ஞாயிறு, 20 ஜூன், 2021

ஆபத்தான பொய்!

 ஏப்ரல் 22ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் ஃபரிட்கோட்டில் வசிக்கும் எல்.ஐ.சி காப்பீட்டு முகவரான விபின் மித்தல் என்பவருக்கு ஒருகுறுஞ்செய்தி வந்தது. அதில், அவரது கொரோனா சோதனை அறிக்கை நெகட்டிவ் எனவும், சோதனை அறிக்கையை பதிவிரக்கம் செய்து கொள்ளும் இணைப்பும் பகிரப்பட்டது.

விபின், கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளவே இல்லை என்பது தான் இதில் ஆச்சரியமான விஷயம். அவர் சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் செய்தார். ஆனால் அவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதன் பின்னர் விபின் மித்தல், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துக்கு (ஐ.சி.எம்.ஆர்) மின்னஞ்சல் மூலம் தனது புகார் அனுப்பினார். விபினின் கொரோனா பரிசோதனை சாம்பிள், ஹரித்வாரில் எடுக்கப்பட்டது என ஐ.சி.எம்.ஆர் தனது விசாரணையில் கண்டறிந்தது. இந்த விவகாரம் குறித்த விசாரணை உத்தராகண்ட் சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுகாதார செயலர் அமித் நேகி விசாரணையைத் தொடங்கினார். விபின் மித்தல் மட்டுமல்ல, இதுபோல ஒரு லட்சம் போலி கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது. ஒரே வீட்டு எண் மற்றும் ஒரே மொபைல் எண்னைப் பயன்படுத்தி 50 - 60 போலி கொரோனா பரிசோதனை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது அம்பலமானது.

போலி கொரோனா அறிக்கைகள் பற்றி விசாரணை

தனியார் ஆய்வகத்தின் போலி கொரோனா அறிக்கை தொடர்பான விசாரணையை ஹரித்வார் நகரத்தின் தலைமை மேம்பாட்டு அதிகாரி செளரப் கஹர்வார் தலைமையில், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு விசாரித்து வருகிறது.

தனது அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்போவதாக செளரப் கூறுகிறார். ஆனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து 22 தனியார் ஆய்வகங்களும் சோதிக்கப்படுமா? அரசு ஆய்வகங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுமா? என்கிற கேள்விகளுக்கு, விசாரணை முடியும் வரை இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க செளரப் மறுத்துவிட்டார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் ஆய்வகங்கள் ஆன்டிஜென் பரிசோதனைக்காக அரசிடமிருந்து ஒரு சோதனைக்கு 300 ரூபாய் பெறுகின்றன. அதாவது ஒரு லட்சம் சோதனைகளுக்கு மூன்று கோடி ரூபாய்.

தனியார் ஆய்வகத்திற்கு ஒரு ஆன்டிஜென் சோதனைக்கு 300 ரூபாய் அளிக்கும் ஒப்பந்தம் இருப்பதாக ஹரித்வாரின் கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரியும் கொரோனா பரிசோதனையின் பொறுப்பாளருமான மருத்துவர் வினோத் டம்டா கூறுகிறார். ஆனால் கொரோனா போலி சான்றிதழ்கள் தொடர்பாக கருத்துத்தெரிவிக்க மறுக்கிறார்.

கும்பமேளாவின் போது ஆன்டிஜென் சோதனைக்காக தனியார் ஆய்வகங்களுக்கு 300 ரூபாய் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு மூன்று பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அரசு அமைப்பு மூலம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை சோதனைக்காக தனியார் ஆய்வகத்திற்கு அளித்தால், ஒரு பரிசோதனைக்கு 400 ரூபாய் செலுத்தப்பட்டது. கோவிட் சோதனைக்கான மாதிரியை தனியார் ஆய்வகமே சேகரித்தால் அதற்கு 700 ரூபாய் செலுத்தப்பட்டது. வீட்டிற்குச் சென்று மாதிரிகளை சேகரித்தால் 900 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டது. இந்த விலை விவரங்கள்அவ்வப்போது மாற்றங்களுக்கு உட்பட்டது.

தனியார் ஆய்வகத்திற்கு ஏற்கனவே 30 சதவீத பணம் செலுத்தப்பட்டுவிட்டது என டாக்டர் வினோத் டம்டா கூறுகிறார். ஆனால் எந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட சோதனைகளுக்கு இந்த கட்டணம் செலுத்தப்பட்டது என்கிற கேள்விக்கு பதிலளிப்பதை அவர் தவிர்க்கிறார்.

கும்பமேளாவின் போது ஏப்ரல் 1 முதல் 30ஆம் தேதி வரை தினமும் 50 ஆயிரம் கொரோனா சோதனைகளை நடத்த நைனிதால் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த இலக்கை அடைய, ஐசிஎம்ஆர் அங்கீகாரம் பெற்ற ஒன்பது முகமைகள் மற்றும் 22 தனியார் ஆய்வகங்கள் நான்கு லட்சம் கொரோனா பரிசோதனைகளை நடத்தியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆன்டிஜென் சோதனைகள். இது தவிர அரசு ஆய்வகங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஹரித்வாரில் கும்பமேளாவின் போது ஏப்ரல் 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு முக்கியமான புனிதநீராடல்கள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்பமேளாவில் அதிகாரியாக பணியாற்றிய தீபக் ராவத், ஏப்ரல் 10 முதல் 14 வரை நடத்தப்பட்ட கோவிட் சோதனையின் தரவுகளைப் பகிர்ந்து கொண்டார். இந்த 5 நாட்களில் மொத்தம் 2,14,015 ஆன்டிஜென் சோதனைகள் செய்யப்பட்டன. அதே நேரம் 57 ஆயிரம் ட்ரூநாட் சோதனைகளும் (கோவிட் தொற்றுநோயை உறுதிசெய்ய ட்ரூநாட் சோதனையை பயன்படுத்த ஐசிஎம்ஆர் 2020 செப்டம்பர் 24 அன்று அனுமதிவழங்கியது), 26,654 ஆர்டிபிசிஆர் சோதனைகளும் செய்யப்பட்டன. அதாவது மொத்தம் 240,726 சோதனைகள் நடத்தப்பட்டன.

அந்த நேரத்தில் பொருந்தக்கூடிய கட்டண விகிதங்களின்படி, ஆன்டிஜென் சோதனையின் மொத்தக்கட்டணம் ரூ.6,42,04,500, ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக்கு ரூ.1,06,61,600 (ஒரு சோதனைக்கு குறைந்தபட்சம் ரூ .400).

கொரோனா போலி சோதனை அறிக்கையில் எவ்வளவு பெரிய மோசடி இருக்க முடியும் என்பதை புரிந்துகொள்ளவே, 5 நாட்கள் சோதனையின் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்டிஜென் சோதனைகளில் 698 பேரின் அறிக்கை பாஸிட்டிவாக வந்தது. அதே நேரத்தில், ட்ரூநாட் சோதனையில் 1 நபருக்கும், ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் 1,166 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதாவது 240,726 சோதனைகளில் 1,865 பேருக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது. பாஸிட்டிவிட்டி விகிதம் 0.77 சதவீதமாக இருந்தது.

அதிர்ச்சியூட்டும் ஹரித்வாரின் கோவிட் புள்ளிவிவரங்கள்

டெஹ்ராடூனின் எஸ்.டி.சி அறக்கட்டளை, உத்தராகண்ட் மற்றும் ஹரித்வாரின் ஏப்ரல் 1 முதல் 30ஆம் தேதி வரையிலான கொரோனா தரவுகளை பகுப்பாய்வு செய்தது.

அந்த காலகட்டத்தில்​​ ஹரித்வாரில் மொத்தம் 6,00,291 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 17,335 பேருக்கு தொற்று உறுதியானது. அதே நேரம் மாநிலத்தின் மற்ற 12 மாவட்டங்களில் மொத்தம் 442,432 சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் 62,775 பேருக்கு பாஸிட்டிவ் என கண்டறியப்பட்டது. அதன்படி, ஹரித்வாரின் பாஸிட்டிவிட்டி விகிதம் 2.89 சதவீதமாகவும், மாநிலத்தின் மற்ற 12 மாவட்டங்களின் பாஸிட்டிவிட்டி விகிதம் 14.18 சதவீதமாகவும் இருந்தது.

அதாவது, மாநிலத்தில் செய்யப்பட்ட மொத்த கொரோனா பரிசோதனையில் 58 சதவிகிதம் ஹரித்வாரில் மட்டுமே செய்யப்பட்டது. ஆனால் ஹரித்வார் மாவட்டத்தின் பாஸிட்டிவிட்டி விகிதம் 12 மாவட்டங்களை விட சுமார் 80 சதவீதம் குறைவாக இருந்தது.

ஹரித்வார் கும்பமேளாவில் 70 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கும்பமேளா நிர்வாகம் தெரிவித்தது நினைவிருக்கலாம்.

நைனிதால் உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு

கொரோனா பரிசோதனைஅறிக்கையில் உள்ள முரண்பாடுகள் குறித்து 2021 ஜூன் 9ஆம் தேதி நைனிதால் உயர் நீதிமன்றத்தில் ஒருபொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஜூன் 23ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

"மாவட்ட நிர்வாகத்தின் புள்ளிவிவரங்கள் தொடர்ந்து சந்தேகங்களை எழுப்புகின்றன. நம்மிடம் சரியான புள்ளிவிவரங்கள் இல்லையென்றால்​​கொரோனாவை எப்படி சரியாக நிர்வகிக்கமுடியும்,"என இந்த மனுவை தாக்கல் செய்த ஹரித்வாரில் வசிக்கும் தகவல் அறியும் உரிமை ஆர்வலரான சச்சிதானந்த் தப்ரால், கேள்வி எழுப்புகிறார்.

ஸ்டார் இமேஜிங் பாத் லேப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் பணிபுரிந்த இளைஞர்கள், துணை மாவட்ட அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதமும் இந்த பொது நலன் மனுவில் இணைக்கப்பட்டுள்ளது. ஹரித்வாரில் நுழையும் பொருட்டு ராய்வாலா வாயிலுக்கு வருபவர்களுக்கு ராப்பிட் ஆன்டிஜென் பரிசோதனைகளை இந்த இளைஞர்கள் செய்து கொண்டிருந்தனர். போலி பரிசோதனை அறிக்கை கொடுக்குமாறு தங்கள் மீது நெருக்குதல் அளிக்கப்படுவதாக துணை மாவட்ட அதிகாரிக்கு அவர்கள் கடிதம் மூலம் புகார் அளித்திருந்தனர்.

"சோதனைக் கருவிகளைப் பயன்படுத்தாமலேயே அனைவருக்கும் நெகடிவ் ரிப்போர்ட் அளிக்குமாறும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு சிலரை மட்டுமே சரியாகச் சோதிக்கும் படியும் நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம். நாங்கள் அனைவரும் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டோம். எனவே வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டோம்," என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

"கும்பமேளாவுக்கு வருபவர்களை ஹரித்வாரில் நுழைய உதவிடும் வகையில் போலி நெகட்டிவ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பழைய சோதனை கருவிகள் பயன்படுத்தப்பட்டன. ஏற்கனவே நெகட்டிவ் என வந்தவர்களின் 'டெஸ்ட் கிட்'கள் பயன்படுத்தப்பட்டன," என்று நைனிதால் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்காக ஆஜராக உள்ள வழக்கறிஞர் துஷ்யந்த் மனூலி கூறுகிறார்.

வெவ்வேறு அறிக்கைகள்

கும்பமேளாவின் போது தினமும் 50,000 சோதனைகளை நடத்த நைனிதால் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக சுகாதார செயலர் அமித் நேகி 2021 மார்ச் 31 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்திருந்தார். இவ்வளவு அதிக சோதனைகளை நடத்துவது சாத்தியம் இல்லை என்று அவர் கூறினார். இதில் சலுகை அளிக்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டார்.

ஏப்ரல் 14 அன்று பைசாக்கியின் புனித நீராடல் நிறைவடைந்தபிறகு, கும்பமேளா நிர்வாகம் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. மேளா அதிகாரி தீபக் ராவத், மேளாவிற்கான காவல்துறை ஐ.ஜி.சஞ்சய் குன்ஜியால் மற்றும் பிற அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் மேளாவுடன் தொடர்புடைய பிற முகமைகள் மூலம் தினமும் சுமார் 50 ஆயிரம் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகங்களுக்கு அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 19 ஆம் தேதி, நைனிதால் உயர்நீதிமன்றத்தில் இதற்கு முரண்பாடான அறிக்கைகளை கும்பமேளா அதிகாரிகள் சமர்பித்தனர்.

"ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனை முடிவுகள் வருவதற்கு அதிக நேரம் எடுக்கும். கும்ப மேளாவிற்கு வரும் பெரும்பாலான மக்கள் ஒரே இடத்தில் தங்குவதில்லை.அவர்கள் ஒவ்வொரு இடமாக சென்றுகொண்டே இருப்பார்கள். எனவே பக்தர்களுக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை நடத்த முடியாது. இருப்பினும், மேளா பகுதியில் இருக்கும், உள்ளூர்வாசிகளுக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது".என ஒரு பதில் தாக்கல் செய்யப்பட்டது.

"ஹரித்வாருக்கு வருபவர்களின் எண்ணிக்கை கூடியும் குறைந்தும் வருகிறது. எனவே சோதனைகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதும் சரியானதல்ல. இங்கு அதிகபட்சமாக ஏப்ரல் 13 ஆம் தேதி 48,270 சோதனைகளும் , ஏப்ரல் 14 ஆம் தேதி 40,185 சோதனைகளும் நடத்தப்பட்டன. ஒரு நாளைக்கு 50 ஆயிரம் சோதனைகளை நடத்துவதிலிருந்து மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பே நாளொன்றுக்கு 50,000 சோதனைகள் மேற்கொள்வதிலிருந்து விலக்கு கேட்டிருந்தோம்," என்றும் கூறப்பட்டது.

கொரோனா சோதனை தொடர்பான முறைகேடு, நிதி மோசடியுடன் மேளாவில் பங்குபெற்ற மக்களுக்கு உயிரிழப்பு ஆபத்தையும் ஏற்படுத்தியது. கும்ப மேளா நிகழ்வுக்குப் பிறகு உத்தராகண்ட் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தது.

நாட்டின் பிற பகுதிகளிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. கும்பமேளாவில் கலந்துகொண்டவர்கள் வீடுதிரும்பிய பிறகு ஏற்பட்ட நோய்த்தொற்றும் இதில் அடங்கும்.

"மாநிலத்த்தின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது ஹரித்வாரில் பாஸிட்டிவிட்டி விகிதம் தொடர்ந்து குறைவாகவே இருந்ததை, ஹரித்வார் மாவட்ட நிர்வாகம் கவனிக்கவே இல்லை. கும்பமேளா பகுதியின் கோவிட் சோதனையின் தரவுகளும் பகிரங்கமாக பகிரப்படவில்லை," 

"கும்பமேளாவின் போது எல்லா அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் மேற்கொண்ட கொரோனா பரிசோதனை அறிக்கைகள் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணை, ஒரு மாநில அரசு முகமையால் செய்யப்படக்கூடாது. மேலும் மாநில தரவுகள் புதிதாக தயாரிக்கப்பட வேண்டும்".

-------------------------------------------------

மாம்பழம்

கோடைக்காலம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வரும் பழங்களில் ஒன்று மாம்பழம். தமிழ்நாட்டில் சேலத்தில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் அதன் சுவைக்கு மிகவும் பெயர் பெற்றவை. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் விளையும் மாம்பழம் 2.70 லட்சம் ரூபாய் வரை விலைக்கு போவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது தோட்டத்தில் விளையும் இரண்டு மியாசாக்கி மா மரங்களை பாதுகாக்க நான்கு காவலர்களையும் ஆறு நாய்களையும் பணியில் அமர்த்தியுள்ளனர்.

ஜப்பானை சேர்ந்த மாம்பழ ரகமான இதற்கு சந்தையில் கடும் கிராக்கி நிலவுவதாக அவற்றை பயிரிட்டு வளர்த்து வரும் சங்கல்ப் பரிஹார் மற்றும் அவரது மனைவி ராணி ஆகியோர் கூறுகின்றனர்.

மும்பையில் உள்ள வாடிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் தங்களது நிலத்தில் விளைந்த மாம்பழத்தை கிலோ 21,000 ரூபாய்க்கு வாங்கியதாக அவர்கள்  தெரிவிக்கின்றனர்.

மிகவும் அரிய மாம்பழ ரகங்களில் ஒன்றாக கூறப்படும் இவற்றின் விலை கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அதிகபட்சமாக கிலோவுக்கு 2.70 லட்சம் ரூபாய் வரை சென்றதாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த அந்த தம்பதியினர் மேலும் கூறுகின்றனர்.

இந்த தம்பதியினர் பல ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு மாமரக் கன்றுகளை நட்டபோது அது ரூபி நிற ஜப்பானிய மாம்பழங்களாக விளையும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

உலகின் மிகவும் விலை மதிப்புமிக்க மாம்பழங்களில் ஒன்றாக கருதப்படும் மியாசாக்கி மாம்பழங்களை அவற்றின் வடிவம் மற்றும் பளபளப்பான நிறத்தின் காரணமாக பலரும் 'சூரிய முட்டை' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மாம்பழம்

பட மூலாதாரம்

இந்த பணம் கொழிக்கும் மாமரம் குறித்து தெரிந்து கொண்ட உள்ளூர் திருடர்கள் சிலர், அவற்றைத் திருடி செல்ல பழத்தோட்டத்திற்குள் நுழைந்ததால், தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மியாசாக்கி மாம்பழத்தின் பெயர் அவை விளையும் ஜப்பானில் உள்ள ஊரிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சராசரியாக இந்த ரக மாம்பழம் ஒன்று 350 கிராம் எடை கொண்டதாக உள்ளது.

எதிர் ஆக்சிகரணிகள், (antioxidant) பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த இந்த மாம்பழங்கள் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அறுவடை செய்யப்படுகின்றன.

---------------------------------