கொலை நாடு

 கொடநாடு காவலாளி ஓம் பகதூர் 2017 ஏப்ரல் 24ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தயார் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கொடநாடு தேயிலை தோட்டத்தில் உள்ள ஆடம்பர பங்களாவில் அ.தி.மு.கவின் மிக முக்கிய கோப்புகள், ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் கொடநாடு எஸ்டேட் சசிகலாவின் முழு கட்டுப்பாட்டில் வந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஊழல் வழக்கில் சசிகலா நான்காண்டு சிறை தண்டனை பெற்று சிறைக்குச் சென்றார்.

இந்நிலையில் சசிகலா சிறைக்குச் சென்று இரண்டு மாதத்தில் கொடநாட்டில் உள்ள ஆடம்பர பங்களாவில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்ட நிலையில் பங்களாவில் இருந்த பல அ.தி.மு.க தொடர்பான கோப்புகள் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அப்போதைய அரசியல் சூழலில் கொடநாடு பங்களாவிலிருந்து இரண்டு பொம்மைகள் மட்டுமே திருட்டுப் போனதாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரும், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினருமான கனகராஜ், சயான், மனோஜ், உதயன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 2017 ஏப்ரல் 28ஆம் தேதி முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலத்தில் வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதேநாளில் கோவை - பாலக்காடு சாலையில் இரண்டாவது குற்றவாளியான சயான் தனது மனைவி குழந்தையுடன் காரில் சென்றபோது மர்ம வாகனம் மோதியதில் சயானின் மனைவி, குழந்தை ஆகியோர் துடிதுடித்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நடைபெற்று ஒரே வாரத்தில் கொடநாடு கணினி பொறியாளர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அடுத்தடுத்த 4 மரணங்கள் இவ்வழக்கில் பெரும் சர்ச்சையையும் சந்தேகத்தையும் எழுப்பிய நிலையில் சயான், மனோஜ் ஆகியோர் நான்கு வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டபோது காவல்துறை, ஊடகவியலாளர்களிடம் மற்றும் நீதிபதிகளிடம் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பழனிசாமியின் நண்பரும் அ.தி.மு.க மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் கூடலூர் பகுதியை சேர்ந்த மர வியாபாரி சஜீவன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

ஆனால் காவல்துறையினர் அப்போது வழக்கு வேறு திசைக்குக் கொண்டு சென்று சயான், மனோஜ் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கு தற்போது உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கடந்த 13ம் தேதி கோத்தகிரி போலிஸார் சயானிடம் மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா சாயானிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவுத், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ், கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தியதில் எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பெயரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாகவும், கொலை, கொள்ளை சம்பவம் நடந்த அன்று மர வியாபாரி சஜீவன் மற்றும் அவரது சகோதரர் சுனில் ஆகியோர் பல்வேறு வசதிகளைச் செய்து தந்ததாகவும் சயான் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சயான் அளித்த வாக்குமூலம் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சயான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆதாரங்களை திரட்டுவதற்காக குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரோஷ் தலைமையில் கோத்தகிரி காவல் ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் இரண்டு உதவி ஆய்வாளர்கள், நான்கு காவலர்களை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு ஆதாரங்களை திரட்டும் பணி மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி, இறந்த முன்னாள் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் காவல்துறையினர் உதகையில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இவ்வழக்கு 27ஆம் தேதி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். இவ்வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகளாக கருதப்படும் நிலையில் ஜாமினில் உள்ள முக்கிய குற்றவாளியான சயான் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

காவல்துறை சார்பில் மறு விசாரணை இன்னும் நிறைவு பெறாததால் விரைவில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் கூறியிருந்த நிலையில், இவ்வழக்கு விசாரணை இரண்டாம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நாளை செப்., 2ஆம் தேதி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணை நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் விசாரணையில் இவ்வழக்கின் சாட்சிகளாக கருதப்படும் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், தடயவியல் நிபுணர் ராஜகோபாலன், மின்வாரிய அதிகாரி ஆகியோரிடம் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்ட நீதிபதி சஞ்சை பாபா, அவர்கள் மூன்று பேரும் எதிர்வரும் தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றார்.

இதனிடையே சயான், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்திடம் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு சில நாட்களுக்கு முன்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி ஓம் பகதூர் மற்றும் கிருஷ்ண பகதூர் ஆகிய இருவரும் இரவுக் காவலில் இருந்த நிலையில் கொள்ளை முயற்சி நடந்தபோது, அதை தடுக்க முயன்ற ஓம் பகதூரை கொள்ளையர்கள் கை கால்களை கட்டி தாக்கியதில் ஓம் பகதூர் கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து காவலாளி ஓம் பகதூர் உடலை கோத்தகிரி போலிஸார் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கைப்பற்றி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்ட நிலையில் ஓம் பகதூர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக கோத்தகிரி போலிஸார் பதிவு செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட நிலையில் அப்போதைய கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளதாக பதிவு செய்து இருப்பதை கண்டறிந்த தற்போதைய நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் இதுகுறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்.

அத்துடன் ஓம் பகுதூரை கொலையாளிகள் கொலை செய்தபோது, சம்பவத்தை நேரில் பார்த்த கிருஷ்ண பகதூர் என்ற காவலாளி தற்போது நேபாள நாட்டில் இருப்பதால் அவரை அழைத்து வந்து மறு விசாரணை செய்யவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோத்தகிரி போலிஸார் விரைவில் நேபாளம் செல்ல உள்ளனர். அத்துடன் ஓம் பகதூரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

-------------------------------------------------------------------------------


--

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?