பயமுறுத்தல்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக நாடு முழுவதும் மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மாநிலவாரியான நீட் தேர்ச்சி பட்டியலில் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கையைவிட தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை பல மாநிலங்களில் கூடுதலாக இருந்தது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டு மீண்டும் பட்டியலிடப்பட்டது. குளறுபடிகள் அதோடு தீர்ந்துவிடவில்லை. பல மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலில் விடை குறிக்கும் பகுதி மாறியிருப்பதாக புகார் தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் தத்தனூர்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தான் 680 மதிப்பெண்களுக்கு மேல் வரும் என எதிர்பார்த்த நிலையில் வெறும் 37 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் அதிர்ச்சியடைந்தார்.
அந்த மாணவி 3 வினாக்களுக்கு மட்டுமே பதிலளிக்காத நிலையில், 7 வினாக்களுக்கு பதில் அளிக்கவில்லை என தேர்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது விடைத்தாள் (OMR) மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பினார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட்ட விடைத்தாள் நகலுக்கும், நீட் தேர்வு முடிவு வெளியான தினத்தன்று வெளியிடப்பட்ட விடைத்தாள் நகலுக்கும் வித்தியாசம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கும் இதுபற்றி முறையிடுவதற்கான நடைமுறை குறித்து அறிந்திராததால் செய்வதறியாமல் திணறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், மாணவர்களின் அச்சத்தைக் களைந்து நேர்மையான தேர்வு முறையை உறுதி செய்ய வேண்டிய தேசிய தேர்வு முகமையோ மாணவர்களை மிரட்டும் வகையில் நடந்துகொண்டுள்ளது.
நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை என்றும் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது தேசிய தேர்வு முகமை.
மேலும் தவறான தகவல்களை பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் மருத்துவக் கனவோடு தேர்வெழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளைக் கூட சரியான வகையில் வழங்க வக்கற்ற தேசிய தேர்வு முகமை, மாணவர்களின் தரத்தை உயர்த்துவதே தங்கள் நோக்கம் எனச் சொல்வதுதான் வேடிக்கை.
----_-------_----------------_--------------_--------------
அட..வெங்காயம்.
கடந்த இரண்டு தினங்களாக உயர்ந்து வந்த வெங்காயத்தின் விலை மூன்றாவது நாளாகவும் கிலோ 120 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை ஆகி வருவதால் பொதுமக்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்திய மோடி அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் நிறைவேற்றியது. இதன் விளைவாக தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் போன்றவை அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என கணிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வெங்காயம் தற்போது அதிக விலையை எட்டியுள்ளது. கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகி வந்த வெங்காயத்தின் விலை தற்போது 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பலத்த மழை காரணமாக வெங்காய வரத்து தமிழகத்தில் மிகவும் குறைந்து உள்ளது. தினமும் 90 லாரிகளில் கொண்டு வரப்படும் வெங்காயத்தின் அளவு, தற்போது 30 லாரிகளில் மட்டுமே வரும் காரணத்தால் வெங்காய வரத்து குறைந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தமிழகத்தில், கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகி வந்த வெங்காயத்தின் விலை தற்போது 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் 500 ரூபாய்க்கு ஒரு நேரத்திற்கு கூட காய்கறிகளை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தற்போது வெங்காயத்தின் விலையை பார்க்கும்போது வசதி படைத்தவர்கள் கூட வாங்க முடியாத சூழலில் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அரசும் அமைச்சர்களும் மக்களுக்காக நடைபெறும் ஆட்சி என்றால் மக்களைப் பற்றியும் கவலைப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மோடி அரசாங்கம் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு இன்றளவும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் இந்த சட்டத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிக்கும் என எச்சரித்தனர்.
ஆனால், மோடி அரசின் ஆதரவாளர்கள், அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதாக குற்றம் சாட்டினார்கள். இந்நிலையில் தற்போது, போராட்டக்காரர்களின் எச்சரிக்கை வெங்காயத்தின் விலை உயர்வு மூலம் உண்மையாகியுள்ளது; விலைவாசி உயராது என கூறிய பா.ஜ.க ஆதரவாளர்கள் பொய் பிரச்சாரம் அம்பலமாகிவிட்டது.
----------------------------------------------------------------------/
பீகார் தேர்தல்.
- நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில், பீகார் சட்டசபைக்கு தேர்தல் வரும் 28-ந்தேதி, நவம்பர் 3-, 7-
முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 71 தொகுதிகளில், 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. 8-ந்தேதி முடிகிறது. 2-ம் கட்ட தேர்தலை சந்திக்கும் 94 தொகுதிகளில் 9-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
இந்த சட்டசபை தேர்தலை முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் இன்றி, பீகார் சந்திக்கிறது. அவரது மகன் தேஜஸ்வி யாதவ் முதல்-மந்திரி வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
இந்த தேர்தலில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், வி.ஐ.பி., ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி அமைந்துள்ளது.
இந்தக் கூட்டணியில், லாலு பிரசாத்தின் தூதர் போலா யாதவ், ராஞ்சியில் இருந்து பாட்னா திரும்பியுள்ள நிலையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
பாட்னாவில் நேற்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் நிருபர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ், தொகுதி பங்கீட்டை முறைப்படி அறிவித்தார்.
அப்போது அவர், “எங்கள் பழைய கூட்டாளியான விகாஷீல் இன்சான் கட்சிக்கும் (வி.ஐ.பி.), ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கும் எங்கள் கட்சி தனது 144 தொகுதிகளில் இருந்து இடம் அளிக்கும்” எனத் அறிவித்தார்.
இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது இது இரு மடங்கு எண்ணிக்கையிலான தொகுதிகள் ஆகும்.
நவம்பர் 7-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிற வால்மீகி நகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெகா கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் வருமாறு:
மொத்த இடங்கள் - 243
ராஷ்ட்ரீய ஜனதாதளம்
- 144
காங்கிரஸ் - 70
இந்திய கம்யூ. (எம்.எல்.)- 19
இந்திய கம்யூனிஸ்ட் - 6
மார்க்சிய கம்யூனிஸ்ட் - 4
நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க கூட்டணி அரசை அகற்ற தேஜஸ்வி யாதவ் சபதம் செய்துள்ளதன் காரணமாக மெகா கூட்டணி உருவாகி உள்ளது.
பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியை எதிர்த்து லாலுவின் வாரிசு மெகா கூட்டணி ஏற்படுத்தி யுத்தம் தொடர்ந்துள்ள நிலையில், பா.ஜ. கூட்டணியில் அங்கம் வகித்திருந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி அக்கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவது பீகார் சட்டசபைத் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க., கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க இடையே 50:50 என்ற விகிதத்தில் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 122 தொகுதிகளும், பா.ஜ.கவுக்கு 121 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
'இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா' கட்சிக்கான தொகுதிகளை ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து வழங்கவேண்டும் என்றும் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கூட்டணியில் இடம்பெற்றால் பா.ஜ.க தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து வழங்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் இருதய அறுவை சிகிச்சையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரின் மகன் சிராஜ் பஸ்வான் தேர்தல் பணிகளைத் தலைமையேற்று நடத்திவருகிறார். அதோடு இவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டது.
தாங்கள் கேட்ட இடங்களை ஐக்கிய ஜனதா தளம் ஒதுக்கவில்லை என்பதாலும் வெறும் 27 இடங்களை மட்டும் வழங்கியதாகவும் தெரிகிறது. ஆனால், வரும் தேர்தலில் அவர்கள் கட்சி சார்பில் 143 இடங்களுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டதால், இந்த தேர்தலில், லோக் ஜனசக்தி தனித்துக் களம் காண முடிவு செய்துள்ளது. இருந்தபோதிலும், பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் தவிர்த்து, மற்ற தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.
ராம்விலாஸ் பஸ்வானின் வாரிசு சிராஜ் பஸ்வானின் இந்த திடீர் முடிவு ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிரானது என்றும், பா.ஜ.க.வும், லோக் ஜனசக்தியும் தங்களது கட்சிக்கு எதிராக நாடகம் ஆடுகிறார்கள் என்றும் ஐக்கிய ஜனதாதள முன்னணி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 115 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் அந்த மாநிலத்தின் போலிஸ் டிஜிபியாக இருந்து, பதவியை ராஜினாமா செய்த குப்தேஸ்வர் பாண்டேவின் பெயர் இடம் பெறவில்லை. இந்தக் கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் ஜித்தன் ராம் மஞ்ஜியின் இந்துஸ்தானி அவாம் மோட்சா கட்சிக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து இருக்கும் தேஜ் பிரதாப் யாதவின் (லாலுவின் மூத்த மகன்) மனைவி ஐஸ்வர்யாவின் தந்தை சந்திரிகா ராய் பார்சா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் மகனாவார். தேஜ் பிரசாத் யாதவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமண முறிவு ஏற்பட்டதையடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தில் தன்னை ராய் இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி ஒருபுறம் பா.ஜ.க., கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்திருப்பதும், ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக களத்தில் இறங்கியிருப்பதும் பீகார் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் வாக்கு சதவீதத்தில் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பீகாரில் தேர்தலை முன்னிட்டு நடந்த அரசியல் கொலைகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லாலு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரமுகர் சக்தி மாலிக் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட சக்தி மாலிக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராணிகஞ்ச் தொகுதியில் தன்னைப் போட்டியிட அனுமதிக்க, தன்னிடம் தேஜஷ்வி யாதவ் ரூபாய் 50 லட்சம் கோரியதாகவும், தன்னை அவர் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளைங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சக்தி மாலிக், மூன்று மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் அரசியல் பின்னணி இருப்பதாகவும், அவர் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்திருந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மனைவி குற்றம்சாட்டியுள்ளார். அவர் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதைப்போன்று அக்டோபர் 1-ம் தேதி பாட்னாவில் பா.ஜ.க.தலைவர் ராஜேஷ், காலை நடைப்பயிற்சி செல்லும்போது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகார் அரசியல் களம் கொலைக்களமாக மாறியிருக்கும் சூழலில், கொரோனா தொற்று காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த இடர்களும் பீகார் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக புலம்பெயர் தொழிலாளர்கள் அணிதிரண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுங்கட்சியின் அதிகார பலத்திற்கு எதிராகவும், பண பலத்திற்கு எதிராகவும் களம் காணும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி வெல்லுமா என்பது போகப்போகத் தெரியும்.
---_-----------------------------------------------_-----
உண்மையான வளர்ச்சி.
மைசூரு பல்கலைக்கழக நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் காணொலி முறையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காகவே அனைத்து துறைகளிலும் மாற்றங்களும், திட்டங்களும் கொண்டு வரப்படுகின்றன என்றும், கடந்த ஆறேழு மாதங்களில் அதிகரித்து வரும் சீர்திருத்தங்களின் வேகத்தை அனைவரும் கவனித்திருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.
பிரதமர் கூறுகிற வளர்ச்சி யாருக்கானது? என்பதை இந்த நாடு நன்கறியும். அவருக்குவேண்டப்பட்ட கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் முதலாளிகளின் வளர்ச்சிக்காகவே அவரதுஅரசின் திட்டங்களும், சீர்திருத்தங்களும் கொண்டு வரப்படுகின்றன என்பதை மக்கள் அறிவார்கள். அவர் கூறும் தேசத்தின் வளர்ச்சி என்பது நிலம், நீர், ஆகாயம் என பல நிலைகளிலும் செய்யப்படும் சீர்திருத்தங்கள் இதனை நன்குவெளிப்படுத்துகின்றன. தேசிய கல்விக்கொள்கை நமது கல்வித்துறையின் எதிர்காலத்தை உறுதி செய்வதாக இருந்தால் வேளாண் சார் சீர்திருத்தங்கள் விவசாயிகளை வலிமையானவர்களாக மாற்றக்கூடியதாகவும், தொழிலாளர் சீர்திருத்தங்கள் தொழிலாளர்கள் நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்து வளர்ச்சிக்கான உந்துசக்தியாகவும் உள்ளன என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ஏழை, எளியவர்களுக்கு கல்வி அறிமுகமே கிடைக்காமல் செய்யும் வண்ணம் இருப்பதற்காகவே ஒரு கல்விக் கொள்கையை கொண்டு வந்திருப்பதை நாட்டு மக்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்தும்கூட அமல்படுத்திட துடிப்பதை காண்கிறோம். வேளாண்மை தொடர்பான மூன்று சட்டங்களும், விரக்தியின் விளிம்பில் கிடக்கும் விவசாயிகளை ஆழக் குழிதோண்டி புதைக்கும் காரியத்தை செய்வதற்காகவே, கார்ப்பரேட்டுகளிடம் அடிபணிந்து விவசாயத்தை அவர்களிடம் ஒப்படைப்பதற்காகவே கொண்டு வரப்பட்டவை என்பதனால்தான் நாடு முழுவதும் விவசாயிகள் பெரும்போராட்டங்களில் இறங்கியுள்ளனர். இந்த சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில சட்டமன்றத்தில் மூன்று புதிய சட்டங்கள் கொண்டு வந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக கொண்டு வந்திருப்பதாக சொல்லப்படும் சட்டம்நிறுவனங்களின் பாதுகாப்புக்காகவே. ஏற்கெனவே 14 கோடி வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளது நாடறிந்தது. அத்துடன் புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கொடுமையானது. விமான நிலையங்களை கூட தனியாருக்குதாரை வார்ப்பதும், விண்வெளி, ராணுவம் ஆகியவற்றிலும் அவர்களுக்கு கதவுகளை திறந்து விடுவதும், நாட்டின் வளர்ச்சிக்கானதா? பெரு நிறுவனமுதலாளிகளின் வளர்ச்சிக்கானதா என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். இவர்களது அதிவேகசீர்திருத்தம் என்பது நாட்டுக்கு ஆபத்தையே விளைவித்திருக்கிறது என்பதை மறைத்துவிட்டு தங்களுக்குத் தாங்களே சபாஷ் போட்டுக் கொள்வது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. அதுஉண்மையான வளர்ச்சியும் ஆகாது.
-------------------------------