புதிய மாற்றங்கள்.

 தமிழகத்தின் புதிய முதல்வாராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், கொரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தல், தமிழகத்தின் கடன் சுமை குறைத்தல் போன்ற ஏராளமான சவால்களை எதிர்நோக்க உள்ளார். இந்நிலையில், தனது ஆட்சி நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் நாளிலேயே சில அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக, தமிழக அரசின் தலைமைச்செயலாளராக இறையன்பு ஐஏஎஸ்-ஐ பணியமர்த்தியுள்ளார். மேலும் முக்கியமாக முதலமைச்சருக்கான தனி செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அறிவித்துள்ளார்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்:

முதலமைச்சரின் முதன்மை தனி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ், இதற்கு முன்பாக, தொல்லியல் துறை இயக்குனராகப் பதவி வகித்து வந்துள்ளார். 1995-ம் ஆண்டு, தனது 23-வது வயதில், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் 35-வது இடத்தை பிடித்தார். இவர் ஈரோடு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது, தொழில்நுட்பப் பூங்கா, ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொண்டுவந்துள்ளார். உதயச்சந்திரன் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்
உதயச்சந்திரன் ஐஏஎஸ்

தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்தபோது சமச்சீர் கல்வி பாடத்திட்ட வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றினார். மாணவர்களுக்கு இருந்து வந்த தர மதிப்பீட்டு முறையினையும் மாற்றியமைத்தார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்தபோது, இணையம் சார் விண்ணப்ப அமைப்பு, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் மற்றும் கணிப்பொறி சார் தேர்வுகள் போன்ற புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தினார். மேலும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தபோது, மகளிர் சுய உதவி குழுக்களின் ஏழைப்பெண்களுக்கான கடனுதவி, ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையாராக இருந்துபோது, வீடுகட்டும் திட்டத்தில் பயன்பெற ஏழை மக்களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு மின்னணுக்கழத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தபோது, ஐடி துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைப் பெற்றது, தமிழ் இணையக்கல்வி கழகத்தின் இயக்குநராக இருந்தபோது லட்சக்கணக்கான அரிய நூல்களை மின்னுருவாக்கம் செய்தது, தொல்லியல் துறை இயக்குநராக இருந்தபோது, கீழடி அகழாய்வுப் பணிகளை விரிவுபடுத்தியது போன்ற எண்ணற்ற சாதனைப்பணிகளை தான் பதவிவகித்த அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுத்தி தனிமுத்திரைப் பதித்தவர் உதயச்சந்திரன்.

உமாநாத் ஐஏஎஸ்:

முதலமைச்சரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உமாநாத் ஐஏஎஸ், அடிப்படையில் ஓர் எம்.பி.பி.எஸ். மருத்துவர். 2001-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்று பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.

உமாநாத் ஐஏஎஸ்
உமாநாத் ஐஏஎஸ்

அந்த சமயத்தில், பல்வேறு நலத்திட்ட மற்றும் மாவட்ட சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு திறம்பட செயல்பட்டதால், சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர் என்ற பெயரினைப் பெற்றார். தனி செயலாளராக நியமிப்பதற்கு முன்பாக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குநராகப் பதவி வகித்தார். மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனா சூழலிலும் தமிழக மருத்துவ கொள்முதல் பிரிவில் சிறப்பாக சேவையாற்றி வந்துள்ளார்.

எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ்:

முதலமைச்சரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ், இதற்கு முன்பாக, அருங்காட்சியக இயக்குநராகப் பதவி வகித்து வந்துள்ளார். 2002-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார்.

எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ்
எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ்

முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பாரத் டெண்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்க முகாந்திரம் இருப்பதாகக் கூறி, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மறுத்தார். அதன் பின்னர், நிகழ்ந்த அரசியல் அழுத்தம் காரணமாக அருங்காட்சியகத் துறைக்கு மாற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

அனு ஜார்ஜ் ஐஏஎஸ்:

முதலமைச்சரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அனு ஜார்ஜ் ஐஏஎஸ், இதற்கு முன்னதாக தொழிற்சாலைகள் மற்றும் வணிகத்துறை இயக்குனராக பதவி வகித்து வந்துள்ளார். 2003-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்ச்சிபெற்று பணியில் சேர்ந்த இவர், தொழில்துறை ஆணையராக பணியாற்றினார்.

அனு ஜார்ஜ் ஐஏஎஸ்
அனு ஜார்ஜ் ஐஏஎஸ்

மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி சடங்குகளுக்கானப் பணிகளை ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுடன் இணைந்து வழிநடத்தினார். குறிப்பிடும்படியாக, அங்கன்வாடி ஊழியர் பணி நியமணங்களில், எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் இடம் கொடுக்காமல் தகுதி அடிப்படையில் பணியமர்த்தியவர். இதனால் அனு ஜார்ஜ், தனிப்பட்ட முறையில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் நால்வரும் தான் முதலமைச்சரின் நான்கு தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்துக்கு தற்போது கொரோனா பெரும் சிக்கலாக இருக்கிறது. தொடர்ந்து நிதி மேலாண்மை, சுகாதாரம், தொழில்துறை என பல்வேறு சிக்கல்களை களைய இந்த தனி செயலாளர்கள் முதல்வருக்கு உதவுவார்கள் என நம்புகிறார்கள்.!

--------+----------+---------+---------+------------+------------+-------------------+-+++++++---

எடப்பாடி-பன்னீர்-யாருக்கு மெஜாரிட்டி? அதிமுகவில் ஓடும் கணக்கு!

எடப்பாடி-பன்னீர்-யாருக்கு மெஜாரிட்டி?  அதிமுகவில் ஓடும் கணக்கு!

தமிழக சட்டமன்றத்தில் 65 இடங்களைப் பெற்று உறுதியான எதிர்க்கட்சியாக அமர மக்களின் தீர்ப்பைப் பெற்றுள்ளது அதிமுக.

ஆனால் தங்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் அதாவது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவு செய்வதற்காக, மே 7 ஆம் தேதி கூடுவதாக அறிவித்து முடிவேதும் எடுக்காமல் மே 10 ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

“நேற்று (மே 7) கூட்டம் நடத்துவதாக சொல்லி அழைத்த நிலையில் 65 எம்.எல்.ஏ.க்களும் வந்துவிட்டனர். ஆனால், முறைப்படி இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடத்தப்படவில்லை. தரைத் தளத்திலேயே எடப்பாடி, பன்னீர் ஆகிய இருவரின் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டனர்.

அதையடுத்து ஓபிஎஸ், எடப்பாடி, எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை ரசாபாசமாக மாறும் அபாயத்தால் முடிவுக்கு வந்தது. ஓபிஎஸ். ‘ என் ஆதரவாளர்களையும் திட்டமிட்டுத் தோற்கடித்தது யார்?’ என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி ‘தேர்தல் என்றால் எல்லாமும்தான் இருக்கும். அதையெல்லாம் முறியடித்துதான் வெற்றிபெற வேண்டும். தேனி மாவட்டத்தை ஒரு மணி நேரத்தில் சுத்தி வந்துவிடலாம். அதிலேயே நம்மால் முழு வெற்றியைப் பெற முடியவில்லை. ஆனால் கோவை மாவட்டம் முழுதும் திமுகவின் அசுர பலத்தை முறியடித்து பத்து தொகுதிகளை எடுத்துள்ளோம். அண்ணன் எடப்பாடி சேலத்தில் பத்து தொகுதிகளை வென்றுள்ளார். யார் கட்சிக்காக அதிகம் உழைத்து அதிகம் வெற்றிபெற உதவினார்களோ அவர்களையே எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்போம்’என்று அடித்துச் சொல்லிவிட்டார்.

அத்தோடு அந்த ஆலோசனையும் முடிந்துவிட்டது. கேபிமுனுசாமிதான் மீண்டும் திங்கள் கிழமை கூடுவோம் என்று சொல்லி அப்போதைக்கு சபையை கலைத்தார்” என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

இப்போது அதிமுக ஜெயித்த 65 சட்டமன்றத் தொகுதிகளில் எடப்பாடிக்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு, ஓ.பன்னீருக்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு என்ற கணக்கு கட்சிக்குள் தொடங்கிவிட்டது.

“கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் கணக்குப் பார்த்தாலே எடப்பாடிக்குதான் அதிக ஆதரவு இருக்கிறது. தென் மாவட்டங்களிலேயே எடப்பாடியின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே இந்த 65 சட்டமன்ற உறுப்பினர்களில் எடப்பாடிக்குதான் மெஜாரிட்டி இருக்கிறது.எனவே அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்கிறார்கள். ஆனால் ஓ.பன்னீர் எப்படியாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அடைந்தே தீருவது என்று பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறார். அதிமுகவுக்கு வெளியேயும் அவரது முயற்சிகள் தொடர்கின்றன” என்கிறார்கள் அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள்.

---------------------------------------------------------------------------------

கடத்தல் மயிறு.

இங்கிலாந்து மட்டும் ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் மதிப்புள்ள தலைமுடிகளை இறக்குமதி செய்கிறது. ஒரு பேச்சுக்கு என கணக்கெடுத்தால் 8 கோடி மைல்கள் நீளமுள்ள தலைமுடி ஒவ்வொரு ஆண்டும் அங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 20 லட்சம் தலைகளில் இருக்கக்கூடிய முடிகள் அவை. அதாவது குறைந்தபட்சமாக 20 லட்சம் பேராவது ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் அலங்காரத் தலைமுடி தயாரிக்கவென உலகின் பல இடங்களில் மொட்டை அடிக்கப்படுகிறார்கள். உலகை 3,200 தடவை சுற்றி வந்துவிடக் கூடிய அளவு நீளமுள்ள முடி. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் தலைமுடி இறக்குமதியில் இங்கிலாந்து இருக்கிறது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் தலைமுடிக்கு இங்கிலாந்தில் வணிகம் அதிகம். ஏனெனில் இரு பூகோளப் பகுதிகளை சார்ந்த மக்களின் தலைமுடிகளும் ஒரு தன்மையைக் கொண்டிருக்கும். மனித தலைமுடியை ஏற்றுமதி செய்வதில் ரஷியா, இந்தியா, பெரு, பிரேசில், தென் கொரியா மற்றும் மியான்மர் ஆகியவை முக்கியமான நாடுகள்.

சாதாரணமாக வெட்டி வீசியெறியப்படும் முடிக்கு இத்தனை பெரிய அளவில் வணிகம் நடக்கிறதா என நீங்கள் வியக்கலாம். வியக்காதீர்கள். வியப்புக்கு மட்டுமென இல்லாமல் அதிர்ச்சி கொள்ளவுமென இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் ஒரு சங்கம் இருக்கிறது. அகில இந்திய மனித முடி ஏற்றுமதியாளர்களின் சங்கம்! அச்சங்கத்தின் தலைவர் ஒரு ஆங்கிலப்பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் போது இப்படி சொன்னார்.



“பல இந்தியர்களின் வாழ்வாதாரமே முடிகளை சேகரித்து, அவற்றை நேர்த்தியாக்கி விற்பதில் இருக்கிறது. அதில் நிறைய வெளிநாட்டு வருமானம் வேறு இருக்கிறது. இரண்டின் காரணங்களாலும் கடத்தலுக்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது”

தலைமுடிக்காக கடத்தலா?

ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள். மியான்மர் நாட்டு எல்லையில் பல லாரிகளில் மனித முடிகள் அதிகாரிகளால் பிடிக்கப்படும் காட்சி. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் நடக்கும் உண்மை அது.

உலக நாடுகள் பலவற்றிலும் பலவகை முடிகள் இருக்கின்றன. அவரவர் இனத்துக்கென இருக்கும் நம்பிக்கை, பாரம்பரியம், கலாசாரம், பழக்க வழக்கம் போன்றவற்றின்பால் பலவகை அலங்காரங்களுடன் முடிகளை வளர்க்கின்றனர். அவற்றில் நமக்கு உடன்பாடில்லை என்றாலும் அவற்றை நாம் மறுக்க முடியாது. அவரவர் வழக்கம் மற்றும் வாழ்க்கைச்சூழல்களை நாம் மதிப்பதற்கான அடையாளம் அதுவே. ஆனால் உலக மக்களின் பலதரப்பட்ட தலைமுடி அலங்காரங்கள் அழிக்கப்பட்டு அமெரிக்கா சொல்லும் சிகை அலங்காரத்தையே தூக்கிப் பிடிக்கும் சூழல் இன்றிருக்கிறது.

நன்றாக கவனித்துப் பாருங்கள். இன்று நாம் ஒரு சலூன் கடைக்கு சென்று முடிவெட்டவென நாம் தேர்ந்தெடுக்கும் சிகை அலங்காரம் என்னவாக இருக்கிறது? ஏதோவொரு படத்தில் வந்த சிகையலங்காரமாக இருக்கும். அல்லது ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்த சிகை அலங்காரமாக இருக்கும். இவை இரண்டுமே அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சொல்லும் சிகை அலங்காரத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஓர் அமெரிக்கனை போல், ஐரோப்பியனை போல் சிகை அலங்காரம் வைத்துக் கொள்வதில் ஒன்றும் பிரச்சினை கிடையாது. அதை நாம் தெரிந்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் சிகை அலங்காரத்துக்கு பின்னால் ஓர் இனத்தின் மேலாதிக்கம் நம் கண்களுக்கு தெரியாத வணிகச் சங்கிலியின் வழியாக கட்டமைக்கப்பட்டு நம் வாழ்க்கைகளில் திணிக்கப்பட்டு, அதற்கான பலிகடாக்களாக நம் சக மக்களே ஆக்கப்படும்போது நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

தலைமுடி வரை வரும் அடையாள அழிப்பு, தலைக்கு வரும் நாள் வெகு தூரத்திலும் இருக்காது.


---------------------------------------------&&&&&&----666--------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?