பட்டினி பட்டியல்
பட்டினி என்பதை எப்படிக் கணக்கிடுவது என்பதற்கு சில அளவுகோல்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் நான்கு விஷயங்களுக்கான தரவுகள் சேமிக்கப்படுகின்றன.
முதலாவதாக, போதுமான சத்துணவு இல்லாத மக்களின் சதவீதம். இரண்டாவது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருத்தல். மூன்றாவது, குழந்தைகள் தங்கள் வயதிற்கேற்ற உயரமின்றி குன்றிப்போயிருத்தல். நான்காவது, ஐந்துவயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம். இவற்றை வைத்து ஒவ்வொரு நாட்டிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
இதில் 10க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றவை 'கீழ்' என்ற பிரிவில் பட்டியலிடப்படுகின்றன. 10 முதல் 20 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை 'சுமார்' என்ற பிரிவில் வைக்கப்படுகின்றன. 20 முதல் 35 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை 'சீரியஸ்' என்ற பிரிவிலும் 35 முதல் 50 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை 'ஆபத்தான' என்ற பிரிவிலும் 50க்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவை 'தீவிர ஆபத்தான' என்ற பிரிவிலும் வைக்கப்படுகின்றன. அதாவது அதிக மதிப்பெண் பெற்றால் மோசமான நிலை என்று பொருள்.
2021ஆம் ஆண்டின் பட்டினிப் பட்டியலின்படி இந்தியா 101வது இடத்தைப் பிடித்துள்ளது. கோஸ்டாரிகா, சூரிநாம், கயானா, நிகராகுவா, கானா, எத்தியோப்பியா, பர்கின ஃபாஸோ, சூடான், ருவாண்டா போன்ற பின்தங்கிய ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் இந்தியாவைவிட பட்டியலில் மேம்பட்ட நிலையில் உள்ளன.
அண்டை நாடான பாகிஸ்தான் 92வது இடத்திலும் சீனா 5வது இடத்திலும் நேபாளம் 76வது இடத்திலும் இலங்கை 65வது இடத்திலும் பர்மா 71வது இடத்திலும் உள்ளன.
இந்தியாவின் பிரச்சனை என்பது செல்வம், சரியான முறையில் பங்கீடு செய்யப்படாததே என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்திய மக்களில் 22 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் நிலையில், உலக பெரும் கோடீஸ்வரர்களில் 84 பேர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள் என்பதை இந்தப் பட்டியலுடன் சேர்ந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2016ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களிபடி, உலகில் வளர்ச்சிக் குறைபாடான குழந்தைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் உள்ளனர்.
உலக பட்டினி நாடுகள் குறியீடு அறிக்கையானது கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. ஜெர்மனியின் வேர்ல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்பும், அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பும் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வறிக்கையில் மொத்தம்
116 நாடுகளில் இந்தியா உலக பட்டினி குறியீட்டில் 101ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான அறிக்கையில் 94 இடத்தில் இருந்த இந்தியாவானது தற்போது 101ஆவது இடத்திற்கு பின் தங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பட்டினி மிகவும் மோசமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை இந்த ஆய்வானது அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளது.
களநிலவரம் மற்றும் புள்ளிவிவரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் தவறுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, கரோனா காலத்தில் அரசு மேற்கொண்ட உணவுத் திட்டங்களைக் குறித்து முறையாக ஆய்வு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
ஆய்வில் கேட்கப்பட்ட கருத்துக்களில் அரசு அல்லது இதர வழிகளிலிருந்து பெறப்பட்ட உணவுகள் உதவிகள் குறித்த எந்தக் கேள்விகளும் இடம்பெறாதது சந்தேகத்தை எழுப்புவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது
2014-இல் உலகின் நூறு பணக்காரர்களின் பட்டியலிலேயே இடம் பெறாத கவுதம் அதானி 2021-இல் 15ஆவது இடத்தில் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் பாஜக அரசின் கொள்கை தான் என்பதை யாரும், மறுக்க முடியாது. 2014-இல் 1860 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இருந்த முகேஷ் அம்பானி தற்போது 2021 அக்டோபர் முதல் வாரத்தில் 9,27 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் 12ஆவது இடத்தில் இருக்கிறார். இதுதான் பாஜக அரசின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கொள்கையின் விளைவு.
முகேஷ் அம்பானி உலகின் 100 பணக்கா ரர்களின் பட்டியலில் 2014-இல் 40 ஆவது இடத்தில் இருந்தார். ஆனால் மோடியின் நண்பரான கவுதம் அதானி - 2014-இல் அந்த 100பேர் பட்டியலி லேயே இடம் பெறாத அதானி -2021 இல் 7,48 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் 15ஆவது இடத்தில் இருக்கிறார் என்றால் அந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு முழுக்காரணமும் பாஜகவின் கூட்டுக் களவாணி முதலாளித்துவக் கொள்கைதானே!
இதுதானே ஒன்றிய பாஜக அரசின் வளர்ச்சிக் கொள்கை. இந்த வளர்ச்சிக் கொள்கையால் நாட்டின் வேலையின்மை விகிதம் 2016-17 -இல் 15.66 விழுக்காடாக இருந்தது.
20-21-இல் 28.66 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 32.03 விழுக்காடு என்று சாதனை படைத்திருக்கிறது. நாட்டின் 10 விழுக்காடு பணக்காரர்கள் 50 விழுக்காடு சொத்துக்களுக்கு உரிமையாளர்களாகி இருக்கிறார்கள் என்று தேசிய மாதிரி ஆய்வு தெரிவித்துள்ளது.
அதே சமயத்தில் கிராமப்புறங்கள், நகர்ப் புறங்கள் எல்லாம் சேர்ந்து 57 விழுக்காட்டு குடும்பங்கள் கடனில் சிக்கித் தவிக்கின்றன என்பதையும் அதே தேசிய மாதிரி ஆய்வுதான் கூறியுள்ளது. அதாவது பணக்காரர்கள் மெகா பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள்; ஏழைகள் ஓட்டாண்டிகளாகியிருக்கிறார்கள்.