புதன், 22 டிசம்பர், 2021

இடதுசாரிகள் எழுச்சி

 “மக்கள் எல்லாவாற்றிற்கும் போராட்டம் எனச் சென்றால், நாடு சுடுகாடாகிவிடும்” என்பதுதான்  மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் வலதுசாரிகள் ,பணமுதலைகள் பேசுவார்கள்.

ஆனால் போராட்டங்கள் மூலமே கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டிய சூழல்தான் உள்ளது.அண்மையில் இந்தியாவில் கார்பரேட்களுக்கு ஆதரவான  வேளாண் சட்டங்களை வலதுசாரி மோடி அரசு கொண்டு வந்து விவசாயிகளின் கோரிக்கைகளை மறுத்து வெப்ப செய்தபோது ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடி இறுதியில் பாசிச அரசையே வேளாண் சட்டங்களை நீக கவைத்து வென்று காட்டினர்.


போராட்டங்கள் மூலமே நாடுகள் பல தங்கள் விடுதலையைச் சாத்தியமாகியது என்பது வரலாற்று உண்மை. அப்படி ஒரு போராட்டம் மூலம் இடதுசாரிகள் மீண்டும் ஒரு நாட்டைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

உலகிலேயே இளம் அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கேப்ரியல் போரிக். சிலி நாட்டின் அதிபராக பொறுப்பேற்கவுள்ளார். நீளமாக முடியும், தாடியும் வளர்த்துக் கொண்டு கையில் டாட்டூ போட்டுக்கொண்டு இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தபடியே உருவான ஒரு மாணவர் இயக்கத் தலைவர்தான் கேப்ரியல் போரிக்.

அதிபர்கள் என்றவுடன் கோட், சூட், டை அணிந்த மேல்தட்டு மக்களின் பிரதிநிதியாக காட்சி தரும் பல அதிபர்களை பார்த்து பழகிய மக்கள், வீதியில் இறங்கி போராடி, அதுவும் டாட்டூ என முறையாக அலங்கரித்துக் கொள்ளாத இளைஞரை இன்று அதிபராக்கி இருக்கிறார்கள் சிலி மக்கள்.

தென் அமெரிக்காவில் வலிமையான பொருளாதாரத்தை பெற்றிருந்த நாடாக சிலி இருந்தது. ஆனால் கடந்த காலங்களில் ஏழ்மைமிக்க நாடாக ஆனது. அதற்கு வலதுசாரி பொருளாதாரக் கொள்கை மிக முக்கியமான ஒரு காரணி.

சிலி என்றால், சமத்துவமின்மை அதிகம் நிலவும் தேசங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது. வெறும் ஒரு சதவீத பெரும் பணக்காரர்களின் கையில், நாட்டில் 25 சதவீத மக்களின் சொத்துகள் குவிந்து கிடந்துள்ளது. ஆட்சியாளர்களை வைத்து அந்த பெரும் பணக்காரர்களே ஆட்சியை தீர்மானித்தனர்.

நாட்டில் பெருநிறுவனங்களுக்கு ஏராளமான வரிச்சலுக்கை அளிக்கப்பட்டது. ஆனால் அதேவேளையில், தினக்கூலி தொழிலாளர்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு வரியை அதிகமாக்கின. இந்த பாகுபாடு ஏழைகளுக்கு பெரும் துயரத்தைக் கொடுத்தது. இந்த துயரங்களைப் போக்க அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் வேலையை அங்குள்ள இடதுசாரிகள் தொடர்ச்சியாகச் செய்து வந்தனர்.

தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. முதலாவதாக அத்தியாவசிய பொருட்களுக்கு வரியைக் குறைவேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எதிராக போராட்டமாக அது மூண்டது. அந்த போராட்டத்தில் அரசுக்கு எதிராக போராடிய 29 பேர் சுட்டும், அடித்தும் கொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது.இந்தக் கொடூரம் சிலி மக்களுக்கு வலதுசாரி அரசியல் கட்சிகள் மீதான அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்தது. அதன்தொடர்ச்சியாக அந்நாட்டு மக்களால் சர்வாதிகாரி என அழைக்கப்பட்ட பினோசெட் காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியல் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் எனப் போராடினார்கள்.

இந்தப் போராட்டத்திற்குப் பணிந்த அரசு, பேச்சுவார்த்தையில், 155 பேர் கொண்ட அரசியல் சட்ட நிர்ணய சபையை உருவாக்குவது என முடிவு செய்தது. இந்தச் சபைக்கு இந்தாண்டு மே மாதம் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில், சுயேச்சைகளும் இடதுசாரி தலைவர்களும் பெரும்பாலான இடங்களில் வென்றனர். அந்த பெரும்பான்மையாகக் கொண்ட சுயேச்சைகள் கொண்ட புதிய சபையே, புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கியது.

இந்தச் சூழலில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அந்தத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் இணைந்து கேப்ரியல் போரிக்கை வேட்பாளராக களம் இறக்கின. கேப்ரியல், சிலியின் தலையெழுத்தை இளைஞர்கள் மாற்றுவார்கள் என்ற முழக்கத்துடன் தேர்தலைச் சந்தித்தார்.

தேர்தல் வாக்குறுதியாக எளிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பென்ஷன் திட்டத்தை சீரமைப்பது, அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு, பெரிய நிறுவனங்களுக்கு தகுந்த வரி, சூழலியலுக்கு ஏற்ப பசுமைப் பொருளாதார திட்டம் உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகளை அளித்திருந்தார். அந்த வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை அடைந்த மக்கள், சர்வாதிகாரி பினோசெட்டின் ஆட்சியே நாட்டின் பாதுகாப்பு எனக் கூறிய வலதுசாரிக் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர், ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் வாக்குறுதியை நிராகரித்துவிட்டனர்.

இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில், “இந்த நாட்டில் பணக்காரர்களுக்கு நீதி கிடைப்பது போலவே இனி ஏழைகளுக்கும் நீதி கிடைக்கும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கான விலையை இனி ஏழைகள் கொடுக்க வேண்டி இருக்காது. அனைவரின் உரிமையும் மதிக்கப்படும்” என முழங்கினார் கேப்ரியல் போரிக். பின்னர் மீண்டும் அதே வார்த்தைகளைச் சொன்னார். அப்போது அவர் அந்த நாட்டின் அதிபராக இருந்து சொன்னார். இடதுசாரி  கேப்ரியல் போரிக் வெற்றியை உலகம் கொண்டாடுகிறது.

------------------------------------------------------------------------------

கல்வி உதவித் தொகையில் ஊழல்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகள், அவர்களுக்குச் சொந்தமான இடங்கள், மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என அனைவரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை கல்லூரிகளில் வேட்டையை தொடங்கியிருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தனியார் சுயநிதி கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ஏதுவாக மத்திய அரசு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2011 - 2014 ஆம் ஆண்டு வரை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் 52 கல்லூரிகளில் சுமார் 17 கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்கறிஞர் அசோக்குமார் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் தணிக்கை துறை நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய விசாரணையில், 52 கல்லூரிகளில் ஒரே மாணவனுக்கு வெவ்வேறு அடையாள அட்டையை அடிப்படையாக வைத்துப் பலமுறை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உதவித் தொகை கொடுத்தது, வேறு மாநில மாணவர்களுக்கு, மாணவர் அல்லாத நபருக்கு உதவித் தொகை என வெவ்வேறு முறையில் ரூ.17 கோடி முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் முறைகேடு தொடர்பாக, பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட 52 கல்லூரிகளின் முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சம்மன் பெறப்பட்ட 52 கல்லூரிகளின் முதல்வர்களும் கல்வி உதவித் தொகை முறைகேடு குறித்து விளக்கமளிக்க நாளை சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------

வேர்க்கடலை

அளவுக்கு அதிகமானால்.

வேர்க்கடலை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு உணவுப்பொருள் ஆகும். நிலக்கடலையில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், மற்றும் தாது உப்புக்கள்,கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து நிறைந்துள்ளன.பல ஆரோக்கிய பிரச்சினைகளை தீரக்க உதவுகின்றது. இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்வது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படும். 

தற்போது வேர்க்கடலையை அதிகமாக எடுத்து கொண்டால் ஏற்படும் பக்கிவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்

வேர்க்கடலையில் அதிக கலோரி உள்ளடக்கம் உள்ளது. இதனை அதிக அளவு எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் பிரச்சனை ஏற்படும் வாப்பு உள்ளது.

அதிக அளவு நிறைவுறா கொழுப்புகள் எடுத்துக் கொள்வது பக்கவாதம், மாரடைப்பு, செரிமானப் பிரச்சனைகள் மற்றும் பிற உடல்நல சிக்கல்கள் ஏற்படுவதற்கு இவை வழிவகுக்கும்.

வேர்க்கடலையில் உள்ள பைடிக் அமிலம் இரும்புச் சத்து, துத்தநாகம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களை உங்கள் உடல் உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதனால் உங்களுக்கு தாது குறைபாடுகள், குடல் குழாயில் எரிச்சல் மற்றும் அலர்ஜி போன்றவை ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்க செய்யும்.

வேர்க்கடலையுடன் உப்பினை சேர்த்து சாப்பிடும்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வேர்க்கடலையில் அதிக அளவு ஒமேகா 6 உள்ளது. இந்த அத்தியாவசிய நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருந்தால் அவை  சிலர் உடலில் வீக்கத்தை ஏற்படுத்த செய்யலாம்

-------------------------------------------------------------------------------