வதந்தி கிளப்பும் சேட்டன்மார்

 கேரளாவில் அதிகமாக மழை பெய்கிறது. ஆனால் சிலருக்கு முல்லைப் பெரியாறு அணையைப் பார்த்தால் ஏனோ வேர்க்கிறது. அதிகமாக மழை பெய்வதைக் காரணமாகக் காட்டி, முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று வதந்தியைக் கிளப்பி விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 


அதிகமாக மழை பெய்வதுகூட அவர்களுக்கு ஒரு காரணம்தானே தவிர, உண்மையான உள்நோக்கம் அவர்களுக்கு முல்லைப் பெரியாறு அணைதான் உருத்துகிறது

முல்லைப் பெரியாறு அணை கம்பீரமானது. அதற்கு எந்த ஆபத்தும் இல்லை. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் சக்திகள் தான், ‘முல்லைப் பெரியாறு அணை பலவீனமானது’ என்பதை தொடர்ந்து ஒரு பொய்ப் பிரச்சாரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.இந்த விவகாரத்திற்கு ஆரம்ப நிலையிலேயே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்திருப்பதை பாராட்ட வேண்டும்.

 “முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளது எனவும் லட்சக்கணக் கானவர்கள் உயிரிழக்கப் போகிறார்கள் எனவும் சமூக வலைத்தளம் மூலம் சிலர் பரப்புகின்றனர். உண்மையில் அதுபோன்ற ஆபத்து ஏதும் இல்லை. 

முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாக பொய் பரப்புரை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சொல்லி இருக்கிறார்.


இந்த முல்லைப் பெரியாறு அணை 1893 - இல் 60 அடி உயரத்திற்கும், அதன்பின்பு 1894- இல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையைச் சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் திறந்துவைத்தார்.


“முல்லைப் பெரியாறு அணை, பொறியியல் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் உறுதியும், நவீன தொழில்நுட்பமும், பொறியியல் உலகில் ஆச்சர்யமாகப் பேசப்படும் - அதிசயமாகப் பார்க்கப்படும். காட்டில் ஓடும் காட்டாற்றின் குறுக்கே அணை கட்டியிருப்பது பெரும் சாதனையே!” என்று அணை திறப்புவிழாவில் பேசினார் வென்லாக். அத்தகைய கம்பீரத்தோடு இன்றும் காட்சி அளிப்பது தான் முல்லைப் பெரியாறு அணை ஆகும்.

முல்லைப் பெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட அணை ஆகும். பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்று அழைக்கப்பட்டது. முல்லையாறு - பெரியாறு ஆகிய இரண்டும் சேருமிடத்தில் இருப்பதால் முல்லைப் பெரியாறு அணை என்று அழைக்கப்படுகிறது.


1882ஆம் ஆண்டு ஆங்கில அரசால் இந்த திட்டம் ஏற்கப்பட்டு, மேஜர் ஜான் பென்னிக்குயிக்கிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 1887 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டும் பணி துவக்கப்பட்டது. பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. இந்த அணையின் கட்டுமானப் பணிக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக் கல் பயன்படுத்தப்பட்டது. சுண்ணக்கல், சுரக்கி கலவையால் கட்டப்பட்டது.

முதலில் அணை கட்டிய போது பெய்த கனமழையால் அணையே அடித்துச் செல்லப்பட்டது. அடுத்து ஆங்கில அரசு பணம் ஒதுக்காத நிலையில் இலண்டன் சென்ற பென்னிக்குயிக் தனது சொந்த முயற்சியால் பணம் திரட்டி வந்து இந்த அணையைக் கட்டினார். இன்றைய தினம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டப்பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் இந்த முல்லைப் பெரியாறு அணையும், அதற்குக் காரணமான மனிதர் பென்னிக்குயிக் அவர்களும் தான்!



இவ்வாறு கட்டப்பட்ட அணையைக்கூட பாதுகாத்துக் கொள்வதிலும் தண்ணீரைத் தேக்கி வைப்பதிலும், பகிர்ந்து கொள்வதிலும் தமிழகம் பல்லாண்டுகளாக தொல்லையைத்தான் அனுபவித்து வருகிறது. கேரளாவில் அரசியலுக்கான ஊறுகாயாக முல்லைப் பெரியாறை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


142 அடி வரைக்கும் தண்ணீரை நிரப்பி வைக்க தமிழ்நாட்டுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் 137 அடி தான் தேக்கி வைக்க வேண்டும் என்று கேரள அரசியல்வாதிகள் வாதங்களை வைக்கிறார்கள். ‘முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க அளவு - பராமரிப்பு விவகார வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அவசர அடிப்படையில் கூடி கலந்தாலோசனை செய்ய வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் கடந்த 25ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. மேற்பார்வைக் குழு மூலமாக இதனை விசாரணை நடத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது.

அணைக்கு வரும் நீரை விட அணையில் இருந்து அதிகளவில் நீர் வெளியேற்றப்படுகிறது’ என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, அசாதாரண சூழ்நிலை என்பது இப்போது இல்லை. மழை நீர் அதிகம் வந்துள்ளது என்பது தற்காலிக சிரமமே தவிர, நிரந்தரமானது அல்ல. தற்காலிக சிரமத்துக்காக, நிரந்தரப் பெருமையைச் சிறுமைப்படுத்துவது அழகல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும்.


தொடக்க காலத்தில் (1904 ஆம் ஆண்டு) அணையின் உச்சநீர் மட்டம் 162 அடி அளவுக்கும் இருந்துள்ளது. அணைக்கு மேலேயே வழிந்துள்ளது. அதன்பிறகுதான் 136 அடிக்கு நீர் வந்ததும் நீர் வெளியேறும் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அணையின் உச்ச நீர் மட்டம் 152 அடியாக அமைக்கப்பட்டது. 1962 முதல் 1979 வரையிலான காலக்கட்டத்தில் இரண்டு முறை அணையின் நீர் மட்டம் 152 அடியாக உயர்ந்தது. 2014 ஆம் ஆண்டு அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்ந்தது ஒரே ஒரு முறை!


2015ஆம் ஆண்டும் ஒருமுறை 142 அடியாக உயர்ந்தது. அப்போதெல்லாம் வராத ஆபத்து இப்போது வந்து விடப்போகிறதா? 137 அடி, 139 அடி என்று குத்து மதிப்பாக பேசிக் கொண்டிருப்பதை விட சட்டபூர்வமாக 142 அடி தேக்கி வைப்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். அணையின் கம்பீரம் அத்தகையதே

---------+------------------

முல்லை பெரியாறம்,வதந்திகளும்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?