தேர்தல் நடத்தும் ஆக்கம்.

 

அதிகாரிகள்–ஆளும்கட்சி கூட்டு.

கோவையில் எதிர்க்கட்சிகளுக்கு வேட்டு!

அதிகாரிகள்–ஆளும்கட்சி கூட்டு: கோவையில் எதிர்க்கட்சிகளுக்கு வேட்டு!

ஒரு வேட்பாளர் தேர்தலில் ஜெயிப்பதற்கு கட்சியின் வாக்கு வங்கி, சாதி பலம், வியூகங்கள், வாக்குறுதிகள், பணம், செல்வாக்கு என எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. இதெல்லாம் சரியாக ‘ஒர்க் அவுட்’ ஆனால் வாக்கு எண்ணிக்கை நாளில் தேர்தல் அலுவலர் கையால் வெற்றிச்சான்று வாங்கலாம். இது எதுவுமே உதவாமல் அந்தத் தேர்தல் அலுவலர் மட்டும் உதவினாலும் அந்த வெற்றிச்சான்று, வேட்பாளருக்குக் கிடைத்து விடக்கூடும். இதற்கு வடமாநிலங்களில் எக்கச்சக்கமான உதாரணங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் சிவகங்கை, சிங்காநல்லுார் என்று அபூர்வமான சில உதாரணங்கள் இருக்கின்றன. அப்படியானால் அதிகாரிகள் நினைத்தால் ஒரு வேட்பாளரை ஜெயிக்க வைக்கவோ, தோற்கடிக்கவோ முடியுமா என்று அப்பாவித்தனமாக நீங்கள் கேள்வி கேட்டால், அரசியலில் கரை கண்ட அனுபவசாலிகளிடமிருந்து வரும் பதில் ‘ஆமாம்’ என்பதாகத்தான் இருக்கும்.

ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்...3 இட்லி, ஒரு தோசை சாப்பிட்டும் பசி அடங்கவில்லை. ஒரு வடையும் சேர்த்துச் சாப்பிடுகிறீர்கள். இன்னும் கொஞ்சம் பசிப்பது போலிருக்கிறது. ஒரு பூரி சொல்லி சாப்பிட்ட பின்புதான் பசி அடங்குகிறது. அப்படியானால் அந்த பூரிதான் பசி அடக்கியது என்று அர்த்தமில்லை. முதலில் சாப்பிட்ட எல்லாம் சேர்ந்துதான் பசியை அடக்கியிருக்கின்றன. அது போலத்தான் வெற்றிச்சான்று கொடுக்கும் அதிகாரியின் ஆதரவு மட்டும் இருந்தால் வெற்றி கிட்டிவிடாது. அதற்கு எட்டுத்திக்கிலும் உள்ள அதிகாரிகளும் அந்த கட்சியின் கட்டுக்குள் இருக்க வேண்டும். இதுதான் இப்போது கோவை மாவட்டத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் அதிநவீன தேர்தல் வியூகம். இந்த சக்கர வியூகத்திற்குச் சொந்தக்காரர் யாரென்று யாருக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை...சாட்சாத் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாகக் கருதப்படும் வேலுமணியேதான்!.

இவருடைய கட்டுப்பாட்டில்தான் கோவையிலுள்ள முக்கிய அதிகாரிகள் அனைவரும் இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளாக வைக்கும் அதே வார்த்தைகளைத்தான் ஆளும்கட்சியினர் சாதனையாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள 21 தொகுதிகளுக்கும் வேலுமணிதான் பொறுப்பாளர். மற்ற இரண்டு மாவட்டங்களில் அவருடைய ஆதிக்கம் எவ்வளவுக்கு இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் கோவை மாவட்டத்தில் அவரையன்றி அரசுத் துறைகளில் ஒர் அணுவும் அசையாது. அங்கு ஆட்சியர், முதல்வர், பிரதமர் எல்லாமே அவர்தான் என்று மார் தட்டுகிறார்கள் ஆளும்கட்சியின் ரத்தத்தின் ரத்தங்கள்.

கோவையில் இப்போது எந்த அதிகாரி, ஆளும்கட்சிக்காக என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார் என்பதே புரியாமல் தி.மு.க.,வினர் திணறிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு அதிகாரியாகப் பட்டியல் எடுத்து, அவர்களை மாற்றச் சொல்லி, பெட்டிஷன் கொடுத்து அதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து மாற்றுவதற்குள் தேர்தலே முடிந்து விடுமென்று விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள் திமுக வேட்பாளர்கள் பலர். அதிலும் வேலுமணிக்கு எதிராக திமுக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு காவல்துறையினர் கொடுக்கும் ‘டார்ச்சர்’ வேற லெவலாக இருக்கிறது என்கிறார்கள். இதனால் காவல்துறையினருக்கும், சிவசேனாதிபதிக்கும் தினமும் தகராறு நடந்து கொண்டிருக்கிறது.

நிலைமை மோசமாயிருப்பது தெரிந்த பின்பே, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூவிடம் கடந்த 20ம் தேதியன்று ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் தமிழகம் முழுவதும் எட்டு போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டுமென்று பட்டியல் கொடுத்து அதில் காரணங்களையும் விளக்கியிருந்தார். அதில் கோவை மாவட்டத்திலுள்ள போலீஸ் அதிகாரிகள் எண்ணிக்கை மட்டுமே ஐந்து.

அந்த மனுவில் முதலாவதாக அவர் குறிப்பிட்டுள்ள போலீஸ் அதிகாரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனிதா. இதுபற்றி ஆர்.எஸ்.பாரதி கொடுத்துள்ள மனுவில், ‘கோவையில் ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனிதா, தேர்தலையொட்டி காவலர் பயிற்சிப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அமைச்சர் வேலுமணியின் தலையீட்டால், ஐ.ஜி., அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய கணவர், வேலுமணியின் நிறுவனத்தில் பங்குதாரராகவுள்ளார்’ என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

அடுத்ததாக, கோவை எஸ்பி அலுவலக ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் லோகநாதன், கோவை மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் ஐந்தாண்டுகளாக அங்கு பணியாற்றி வருகின்றனர் என்றும், சிவில் சப்ளைஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, கோவை மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோஸ் ஆகியோர் ஏழாண்டுகளிலிருந்து பத்தாண்டுகள் வரை இங்கு பணியாற்றுகின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் பாரதி. இவர்களைத் தவிர்த்து, தற்பாது கோவை எஸ்பியாகவுள்ள அருளரசுவும் ஆளும்கட்சியுடன் நெருக்கமாக இருப்பதாக அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் அனைவருமே அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதை கோவை போலீஸ் அதிகாரிகள் சிலரே ஒப்புக்கொள்வதோடு, அவருக்காக இவர்கள் செய்த பல காரியங்களையும் பட்டியலிட்டு விவரிக்கின்றனர்.

ஆட்சிக்கு எதிராக யாராவது செய்திகள் வெளியிட்டால் அல்லது அறிக்கை வெளியிட்டால், அவர்கள் மீது அவதுாறு வழக்குகள் தொடுப்பதுதான் ஜெயலலிதாவின் பாணி. ஆனால் வேலுமணி மட்டுமே, நேரடியாக போலீசில் புகார் கொடுத்து, வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து உள்ளே தள்ளுகிறவர் என்று கூறி, அப்படிப் பதிவான வழக்குகளையும் அவர்கள் காண்பித்தனர்.

அந்த பட்டியலைக் காண்பித்து அந்த போலீஸ் அதிகாரிகள் சொன்ன தகவல்கள் மிரட்டல் ரகம்...

‘‘கோவை மாநகர காவல்துறை லிமிட்டில் உள்ள ஆர்எஸ் புரம், குனியமுத்துார் காவல் நிலையங்களில் தலா 3 வழக்குகள், உக்கடம் காவல் நிலையத்தில் 2 வழக்குகள், ராமநாதபுரம், சரவணம்பட்டி காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 10 வழக்குகள், வேலுமணிக்கு ஆதரவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் குனியமுத்துார் காவல் நிலையம் சார்பில், திமுக தலைவர் ஸ்டாலின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மற்ற வழக்குகள் அனைத்திலும் புகாருக்குள்ளானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கோவை சிம்பிளிசிட்டி இணையதளத்தின் ஆசிரியர் சாம் என்பவரும் ஒருவர். ஜாகீர் உசேன், பிலால், சிராஜூதீன் என்று இதிலும் சிறுபான்மையினர்தான் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக நிர்வாகிகள் முருகன், ராமமூர்த்தி ஆகியோருடன் சென்னையைச் சேர்ந்த சுதர்சன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

ஊரக காவல்துறை எல்லையில் பொள்ளாச்சி மேற்கு, கிணத்துக்கடவு, காருண்யா நகர், தொண்டாமுத்துார் மற்றும் பேரூர் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு வீதமாக மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதிலும் ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி, அந்தியூர் செல்வராஜ், திமுக மாவட்டப் பொறுப்பாளர் சேனாதிபதி ஆகியோர் கைதாகவில்லை. பொள்ளாச்சியைச் சேர்ந்த திமுக மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பல நாட்களுக்குப் பின்பே பிணை பெற்று வெளியில் வந்துள்ளனர்.

இந்த வழக்குகளைத் தவிர்த்து, சென்னையைச் சேர்ந்த உள்ளாட்சி அலசல் என்ற வாரப்பத்திரிகையின் ஆசிரியர் அன்பழகன் என்பவர், வேலுமணியைப் பற்றி அவதுாறு செய்தி வெளியிட்டார் என்று ஆலாந்துறை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசார் இரவோடு இரவாக சென்னை சென்று அவரை காலையில் கைது செய்து அழைத்து வந்தனர். உள்ளாட்சித்துறையில் பொறியாளர் மாறுதலுக்கு எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற பட்டியலை தனது பத்திரிக்கையில் வெளியிட்டதோடு, அதுபற்றி சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று அங்கும் அந்தப் பட்டியலை அவர் அனுப்பி வைத்ததுதான் காரணம். இந்த வழக்கில் அவர் மீது புகார் கொடுத்தவர், கோவை மாநகராட்சிப் பொறியாளர் பார்த்திபன். தன்னிடம் 2 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும் பார்த்திபன் கொடுத்த புகாரால் அன்பழகன் மீது வன்கொடுமை தடுப்புப்பிரிவிலும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதேபோல தமிழகம் முழுவதும் ‘2 லட்சம் கேட்டு மிரட்டியதாக’ 15 வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. கடைசியில் அவரை குண்டர் சட்டத்திலும் அடைத்தார்கள். 100 நாட்களுக்குப் பின்புதான் அவர் வெளியே வர முடிந்தது. இதில் பெரிய கொடுமை என்னவென்றால், இந்த வழக்குகள் அனைத்திலும் வேலுமணிக்கு ஆதரவாக புகார் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள், அரசுத்துறை அதிகாரிகள்தான்.’’ என்றார்கள்.

சிங்காநல்லுார் எம்எல்ஏ கார்த்திக் ஒரு புகாரை தமிழக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளார். அதைப்பற்றி நம்மிடம் அவர் விவரித்தார்...

‘‘கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையாளராக ஐந்தாண்டுகள் பொறுப்பில் இருந்தவர் ரவி. எப்போது பார்த்தாலும் அமைச்சர் வேலுமணியில் வீட்டில்தான் அவர் இருப்பார். கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே ஓய்வு பெற வேண்டியவர். அவருக்கு 2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு கொடுத்து சிறப்பு அரசாணை வெளியிட்டது வேலுமணியின் உள்ளாட்சித்துறை. மூன்றாவது முறையாக 2020 ஜூன் 30ல் பணி நீட்டிப்பு கொடுத்து அவரை மேற்கு மண்டல உதவி ஆணையராக மாற்றியுள்ளனர். கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளின் வாக்குகளை எண்ணும் அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, இவருடைய மண்டலத்தில்தான் இருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் அமைச்சருக்கு ஆதரவாக பலவித முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் அவர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளேன். இதுவரை நடவடிக்கை இல்லை!’’ என்றார்.

தொண்டாமுத்துார் தொகுதியின் பொறுப்பாளராக சென்னை தலைமைக்கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் சிலர் இன்னொரு விஷயத்தையும் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி நம்மிடம் பேசிய அவர்கள், ‘‘கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்துக்குக் கொடுத்ததை எதிர்த்து பலரும் சமூக ஊடகங்களில் பரப்புரை செய்திருக்கிறார்கள். அது அமைச்சர் வேலுமணியின் புகழுக்குக் களங்கம் விளைவித்து விட்டதாக போலீசில் ஒரு புகார் தரப்பட்டு, அந்தப் புகாரில்தான் ஜாகீர் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் புகாரைக் கொடுத்தது, மாநகராட்சி உதவி ஆணையாளர் செந்தில் அரசன். அவர்தான் இப்போது தொண்டாமுத்துார் தொகுதியின் தேர்தல் அலுவலர். இந்தத் தேர்தல் எப்படி நியாயமாக நடக்கும்...இங்கே இருக்கும் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், துணை கமிஷனர், ஐ.ஜி,, ரூரல் எஸ்பி எல்லோருமே அமைச்சர் வேலுமணியின் ஆட்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால் கோவை மாவட்டத்தில் கண்டிப்பாக தேர்தல் நியாயமான முறையில் நடக்க வாய்ப்பேயில்லை. அட்லீஸ்ட் தேர்தல் அலுவலர் செந்தில் அரசனை மாற்ற வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யவுள்ளோம்!’’ என்றார்கள்.

தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை நியமித்து, அவர்களை வளர்த்து விடுவதோடு, தேர்தல் நேரத்தில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் யுக்தியை கடந்த 2014 லோக்சபா தேர்தலின்போதே, அ.தி.மு.க., அறிமுகம் செய்துவிட்டதாக கோவையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் விளக்கினார்...

‘‘2014 நாடாளுமன்றத் தேர்தலை நினைவிருக்கிறதா...அந்தத் தேர்தலில் நீலகிரி தொகுதியில், பிஜேபி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. வேண்டுமென்றே தவறாக வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார். அதற்காக அவருக்கு 10 ஸ்வீட் பாக்ஸ் தரப்பட்டது. அந்த பெட்டிகளை கோவையிலிருந்து குன்னுாருக்கு தனது வாகனத்தில் கொண்டு சென்றவர், அப்போது கோவையில் உதவி கமிஷனராக இருந்த ஒரு அதிகாரிதான். அந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வென்றார். தேர்தல் முடிந்ததுமே பிஜேபி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குருமூர்த்தி, அதிமுகவில் சேர்ந்தார்.’’ என்றார்.

இதே யுக்தி கடந்த 2016 தேர்தலிலும் வெகுசிறப்பாகக் கையாளப்பட்டு, அதிமுக வேட்பாளர்களுக்கு பெரு வெற்றியைப் பெற்றுத்தந்ததாக விளக்கினார் கோவை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள ஒர் அதிகாரி....

‘‘அப்போது கோவை ஆட்சியராக இருந்தவர் அர்ச்சனா பட்நாயக். அவர் நேர்மையான அதிகாரி. ஆனால் அவருக்குக் கீழேயிருந்த பல அதிகாரிகள், ஆளும்கட்சியின் அடிமைகளாகேவே நடந்து கொண்டனர். ஆர்டிஓ ஒருவரின் வாகனம் முழுக்க முழுக்க பணம் கடத்துவதற்காக மட்டுமே 10 நாட்கள் பயன்படுத்தப்பட்டது. அப்போது தொண்டாமுத்துார் தொகுதி தேர்தல் அலுவலராக இருந்தவர், இப்போது மாநகராட்சியின் முக்கியப் பொறுப்பிலுள்ள ஒரு பெண் அதிகாரி. அவருடைய வாகனத்திலேயே ஆளும்கட்சிக்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக ஒரு புகார் கிளம்பியது. இதுபற்றி திமுகவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தது. ஆணையம் ஆய்வு செய்ததில் அந்த அதிகாரியின் வாகனம், அமைச்சரின் வீட்டு முன்பாக 2 மணி நேரம் நின்றது ஜிபிஎஸ் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அர்ச்சனா பட்நாயக் பரிந்துரை செய்தார். ஆனால் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக அர்ச்சனா பட்நாயக் மாற்றப்பட்டார். பரிந்துரைக்காக பழி வாங்கப்பட்டார். கலெக்டர் பங்களாவை காலி செய்யவும் அவருக்கு அவகாசம் தரப்படவில்லை. அவருக்குப் பதிலாக கோவை கலெக்டராக நியமிக்கப்பட்ட ஹரிஹரன், அர்ச்சனா பட்நாயக் குடும்பம் பங்களாவில் இருந்தபோதே, அதே வீட்டில் பால் காய்ச்சினார். அதன்பின் சர்க்யூட் ஹவுசில் தங்கினார் அர்ச்சனா. அவர் வெறுத்துப் போய் தன் சொந்த மாநிலமான ஒடிஷாவுக்கு அயல் பணி வாங்கிக்கொண்டு போய் நான்காண்டாகிவிட்டது!’’ என்றார்.

தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை என எல்லாத்துறை அதிகாரிகளும் ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருப்பதால் எதிர்க்கட்சியினர் அனைவரும் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். எல்லோரையும் கூண்டோடு மாற்றினால்தான் நியாயமான முறையில் தேர்தல் நடக்குமென்கிறார்கள் திமுகவினர். அதெல்லாம் நடக்கிற காரியமாகத் தெரியவில்லை.

ஆக...இந்தத் தேர்தலிலும் கோவை அதிமுக கோட்டையாக மாறவே வாய்ப்பு ரொம்ப அதிகம்!

–பாலசிங்கம்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?