நீரிழிவை வெல்வோம்
நாம் சாப்பிடும்போது, நமது உடல் கார்போஹைட்ரேட்டுகளை சர்க்கரையாக (குளுக்கோஸ்) உடைக்கிறது. கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் என்ற ஹார்மோன், பின்னர் ஆற்றலுக்காக அந்த சர்க்கரைகளை உறிஞ்சுவதற்கு நமது உடல் செல்களை அறிவுறுத்துகிறது.
இன்சுலின் உற்பத்தி செய்யப்படாமல் அல்லது சரியாக வேலை செய்யாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது, இதனால் நமது இரத்தத்தில் சர்க்கரை சேருகிறது.
'டைப் 1' நீரிழிவு நோயில், கணையம் இன்சுலின் உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது, எனவே குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் குவிகிறது.
இது ஏன் நிகழ்கிறது என்று விஞ்ஞானிகளுக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் இது மரபணு ரீதியிலான தாக்கத்தை கொண்டிருக்கலாம் அல்லது கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சேதப்படுத்தும் வைரஸ் தொற்றுகளின் விளைவாக இருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10 சதவீதம் பேருக்கு டைப் 1 பாதிப்பு உள்ளது.
டைப் 2 நீரிழிவு நோயில், கணையம் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாது, அல்லது ஹார்மோன் திறம்பட செயல்படாது.
சில கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்படலாம், ஏனெனில் அவர்களின் உடலால் அவர்களுக்கும் குழந்தைக்கும் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாது.
வெவ்வேறு அளவுகோல்களைப் பயன்படுத்தி பல்வேறு ஆய்வுகள் 6 முதல் 16 சதவிகித கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் உருவாகும் என்று மதிப்பிடுகின்றன. கர்ப்பிணிகள் தங்களுடைய சர்க்கரை அளவை உணவு, உடல் செயல்பாடு மற்றும்/அல்லது இன்சுலின் பயன்பாடுகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும், இது டைப் 2 ஆக மேம்படுவதை தடுக்கிறது.
ரத்தத்தில் குளுக்கோஸின் அதிகரித்த அளவு மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் நிலையை நீரிழிவுக்கு முந்தைய பரிசோதனை மூலம் மக்கள் கண்டறியலாம்
நீரிழிவு நோயின் அறிகுறிகள் .
பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவையின் கூற்றுப்படி, டைப் 1 நீரிழிவு நோயின் அறிகுறிகள் குழந்தைப் பருவத்திலோ இளமைப் பருவத்திலோ தோன்றும்; மிகவும் கடுமையானதாக இருக்கும்.
டைப் 2 ஆபத்தில் உள்ளவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் (அல்லது தெற்காசிய மக்களுக்கு 25 வயதுக்கு மேல்); நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்கள்; அதிக எடை அல்லது பருமனானவர்கள்; மற்றும் தெற்காசிய, சீன, ஆப்ரோ-கரீபியன் அல்லது கருப்பின ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.
நீரிழிவு மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளைப் பொறுத்தது, ஆனால் ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மூலம் உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவலாம்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் ஊட்டச்சத்துக்கு உதவாது. ஏனெனில் அவற்றின் நார்ச்சத்து, வைட்டமின் நிறைந்த பாகங்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டிருக்கும்.
உதாரணமாக வெள்ளை மாவு, வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி, வெள்ளை பாஸ்தா, பேஸ்ட்ரிகள், ஃபிஸி/சர்க்கரை பானங்கள், இனிப்புகள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட காலை உணவு தானியங்களை கூறலாம்.
ஆரோக்கியமான உணவு வகைகளில் காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் மற்றும் முழு தானியங்கள் அடங்கும். மத்தி, சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்கள், ஆரோக்கியமான எண்ணெய்கள், கொட்டைகள் மற்றும் ஒமேகா-3 மீன் எண்ணெய் போன்றவை அடங்கும்.சீரான இடைவெளியில் சாப்பிடுவதும், பசியாறியதும் சாப்பிடும் அளவை நிறுத்துவதும் மிக முக்கியம்.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு குறையலாம்.
பிரிட்டனின் தேசிய சுகாதார அமைப்பு (NHS) ஒரு வாரத்திற்கு 2.5 மணிநேர ஏரோபிக் செயல்பாட்டில் ஈடுபட பரிந்துரைக்கிறது, இதில் வேகமாக நடப்பது மற்றும் படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற செயல்பாடுகள் அடங்கும்.
இதய நோய் அபாயத்தைக் குறைக்க புகைப்பிடிக்காமல் இருப்பதும், கொலஸ்ட்ரால் அளவைக் கண்காணிப்பதும் முக்கியம்.
ரத்த ஓட்டத்தில் அதிக அளவு சர்க்கரை இரத்த நாளங்களை கடுமையாக சேதப்படுத்தும்.
உங்கள் உடலில் ரத்தம் சரியாக ஓடவில்லை என்றால், அது உடலின் தேவையான பாகங்களை அடையாது, நரம்பு சேதம் (உணர்வு மற்றும் வலி இழப்பு), பார்வை இழப்பு மற்றும் கால் தொற்று ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.
குருட்டுத்தன்மை, சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கீழ் மூட்டுகள் துண்டிக்கப்படுவதற்கு நீரிழிவு ஒரு முக்கிய காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 1980ஆம் ஆண்டில் 108 மில்லியனிலிருந்து 2014 ஆண்டில் 422 மில்லியனாக உயர்ந்துள்ளது.1980ஆம் ஆண்டில், உலகளவில் பெரியவர்களில் 5% க்கும் குறைவானவர்கள் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் - 2014 ஆம் ஆண்டில், இந்த விகிதம் 8.5% ஆக இருந்தது.சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளபடி, இந்த நிலையில் வாழும் பெரியவர்களில் கிட்டத்தட்ட 80% நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளனர்,
அங்கு உணவுப் பழக்கம் வேகமாக மாறி வருகிறது.வளர்ந்த நாடுகளில், இது வறுமை மற்றும் மலிவான, பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வுடன் தொடர்புடையது.
---------------------------