"நீட்" டு.......
நீட் தேர்வை தி.மு.க ஆட்சிதான் கொண்டு வந்தது என்பதுதான் பழனிசாமியின் பழைய பொய். அவருக்கு நீட் தேர்வைப் பற்றி தலையும் தெரியவில்லை, வாலும் தெரியவில்லை.
நீட் தேர்வு என்பதே 2016 ஆம் ஆண்டு பா.ஜ.க அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. முதல் தேர்வு நடந்ததே 2016இல்தான்.
பல்வேறு மாநிலங்கள் எதிர்த்த காரணத்தால் விதிவிலக்கு தரப்பட்டது. 2016ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதனால் 2016 - 17 ஆம் ஆண்டுக்கான தேர்வில் விலக்கு கிடைத்தது. ஆனால் அடுத்து வந்த பழனிசாமி அரசாங்கம் ‘நீட்’ தேர்வை தலையாட்டி ஏற்றுக்கொண்டுவிட்டது.
தானும் எதிர்ப்பது போல காட்டுவதற்காக இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு ஒப்புக்கு அனுப்பினார்கள். அதனை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதைக்கூட வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்ததுதான் பழனிசாமியின் நாடகங்களில் மகத்தானது.
2011 முதல் தி.மு.க அதிகாரத்தில் இல்லை. நீட் தேர்வை எதிர்த்து 2013 ஆம்ஆண்டு மே மாதம் 5ஆம் தேதியே தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். நீட் தேர்வு மசோதாவுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி உயிர் கொடுத்தது. அப்போதும் தலைவர் கலைஞர் அவர்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். பா.ஜ.க அரசுதான் இப்படி ஒரு தேர்வை மீண்டும் கொண்டு வந்தது. அ.தி.மு.க அதற்கு தலையை ஆட்டியது. அதனால்தான் 2017 ல் அனிதா முதல் இன்று வரை 13 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என்று ஏழு மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார்கள். அப்போது பழனிசாமி, சேர்ந்து கொள்ளவில்லை. சேர்ந்தால் மோடி கோபித்துக் கொள்வார் என்று பயந்து பதுங்கினார்கள். பம்மினார்கள். அதுதான் உண்மை.
2011 முதல் தி.மு.க அதிகாரத்தில் இல்லை.
2014 முதல் காங்கிரஸ் கட்சியும் மத்தியில் ஆட்சியில் இல்லை.
2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஒரு தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது உண்மைதான். ஆனால் அது உச்சநீதிமன்றத்தால் தடைபோடப்பட்டு அரசாணையே செல்லாது என்று ஆக்கப்பட்டுவிட்டது. இப்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது 2013 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று. அத்தோடு விவகாரம் முடிந்துவிட்டது. இப்படி முடிக்கப்பட்ட விவகாரத்தை மீண்டும், பா.ஜ.க ஆட்சிதான் கையில் எடுக்கிறது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தேர்வுக்கு அனுமதியே தருகிறது. அப்போது காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இல்லை. மாநிலத்திலும் தி.மு.க ஆட்சியில் இல்லை. நுழைவுத் தேர்வு என்பதை மிகமிகக் கொடூரமான தேர்வு முறையாக வடிவமைத்தார்கள். சாமானியர்கள் யாரும் நுழைய முடியாத தேர்வாக பா.ஜ.க அரசு மாற்றியது.
நீட் தேர்வை நாம் எதிர்க்க மிக முக்கியமான காரணம், அது சி.பி.எஸ்.இ முறையில் படித்த மாணவர்களுக்கு மட்டும் வசதியானதாக இருக்கிறது. இதனால் மற்ற கல்வி முறையில் படித்தவர்கள் பின்னடைவைச் சந்திக்கிறார்கள்.
பல லட்சம் பணம் கொடுத்து தனியார் பயிற்சி நிறுவனங்களில் படித்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு தருகிறது. இதனால் ஏழை எளிய பிள்ளைகள் அந்த வாய்ப்பைப் பெற முடியவில்லை. இதனால்தான் சமத்துவம் அற்றதாக இந்தத் தேர்வு முறை இருக்கிறது என்று சொல்லி எதிர்க்கிறோம். இந்த உண்மைத்தன்மையை அனைவரும் முதலில் உணர வேண்டும்.
நீட் தேர்வு எதிர்ப்பை பா.ஜ.க.வுக்கு எதிரானது, மோடிக்கு எதிரானதாக சுருக்கிப் பார்க்கக்கூடாது. இன்றைக்கு பா.ஜ.க கொண்டு வந்ததற்காக மட்டுமல்ல, நாளைக்கு காங்கிரஸ் அரசு கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டிய தேர்வுதான் நீட் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இப்படி ஒரு தேர்வு வரலாமா என்று யோசிக்கப்பட்ட போதே 2010 ஆம்ஆண்டு எதிர்த்தவர்தான் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அன்றைய காங்கிரஸ் அரசுக்கு இந்தத் தேர்வைக் கண்டித்து கடிதம் எழுதினார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார்கள். சென்னை உயர்நீதிமன்றம் ‘நீட்’டுக்குத் தடையும் விதித்தது என்பது வரலாறு.
இதுபோல் பலரும் வழக்கு தாக்கல் செய்தார்கள். அனைத்து வழக்களும் உச்சநீதிமன்றம் போனது. இதுபோன்ற தேர்வை நடத்தும் உரிமை மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது என்று 2013ஆம் ஆண்டு தீர்ப்பு தரப்பட்டது. இதுவும் வரலாறு.
இப்படி முடக்கப்பட்ட தேர்வுக்கு மறுசீராய்வு மனுவைப் போட்டு உயிரூட்டியது பா.ஜ.க.அரசு. ( 16.3.2016) இதுவும் வரலாறு.
நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் போட்டு அனுப்பினோம். அதுவும் வரலாறு. அதனை பா.ஜ.க அரசு திருப்பி அனுப்பியது.
இன்றைய தினம் நீட் தேர்வு கூடாது என்பதில் தி.மு.க அரசு அழுத்தமாக இருக்கிறது. அதனைச் சட்டபூர்வமாகச் செய்வதற்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளது. நீட் தேர்வை எதிர்ப்பதாக அ.தி.மு.க.வும் சொல்கிறது. சட்டமன்றத்தில் பா.ஜ.க குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனும், சட்டபூர்வமானதாக இருந்தால் ஆதரவு என்பது போல் சொல்லி இருக்கிறார்.
நீட் தேர்வை ஆதரிக்கும் அரசியல் கட்சி பெரும்பாலும் தமிழ்நாட்டில் இல்லை என்பதே இன்றைய நிலை. இத்தகைய சூழலில் நீட் தேர்வுக்கு அனைவரும் இணைந்து முற்றுப்புள்ளி வைக்க அழைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிச்சயம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்!
-------------------------------------------------------------------
வெளிவரும்
அதிமுக ஊழல்கள்.
அ.தி.மு.க ஆட்சியில், செட்டாப் பாக்ஸ் விற்பனை செய்த 2 நிறுவனங்களுக்கு முறையற்ற சலுகைகள் வழங்கி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் ரூ.37.43 கோடி ஊழல் செய்திருப்பது இந்திய தணிக்கைத்துறை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து, இந்திய தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனம், அதன் சந்தாதாரர்களுக்கு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் கட்டண சேனல்கள், இலவச சேனல்களை வழங்கிவருகிறது. அந்த நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2017ல் பாலாஜி மிஷின் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், மந்த்ரா இன்டஸ்டீரிஸ் லிமிடெட் ஆகிய 2 விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.1,588 மற்றும் ரூ.2,100 விலைக்கு சுமார் 36 லட்சம் சாதாரண செட்டாப் பாக்ஸ் (SD), 40 ஆயிரம் ஹெச்டி செட்டாப்பாக்ஸ் வாங்க கொள்முதல் ஆணை வழங்கியது.
சுங்க வரி அளவுஉயர்த்தி வழங்கல்!
இதில், 10 விழுக்காடு சுங்கவரியாக அதாவது ரூ.116.13 சாதாரண செட்டாப் பாக்ஸ்க்கும் மற்றும் ரூ.155.88 ஹெச்டி செட்டாப் பாக்ஸ்க்கும் உள்ளடக்கியது. செட்டாப் பாக்ஸ் மீதான சுங்கவரி 2017 டிசம்பர் 14ஆம் தேதி 10 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்பட்ட நிலையில், விநியோக நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சுங்க வரி அளவை ரூ.232.63 மற்றும் ரூ.311.76 வீதம் முறையே செட்டாப்பாக்ஸ்க்கு உயர்த்தி வழங்க ஒப்புக்கொண்டது.
இதன் விளைவாக, சாதாரண (SD) செட்டாப் பாக்ஸ் விலை ரூ.1725.26ஆகவும், ஹெச்டி செட்டாப்பாக்ஸ் விலை ரூ.2,283 ஆகவும் அதிகரித்தது. கொள்முதல் ஆணையின்படி வழங்கப்பட்ட பொருட்களின் மதிப்பீட்டு அளவில் 10 விழுக்காடு பணம் வழங்கப்பட்ட தேதியில் இருந்து 7 நாட்களுக்குள் கொடுக்கப்படும். மீதமுள்ள 90 விழுக்காடு பணம் பொருட்கள் வழங்கப்பட்ட 30 நாட்களுக்குப் பின் கொடுக்கப்படும்.
மேலும், கொள்முதல் ஆணையின்படி அரசாங்கத்திற்கு வரிகளை செலுத்தியதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்ட பின்பே நிறுவனம் அந்த கட்டணத்தை வழங்கவேண்டும். ஆனால், விற்பனையாளர்கள் 36லட்சம் சாதாரண செட்டாப்பாக்ஸ், 40 ஆயிரம் ஹெச்.டி செட்டாப் பாக்ஸ்களை 2018க்குள் வழங்கிவிட்டனர்.
எதுவும் ஆதாரம் இல்லை!
விற்பனையாளர்களின் விநியோக விலைப் பட்டியலில் இறக்குமதிக்கான சுங்க வரி செலுத்தப்பட்டதின் உள்விவரம் காட்டப்படவில்லை. மேலும், அரசுக்கு சுங்க வரி செலுத்தியதற்கான ஆதாரங்களும் இணைக்கப்படவில்லை. எனினும் விலைப்பட்டியல் மதிப்பில் 10 விழுக்காடு தொகை ஆரம்ப கட்டணம் மற்றும் எஞ்சிய 90 விழுக்காடு தொகை ஆகியவற்றை தமிழ்நாடு அரசு கேபிள்டி.வி. நிறுவனம் விற்பனையாளர்களுக்கு வழங்கியது.
விற்பனையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட இறக்குமதிக்கான சுங்கவரியினை சரி பார்ப்பதற்காக எவரிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதோ அதன் விவரங்கள் நிறுவனத்திடம் தணிக்கையின்போது கோரப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் அந்த விவரங்களை தணிக்கைக்கு தரவில்லை
தணிக்கையில்அம்பலம்!
இந்த சூழ்நிலையில், நிறுவனத்திடம் தகுந்த பதிவேடுகள் எதுவும் இல்லாத காரணத்தால் டைரக்டர் ஜெனரல் ஆடிட்(மத்திய வருவாய்) அலுவலர் சென்னை சுங்க வரி தணிக்கைக்காக பெற்ற டம்ப்டேட்டாவினை ஆய்வு செய்தது. அதில், ஒரு விற்பனையாளர், சீனாவில் இருந்து சென்னை துறைமுகம் வழியாக ஒரு செட்டாப் பாக்ஸ்க்கு சராசரி அடிப்படை விலையை ரூ.570 என்ற மதிப்பில் சுங்கவரியை கட்டி இறக்குமதி செய்தது தெரியவந்தது.
இதனால் ஒப்பந்தம் செய்த விலை ரூ.1,163 ஆக குறைந்தது. ஆகையால் நிறுவனம் விற்பனையாளர்களுக்கு திருப்பிச் செலுத்திய சுங்கவரியானது விற்பனையாளர்கள் சுங்க வரித்துறைக்கு செலுத்தியதை விட அதிகப்படியாக இருந்தது. விற்பனையாளர்கள் கோரியதை நம்பி அரசுக்கு சுங்கவரி செலுத்திய ஆதாரத்தை நிர்பந்திக்காமல் கேட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிட்டத் தொகை விற்பனையாளர்களுக்கு நிறுவனம் கொடுத்துவிட்டது என்ற விவரம் தணிக்கையில் கண்டறியப்பட்டது.
இவ்வாறாக, மந்த்ரா இன்ட்ஸ்டிரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு முறையற்ற வகையில் செலுத்திய அதிகப்படியான சுங்க வரி சாதாரண செட்டாப் பாக்சுக்கு ரூ.14.16 கோடி, ஹெச்.டி செட்டாப் பாக்சுக்கு ரூ.58 லட்சம் என மொத்தம் ரூ.14.74 கோடி என கண்டறியப்பட்டது.
மற்றொரு விற்பனையாளர் பாலாஜி மிஷின் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் இவ்வண்ணமே சுங்கவரி செலுத்திய ஆதாரத்தை நிர்பந்திக்காமல் சுங்கவரிக்கான தொகை வழங்கப்பட்டது. எனினும் தணிக்கையில் எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்ற விவரத்தை அறிய முடியவில்லை. அதனால், அதிகப்படியாக கொடுத்த சுங்கவரி தொகையை கணக்கீடு செய்ய இயலவில்லை.
முறையற்ற சலுகைகள்!
கொள்முதல் ஆணையில் நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்குள் பொருட்களை வழங்காவிடில், வழங்கப்படாத பொருட்கள் மதிப்பின் மீது ஒரு வாரத்திற்கு 0.5 விழுக்காடு ஆகவும், அதிகபட்சமாக 5 விழுக்காடு ஆகவும் அபராத தொகை விற்பனையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படவேண்டும். விற்பனையாளர்கள் 50 வாரகாலம் வரை கால தாமதமாக செட்டாப் பாக்ஸை வழங்கினர் என்பது தணிக்கையில் கண்டறியப்பட்டது.
இவ்வாறு கால தாமதமாக வழங்கப்பட்டதற்கு பாலாஜி மிஷின் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.9.22 கோடி, மந்த்ரா இன்ட்ஸ்டிரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.13.47 கோடி என அபராத தொகை ரூ.22.16 கோடி கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் அதற்குரிய எவ்வித அபராத தொகையும் விதிக்கப்படவில்லை. இது இரண்டு விற்பனையாளர்களுக்கும் முறையற்ற சலுகையாக அமைந்தது.
விற்பனையாளர்கள் அரசுக்கு உண்மையாக செலுத்திய சுங்கவரி ஆதாரத்தை சமர்ப்பிக்க நிர்பந்தம் செய்து அவர்கள் செலுத்திய சுங்கவரியை மட்டும் அவர்களுக்கு வழங்காமல், கொள்முதல் ஆணையின்படி வழங்கியது மற்றும் காலதாமதமாக வழங்கிய செட்டாப் பாக்ஸ் அபராததொகை விதிக்கப்படாமல் இருந்தும் ரூ.37.43 கோடி அளவிற்கு விற்பனையாளர்களுக்கு சலுகை வழங்கி இருப்பது உறுதியாகியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு டாஸ்மாக்கில் 6,809 சில்லறை விற்பனை கடைகளும், அதன் உடன் இணைந்த 3,862 மது அருந்தும் (பார்கள்) கூடங்களும் உள்ளன. இதில், தனியாருக்கு மதுக்கூடங்கள் நடத்த உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கான உரிமத் தொகையை ஒப்பந்ததாரரிடம் பெற்று ஒரு விழுக்காடு தொகையை தனது ஏஜென்சி கமிஷனாக கழித்து மீதி தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும்.
இந்நிலையில், கடந்த 2016-17ம் ஆண்டிற்கான தணிக்கையின்போது 9 மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்குட்பட்ட 3205 மதுக்கூடங்களில் 326 மதுக்கூடங்களின் வருடாந்திர குத்தகை காலம் 2016 ஜூலை மற்றும் 2017 பிப்ரவரி இடைப்பட்ட காலங்களில் முடிவுற்றதாக கண்டறியப்பட்டது.
டாஸ்மாக் நிர்வாகம் இதன் குத்தகை காலத்தை அவ்வப்போது நீட்டித்து 2017 டிசம்பர் வரை நடப்பு தொகையிலேயே நடத்திக்கொள்ள அனுமதி அளித்திருந்தது.
இந்த காலகட்டத்திலேயே ஒப்பந்தப்புள்ளி கோரி விண்ணப்பங்கள் வராத நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான ஒப்பந்தப்புள்ளி ஆகிய காரணங்களைக்காட்டி டாஸ்மாக் நிர்வாகம் அதிக வருமானம் ஈட்டுவதற்கு எந்த ஒப்பந்தப்புள்ளிகளையும் முடிவு செய்யவில்லை. எனவே குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டது.
2012-13ம் ஆண்டு 24,818 கோடி அளவு இருந்த மதுபான விற்பனை 2016-17ல் 31,247 கோடியாக அதிகரித்தது. இந்த நான்கு ஆண்டுகால விலை உயர்வு 26 விழுக்காடாகும். இந்த மதுபான விற்பனைஉயர்வு மதுபானக் கூடத்தில் விற்பனையாகும் நொறுக்குத்தீனியின் விற்பனையிலும், காலிபாட்டில்களின் எண்ணிக்கையிலும் கட்டாயமாக ஒரு உயர்வை கண்டிருக்கும். ஆனால், இந்த உயர்வை கருத்தில்கொண்டு மதுக்கூட உரிமத்தொகையை உயர்த்தாமல் அதே நிலையில் குத்தகைகாலத்தை நீட்டித்தது நியாயமற்றதாகும்.
குத்தகை ஒப்பந்த காலத்தை நீட்டிக்க நேரிடும் சமயத்தில் உரிமத்தொகையை உயர்த்த ஒப்பந்தத்தில் ஏதுவான வழிமுறைகள் இல்லாத காரணத்தால் அரசு கருவூலத்திற்கு ரூ.18.67 கோடி வருவாய் இழப்பும், டாஸ்மாக் தனக்கு கிடைக்கவேண்டிய ஏஜென்சி கமிஷனாக ரூ.19 லட்சத்தையும் 9 மாவட்டத்திற்குட்பட்ட 326 சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடத்தின் குத்தகை காலத்தை நீட்டித்ததால் இழந்தது.
------------------------------------------------------------------
எதிலும் திணிப்போம் இந்தியை.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதும், அதை எதிர்த்து தமிழகத்தில் எதிர்ப்புக்குரல் ஒலிப்பதும் தொடர்கதையாகி வருகின்றன.
சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தியை திணிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த முயற்சியிலிருந்து மத்திய பா.ஜ.க. அரசு கண்டித்துள்ளனர்.
ஆனாலும் இந்தியை திணிக்கும் தனது போக்கை மட்டும் ஒன்றிய மோடி அரசு நிறுத்தியபாடில்லை. சமீபத்தில் கூட, தமிழ்நாட்டு எம்.பி-க்களின் கடிதங்களுக்கு இந்தியில் மத்திய அமைச்சர்கள் பதில் அளிக்கிற சட்டவிரோதமான நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சு.வெங்கடேசன் எம்.பி பொது நல வழக்கை தாக்கல் செய்து அதுதொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் மீண்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்புவோருக்கு ஒன்றிய அரசு இந்தியில் பதில் அளிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன். இவர் இந்திய மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் தொடர்பாக உரிய தகவல்களை வழங்கவேண்டும் என ஆங்கிலத்தில் கேட்டிருந்தார்.
அதற்கு முறையாக ஆங்கிலத்தில் பதில் அளிக்காமல், இந்தியில் பதில் அளித்துள்ளது. டெல்லி காலாவதி சரண் மருத்துவமனை வெளியிட்டுள்ள அந்த கடித உறை மீதான விலாசத்தையும் இந்தியிலேயே எழுதி அனுப்பியுள்ளது. ஒன்றிய அரசு தொடர்ந்து இதுபோல இந்தி திணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
------------------------------------------------------------------------------------
வின்னை முட்டிய எண்ணை.
இந்தியாவில் எண்ணெய் விலை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. உதாரணமாக, டெல்லி நகரத்தில் கடுகு, வனஸ்பதி, சோயா மற்றும் பாமாயில் சில்லறை விற்பனை விலை சுமார் 30% அதிகரித்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் 40% அதிகரித்துள்ளது.
விலை உயர்வுக்கு என்ன காரணம்?
இந்தியா தனது சமையல் எண்ணெயில் பெரும் பகுதியை இறக்குமதி செய்கிறது. தனது உள்நாட்டு தேவையில் சுமார் 70% அளவிற்கு இறக்குமதி செய்கிறது. இந்த நிலை எப்போதுமே அப்படி இருந்ததில்லை.
1990-களின் முற்பகுதி வரை, கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற வழக்கமான சமையல் எண்ணெய்களால் இந்தியா தன்னிறைவு பெற்றது. அந்த நேரத்தில் அமல்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு, சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களுக்குச் சாதகமான கொள்கை முடிவுகளை ஆட்சியாளர்கள் எடுத்ததன் தொடர்ச்சியாகவும், தனிநபர் நுகர்வு கணிசமாக அதிகரித்ததன் காரணமாகவும் பற்றாக்குறை அதிகரித்தது.
இந்தியா கச்சா எண்ணெய் (பெட்ரோலியம்), தங்கத்துக்கு அடுத்த படியாக இறக்குமதிக்கு அதிகம் செலவிடும் பொருளாக சமையல் எண்ணெய் மாறியது.
இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் சூழலானது, சர்வதேச நிலைமைகளுக்கு ஏற்றவாறு எண்ணெய்களின் சில்லறை விற்பனை விலையை இந்தியாவில் மாறச் செய்தது.
கடந்த ஆண்டில், உலகம் முழுவதும் பல பயிர்களின் உற்பத்தி பெரும் சவால்களை எதிர்கொண்டன. மலேசியாவில் கோவிட் -19 பொதுமுடக்கத்தால் பனை பயிர் கொள்முதல் மோசமானது. 2020-ம் ஆண்டில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் எஎற்பட்ட வறண்ட சூழல் உலக அளவிலான சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியை 9% குறைத்தது. பயோடீசலுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக சோயா பீன் எண்ணெய் விலை உச்ச அளவை எட்டியது.
தொடர் பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் சமைக்கும் உணவுகளின் நுகர்வு அதிகரித்ததால், வடமாநிலங்களில் கடுகு எண்ணெய்க்கான தேவை மேலும் அதிகரித்தது. இந்த காரணங்களால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடுகு எண்ணெய் போன்ற எண்ணெய்களின் விலையும் உயர்ந்தது.
உள்நாட்டு உற்பத்தி கைக்கொடுக்குமா?
இந்தியாவின் மொத்த எண்ணெய் வித்து உற்பத்தி கடந்த சில ஆண்டுகளில் ஓரளவு உயர்ந்துள்ளது. கொள்கை அளவில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறிக் கொள்கிறது (இந்த நோக்கங்கள் பெரும்பாலும் பின்பற்றப்படாவிட்டாலும் கூட). அதிகரித்த உள்ளூர் உற்பத்தி, உணவுப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. மேலும், விவசாய வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இருப்பினும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது விலையில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாரத் மேத்தா, இந்தியாவில் நடைமுறையில் உள்ள திறனற்ற விவசாய முறைகளால் உற்பத்தி தன்னிறைவற்ற நிலை ஏற்படுகிறது என விளக்குகிறார். “இந்தியாவில் உற்பத்தித்திறன் மிகக் குறைவு. எனவே இந்த குறைந்த உற்பத்தித்திறனில் விவசாயம் செய்தால், விலைகள் அதிகமாகவே இருக்கும்” என்கிறார்.
சிறிய அளவிலான பண்ணைகள் மற்றும் காலாவதியான விவசாய முறைகளால் இந்தியா வேளாண்மை உலக அளவில் திறமையற்ற ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, இந்தியாவைப் போலவே வளரும் நாடாக இருக்கும் பிரேசிலில், சோயாபீன்ஸின் மகசூல் இந்தியாவில் இருப்பதைவிட மூன்று மடங்கு அதிகம்.
எனவே விவசாயத்தை மிகவும் திறன்மிக்கதாக்குவதும், சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதும், விலையைக் குறைப்பதற்கான வழிமுறைகளாக இருக்க முடியும்.
எண்ணெய் விலை உயர்வு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ள நிலையில், ஒன்றிய பாஜக அரசைப் பொருத்தவரையில் அது தேர்தலில் மிகப்பெரும் பாதகத்தை அக்கட்சிக்கு ஏற்படுத்தும் என்றாலும், நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நிலைமைகள் இப்பிரச்சினையை தீர்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்த வில்லை.
இறக்குமதி வரிகள் தாக்கத்தை ஏற்படுத்துமா?
பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா 32.5% வரி விதிக்கிறது, அதே நேரத்தில் கச்சா சோயா பீன் மற்றும் சோயா எண்ணெய்களுக்கு 35% வரி விதிக்கப்படுகிறது. சில்லறை விலைகளை குறைக்க முடியும் என்பதற்காக இந்த வரிகளை குறைப்பதை மோடி அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது.
கடந்த ஜூன் 16-ம் தேதி சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 20% வரை குறைந்துள்ளதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவித்தது. சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததும், வரியைக் குறைப்பதற்கான தனது திட்டங்களை மோடி அரசு நிறுத்தி வைத்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
5 விழுக்காடாக இருந்த கச்சா எண்ணெய் (சுத்திகரிக்கப்படாத பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்) இறக்குமதி வரி, இந்த ஆண்டு 17.5 விழுக்காடாக உயர்த்தியது மோடி அரசு. இதுதான் சமையல் எண்ணெயின் விலையேற்றம் உச்சத்தைத் தொடக் காரணமானது.
பெரும் கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான நடவடிக்கைகள் :
கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான சிறு இறக்குமதியாளர்களின் உரிமத்தை ஒன்றிய அரசு புதுப்பிக்கவில்லை. சிறு இறக்குமதியாளர்கள் உரிமம் இல்லாததால், பெருநிறுவனங்கள் ஏக போக உரிமையுடன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து அதிக விலைக்கு இங்கு விற்பதாக சென்னையைச் சேர்ந்த எண்ணெய் இறக்குமதியாளர்கள் மற்றும் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த சுந்தர் கூறுகிறார்.
மோடியின் கார்ப்பரேட் நண்பரான அதானி, சிங்கப்பூரின் வில்மர் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் அதிகளவு விற்பனையாகும் ஃபார்ச்சூன் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகிறார். இதைப் போலவே சமையல் எண்ணெயை இறக்குமதி செய்வதில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே அனுமதித்திருப்பதால், சமையல் எண்ணெயின் விலை மீதான கட்டுப்பாட்டை பேணுவதில்லை, மோடி அரசு.
90-களுக்குப் பிறகு, வேளாண்மையை இந்திய அரசு கைவிட்டதும், திறந்து விடப்பட்ட சர்வதேச சந்தையும், தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லாமல் விட்டதும் தான் சமையல் எண்ணெய் விலை உயர்வுக் காரணமாகியுள்ளது. மோடி தனது நண்பர்களுக்காக செய்துகொடுத்திருக்கும் கொள்கை மாற்றங்களின் காரணமாக சமையல் எண்ணெயின் விலை உயர்ந்து மக்கள் வயிற்றில் அடித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------