவுக்கு அலட்சியத்துடன் இந்த வழக்கை திட்டமிட்டு நீதி கிடைக்கவிடாமல் செய்யும் வகையில் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளது என்பதுதெளிவாகத் தெரிகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஒரு கிரிமினல் குற்றம் என்று அப்போது உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் லக்னோ சிறப்பு நீதிமன்றம் சர்வ சாதாரணமாக விடுவித்திருப்பதோடு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ், பாஜக, விஎச்பி, பஜ்ரங்தள தலைவர்கள் மசூதியை இடிக்க துணைபோகவில்லை. மாறாக இடிப்பை தடுக்க முயன்றனர் என்று நற்சான்றிதழ் வழங்கியிருப்பது கொடூரமான முரணாகும்.

இந்த வழக்கை நடத்துவதில் மத்திய புலனாய்வுக் கழகம் உரிய அக்கறை செலுத்தவில்லை. விசாரணையை துரிதப்படுத்தி முடிப்பதில் சிறப்பு நீதிமன்றமும் கவனம் கொள்ளவில்லை. உச்சநீதிமன்றம் கெடு விதித்தபிறகு தான் வேறு வழியின்றி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இருக்கும் இடத்தில்தான் ராமர்கோவில் இருந்தது என்று சங் பரிவாரம் தொடர்ந்துபுனை கதைகளை உருவாக்கி உலவ விட்டது. ஆனால் இதற்கு எந்த நிரூபணமும் இல்லை. அவ்வப்போது இருந்த மத்திய மற்றும் உ.பி. ஆட்சியாளர்களும் இந்த பிரச்சனையில் சமரசமான போக்கை கடைப்பிடித்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட வேண்டும் என்றநோக்கத்துடனும் மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவிடாமல் தடுக்கும் நோக்கத்துடனும்தான் எல்.கே.அத்வானி ரதயாத்திரையை நடத்தினார். 

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கரசேவை என்ற பெயரில் திட்டமிட்டு கூட்டம் சேர்க்கப்பட்டது. உச்சநீதிமன்றம், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் ஆகியவற்றுக்கு அளித்தவாக்குறுதிக்கு மாறாக உ.பி. அரசின் துணையுடன் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்து கட்டுமான பணியும் துவங்கி நடந்து வருகிறது.இந்த நிலையில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து அவர்கள் இடிப்பை தடுக்க முயன்றதாக நற்சான்றிதழும் வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் உற்று கவனித்த ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இந்த நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளைப் போன்றே கறை படிந்த நாளாகவேநாளைய வரலாறு பேசும்.
 ----------------------------------------------