வெள்ளி, 12 மார்ச், 2021

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா

 முதல் வணக்கம்

இன்றுவரை 'சுரன்' க்கு ஆதரவு தந்தவர்களுக்கு......

17லட்சம் பேர்கள் தளத்துக்கு வந்து சென்றுள்ளார்கள்.

பத்தாண்டுகள் தொடர்ந்து இடுகையிடப்படுகிறது சுரனில்.

சுரன் வந்த 2011 களில் வலைப்பூக்கள் எண்ணிக்கை எண்ண மாளாதவை.

வலைப்பூ தொகுத்து வழங்கவே இன்ட்லி,தமிழ்10,ஈகரை ,சங்கமம்,களம்,என பத்து  தொகுப்பான்கள்.இன்று....?

ஈகரை மட்டும் அவ்வப்போது. தலைகாட்டுகிறது.

ஆனால் அதில் ஆரம்பம் முதல் உறுப்பினரான சுரன் தற்போது உள்நுழைவே செய்ய முடியவில்லை.

எனினும் வாசகர்வருகை தினமும் 300 க்கு மேல் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

தொடரட்டும் உங்கள் வருகை...

தொடரும் ". சுரன் "பயணம்.....

---------------------------+----------------------------


“அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா” – வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்


நேற்று தந்தி தொலைக்காட்சியில் அண்ணன் சீமானின் பேட்டி ஓடிக்கொண்டிருந்ததைத் தற்செயலாகப் பார்த்ததும், தொடர்ச்சியாக அவருடைய பேட்டியைக் கண்டேன். வழக்கம்போல ஆக்ரோஷமாக, மிடுக்காகப் பேசினார். கூடுமானவரை தூய தமிழில் பேசும் அவரது பேச்சு ரொம்பவே பிடிக்கும் என்பதால் அவரது பேட்டியைத் தொடர்ந்து கேட்டேன். நன்கு வேகத்தோடு தனது கோட்பாடுகள் குறித்து பேசிவந்த அண்ணன், தன்னோடு சமரசம் பேச மீடியேட்டரை மோடி அனுப்பியது குறித்து பேசியதைக்கேட்டு ஆச்சர்யமானது. மோடியோடு சந்திப்பு நிகழ்த்தினால் அண்ணனுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். குறைந்தபட்சம் மோடிக்கு எதிராக அதிகமாகக் களமாடாமல் சற்று அடக்கிவாசித்தால் பொருளாதாரரீதியில் உதவுவதாகவும் பேரம் பேசியிருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அண்ணன் உடன்படவில்லை என்றபோது பெரிய மகிழ்ச்சி! அண்ணனை பணத்தால் விலைபேச முடியாது என்ற உற்சாகம் என்னுள்ளே! பேட்டியின் தொடர்ச்சியாக, சசிகலாவுடனான சந்திப்பு குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, அந்த அம்மையார்மீது தனக்கு பரிவு உண்டு என்றும், அம்மையாரின் கணவர் நடராஜன் தமிழ் மொழிப்பற்றாளர், தமிழர் ஆதரவு இயக்கம் சார்ந்தவர் என்பதால் அவங்க மீது நன்மதிப்பு உண்டு என்றார். அப்போதுதான் அண்ணனின் பேச்சுமீது சிறு வருத்தம் வந்தது. என்னதான் நடராஜன் தமிழ்ப்பற்றாளர் என்றாலும், சசிகலா-ஜெயலலிதா கூட்டணியால் தங்கள் சொத்தை இழந்த கங்கை அமரன், சொத்தை இழந்த துக்கத்தில் உயிரையேவிட்ட பாலு ஜூவல்லர்ஸ் அதிபர் உள்ளிட்ட பல தமிழர்களும் நினைவுக்கு வந்தனர். இப்படிப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாக அண்ணன் பேசுறதுக்கு அப்டியென்ன காரணம் இருக்கும்னு மனசு அடித்துக்கொண்டது. நெறியாளர் துளைத்துத் துளைத்துக் கேட்டதால், முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு உண்டான செலவுக்கு சீமானின் பங்காக 5 லட்சம் ரூபாயை நடராஜன் தான் உரிமையோடும், அன்போடும் கொடுத்தார் என்றும், அந்த அன்புக்கு நன்றிக்கடன்பட்டதையும் அண்ணன் கூறினார்! அதைக் கேட்டதும் இன்னும் ஷாக்கானது! ஒருவர் தனக்கு பண உதவி செய்தார் என்பதற்காக, தமிழர்களுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றங்களைச் செய்த ஒரு தமிழின விரோதப் பெண்மணியை அண்ணன் ஆதரிச்சுட்டாரே என்று மனசு கஷ்டமானது. அடுத்து, சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிரான போராட்டத்திற்கு அண்ணன் சீமான் பெரிதாக ஆதரவு தெரிவிக்கவில்லையே என்று நெறியாளர் கேட்டார். இல்லையில்லை, நாங்கள் ஆதரவு தந்தோம் என்றார். நெறியாளர் விடாப்பிடியாக, இல்லையில்லை, மற்ற கட்சிகள் தான் போராட்டத்தை ஆதரித்தார்கள். நீங்கள் ஆதரிக்கவில்லையே ஏன் என்று சந்தேகத்தோடு கேட்டார். அதற்கு அண்ணனோ, சி.ஏ.ஏ சட்டம் வந்ததுக்கு காரணமே காங்கிரஸ் தான் என்று ஒரே போடாகப் போட்டார்! நெறியாளரைப்போலவே எனக்கும் அதிர்ச்சியானது! பாஜக தானே அதை அமல்படுத்தியது என்று அண்ணனை நெறியாளர் கேட்டார். அண்ணனோ, அந்த சட்டத்தை வடிவமைத்தது காங்கிரஸ் தான்… அந்த விஷத்தை உருவாக்கியது காங்கிரஸ் தான்… ஊட்டிவிட்டது மட்டுமே பாஜக… எனவே காங்கிரஸ் தான் இதற்கு பொறுப்பு என்று அடித்துப் பேசினார். என்னடா இது… அந்த போராட்டத்தை ஒட்டி நடந்த கலவரத்தில் 45 பேர் வரை கொல்லப்பட்டதுக்கு பாஜகவினரின் தூண்டுதல் தானே காரணம்… ஓராண்டுக்கு மேலாகியும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமலிருப்பதும் இந்த பாஜக அரசு தானே… அண்ணன் ஏன் இப்படி பேசுகிறார் என்று குழப்பமானது… அப்போது தான் மோடி… மீடியேட்டர்… டீலிங்… போன்று அண்ணனே கூறிய தகவல்களும் நினைவுக்கு வந்தது… அதேபோல வழக்கமாக ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் எதிர்த்தரப்பின் வாக்குகளைச் சிதறடிக்க பல்வேறு சிறிய கட்சிகளை மறைமுகமாக அவர் இயக்கும் உத்திகளும் நினைவுக்கு வந்து தொலைத்தது… அண்ணன் 5 லட்சத்துக்கே அவ்வளவு விசுவாசமாக இருந்தால்…. மோடி… கோடி.. என்று நினைக்கும்போதே தலைசுற்றியது.. சட்டெனச் சேனலை மாற்றி ஆதித்யாவில் காமெடி பார்க்கத் தொடங்கினேன். அங்கே கவுண்டமணி “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!” என்று கூறிக்கொண்டிருந்தார்!.
----------_---------_----------_----------_----------_ --------
தேர்தல் சர்வதிகாரம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக சொல்லப்படும் இந்தியாவை ஒரு தேர்தல் எதேச்சதிகார நாடாக அறிவித்துள்ளது ஸ்வீடனைச் சேர்ந்த வி-டெம் ஆய்வு நிறுவனம். இந்த நிறுவனம் பாரதிய ஜனதா கட்சியை எதேச்சதிகார ஆளும் கட்சியாக கடந்த ஆண்டு வரையறுத்தது. ஜனநாயகத்தின் கருத்தியல் மற்றும் அளவிடும் அமைப்பான வி-டெம் அறிக்கையை ஸ்வீடனின் துணை வெளியுறவு அமைச்சர் ராபர்ட் ரைட்பெர்க் முன்னிலையில் வெளியிடப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் காணப்படும் எதேச்சதிகாரத்தை நோக்கிய சரிவு, தற்போது உலகம் முழுவதும் சர்வாதிகாரமயமாக்கப்படும் இந்த ‘மூன்றாம் அலையில்’ ஜனநாயகத்தில் இருந்து சரிவு ஏற்பட்ட நாடுகளின் நடைமுறையை ஒத்திருப்பதாகவும் ஊடகங்கள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் சுதந்திரம் முதலில் குறைக்கப்பட்டு பிறகு, மிகப் பெரிய அளவில் சரிவைக் கண்டுள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது. கடந்த ஆண்டு, இந்தியா மிகவும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் பல தரவுகளுடன், 2019 முதல் இந்தியாவின் நிலை “தேர்தல் எதேச்சதிகார நாடாக” உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடி பிரதமரான பிறகு, தணிக்கைகள் வழக்கமாகிவிட்டன எனவும் அரசாங்க விஷயங்களுடன் மட்டுமே அவை நின்றுவிடவில்லை எனவும் அறிக்கை கூறுகிறது. மோடிக்கு முன்னர் இந்திய அரசு தணிக்கை செய்வதை அரிதாகவே பயன்படுத்தியது எனவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த அம்சத்தில், இந்தியா இப்போது பாகிஸ்தானைப் போலவே எதேச்சதிகாரமாகவும், அதன் அண்டை நாடான பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தை விடவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும் வி- டெம் அறிக்கை கூறுகிறது. “பொதுவாக, இந்தியாவில் மோடி தலைமையிலான அரசாங்கம் விமர்சகர்களை மவுனமாக்குவதற்கு தேசத்துரோகம், அவதூறு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சட்டங்களைப் பயன்படுத்தியுள்ளது. உதாரணமாக, பாஜக ஆட்சியைப் பிடித்தபின் 7,000-க்கும் மேற்பட்டோர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆளும் கட்சியை விமர்சிப்பவர்கள்.” என்கிறது ஆய்வறிக்கை. அரசாங்கம் பொது சமூகத்தை கட்டுப்படுத்துவதாகவும் மதச்சார்பின்மைக்கான அரசியலமைப்பின் உறுதிப்பாட்டுக்கு எதிராக செயல்படுவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சிவில் சமூக அமைப்புகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டமான Foreign Contributions Regulation Act – FCRA -ஐ பயன்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது. இந்துத்துவாவுடன் தொடர்புடைய சிவில் சமூக அமைப்புகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் கூறுகிறது இந்த அறிக்கை. 2019-ம் ஆண்டும் திருத்தப்பட்ட சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் அரசியல் எதிரிகளை துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் சிறையில் அடைப்பதற்கும் பயன்படுத்தப்படுவதாகவும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாகவும் அறிக்கை ஆய்ந்தறிந்து கூறுகிறது. “கல்வி புலத்தில் எழும் மாற்றுக் கருத்துகளை மவுனமாக்குவதற்கும் உபா பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களை பல்கலைக் கழகங்களும் அதிகாரிகளும் தண்டித்துள்ளனர்” என்கிறது வி-டெம் ஆய்வு. “எதேச்சதிகாரம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதற்கான ஒரு முக்கியமான வெளிப்பாட்டு தன்மையை ஆய்வு கண்டறிந்துள்ளது. கல்வி புலம் மற்றும் சிவில் சமூகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் முதலில் ஊடகங்களை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இவற்றின் மூலம் பிரிவினையைத் தூண்டி அரசியல் எதிரிகளை அவமதிக்கவும் அரசாங்க இயந்திரங்கள் உதவியுடன் தவறான தகவல்களை பரப்புவதும் நடைபெற்றது. இத்தனை தூரம் கடந்த பிறகே, ஜனநாயகத்தின் அடிப்படைகளான தேர்தல் மற்றும் பிற அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த முடியும். அதுதான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்கிறது அறிக்கை. கடந்த 10 ஆண்டுகளில் தாராளமய ஜனநாயக நாடுகளின் உலகளாவிய வீழ்ச்சி வேகமடைந்துள்ளதாகவும் , குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியம், மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் 2020-ம் ஆண்டிலும் இது தொடர்ந்தது. கடந்த பத்து ஆண்டுகளில், ஜனநாயகமயமாக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் (16) குறைந்து, உலக மக்கள் தொகையில் வெறும் 4 விழுக்காடாக மட்டுமே உள்ளது எனவும் ஆய்வு கூறுகிறது. இந்தியாவைத் தவிர, மற்ற ஜி 20 நாடுகளான பிரேசில், துருக்கி ஆகியவையும் ஜனநாயகத்தில் சரிவைக்கண்ட முதல் 10 நாடுகளில் அடங்கும். கடந்த வாரம், அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய ஃப்ரீடம் ஹவுஸ் அறிக்கை இந்தியாவை பகுதி அளவு சுதந்திர நாடாக குறைத்துள்ளது. நரேந்திர மோடி 2014-ல் பிரதமரானதிலிருந்து மனித உரிமை அமைப்புகள் மீது அதிகரித்த அழுத்தம், கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான மிரட்டல் மற்றும் முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட கும்பல் வன்முறைகள் உள்ளிட்ட பெருந்தொகையான தாக்குதல்களால், நாட்டின் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மோசமடைந்துள்ளன என்கிறது அறிக்கை. 2019-ல் தேர்தலுக்குப் பிறகு மோடி மீண்டும் தேர்வுபெற்றதும் ஜனநாயகச் சரிவு துரிதப்படுத்தப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது. ஒருபுறம் அரசாங்கத்தின் கொடூர ஆளுகையில் நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. இந்த கொடூர ஒடுக்குமுறை மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல்களின் மூலமாகவே அமல்படுத்தப்படுகிறது. பாசிஸ்ட்டுகள் தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட பிறகும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் கவிழ்த்து, குதிரை பேரங்கள் மூலம் ஆட்சியமைப்பது ஆகியவை நம் கண் முன்னேயே நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இதனையே தரவுகளோடு சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை. --------------------0-----------------------