புதன், 23 ஜூன், 2021

தமிழ்நாட்டில் மின் தடை

பின்னணி


செந்தில்பாலாஜி

பட மூலாதாரம்,

`தமிழ்நாட்டில் அடிக்கடி ஏற்படும் மின் தடை பிரச்னைக்கு இந்த கட்சிதான் காரணம் என ஆளும் தி.மு.க அரசும் அ.தி.மு.கவும் பரஸ்பரம் குற்றம்சுமத்தி வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் `ஒப்பந்ததாரர்கள் மோதல் உள்பட பல்வேறு காரணங்கள் பின்னணியில் உள்ளன' என்கின்றன மின் ஊழியர் சங்கங்கள். என்ன நடக்கிறது தமிழ்நாடு மின் வாரியத்தில்?

சென்னை அண்ணா சாலையில் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரம் மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ` மின் பராமரிப்புப் பணிகளை கடந்த ஆட்சியில் ஒன்பது மாதங்களாக மேற்கொள்ளவில்லை. இதனால் தற்போது மின் தடங்கல் ஏற்படுகிறது. தற்போது பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதனை 10 நாள்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

மேலும், `மின்சார வாரியத்துக்கு ரூ. 1,33,671 கோடி கடன் உள்ளது. கடந்த ஆட்சியில் மின் வாரியத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் விவகாரங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும். கடந்த ஆட்சியில் தமிழகத்தை மின் மிகை மாநிலம் என அழைத்தார்கள். ஆனால், தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல. நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்தால்தான் அது மின் மிகை மாநிலம்,' என்றார்.

செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்த குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் மின்துறை அமைச்சருமான தங்கமணி, `நாங்கள் முறையாக பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டோம். அதனால்தான் கடந்த மே 2 ஆம் தேதி வரையில் மின்சார விநியோகம் சீராக இருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த 10 நாள்களுக்குள் மின் விநியோகத்தை சீரமைப்போம் என்றனர்.

ஆனால், ஒரு மாதம் கடந்தும் மின் உற்பத்திப் பணிகளை மேற்கொள்ளாததால் தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. தனது துறையை செந்தில் பாலாஜி முறையாகக் கவனிக்காததால்தான் இந்தத் தடை ஏற்படுகிறது,' என்றார்.

மின் வாரியத்தில் என்ன நடக்கிறது?

`` தற்போது நடப்பது மின்வெட்டு அல்ல மின் தடை தான். போதிய அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லையென்றால் அது மின்வெட்டாக பார்க்கப்படும். கடந்த மூன்றாண்டுகளாக மின்வாரியத்தில் பராமரிப்புப் பணிகள் நடக்கவில்லை. அதேபோல், தளவாடங்களையும் போதிய அளவில் கொள்முதல் செய்யவில்லை. மின்சார உற்பத்தியையும் அ.தி.மு.க அரசு மேற்கொள்ளவில்லை. அவர்கள் ஆட்சிக்காலத்தில் உற்பத்தி செய்ததாகச் சொல்லப்படுகின்றவை எல்லாம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள்தான்," என்கிறார் மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு) தலைவர் ஜெய்சங்கர்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் சில புள்ளி விவரங்களையும் பட்டியலிட்டார். ``தமிழ்நாட்டின் மின்சார தேவையை சமாளிப்பதற்காக 3,200 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்வது என அ.தி.மு.க அரசு முடிவெடுத்தது. இதனையடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 2028 வரையில் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது தொடர்பாக ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளனர். அவ்வாறு தனியாரிடம் கொள்முதல் செய்துவிட்டு `மின் மிகை மாநிலம்' எனக் கூறி வந்தனர்.

ஆனால், எந்தக் காலத்திலும் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்ததில்லை. தமிழ்நாட்டின் மொத்த தேவை என்பது 16,500 மெகா வாட் மின்சாரம் ஆகும். இதில், சென்னை மாநகருக்கு 3,600 மெகாவாட் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் 3 கோடியே 10 ஆயிரம் நுகர்வோர்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஓர் ஆண்டுக்கு புதிதாக 750 மெகாவாட் மின்சாரத்தை நாம் கட்டாயமாக உற்பத்தி செய்தாக வேண்டும். 16,500 மெகாவாட்டுடன் 750 சேர்த்து 17,250 என்ற கணக்கில் ஆண்டுதோறும் புதிதாக உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். நகர்ப்புற விரிவாக்கம், தொழிற்சாலைகள் பெருக்கம், தொழில்நுட்ப பூங்கா, புதிய வீடுகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு இதனைச் செய்ய வேண்டும்.

கிடப்பில் உப்பூர் அனல்மின் நிலையம்.

அதேநேரம், உடன்குடி அனல்மின் நிலைய திட்டம், எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம் போன்றவை நிலுவையில் உள்ளன. உப்பூர் அனல்மின் நிலைய திட்டத்தை இழுத்து மூட உள்ளனர். அங்கு 3,500 கோடி ரூபாயை முதலீடும் செய்துள்ளனர். சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, அதனை கைவிட வேண்டும் என மின்வாரிய கூட்டத்தில் வைத்து முந்தைய வாரியத் தலைவர் பங்கஜ்குமார் பன்சால் ஒப்புதலையும் பெற்றுவிட்டார். `இந்தத் திட்டத்தைக் கைவிடக் கூடாது' எனப் புதிய வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானியிடம் கூறியுள்ளோம்," என்கிறார்.

மேலும், ``தற்போது ஜூன் முதல் செப்டம்பர் வரையில் காற்றாலையில் இருந்து நமக்கு மின்சாரம் வரும். தற்போது காற்றாலைகள் 8,500 மெகாவாட் திறனுள்ளதாக உள்ளன. இதில் இருந்து 2,800 முதல் 3,000 மெகாவாட் மின்சாரம் உறுதியாகக் கிடைத்து வருகிறது. அது இந்த 4 மாதங்களுக்கு மட்டும்தான். அதன்பிறகு 400 மெகாவாட் கிடைப்பதே பெரிய விஷயமாகப் பார்க்கப்படும். காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும் இந்தநேரத்தில் மின்தடை உள்ளது என்று கூறுவதே தவறானது" என்கிறார்.

சென்னையில் மின் தடை ஏற்படுவதற்கு என்ன காரணம்?' என்றோம்.

``வடசென்னை அனல்மின் நிலையத்தில் நடக்கும் பிரச்னைகள்தான். அங்கு இரண்டு யூனிட்டுகளிலும் தலா 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஆனால், கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ஜூன் முதல் வாரம் வரையில் ஒரு யூனிட் கூட இயங்கவில்லை. இதற்குக் காரணம், நிலக்கரியை எரித்துக் கிடைக்கும் சாம்பலை கொட்டும் பணியை தனியார் நிறுவனம் ஒன்று செய்து வந்தது. அந்த வேலையை வேறு ஒரு நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டனர்.

இதற்காக முந்தைய நிறுவனத்துக்கு மாதம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து வந்தனர். புதிய நிறுவனத்துக்கு மாதம் 85 லட்ச ரூபாய்க்கு வேலையை கொடுத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மோதலில் யூனிட்டை இயக்க முடியாமல் செய்துவிட்டனர். இதனால் சென்னைக்குக் கிடைக்க வேண்டிய 500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக 21 ஆம் தேதி மின்வாரிய தலைவரிடம் புகார் மனுவையும் கொடுத்துள்ளோம். இந்த மின் தடைக்கு அரசாங்கம் காரணமல்ல, தனி நபர்கள்தான் காரணம். இது வெளியுலகின் கவனத்துக்கு வரவில்லை.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து (நெய்வேலி, கல்பாக்கம் உள்பட) 6,800 மெகாவாட் மின்சாரம் நமக்கு வருகிறது. இதுதவிர, மின்சாரத்தை தனியாரிடம் இருந்து பெறாமல் தமிழக அரசே உற்பத்தி செய்ய வேண்டும். மத்திய நிதித்துறை அமைச்சகம், 25 ஆண்டுகளாக இயங்கி வரும் அனல் மின் நிலையங்களை மூட வேண்டும் எனக் கூறியுள்ளது. அதாவது நிலக்கரி அடிப்படையில் இயங்கும் நிலையங்களை மூடிவிட்டு சூழலியல் பாதுகாப்புக்கு ஏற்றபடி தயாரிக்க வேண்டும் என்ற முடிவில் இந்திய அரசு உள்ளது.

நாமும் நிலக்கரிக்கு மாற்றாக சோலார் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சோலார் பேனல்களை ஒருமுறை பொருத்திவிட்டால் 25 ஆண்டுகளுக்கு பேட்டரிகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இதற்காக சோலார் பூங்காக்களை அரசு உருவாக்க வேண்டும்.

பசுமை வழிகளில் மின்சாரம் தயாரிப்பதற்கு ஏராளமான புதிய வழிகள் உள்ளன. அதனைச் சரியாக செய்தாலே மின்சார உற்பத்தியில் தன்னிறைவை அடையலாம். மேலும், வணிக நிறுவனங்கள், ஐ.டி பூங்காக்களில் சோலார் பேனல் பொருத்துமாறு அரசு வலியுறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் மின் செலவில் 10 சதவிகிதத்தை மிச்சப்படுத்தலாம். இதன்மூலம் மின்வாரியத்துக்கான சுமையும் குறையும்" என்கிறார்.

கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு காரணமாக சிறு, குறு தொழில்கள் அனைத்தும் முடங்கிவிட்டன. இதன் காரணமாக மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கேட்டு வருகிறோம். இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் எந்தப் பதிலும் கூறவில்லை. அதுமட்டுமல்லாமல், கோவை உள்பட 11 மாவட்டங்களில் ஊரடங்கு நீடிக்கிறது. ஊரடங்குக்கு முன்பு கட்ட வேண்டிய வேண்டிய மின்கட்டணத்துக்கு கால அவகாசம் கொடுங்கள் எனக் கேட்டுள்ளோம். அதற்கும் பதில் வரவில்லை. ஆனால், மின் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் அபராதத் தொகையுடன் சேர்த்து செலுத்தச் சொல்கின்றனர்," என்கிறார் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (TACT) கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ்.

தொடர்ந்து பிபிசி தமிழுக்காக பேசியவர், ``சிறு குறு தொழில்களைப் பாதுகாக்க தனிக் குழு அமைக்கப்படும் என அரசு சொல்கிறது. ஆனால், மின்வாரியத்தில் எங்கள் பிரச்னைகளை அதிகாரிகள் காது கொடுத்துக் கேட்பதில்லை. அபாராதத்துடன் செலுத்துவது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், `கம்ப்யூட்டரில் ஆட்டோமேடிக்காக அபராதம் போடுகிறது. எங்களால் எதுவும் செய்ய முடியாது' எனப் பதில் அளிக்கின்றனர். இந்தக் கொடுமையில் இருந்து எப்படித் தப்பிப்பது எனத் தெரியவில்லை. வருமானம் இல்லாததால் எங்களால் வாடகையும் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக திறனுள்ள தொழிலாளர்களையும் இழக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. அனைத்து வகைகளிலும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். இதில் உள்ள ஒரே ஆறுதலான விஷயம், ஊரடங்கு நீடிப்பதால் மின் கணக்கீட்டுக்கு யாரும் வருவதில்லை. இதன் காரணமாக மின்சாரத்தை துண்டிக்கும் வேலைகளை மின் ஊழியர்கள் செய்வதில்லை" என்கிறார்.

மின் வாரிய தலைவர் சொல்வது என்ன?

ராஜேஷ் லக்கானி

பட மூலாதாரம்,

படக்குறிப்பு,

ராஜேஷ் லக்கானி

`மின் தடை பிரச்னை எப்போது சரிசெய்யப்படும்?' என தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மான கழகத்தின் தலைவரான ராஜேஷ் லக்கானியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``மின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால் ஏற்பட்டால் தொழில்நுட்பக் கோளாறுதான் இது. அதை தற்போது சரிசெய்து வருகிறோம். இன்னும் பத்து நாள்களில் இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டுவிடும். அடுத்ததாக பட்ஜெட் வரவுள்ளது. அதில் கொள்கை முடிவுகளில் சிலவற்றைத் தெளிவாகக் கூற உள்ளோம்," என்கிறார்.

`வட சென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்ததாரர்களுக்கிடையே மோதல் என்கிறார்களே?' என்றோம்.

``இது தொடர்பாக ஒரு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடம் புகார் கொடுத்துள்ளனர். முந்தைய ஒப்பந்ததாரர் சரியாகச் செய்யவில்லை, கூடுதல் பில்களைக் கொடுத்துள்ளதாகவும் சொல்கின்றனர். அதனை தணிக்கைத் துறையில் கொடுத்து சரிபார்க்கச் சொல்லியிருக்கிறோம். முந்தைய காலங்களில் பணி செய்தவரின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம். புது ஒப்பந்ததாரரும் சரிவர வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டையும் சிலர் முன்வைத்துள்ளனர். இதனை விசாரிக்குமாறு கூறியுள்ளோம்," என்கிறார்.

கோவை மாவட்டத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் குறித்துக் கேட்டபோது, ``மின்சார வாரியத்தில் பில் கட்டுவதற்கு மூன்று முறைகள் உள்ளன. கடந்த ஆண்டில் கட்டிய அதே மாதத்துக்கான பணத்தை தற்போது செலுத்தலாம். ஒருவேளை அது அதிகமாக இருந்தால் சென்ற மாதத்தின் பணத்தைக் கட்டலாம். அதைவிடக் குறைவாக வேண்டும் என்றால் மீட்டர் ரீடிங்கின் புகைப்படத்தை அனுப்பி, அதற்கான தொகையை செலுத்தலாம். கொரோனா காலம் என்பதால் மீட்டர் ரீடிங் எடுக்காமல் இருக்கிறோம். சிஸ்டத்தில் பில் மாறிவிட்டால் அபராதம் வருவதற்கு வாய்ப்பில்லை. அதுதொடர்பாகவும் விசாரிக்கிறேன்," என்றார்.

---------------------------------------------------------------------------

பெண்கள் பாதுகாப்பு 

என்றாலே

பா.ஜ.க தான்.

 பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் அதிகம் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

அதுமட்டுமல்லாது பெண்கள் விஷயத்தில் நாடுமுழுவதுமே பா.ஜ.கவினர் ஒரேமாதிரியாக இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக, பா.ஜ.கவில் பணியாற்றும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவிவருவதாக பா.ஜ.கவில் உள்ள பெண்களே தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாட்டிலும் கூட விழுப்புரம் மாவட்டத்தின் தற்போதைய பா.ஜ.க தலைவராக இருக்கும் வி.ஏ.டி.கலிவரதன் தன்னை அடைத்துவைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாக அதே கட்சியின் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் காயத்ரி சமீபத்தில் புகார் எழுந்தது.

மேலும் பல்வேறு புகார்கள் பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக உள்ள நிலையில் தற்போது இந்த விவகாரம் பா.ஜ.க மேலிடம் வரைச் சென்றதால், அந்த கட்சியின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி.ரவி பா.ஜ.க தலைவர்களை வார்த்தைகளால் வறுத்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 19ம் தேதி பா.ஜ.கவின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி.ரவி தலைமையில் மகாபலிபுரத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர்கள், முன்னாள் தேசிய தலைவர், அமைப்பு செயலர், கோர் கமிட்டி உறுப்பினர்கள் முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 25 பேர் கலந்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில், தேர்தலில் பா.ஜ.க தோல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக கூட்டத்தில் மேலிட பார்வையாளரிடம் அனைவரும் கடுமையாக திட்டுவதற்காகவே அத்தகைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது போல் அமைந்ததாக கூட்டத்தில் கலந்துக்கொண்டு பா.ஜ.கவினர் புலம்பியுள்ளனர்.

இதுதொடர்பாக பா.ஜ.க நிர்வாகி ஒருவர் பேச்சை தனியார் செய்தி நாளிதல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியதாவது, “சி.டி.ரவி ரவி கடுமையான கோபத்தில் இருந்தார். முருகன், விநாயகம் என ஒருவரையும் விட்டுவைக்கவில்லை; எல்லாரையும் ஒரேமாதிரியாக வசைப்பாடினார். கட்சியின் தோல்வியைவிட, பெண்கள் விவகாரத்தில் கட்சிக்கு வந்துள்ள புகார்கள் தான் அவரின் கோபத்திற்கு காரணம்.

குறிப்பாக, நான் இங்கு யாரையும் விசாரிக்க வரவில்லை; எங்களிடம் வந்த புகார்களின் நம்பகத்தன்மையை விசாரித்து விட்டுதான் வந்து பேசுகிறேன் என கூறியுள்ளார். மேலும் விசாரணையில் தெரியவந்துள்ள குற்றச்சாட்டு அனைத்தும் அருவெறுப்பின் உச்ச கட்டம் என்று கொந்தளித்துள்ளார் சி.டி.ரவி.

அதுமட்டுமல்லாது, ஒரு தலைவர் மீது மட்டும் சுமார் 134 புகார்கள் வந்துள்ளதாகவும், அவ்வளவு புகார்கள் வந்த தலைவர்கள் மீது மக்கள் மற்றும் நிர்வாகிகள் எந்த அளவுக்கு கோபத்தில் இருந்திருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதே, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்கள் யாரும் அதனைத் தடுக்க முன்வரவில்லை.

எனவே இனி இதுபோல சம்பவங்களை தவிர்க்கவேண்டும். அதனால் இனி தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்கள் யாரும் நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்லக் கூடாது. அங்கு ரூம் எடுத்து தங்கி கட்சி பணிகளை செய்யக்கூடாது. கட்சிப்பணிகளை செய்வதாகக் கூறி, அங்கு பெண்களை வரவழைத்து கூத்தடிப்பது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ளவேண்டும்.

ஒருவேளை கட்சி ரீதியிலான பணிக்கு சென்று, நட்சத்திர ஓட்டலில் தங்கியதாக தகவல் வந்தால், கட்டாயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை குறிப்பாக ஏன் சொல்கிறேன் என்றால், பெண்களை வரவழைத்து கும்மாளம் அடிப்பது தொடர்பான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இல்லை என்று மறுத்தால், அதனை நிரூப்பிக்கவும் தயாராக இருக்கிறேன்.

மேலும், கட்சிப் பணித் தொடர்பாக பா.ஜ.க தலைவர்களும் பெண் நிர்வாகிகளும் ஒன்றாக வெளி இடங்களுக்கு செல்லவேண்டியது இருந்தால், எக்காரணம் கொண்டும், ஒரே விடுதியில் தங்கக் கூடாது. மீறி தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அருகருகே ரூம் எடுத்து தங்கக்கூடாது.

அப்படி தங்கி, அதில் புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று உத்தரவிட்டுள்ளார். ஊரெல்லாம் விசாகா கமிட்டி அமைத்து, பெண்கள் தொடர்பான பாலியல் புகார் மீது விசாரிக்க வலியுறுத்தி கொண்டிருக்கும் நாமே, நம்மிடையே இருப்போர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, விசாகா கமிட்டி அமைக்க வலியுறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும்.

இப்படியே போனால், கமலாலயத்துக்குள் கட்டாயம் விசாகா கமிட்டி ஒன்று அமைத்தாக வேண்டும் தான் என்று கூறியுள்ளார். புகார்கள் யார் மீது அதிகம் வந்ததோ அவர்களை அருகில் வைத்துக்கொண்டு திட்டி தீர்த்துள்ளார் சி.டி.ரவி” என அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

-----------------------------------------------------------------------------------

முக்கால்வாசி வெற்றி

தமிழகத்தில் வளர்ச்சிப் பொருளாதாரம் குறித்த பொருளாதார வல்லுநர் குழுவின் சிந்தனைகள், ஆய்வு முடிவுகள் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் வியத்தகு முன்னேற்றம் இங்கே நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என சமூக ஆய்வாளர் ஸ்ரீதர் சுப்பிரமணியன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக ஆய்வாளர் ஸ்ரீதர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:-

தமிழ்நாடு அரசு மாநிலப் பொருளாதாரத்தை முடுக்கிவிட ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கிறது. ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாஃப்லோ, இந்தியாவை மையமாகக் கொண்டு ஆய்வுகள் நடத்தி வரும் ஜீன் ட்ரீஸ், முன்னாள் மத்திய பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், முன்னாள் நிதியமைச்சக செயலர் எஸ்.நாராயண் ஆகியோர் நிபுணர் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் குறித்து நமக்கெல்லாம் தெரியும். எஸ்தர் டாஃப்லோ அபிஜித் பானர்ஜியின் மனைவி. வளர்ச்சிப் பொருளாதார ஆய்வுகளில், (randomised control trial) உத்திகளை புரட்சிகரமாக புகுத்தி பொருளாதார ஆய்வுகளின் தன்மையையே மாற்றியதற்காக இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. இவர்களின் புத்தகங்களை மேற்கோள் காட்டி நான் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன்.

ஜீன் ட்ரீஸ் இந்தியாவின் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல், அவர்களின் பொருளாதார நிலை குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவை குறித்து பல்வேறு புத்தகங்கள் எழுதி இருப்பவர். ‘ஜோல்னாப் பைக்காரர்களின் பொருளாதாரம்', Jholawala Economics என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம் பெரும் புகழ் பெற்றது.

அவரது பல்வேறு கட்டுரைகளை நானே அவர் அனுமதியுடன் மொழி பெயர்த்து பதிந்திருக்கிறேன். பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த அவர் லெவலுக்கு இந்தியாவின் விளிம்பு நிலைப் பொருளாதாரம் குறித்து இந்தியர்களே அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

இந்தப் பெயர்களை எல்லாம் ஒருங்கே ஒரு கமிட்டியில் பார்க்கும் பொழுது பெரும் ஆச்சரியம் மேலிடுகிறது. இதெல்லாம் கனவா என்று ஒரு முறை என்னைக் கிள்ளியே கூட டெஸ்ட் பண்ணிப் பார்த்துக் கொண்டேன். வளர்ச்சிப் பொருளாதாரம் குறித்த இவர்களின் சிந்தனைகள், ஆய்வு முடிவுகள் ஏற்கப்பட்டு தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டால் வியத்தகு முன்னேற்றம் இங்கே நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

A problem clearly stated is a problem half solved, என்று ஒரு ஆங்கில சொலவடை இருக்கிறது. ஒரு பிரச்சினையை தெளிவாக வரையறுத்து விட்டால் அது பாதி தீர்க்கப்பட்டதற்கு சமம். அதற்கு முதல்படியாக பிரச்சினைகளை புரிந்து கொள்ளப் பொருத்தமான நிபுணர்களை நியமித்து விட்டால் அந்தப் பிரச்சினை முக்கால்வாசி தீர்ந்ததற்கு சமம். 

அந்தக் கால்வாசி தீர்வை நோக்கிப் பயணித்திருக்கும் தமிழ் நாட்டு அரசுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.” எனத் தெரிவித்துள்ளார்.-----------------------------------------------------------------------------------