தற்சார்பென்ற மோடி சார்பு.

சீமானின் “தற்சார்பு” பொருளாதாரம் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அர்ஜுன் பேசும் வீடியோ பார்க்கக் கிடைத்தது. அதில் அவர் விவசாய உற்பத்திப் பொருட்களை வணிக மயமாக்கி ஏற்றுமதி செய்வதைப் பற்றி விளக்கம் கொடுக்கிறார். வெளிப்படையாகவே தமிழ் முதலாளிகளை உருவாக்கி வளர்க்க வேண்டும் என்கிறார். அவரது பேச்சு, கிட்டத்தட்ட பூமி திரைப்படம் பார்ப்பது போலிருந்தது.

Make in India என்ற பெயரில் மோடி பிரச்சாரம் செய்து வந்த “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும், சீமானின் “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை. இருவரும் ஒரே விடயத்தை தான் பேசுகிறார்கள். ஆனால், இவர்கள் சொல்லாமல் மறைக்கும் உண்மை ஒன்றுள்ளது.

இந்தியா சுதந்திரமடைந்த நாளில் இருந்து இன்று வரை IMF, உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கி வருகின்றது. மத்திய அரசு மட்டுமல்ல, தமிழ்நாடு மாநில அரசு தனக்கென தனியாக கடன் வாங்கி வருகின்றது. அந்தக் கடன்கள் நிபந்தனையின் பேரில் கொடுக்கப்படுகின்றன. பொருளாதாரத்தை தாராளமயப்படுத்த வேண்டும், சந்தையை நூறு சதவீத அந்நிய முதலீடுக்கு திறந்து விட வேண்டும்.

அதனால்தான் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களின் விவசாய வணிகப் பொருட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இந்திய நிறுவனங்களால் உலக சந்தையைப் பிடிக்க முடியவில்லை. உதாரணத்திற்கு சாக்லேட் தயாரிக்க தேவையானக் ககாவோ (cocoa) சுவிட்சர்லாந்தில் கிடைக்காது. அந்த மரம் ஆப்பிரிக்காவில் உள்ளது. குறிப்பாக, கானா, ஐவரி கோஸ்ட் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ககாவோ (cocoa) இறக்குமதி செய்யப்படுகின்றது.

சுருக்கமாக, உண்மையில் ஆப்பிரிக்க சாக்லேட்தான் சுவிஸ் சாக்லேட் என்ற பெயரில் உலகம் முழுவதும் விற்பனையாகின்றது. ஏன் அந்த ஆப்பிரிக்க நாடுகள் தாமே சாக்லேட் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்க முடியவில்லை? உண்மையில் உள்நாட்டு முதலாளிகள் தயாரித்து விற்கும் சாக்லேட்டுகள்  நிறைய கிடைக்கின்றன. ஆனால் அவை அந்த நாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. சில நேரம் அயல்நாட்டு சந்தைகளில் விற்பனையாகலாம்.

அதைவிட அமெரிக்காவுக்கு சாக்லேட் ஏற்றுமதி செய்வதெல்லாம் கனவிலும் நினைக்க முடியாது. அமெரிக்காவில் உள்ள ஒரு விநியோகஸ்தர் இறக்குமதி செய்தால், அதற்கு நிறைய வரி விதிப்பார்கள். அதற்கும் மேலே பல தடைகள் வரும். ஆனால் சுவிஸ் சாக்லேட்டுக்கு அப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இது அமெரிக்காவுக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நடக்கிறது.

நாம் தமிழரின் “தற்சார்பு” பொருளாதாரமும், இப்படித் தான் தடுக்கி விழும் என்று எதிர்பார்க்கலாம். அவர்களால் குறைந்த பட்சம் பால்மாவை உற்பத்தி செய்து உள்நாட்டில் கூட அதைச் சந்தைப்படுத்த முடியாது. அதற்குக் காரணம் சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதியான பால்மா தமிழ்நாட்டு சந்தையில் மிகக் குறைந்த விலையில் விற்பனையாகின்றது. முறைப்படி பார்த்தால், சுவிஸ் பால்மாதான் அதிக விலையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். உண்மை தான். ஆனால், உலக சந்தையை ஆக்கிரமிக்க வேண்டும் என்பதற்காக சுவிஸ் அரசு மானியம் அள்ளிக் கொடுக்கிறது.

அதே மாதிரி இந்திய, தமிழ்நாடு அரசும் மானியம் கொடுக்கலாம் தானே என்று கேட்கலாம். இங்கு தான் IMF, உலக வங்கி மூக்கை நுழைக்கிறது. அப்படி செய்து விட்டால் கடன் கொடுப்பது நிறுத்தப்படும். அரசு மானியங்களைக் குறைக்க வேண்டும், அல்லது நிறுத்த வேண்டும் என்பது அவை முன்வைக்கும் முக்கியமான நிபந்தனையாக உள்ளது. இன்னொருவிதமாக சொன்னால், மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களுக்கு சமமாக இந்திய நிறுவனங்கள் வளர விடாது ஆரம்பக் கட்டத்திலேயே தடுத்து விடுகிறார்கள். இதைப் பற்றி த் தெரிந்நிருந்தும் சீமான் பேசவே மறுக்கிறார்.பேசினால் மக்கள் விழிப்படைந்துவிடுவார்களே.

முகநூலில் : kalai marx

---------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?