வெளிநாட்டுப் பத்திரிகைகள் பாராட்டு
திரும்பிய திசைகளிலெல்லாம் மரணத்தின் கூக்குரல் ஒலிக்கிறது. கங்கையில் பிணங்கள் மிதந்துவருகின்றன. ஆக்ஸிஜன் படுக்கைக்காக மனிதர்களும், மரணத்தின் குழிக்காக உயிரற்ற உடல்களும் நாள்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ‘இந்தியாவில் உருமாறிய கொரோனா 44 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது’ என்று அச்சம் தெரிவித்திருக்கும் சர்வதேச ஊடகங்கள் பலவும், இவற்றுக்கெல்லாம் காரணம் மோடி அரசின் பொறுப்பற்ற செயல்தான் என்று கடும் விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளன.
இந்தியாவில் தினமும் சுமார் மூன்றரை லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள். தினமும் சுமார் 4,000 பேர் உயிரிழக்கிறார்கள். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைத் தாண்டுகிறது. இத்தகைய சூழலில், கொரோனா பிரச்னையை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு மிக மோசமாகக் கையாள்வதாக பி.பி.சி., தி கார்டியன், நியூயார்க் டைம்ஸ், லான்செட், டைம், எகனாமிஸ்ட், டெய்லி மெயில், குளோபல் டைம்ஸ், ஜப்பான் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக, மோடியின் தவறான அணுகுமுறையே நிலைமை இவ்வளவு சிக்கலாகக் காரணம் என்கின்றன மேற்கண்ட ஊடகங்கள்.
லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல ‘லான்செட்’ மருத்துவ இதழ், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலைக்கு மோடி அரசு வழிவகுத்தது எப்படி, இந்தப் பிரச்னையை மோடி அரசு எவ்வாறு தவறாகக் கையாள்கிறது என்று தலையங்கம் எழுதியிருக்கிறது. அது இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
அந்தத் தலையங்கத்தில், ‘‘கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிக்கொண்டிருந்தபோது, ‘கொரோனா தொற்று முடிவுக்கு வரப்போகிறது; அதன் இறுதி ஆட்டத்துக்கு வந்துவிட்டோம்’ என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பிரகடனம் செய்தார். இந்தியாவில் தொற்று எண்ணிக்கை குறைந்துவந்தபோதிலும், சர்வதேச சுகாதார அமைப்புகள் ‘கொரோனா இரண்டாவது அலை வரப்போகிறது; வைரஸின் புதிய வடிவங்கள் வந்துகொண்டிருக்கின்றன’ என்று எச்சரிக்கை விடுத்தன. அதையெல்லாம் கண்டுகொள்ளாத இந்திய அரசு, ‘கொரோனாவைத் தோற்கடித்து விட்டோம்; இந்தியாவில் சமூக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது’ என்று பொய்யான நம்பிக்கைகளைத் தந்தது. போதுமான முன்தயாரிப்பிலும் அரசு இறங்கவில்லை.
‘கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டது’ என்று அரசே சொன்னது, இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தின் வேகத்தை மட்டுப்படுத்தியது. இதனால், மொத்த மக்கள்தொகையில் இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. `மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமலேயே, திட்டத்தின் போக்கை மாற்றி 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி என்று மத்திய அரசு விரிவாக்கம் செய்ததால், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றை மோடி அரசு கையாளும்விதம் குறித்து ட்விட்டரில் ஆயிரக்கணக்கானோர் கருத்துகளைப் பதிவிட்டனர். அவை, பா.ஜ.க அரசை விமர்சிக்கும் கருத்துகள் என்பதால், ட்விட்டர் நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து, அவற்றில் சில பதிவுகளை நீக்கவைத்தது மத்திய அரசு. இதையும் தனது தலையங்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் லான்செட் இதழ், ‘பெருந்தொற்று பரவலைத் தடுப்பதைவிட, ட்விட்டரில் வந்த விமர்சனங்களை நீக்குவதில்தான் மோடி அரசு அதிக கவனம் செலுத்தியது. அதேசமயம், பல லட்சம் பேர் கலந்துகொண்ட மத விழாக்களையும், மிகப்பெரிய அரசியல் கூட்டங்களையும் அனுமதித்தது’ என்று குறிப்பிட்டிருக்கும் அந்தத் தலையங்கம் அதிர்ச்சி தரும் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது... ‘இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொடக் கூடும் என்று சுகாதாரக் கணக்கீட்டு நிறுவனம் ஒன்று மதிப்பீடு செய்துள்ளது’ என்பதுதான் அது.
லான்செட் மட்டுமல்ல... ‘ஊழிக்காலத்துக்கு இந்தியாவைத் தலைமையேற்று அழைத்துச் சென்றிருக்கிறார் மோடி’ என்று சாடியிருக்கிறது இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ். ‘தனது இமேஜைப் பாதுகாப்பதா, இந்தியாவைப் பாதுகாப்பதா என்பதை மோடி முடிவு செய்யட்டும்’ என்று காட்டமாக எழுதியிருக்கிறது வாஷிங்டன் போஸ்ட். ‘இந்தியாவில் கோவிட் இரண்டாவது அலை முழுமையாகக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது’ என்று அச்சம் தெரிவித்துள்ளது நியூயார்க் டைம்ஸ். ‘பிரதமர் மோடி நாட்டை வழிநடத்தத் தவறியதுதான் கோவிட் தொற்று நெருக்கடியை அதிகரித்துள்ளது’ என்று எழுதியிருக்கிறது அமெரிக்காவின் டைம் இதழ்.
மேற்கண்ட இதழ்கள் மட்டுமன்றி, ‘கொரோனா பிரச்னையைச் சரிவரக் கையாளாததால், பிரதமர் மோடியின் செல்வாக்கு வெகுவாக சரிந்துவிட்டது’ என்கிற கணிப்பை வெளியிட்டுள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம். அதில், ‘2019 ஆகஸ்ட் முதல் 2021 ஜனவரி வரை நடுத்தர மக்கள் மத்தியில் பிரதமர் மோடியின் செல்வாக்கு 80 சதவிகிதமாக இருந்தது. அது, கடந்த ஏப்ரல் மாதம் 67 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி:விகடன் தளம்.