ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது முயற்சியாக முதலிடத்துக்கு தகுதி பெற்றிருக்கிறார் ஜோ பைடன். ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலைகள் ஒன்றிரண்டு தசாப்தங்கள் அல்ல. 1987ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2008ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் அதிபராகும் போட்டியில் இருந்த அவரால், தனது 77ஆவது வயதில்தான் அப்பதவிக்கான போட்டியில் முதலிடத்துக்கு முன்னேற முடிந்திருக்கிறது.

ஐயோவா மாகாணத்தில் மறைமுக தேர்வு (காகசஸ்), நியூ ஹாம்ஷையரில் நேரடி தேர்வு (பிரைமரி) மூலம் அதிபர் வேட்பாளராக தேர்வாக முடியாத நிலை பைடனுக்கு சில தசாப்தங்களுக்கு முன்பே உண்டு. அந்த பின்னடைவு தந்த வலிகளும் அரசியலில் நீடிக்கும் அவரது பழுத்த அனுபவமும்தான் இம்முறை மூன்றாவது முயற்சியாக நில்லாமல் ஓடி மறைமுக தேர்வு, நேரடி தேர்வு என இரண்டிலும் ஒருமித்த ஆதரவை பெற்று ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரானார் ஜோ பைடன். இதற்கு அவருக்கு 14 மாகாணங்களில் இருந்து அவரது முன்மொழிவை ஜனநாயக கட்சியினர் ஆதரித்தனர்.

எளிய தேர்தல் பரப்புரை, மக்களை கவர்ந்திழுக்கும் வசீகர வார்த்தைகள், அனுதாப பார்வையுடன் அடித்தட்டு மக்களை அணுகும் போக்கு பைடனுக்கு அமெரிக்க வாழ் மற்ற நாட்டு வம்சாவளியினர் இடையே ஆதரவை பெருக்கியது. தாழ்மையுடன் நடந்து கொள்ளும் அவரது உயர் பண்பு, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்புக்கு நேர்மாறானது.

குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றை ஒரு நோயே அல்ல என்று முதலில் அறிவித்து மக்களை இயல்புநிலைக்கு திரும்ப டிரம்ப் வற்புறுத்திய மாதங்களில், "வைரஸ் பெருந்தொற்று மிகக் கொடியது, மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருங்கள், வாக்குச்சாவடிக்கு கூட வந்து வாக்கு போட வேண்டாம், இயன்றவரை அஞ்சல் வழியில் வாக்குகளை செலுத்துங்கள், அது உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது" என்று பொறுப்புள்ள மற்றும் அக்கறை உள்ள அதிபர் வேட்பாளராக அவர் பலது கவனத்தையும் ஈர்த்தார்.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்தபோது, அவருடன் இரண்டு பதவிக்காலங்களிலும் துணை அதிபராக பணியாற்றியிருக்கிறார் ஜோ பைடன். அத்துடன் அரசுப்பதவிகளில் தொடர்ச்சியாக 40 ஆண்டுகால அனுபவத்தை அவர் பெற்றிருந்தார்.

பராக் ஒபாமா, பதவிக்காலம் நிறைவடையும் காலத்தில், "அமெரிக்கா இதுவரை கண்டிராத மிகச்சிறந்த துணை அதிபராக இருந்தவர் ஜோ பைடன்" என்று பாராட்டப்பட்டவர் அவர்.

அரசியல் தகுதிக்காக தன்னை செதுக்கிக் கொண்ட பைடன்

ஜோ பைடன்

ஆனால், தனக்கான அரசியல் தகுதியையும் உயர் பொறுப்புக்கு தகுதியானவர் என்ற செல்வாக்கையும் இவரால் எப்படி தக்க வைக்க முடிந்தது?

2008ஆம் ஆண்டிலேயே ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர் தகுதி உள்கட்சி சுற்றுக்கு போராடியபோதும், அப்போது பராக் ஒபாமாவுக்கு கட்சிக்குள் இருந்த செல்வாக்கால் பைடன் பின்வாங்க நேர்ந்தது. அவரது அந்த விட்டுக்கொடுப்பே அதிபருடன் 8 ஆண்டுகளாக பணியாற்றும் துணை அதிபர் வாய்ப்பை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது.

ஒபாமாவின் வழியில், பொதுமக்களுக்கான சுகாதார பராமரிப்புச் சட்டம், தொகுப்புதவித் திட்டங்கள், நிதி நெருக்கடியை அமெரிக்கா எதிர்கொண்டபோது ஒபாமாவுடன் துணை நின்று பைடன் முன்னெடுத்த சீர்திருத்த நடவடிக்கைகள், இன்றளவும் அவரது சாதனைகளுக்கு சான்று கூறுகின்றன.

இவர் மீதான நம்பிக்கையின் காரணமாக, ஜோ பைடனை சக அரசியல் தலைவர் என்பதைக் கடந்து, "அண்ணா" (பிரதர்) என்றே ஒபாமா அழைத்து வருகிறார். அந்த இணை பிரியாத நேசம் காரணமாக, அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் அறிவிக்கப்பட்டது முதல், அவருக்காக ஆப்பிரிக்க-அமெரிக்க வாக்காளர்களிடையே பிரசாரம் செய்து வாக்குகளை சேகரித்தார் பராக் ஒபாமா.

அமெரிக்க துணை அதிபர் பதவியில் 8 ஆண்டுகளும், அதற்கு முந்தைய காலங்களில் நீடித்த அரசியல் அனுபவமும் இருந்ததால் நாட்டின் வெளியுறவுக்கொள்கை, ரகசிய விவகாரங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் ஜோ பைடனுக்கு அத்துப்படி. அதுவே சர்ச்சையின்றி ஒபாமா தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யவும் உதவியதாக அமெரிக்க அரசியலை உற்று கவனிக்கும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

"மிடில் கிளாஸ் ஜோ"

பைடன்
படக்குறிப்பு,

ஜோ பைடன்

அரசு மற்றும் அரசியல் உயர் பதவிகளை வகித்தபோதும், தனது பலம் மேல்தட்டு, கார்பரேட் சமூகங்களை விட கீழ்நிலை, நடுத்தர மக்கள்தான் என்பதை ஜோ பைடன் உணர்ந்திருந்தார். ஒபாமாவை கருப்பினத்தவர் ஆக அமெரிக்கா பார்த்தபோது அவர் அதிபராக போட்டியிட்டபோது, அவருக்கு கரம் கொடுக்கும் முகமாக வெள்ளையினத்தவரான ஜோ பைடன் தேர்தல் களத்தில் நின்றார். ஒபாமா பெற்ற வெற்றியில் இவரது பங்களிப்பு அதிகம் என்பது அமெரிக்க அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. அது இரு தேர்தல் முடிவுகளில் பலிக்கவும் செய்தது.

2012ஆம் ஆண்டில் ஒரு பாலினத்தவர் திருமணத்தை பைடன் ஆதரித்தபோது, அதுவரை சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்ட இந்த விவகாரத்தில், அதிபராக இருந்த ஒபாமாவே மெளனம் சாதித்த நிலையில், துணிச்சலுடன், "என்னைப் பொருத்தவரை நிச்சயமாக பிரச்னையில்லை" என்று குரல் கொடுத்தார் பைடன். அவரது கருத்து சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாயின.

அவரது குரலின் தொடக்கம்தான் பின்னாளில் அதே விவகாரத்தில் ஒபாமாவும் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

பொது நிகழ்வுகளில் எல்லோரிடமும் பழகும் பண்பு, அரவணைத்தல், நலம் விசாரித்தல் போன்ற குணங்கள், அவரை மிடில் கிளாஸ் ஜோ என்றே பலரும் அழைக்க காரணமாகியது.

பைடனின் அரசியல் பயணம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆறு முறை செனட்டர் ஆக இருந்திருக்கிரார் ஜோ பைடன்.

1972ஆம் ஆண்டில் டெலவேர் மாகாணத்தில் இருந்து முதல் முறையாக செனட்டர் ஆனார் பைடன். 1988ஆம் ஆண்டில் அதிபர் வேட்பாளர் பதவிக்கு உள்கட்சி அளவில் நடந்த தேர்வின்போது அப்போதைய பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி தலைவர் நீல் கின்னாக்கின் உரையை தகவல் திருட்டு செய்த சர்ச்சையின் சிக்கினார்.

அப்போது `என் முன்னோர்கள் பெனிசில்வேனியாவில் வடகிழக்குப் பகுதியில் நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்த்தார்கள்'' என்று பிரசாரங்களில் அவர் சொல்லத் தொடங்கினார்.

தங்களுக்கு உரிய வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை என்று அவர் கோபம் காட்டினார்.

ஆனால் அவருடைய முன்னோர்கள் யாருமே நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்க்கவில்லை. பிரிட்டன் அரசியல்வாதி நீல் கின்னோக் என்பவருடைய உரையில் இருந்து அந்த வரியை (மற்றும் பல வரிகளை) அவர் எடுத்து பயன்படுத்தியுள்ளார். கின்னோக்கின் உறவினர்கள் உண்மையிலேயே சுரங்கத் தொழிலாளர்களாக இருந்தனர்.

ஜோ பைடன்

பிறகு தனது தவறை ஒப்புக் கொண்ட பைடனுக்கு, நிதானம் தவறும் போக்கு காரணமாக அந்த வாய்ப்பு அவருக்கு பறிபோனது.

``ஜோவின் வெடிகுண்டுகள்'' என கூறப்பட்ட பலவற்றில், முதலாவது விஷயமாக அது அமைந்தது.

தன்னுடைய அரசியல் அனுபவம் பற்றி 2012-ல் பெருமையாகக் குறிப்பிட்ட பைடன், குழப்பமாக இருந்த ஒரு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்: ``மக்களே, எனக்கு எட்டு அதிபர்களைத் தெரியும். அதில் மூன்று பேரை அந்தரங்கமாக அறிவேன்'' என்று கூறினார். நெருக்கமான நட்பு கொண்டிருந்தேன் என்பதற்குப் பதிலாக, அவர்களுடன் பாலியல் உறவு கொண்டிருந்தேன் என்ற அர்த்தத்தை அவர் ஏற்படுத்தி விட்டார்.

2009ல் பராக் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் இவர் துணை அதிபராக இருந்தார். பொருளாதாரத்தில் ``நாம் தவறாகப் போவதற்கு 30 சதவீத வாய்ப்புகள் உள்ளன'' என்று அப்போது பைடன் கூறினார்.

முதலாவது கருப்பர் இன அதிபருடன் சேர்ந்து போட்டியிட இவர் தேர்வு செய்யப்பட்டதே அதிர்ஷ்டமான விஷயம்.

மனதில் பட்டதை நேர்பட பேசுபவர்

`ஆப்பிரிக்க - அமெரிக்கர்களில் தெளிவாகப் பேசும், பளிச்சென்று, சுத்தமாக, நல்ல தோற்றம் உள்ள முதலாவது முக்கிய நபராக இருக்கிறார்'' என்று ஒபாமா பற்றி கூறியதன் பிறகும் அவருக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது.

இந்த கருத்துக்குப் பிறகும், இப்போதைய தேர்தலையொட்டி கட்சி ரீதியிலான வேட்பாளர் தேர்வுக்கான வாக்கெடுப்பில் பைடனுக்கு ஆதரவாக கருப்பர் இனத்தவர்கள் அதிகமாக வாக்களித்தனர். ஆனால் "சார்லமேக்னே தா காட்" என்ற கருப்பர் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ``நீங்கள் என்னை ஆதரிப்பதா அல்லது டிரம்பை ஆதரிப்பதா என்பதை முடிவு செய்வதில் பிரச்சனை இருந்தால், நீங்கள் கருப்பர் கிடையாது'' என்று பைடன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜோ பைடன்

ஆனால் அவருடைய பேச்சாற்றலில் கெடுதலான ஒரு பக்கம் இருக்கிறது. அரசியல்வாதிகள் கவனமாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் பேட்டிகள் தரும் தொழில்நுட்பம் நிறைந்த காலத்தில், அவர் யதார்த்தமான அரசியல்வாதியாக இருக்கிறார்.

குழந்தைப் பருவத்தில் கஷ்டப்பட்ட காலத்தின் நினைவுகள் உள்ள நிலையில், அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளைத் தேர்வு செய்து பேசுவது தனக்குப் பிடிக்காது என்றும், மனதில் பட்டதைப் பேசுவதாகவும் அவர் கூறுகிறார்.

அமெரிக்காவின் தொழிலாளர்கள் மத்தியில், முன்தயாரிப்பு இல்லாத உரைகள் மூலம் பேசி அவர்களை ஈர்க்கும் திறன் உள்ளவராக பைடன் இருக்கிறார். பிறகு கூட்டத்தில் இறங்கி கை குலுக்குதல், தட்டிக் கொடுத்தல், செல்ஃபி எடுத்துக் கொள்வது போன்ற வெள்ளித்திரை நட்சத்திரத்தைப் போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபடுவார் பைடன்.

``தொழிலாளர்களை அரவணைக்கும் வகையில் பேசுகிறார், சில நேரம் உடல் ரீதியாகவும் அணைத்துக் கொள்கிறார்'' என்று அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் மற்றும் அதிபர் பதவிக்கான வேட்பாளராக இருந்த ஜான் கெர்ரி நியூயார்க் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ``அவர் மிகவும் தந்திரசாலி அரசியல்வாதி. எல்லாமே உண்மையானவை. எதுவும் நடிப்பு கிடையாது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பைடன் எதிர்கொண்ட புகார்கள்

பைடன் முறைதவறி தொடுதல், கட்டி அணைத்தல் அல்லது முத்தமிடுதல் செயல்களில் ஈடுபட்டார் என்று கடந்த ஆண்டு எட்டு பெண்கள் குற்றஞ்சாட்டினர். பொது நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு வாழ்த்து சொல்லும் போது பைடன் எந்த அளவுக்கு நெருக்கமாக காட்டிக் கொள்கிறார் என்பது குறித்து அமெரிக்க செய்திச் சேனல்கள் வீடியோக்களை ஒளிபரப்பு செய்தன. சில நேரங்களில் தலைமுடியின் வாசனை தெரியும் அளவுக்கு நெருக்கமாக செல்வதாகவும் காட்சிகள் வெளியாயின.

தன்னுடை கலந்தாடல்களில் ``அதிக கவனம் செலுத்துவதாக'' பைடன் உறுதி அளித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1இருந்தபோதிலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு பைடனின் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்த காலத்தில், சுவரின் மீது சேர்த்து பிடித்துக் கொண்டு பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார் என்று கடந்த மார்ச் மாதம் தாரா ரீடே என்ற பெண்மணி புகார் கூறியுள்ளார்.இந்தப் புகாரை பைடன் மறுத்துள்ளார். ``நிச்சயமாக அப்படி நடக்கவில்லை'' என்று அவருடைய பிரச்சாரத் துறையினர் கூறியுள்ளனர்.

#MeToo இயக்கம் தீவிரம் அடைந்த பிறகு, பெண்களை சமூகம் நம்ப வேண்டும் என்று பைடன் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியினர் கூறி வருகின்றனர். எனவே, இந்தப் புகார்களைப் புறக்கணிக்க முயல்வது, இயக்கவாதிகளுக்கு அசௌகர்யமான நிலையை ஏற்படுத்தினாலும், அதிபர் டிரம்ப் மீது ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பெண்கள் இதுபோன்ற பாலியல் அத்துமீறல் புகார்களைக் கூறியுள்ளதை, பைடனின் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

அதே தவறுகளைத் தவிர்த்தல்

கடந்த காலத்தில் இது பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், பைடனின் செயல்பாட்டின் ஸ்டைல் குறித்து அவருடைய ஆதரவாளர்கள் நம்பிக்கையாக உள்ளனர். எளிதில் அணுக முடியாதவராக இல்லாமல், சாதாரண மக்களுடன் கனிவாகப் பழகும் தன்மை, அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் முந்தைய வேட்பாளர்கள் சிக்கிக் கொண்ட அதே வலையில் சிக்காமல் காப்பாற்றும் என்கிறார்கள்.

பைடனுக்கு வாஷிங்டனில் நிறைய அனுபவம் இருக்கிறது. செனட்டில் 3 தசாப்த காலமாக இருந்துள்ளார். ஒபாமா காலத்தில் எட்டு ஆண்டுகள் துணை அதிபராக இருந்துள்ளார். ஆனால் இதுபோன்ற பெரிய பணித் திறன் விவரங்கள் எப்போதும் உதவிகரமாக இருப்பது கிடையாது.

நீண்ட வரலாறு

முதலில் 1987இல் அதிபர் பதவிக்கு பைடன் போட்டியிட்டார்.
படக்குறிப்பு,

முதலில் 1987இல் அதிபர் பதவிக்கு பைடன் போட்டியிட்டார்.

கடந்த சில தசாப்தங்களில் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளிலும் பைடன் ஈடுபாடு கொண்டிருக்கிறார் அல்லது அதுபற்றி ஏதாவது கூறியிருக்கிறார். இப்போதைய அரசியல் சூழ்நிலையில், அந்த முடிவுகள் நல்லவையாக பார்க்கப்படாமல் போகலாம்.

1970களில், அரசுப் பள்ளிக்கூடங்களில் இன ஒற்றுமையை உருவாக்கும் வகையில், அருகில் உள்ள நகரங்களுக்குப் பேருந்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும் நடைமுறைகளை எதிர்த்த பிரிவினைவாதிகளை அவர் ஆதரித்துள்ளார். அவருடைய பிரச்சாரத்தில் அவருக்கு எதிராக இந்த விஷயம் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படுகிறது.

பைடன் ``விரும்புதலுக்கு உகந்தவர் அல்ல'' என்று ஒபாமாவின் பாதுகாப்புத் துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸ் கூறியதை குடியரசுக் கட்சியினர் சுட்டிக்காட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ``கடந்த தசாப்தங்களில் ஏறத்தாழ ஒவ்வொரு முக்கியமான அரசியல் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அவர் தவறாக செயல்பட்டிருக்கிறார்'' என்று ராபர்ட் கேட்ஸ் கூறியதையும் குடியரசுக் கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

வெளிநாட்டு விவகாரங்கள்

தூதரக உறவில் அனுபவம் மிகுந்தவராக பைடன் கருதப்படுகிறார். எனவே வெளிநாட்டில் ஊழல் புகார் என்பது பைடனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். முன்பு இவர் வெளிநாட்டு உறவுகள் செனட் கமிட்டியின் தலைவராக இருந்தார். ``கடந்த 45 ஆண்டுகளில் உலகின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் சந்தித்திருக்கிறேன்'' என்று அவர் பெருமையாக சொல்லியிருக்கிறார்.

அதிபர் பதவி வகிப்பதற்கான அனுபவம் கொண்டவராக பைடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையை வாக்காளர்களிடம் ஏற்படுத்துவதாக இது இருக்கும். ஆனால் அந்தத் துறையில் அவருடைய செயல்பாடுகள் எந்த அளவுக்கு வாக்காளர்களை ஈர்க்கும் என்பதை ஊகிப்பது சிரமமான விஷயமாக இருக்கிறது.

அவருடைய அரசியலின் பெரும்பகுதியைப் போல, இதுவும் மிதமான நடுத்தர நிலையிலானதாகவே கருதப்படுகிறது.

1991 வளைகுடா போருக்கு எதிராக அவர் வாக்களித்தார், 2003ல் இராக்கில் நுழைவதற்கு ஆதரவாக வாக்களித்தார். அதில் அமெரிக்கா ஈடுபட்டதை விமர்சித்தார்.

உலக அரங்கில் பைடனுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது.
படக்குறிப்பு,

உலக அரங்கில் பைடனுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது.

இயல்பாகவே எச்சரிக்கையுடன் இருக்கும் பைடன், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினரின் தாக்குதல் வேண்டாம் என ஒபாமாவுக்கு ஆலோசனை கூறினார்.

பைடன் பற்றி அந்த அல்-காய்தா தலைவருக்கு பெரிய எண்ணம் எதுவும் இல்லை என்று தெரிகிறது. சி.ஐ.ஏ. வசப்படுத்தி வெளியிட்ட ஆவணங்களைப் பார்த்தால், ஒபாமாவை குறிவைத்து செயல்படுமாறு தனது கொலைப்படையினருக்கு பின்லேடன் அறிவுறுத்தினாரே தவிர, அப்போது துணை அதிபராக இருந்த பைடன் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று தெரிகிறது. ``அதிபர் பதவியைக் கையாள பைடன் ஆயத்தமாக இல்லாதவர், அதனால் அமெரிக்காவில் நெருக்கடி ஏற்படும்'' என்று பின்லேடன் கருதியதாகத் தெரிகிறது.

போருக்கு எதிரான தீவிர கருத்துகளைக் கொண்ட ஜனநாயகக் கட்சியின் இளம் ஆதரவாளர்களுக்கு பைடனின் கருத்துகள் பிடிக்காமல் போகலாம். பெர்னி சான்டர்ஸ் அல்லது எலிசபெத் வாரென் போன்ற சிந்தனை கொண்டவர்களாக இளைஞர்கள் இருக்கிறார்கள். ஈரானின் ராணுவ ஜெனரல் குவாசிம் சுலைமானி கடந்த ஜனவரி மாதம் டிரோன் விமான தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட சமயத்தில், அதிபர் ட்ரம்ப் செயலைக் கொண்டாடியவர்களுக்கு, பைடன் போருக்கு எதிரானவராகத் தோன்றுகிறார்.

குடும்பத்தின் துயரம்

பல அரசியல்வாதிகளைக் காட்டிலும், பைடன் பிறரிடம் நெருக்கமாக இருப்பதற்கு முக்கிய காரணம் - நம் எல்லோரையும் பாதித்த விஷயமாக உள்ளது - அது மரணம்.

செனட்டுக்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டு, பதவி ஏற்கும் சமயத்தில் அவருடைய மனைவி நெய்லியாவும், மகள் நவோமியும் கார் விபத்தில் மரணம் அடைந்தனர். அவருடைய இரு மகன்கள் பியூ, ஹன்டர் ஆகியோர் அந்த விபத்தில் காயமடைந்தனர்.

பின்னர் 2015 ஆம் ஆண்டில் மூளையில் கட்டி ஏற்பட்ட காரணத்தால், 46வது வயதில் பியூ இறந்துவிட்டார்.

இளம் வயதில் தனக்கு நெருக்கமானவர்கள் மரணம் அடைந்துவிட்டதால், அமெரிக்கர்களுடன் அவர் உறவு கொண்டாடுகிறார். தன்னுடைய அரசியல் அதிகாரம் மற்றும் சொத்துகள் பற்றி கருதாமல், தன்னைப் போன்ற துயரத்தை சந்தித்தவர்களுக்கு அனுதாபம் காட்டுகிறார்.

ஆனால் அவருடைய இன்னொரு மகன் ஹன்டர் தொடர்பான குடும்ப விவகாரம் மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது.

ஹன்டர் பைடன் தன் தந்தையின் அரசியல் வாழ்வுக்கு சிக்கல்களை ஏற்படுத்தினார்.
படக்குறிப்பு,

ஹன்டர் பைடன் தன் தந்தையின் அரசியல் வாழ்வுக்கு சிக்கல்களை ஏற்படுத்தினார்.

அதிகாரம், ஊழல் மற்றும் பொய்கள்?

ஹன்டர் வழக்கறிஞராகி, அதிகார வட்டத்தில் செல்வாக்கு செலுத்துபவராக இருந்தார். பின்னர் அவருடைய தனிப்பட்ட வாழ்வு தாறுமாறாகிப் போனது. அவர் போதை மருந்துகள், மது அருந்துவதாகவும், உடைகளைக் களையும் நடனம் நடைபெறும் கிளப்களுக்கு செல்கிறார் என்றும் கூறி அவருடைய முதல் மனைவி விவாகரத்து பெற்றார். கொக்கைன் போதை மருந்து பயன்படுத்தியதாக ஆய்வில் தெரிய வந்ததை அடுத்து அமெரிக்க கடற்படை ரிசர்வ் பிரிவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

சீனாவைச் சேர்ந்த எரிசக்தி தொழிலதிபர் தனக்கு ஒரு வைரம் கொடுத்ததாக நியூயார்க் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தத் தொழிலதிபர் ஊழல் செயலில் ஈடுபட்டதாக பிறகு சீனா விசாரணை நடத்தியது.

தனது தனிப்பட்ட வாழ்க்கையை ஹன்டர் பொதுவான செய்திகளாக்கிவிட்டார் (கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஒரு வாரத்துக்கு முன்பு அந்தப் பெண்ணை அவர் சந்தித்திருந்த நிலையில் திருமணம் நடந்தது.). ஹன்டர் ஏராளமாக பணம் சம்பாதித்தது, அவருடைய தந்தைக்கு எதிரான செய்திகளாக மாறின.

போதை மருந்து அடிமைப் பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சிப்பவர்கள் மீது அமெரிக்கர்கள் பலர் அனுதாபம் காட்டுவார்கள். ஆனால், நல்ல சம்பளத்துடன் கூடிய பணிகளிலும் அதேசமயத்தில் அவர் இருந்தார். பைடன்களை போன்ற உயர்நிலை அரசியல்வாதிகளின் குடும்பத்தினரால் எந்த மாதிரி மாறுபட்ட வாழ்வை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று காட்டுவதாக அது கருதப்படுகிறது.

வார்த்தைகளை திரும்பப்பெற வேண்டிய தருணம்

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஈடுபடுவது பற்றி குறிப்பிட்ட பைடன், ``அதிபராக இல்லாமல் மகிழ்ச்சியாக சாக விரும்புகிறேன்'' என்று கூறினார்.

ஆனால், இப்போது பெற்ற வெற்றியின் மூலம் இனிமேலும் அவரால் அப்படி சொல்ல முடியாது.

நன்றி:BBC.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?