அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாள்

 அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் உட்பட பல்வேறு மானியங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், பொருளாதார ரீதியாக இவை சாத்தியமில்லை_10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போது ஒன்றும் செய்யாமல் தி.மு.க அறிக்கையில் சொன்னதை எல்லாம் தாங்களும் செய்யப்போவதாக அ.தி.மு.க,  சொல்வது ஏமாற்று வேடிக்கைதான்' என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.

2021ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலுக்கான செயல்திட்ட அறிக்கையை அ.தி.மு.க தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து வெளியிட்டனர்.

அந்த தேர்தல் அறிக்கையை முன்னாள் அமைச்சர் பொன்னையன் வாசித்தார். அவர் வாசிக்கும்போதே கேட்பவர்கள் கவனத்தைக் கவரும்வகையில் இந்தத் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக, அம்மா இல்லம் என்ற பெயரில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டம், குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் 1,500 ரூபாய் வழங்கும் திட்டம், ஆண்டிற்கு ஆறு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம், இலவசமாக துணிதுவைக்கும் எந்திரம் வழங்கும் திட்டம், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி, விலையில்லா கேபிள் இணைப்பு, பெட்ரோல் விலையைக் குறைக்க நடவடிக்கை ஆகிய அறிவிப்புகள் தேர்தல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.

சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின்படி தமிழ்நாட்டின் கடன் என்பது, சுமார் ஐந்து 5.7 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. நிதிப் பற்றாக்குறையும் சுமார் 84 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த நிலையில், அ.தி.மு.க. அரசு அறவித்துள்ள பல திட்டங்கள் நிதிச் சுமையை ஏற்படுத்துவதாக இருப்பதால், இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.


"தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது. எதிர்கட்சி என்பது தற்போது ஆட்சியில் இல்லாத கட்சி. ஆகவே தாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதையெல்லாம் செய்வோம் என்று சொல்வார்கள். ஆனால் ஆளும் கட்சி அப்படியல்ல. அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல திட்டங்களை இப்போதே செய்திருக்க வேண்டியதுதானே என்ற கேள்வி எழும். அதுதான் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கைக்கு நேர்ந்திருக்கிறது" என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவரான ஜோதி சிவஞானம்.

இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்தபோது நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கை அடுத்து பலர் வேலை இழந்தார்கள். அந்த காலகட்டத்தில் பல அரசியல் கட்சிகள், மக்களுக்கு மாதாமாதம் உதவித் தொகை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். "அப்போதும் மாநிலத்தில் அ.தி.மு.கதானே ஆட்சியில் இருந்தது. அவர்கள் விரும்பியிருந்தால் கொடுத்திருக்கலாமே? இப்போது தி.மு.க. மாதம் 1,000 ரூபாய் அளிக்கப்போவதாகச் சொன்னவுடன் அ.தி.மு.கவும் தரப்போவதாகச் சொல்கிறது. அரசுதான் எவ்வித முன்னேற்பாடுமின்றி ஊரடங்கை அறிவித்தது. இது தேர்தலுக்காக அளிக்கப்படும் வாக்குறுதியாகத்தான் தெரிகிறது" என்கிறார் ஜோதி சிவஞானம்.

இதேபோலத்தான் வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை என்ற வாக்குறுதியையும் பார்க்கிறார் ஜோதி சிவஞானம்.

"புதிதாக வேலை தருவது இருக்கட்டும். அரசுத் துறையில் காலியாக இருக்கும் வேலைவாய்ப்புகளையாவது நிரப்பியிருக்கலாமே.. கடந்த பத்தாண்டுகளில் அரசுத் துறையில் உள்ள பல பணிகள் அவுட் சோர்ஸ் செய்யப்பட்டு விட்டன. முறைசார்ந்த பல பணியிடங்களை, முறைசாரா பணியிடங்களாக மாற்றி விட்டார்கள். அது தவிரவும் பெரும் எண்ணிக்கையிலான அரசுப் பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. இவற்றையே நிரப்பாதவர்கள் எப்படி வீட்டிற்கு ஒருவருக்கு அரசுப் பணிகளைத் தருவார்கள்?" எனக் கேள்வி எழுப்புகிறார் ஜோதி சிவஞானம்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று, வருடத்திற்கு ஆறு எரிவாயு சிலிண்டர்களை ஒரு குடும்பத்திற்கு இலவசமாக அளிப்பது என்பது. அது சாத்தியமே இல்லை என்கிறார் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார வல்லுநரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

"எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர்களை முதலில் சப்ளை செய்துவிட்டு பிறகு பணத்தை வாங்க மாட்டார்கள். மாநில அரசு இலவசமாகக் கொடுப்பதென்றால் முன்கூட்டியே பணத்தைச் செலுத்த வேண்டும். அப்படியானால் மாதாமாதம் 1,500 கோடி ரூபாயை முன்பணமாகச் செலுத்த வேண்டும். அது சாத்தியமா?" என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

எரிவாயு உருளையைப் பொறுத்தவரை, தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் உள்ளது. "எரிவாயுவின் விலையை மத்திய மாநில அரசுகள் நினைத்திருந்தால் குறைத்திருக்க முடியும். அதைச் செய்யவில்லை. தவிர, தற்போது எரிவாயுவுக்கு நிர்ணயிக்கும் விலை மிக அதிகம். செளதி அராம்கோ நிறுவனம் சர்வதேச அளவில் உள்ள தேவையைப் பொறுத்து ஒரு விலையை நிர்ணயிக்கிறது. அந்த விலையை நாம் பின்பற்றுகிறோம். இதற்கும் உற்பத்திச் செலவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கேஸ் சிலிண்டர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த மானியத்தை, நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த ஆரம்பித்த போது 250 அளவுக்கு மானியம் இருந்தது. இப்போது வெறும் 25 ரூபாய் அளவுக்குக் குறைந்துவிட்டது. கேஸ் சிலிண்டரின் விலை 400 ரூபாயிலிருந்து 800 ரூபாய் ஆகிவிட்டது. இதையே சரிசெய்ய முடியவில்லை. எப்படி இலவசமாக ஆறு சிலிண்டர்களைத் தர முடியும்?" என்கிறார் ஜோதி சிவஞானம்.

துணி துவைக்கும் எந்திரத்தை இலவசமாக அளிப்பதும் இயலாத காரியம் என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

"தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களைவிட்டுவிட்டால், பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் வசதியே கிடையாது. அப்படியிருக்கும்போது எப்படி இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும்? தவிர இதற்காகும் செலவை எங்கிருந்து பெறுவார்கள். தமிழ்நாடு அரசு டிவியை இலவசமாக வழங்கியபோது வருவாய் Surplusஆக இருந்தது. இப்போது பற்றாக்குறை ரூ. 80 ஆயிரம் கோடியை எட்டிவிட்டது. எப்படிக் கொடுக்க முடியும்" என்கிறார் அவர்.

பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு அறிவிப்பைப் பொறுத்தவரை, மாநில அரசு தனது வரியைக் குறைப்பதன் மூலம் அவற்றின் விலையைக் குறைக்கலாம். "ஆனால், இவ்வளவு நாளாக ஏன் அதைச் செய்யவில்லை? குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்போம் என்கிறார்கள். இவர்களுடைய 13 மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்துத்தான் அந்தச் சட்டம் நிறைவேறியது. தேர்தலில் சிறுபான்மையினரின் 13 - 14 சதவீத வாக்குகள் கிடைக்காது என்று அஞ்சி இப்போது இம்மாதிரி வாக்குறுதிகளை தெரிவிக்கிறார்கள். தொடக்கப் பள்ளிகளில் தனியார் ஒத்துழைப்புடன் காலை உணவு என்பது அக்ஷய பாத்ரா உதவியுடன் செய்வார்கள் என்றே கருதுகிறேன். இம்மாதிரி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது, மதரீதியான பிளவை ஏற்படுத்தும்" என்கிறார் ஆனந்த்.

அதிமுக தேர்தல் அறிக்கை 2021: `வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை'

திருமண உதவித் தொகை 50,000லிருந்து அறுபதாயிரமாக உயர்த்துவது, விலையில்லாமல் கேபிள் இணைப்பு அளிப்பது, பால் கொள்முதல் விலையை அதிகரித்து விற்கப்படும் பாலின் விலையைக் குறைப்பது ஆகிய திட்டங்களையும் அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. ஆனால், இவற்றை ஏன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும், ஆட்சியிலிருந்தபோதே அவற்றைச் செயல்படுத்தியிருக்கலாமே என்று கேள்வி எழுப்புகிறார்கள் விமர்சகர்கள்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்திட மைய அரசை வலியுறுத்துவோம், ஏழு பேரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும், ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவும் குடியிருப்பதற்கான அனுமதி வழங்கவும் வலியுறுத்தப்படும் போன்ற சட்டரீதியான சில வாக்குறுதிகளையும் முன்வைத்திருக்கிறது அ.தி.மு.க.

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதேபோல, ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரை விடுவிக்க வேண்டுமென தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் அளித்த நிலையிலும் அதிலும் முடிவேதும் இல்லாத நிலையே நீடிக்கிறது.

2016ஆம் ஆண்டில் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கைபேசி, சென்னை, மதுரை, கோயம்புத்தூர் நகரங்களில் மோனோ ரயில்திட்டம், ஒரு லிட்டர் பால் 25 ரூபாய்க்கு வழங்கப்படும், படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும், இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அவை நிறைவேற்றப்படவில்லை என்பதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

.


---------------------------------------_--------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?