குற்ற உடந்தை!

 எந்த வழக்கையும் மேற்கொண்டு புலன் விசாரணையை காவல்துறை நடத்தலாம். மேல் புலன் விசாரணை (Further Investigation) என்பது குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டத்தின் 173(8) பிரிவின் படி நடத்தப்படுவது.



அதன்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னர் கூடுதல் தகவல் கிடைத்தால் அதை முறைப்படி விசாரணை செய்ய காவல்துறைக்கு உரிமையும், கடமையும் உண்டு. அதன்படிதான் கொடநாடு வழக்கிலும் மேற்கொண்டு புலன் விசாரணை நடத்தப்படுகிறது.

மேற்கொண்டு விசாரணை செய்யக்கூடாது என்று எந்த வழக்கிலும் யாரும் சொல்ல முடியாது. அது குற்றவாளிகளைக் காப்பாற்றுவதாக ஆகும். ஆனால் மேற்கொண்டு விசாரணை நடத்தக் கூடாது என்று பழனிசாமி சொல்லி வருகிறார். ஜெயகுமாரை வைத்து சொல்ல வைக்கிறார்.

அவரது எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடுகிறார். அந்த வழக்கு தள்ளுபடி ஆகிறது. உடனே உச்சநீதிமன்றத்துக்கும் போயிருக்கிறார்கள். மேல்முறையீடு செய்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதில் குற்றம் காணவிரும்பவில்லை. ஆனால், இந்த வழக்கும், மேல்முறையீடும் மர்மங்களை வலுக்க வைக்கிறதே தவிர, வேறல்ல!

இந்த மர்மங்கள் எல்லாம் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு உருவாக்கப்பட்டவை அல்ல. பழனிசாமி ஆட்சியில் இருந்தபோதுதான், கொடநாடு பங்களாவில் கொலையும் நடந்தது. கொள்ளையும் நடந்தது. இது சம்பந்தமான வழக்குகளைப் பதிவு செய்தது அ.தி.மு.க ஆட்சிதான். குற்றவாளிகளைக் கைது செய்ததும் அ.தி.மு.க ஆட்சி தான். நான்கு ஆண்டு காலம் அவர்களது ஆட்சியில் தான் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு, வழக்கு மன்றத்திலும் நடந்தது.

இதில் சம்பந்தப்பட்ட சிலர், அப்போது சொல்ல முடியாத சில தகவல்களை இப்போது சொல்வதற்கு முன் வந்துள்ளார்கள். குற்றம் சாட்டப்பவர்கள் மீது அன்றைய அ.தி.மு.க அரசு உரிய காலத்தில் குற்றப்பத்திரிக்கையை ஏனோ தாக்கல் செய்யவில்லை. அதனால் அவர்களுக்கு எளிமையாக பிணை விடுதலையும் கிடைத்தது.

குற்றம் சாட்டப்பட்ட சிலர், இதில் அ.தி.மு.க.வின் மேலிடத்தில் இருப்பவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று பேட்டி அளித்தார்கள். பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல், அன்றைய முதலமைச்சர் பழனிசாமியை நேரடியாகவே குற்றம்சாட்டினார். கொடநாடு சம்பவங்களின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாகவும் அரசியல் பின்புலம் இருப்பதாகவும் அவர் சொன்னார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வளவும் அ.தி.மு.க ஆட்சியின் போதே மக்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

“முன்னாள் முதலமைச்சரின் அடையாளமாக இருந்த வீட்டில் கொலை, கொள்ளை நடந்திருக்கிறது என்பதால் அதில் உள்ள மர்மங்களை தி.மு.க ஆட்சி அமைந்ததும் அது பற்றி விசாரிப்போம்” என்று தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிரச்சினையில் சம்பந்தப்பட்ட ஒருவர், இன்னும் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். அதற்கான அனுமதியை நீதிமன்றம் கொடுத்துள்ளது. அவ்வளவுதான். குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு சட்டம் வழங்கி இருக்கும் தார்மீக உரிமையின் அடிப்படையில் மேற்கொண்டு புலன் விசாரணை நடந்து வருகிறது. இதில் குறை காண்பது, நடந்த குற்றத்தை மறைப்பதற்குச் சமமானது.

இதனை அ.தி.மு.க.வினர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நிர்மல் குமார் அளித்திருக்கும் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது. “உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் அளித்துள்ள தீர்ப்புகளின் படி குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி எந்த ஒரு கட்டத்திலும் காவல் துறை மீண்டும் புலன் விசாரணையை மேற்கொள்ளலாம். இதில் சந்தேகமோ, எதிர்ப்போ, தவறோ காண முடியாது.

இதனால் வழக்கு காலதாமதம் ஆகும் என்று மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. ஒரு குற்ற வழக்கின் உண்மையை வெளியில் கொண்டு வருவது தான் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. புலன் விசாரணையில் குறைபாடு இருப்பது தெரியவந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். இதில் ஒரே ஒரு நிபந்தனை, விசாரணை நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்துவிட்டு விசாரணை செய்ய வேண்டும்.

கொடநாடு வழக்கில் காவல்துறையினர், விசாரணை நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். நீதிமன்றமும் அதை பதிவு செய்துள்ளது. பெரும்பாலும் விசாரணை முடியும் நிலையில் இருந்தாலும், நேர்மையான விசாரணையின் அடிப்படையில்தான் நியாயமான தீர்ப்புகளை வழங்க முடியும். எனவே இந்த வழக்கில் மீண்டும் புலன் விசாரணை மேற்கொள்வது அவசியமாகிறது. உண்மையை வெளியில் கொண்டு வருவதுதான் முக்கியமாகும். நேர்மையான விசாரணைக்கும் விரைவான விசாரணைக்கும் வித்தியாசம் உள்ளது” என்று நீதியரசர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.

“கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி மேற்கொண்டு காவல்துறையினர் புலன் விசாரணை செய்வதற்கு தடை விதிக்க முடியாது” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்ட பிறகும் - இந்த விசாரணைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்திருப்பது மர்மத்தை வலுக்க வைக்கிறது!

‘அம்மாவின் பங்களாவில் நடந்த சம்பவங்களின் உண்மைத் தன்மையை ஊருக்குச் சொல்வதற்கு நாங்கள் தடையாக இருக்க மாட்டோம்' என்று அ.தி.மு.க தலைமை அறிவித்தாக வேண்டும். ‘என் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்த முடியாது. நான் அப்பழுக்கற்றவன். எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன்' என்று பழனிசாமி அறிவித்தாக வேண்டும். இவற்றைச் செய்யாமல், காவல்துறைக்கு உள்நோக்கம் கற்பிப்பது கண்டிக்கத்தக்கது. இதுவே குற்ற உடந்தை!


----------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?