வெள்ளி, 24 டிசம்பர், 2021

பொய்ப் பணம்" கிரிப்டோ"

 இந்தியாவில் கிரிப்டோகரன்சி குறித்தான முறைகேடுகள், புகார்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அதனை ஒழுங்குபடுத்தும் வரையில் நடுத்தர மக்கள், அடித்தட்டு மக்கள் அதனை விட்டு சற்று ஓதுக்கியிருப்பது நல்லது .

இந்தியாவினை பொறுத்தவரையில் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளான பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கமாடிட்டி என பல முதலீட்டு அம்சங்கள் உள்ளன. 

ஆனால் அவற்றிலேயே மக்கள் முதலீடு செய்ய பயப்படுவர். அப்படி இருக்கும் பட்சத்தில் கிரிப்டோகரன்சிகள் தற்போது முதலீடு செய்ய சாத்தியமில்லாத முதலீட்டு அம்சமாகத் தான் உள்ளது. 

ஏனெனில் பங்கு சந்தை மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு என கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. 


ஒரு வேளை ஏதேனும் பிரச்சனை, மோசடி என்றாலும் கூட நாம் கட்டுபாட்டு வாரியத்திடம் முறையிடலாம். புகார் அளிக்கலாம். சட்டபடி நடவடிக்கை எடுக்கலாம்

ஆனால் கிரிப்டோவுக்கு என இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட எக்ஸ்சேன்ஞ்கள் இல்லை. தனி நபர் யாரு வேண்டுமானாலும் ஒரு கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்யலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. 

இதில் பிளாக்செயின் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. 

ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், இடைத்தரகராக செயல்பட்ட ஒரு நபரே, மற்றொருவரின் கணக்கில் இருந்து கிரிப்டோகரன்சியை திருடும் சம்பவம் அரங்கேறியது நினைவுகூறத்தக்கது. ஆக இங்கு பாதுகாப்பு என்பது சொல்லும் அளவுக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் நடுத்தர மக்கள் மத்தியில் உங்கள் பணம் விரைவில் மும்மடங்காக அதிகரிக்கும், இருமடங்காக அதிகரிக்கும் என்ற ஆசை வார்த்தைகளை கூறி இடைத்தரர்களை முதலீடு செய்ய வைக்கின்றனர்.

 குறிப்பாக 15,000 - 20,000 ரூபாய் சம்பளம் வாங்கும் சம்பளதாரர்கள் கூட, லட்சக்கணக்கில் கடன் வாங்கி முதலீடு செய்கின்றனர், அது தவறான விஷயம்.


மேலும் அப்படியே திருடப்பட்டாலும், நீங்கள் யார் திருடினார்கள் என எப்படி புகார் செய்வது? ஆக கிரிப்டோகரன்சி குறித்தான தெளிவான புரிதல்கள், கட்டுப்பாட்டு வாரியம் இல்லாதவரை அது ரிஸ்கான முதலீடு தான்.

குறிப்பாக இந்தியாவினை பொறுத்தவரையில் கிரிப்டோகரன்சி மசோதாவில் இரண்டு விஷயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

 ஒன்று கிரிப்டோகரன்சிகள் தடை செய்யலாம். 

இரண்டாவது கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குமுறைப்படுத்த வரைமுறைகள் கொண்டு வரப்படலாம். 

இதன் மூலம் ஜிஎஸ்டி, வருமான வரிக்குள் கொண்டு வரலாம்.

நடுத்தர மக்கள், கீழ்த்தட்டு மக்களை பொறுத்தவரையில் இப்போதைக்கு கிரிப்டோகரன்சி முதலீடு வேண்டாம்.

 இதே பெரிய பணக்காரர்கள் எனில் அவர்களின் மொத்த சொத்தில் அரை சதவீதம், 1% என முதலீடு செய்து பார்க்கலாம். ஏனெனில் மொத்தத்தில் 1% என்பது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தாது. இன்னும் சிலர் யாரோ சொன்னார்கள் என கடன் வாங்கி முதலீடு செய்வார்கள். 

அது மிகப்பெரிய தவறு.


தற்போது இந்திய அரசு சொந்தமாக ஒரு டிஜிட்டல் கரன்சியை கொண்டு வரலாம் என திட்டமிட்டு வருகின்றது. அப்படி இல்லாவிட்டாலும் ஒழுங்குபடுத்தும்போது உங்கள் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கும். ஆக அரசின் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு சீர்திருத்தம் செய்தால் அதனை பற்றி யோசிக்கலாம். 

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவிலேயே கிரிப்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது.


அமெரிக்கா போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்படுகிறதே எனலாம். அதில் டெஸ்லா போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட்டுகள் கூட முதலீடு செய்துள்ளனவே என கேள்வி எழலாம். ஆனால் ஆரம்ப காலத்தில் டெக்னாலஜிக்கள் வளர்ச்சி காணாத காலத்திலேயே டாடா குழுமம் டிசிஎஸ் என்ற நிறுவனத்தினை நிறுவியது.

 இன்று டிசிஎஸ் நிறுவனம் டாடா குழுமத்தின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதனை தாங்கி பிடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.


அதனைபோலத் தான் கிரிப்டோக்கள் தவிர்க்கப்பட வேண்டிய முதலீடுகள் என்று சொல்லவில்லை. மேலும் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் தங்களிடம் உள்ள மொத்த சொத்தில் கால், அரை சதவீதம் கூட முதலீடு செய்யவில்லை. 

ஆக அந்த முதலீடுகள் பிரச்சனை என்றாலும் அதனை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்தியாவின் நிலை அப்படியல்ல.


ஆக இன்னும் சீரமைக்க வேண்டியது நிறையவே உள்ளது. அப்படி செதுக்கி மெருகேற்றி, பல சீர்திருத்தங்கள் செய்து, பொதுவான ஒரு கட்டுப்பாட்டு மையம், செபி போல உருவாக வேண்டும். 

அப்போது தான் பிரச்சனைகள் களையப்படும். தற்போது கிரிப்டோகரன்சிகள் தவறான செயல்களுக்காக பயன்படுத்தப்படுவதாக அச்சம் எழுந்துள்ளது. 

ஆக அதனை கட்டுப்படுத்தும் போது அப்படியான பிரச்சனைகள் குறையும்.


ஆக இன்று வரையில் சந்தேகத்திற்கு உரிய முதலீடாகவே கிரிப்டோகரன்சிகள் இருந்து வருகின்றன. ஆக ஆழம் தெரியாமல் காலை விடுவதை விட, முதலீடு செய்யாமல் இருப்பது மேல், அதிலும் கிரிப்டோகரன்சிகளில் ஏற்ற இறக்கம் மிக அதிகம்.

 அதனை சில்லறை முதலீட்டாளர்கள், சிறு முதலீட்டாளர்களால் தாங்க முடியாது. ஆக முழுமையான புரிதல் வரும் வரை சற்று பொறுத்திருந்து வணிகம் செய்வது நல்லது.

அப்படியே செய்து தான் ஆக வேண்டும் என நினைப்பவர்கள், உங்களது உபரியில் 1% அல்லது 2% செய்து பார்க்கலாம்.

அதேபோல எதிர்காலத்தில் தங்கத்திற்கு இணையான ஒரு முதலீடாக கிரிப்டோ மாறலாம் என கூறப்படுகிறதே, இது குறித்து கேட்டபோது நிச்சயம் தங்கம் போல கிரிப்டோ வர முடியாது. 

ஏனெனில் தங்கம் முதலீட்டிற்கு அப்பாற்பட்டு, ஒரு மக்கள் விரும்பிய ஆபரணமாக இருந்து வருகின்றது. மேலும் இது பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்படும் உலோகம். ஆனால் கிரிப்டோக்கள் அப்படியில்லை. 

 ஒரு போதும் தங்கத்திற்கு இணையாக கிரிப்டோவால் வர முடியாது. 

--------------------------------------------------------------------------------

 தூக்கமின்மையும்,நீரிழிவு நோயும் 

தூக்கமின்மை பிரச்சனையால் பலர் பாதிக்கப்படுவது மட்டுமன்றி அதனால் பலர் பல வகை நோய்களையும் சந்திக்கின்றனர். அதில் முக்கியமாக தூக்கமின்மை நீரிழிவு நோயையும் உருவாக்கும் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தூக்கமின்மை மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகமாக வெளியிடுகிறது. இது இன்சுலின் உற்பத்தியை தடுக்கிறது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை நோய் உருவாகிறது. சரி வாங்க தூக்கமின்மையை எப்படி எதிர்கொள்வது குறித்து பார்க்கலாம்..

  • ஒவ்வொரு இரவையும் நீங்கள் தூக்கமின்மையால் கழிக்கிறீர்கள் எனில் உங்கள் சர்க்கரை அளவை கண்கானிப்பது நல்லது. குறைந்தது இரவு 7 மணி நேர தூக்கம் அவசியம். அதுதான் உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

  • உங்கள் படுக்கை அறையை எப்போதும் இருள் சூழந்து அமைதியான நிம்மதி தரும் ஒரு இடமாக வைத்துக்கொள்ளுங்கள். தூங்கும் முன் செல்ஃபோன், டிவி, லாப்டாப் என எதையும் பார்க்கக்கூடாது. ஏனெனில் இது உங்கள் தூக்கத்தை தடுக்கும்.


  • படுக்கைக்கு செல்லும் முன் உங்கள் மன நிலையை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். ஆழ்ந்த தூக்கத்திற்கு படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் நல்ல குளியல் அல்லது புத்தகம் வாசிக்கலாம். தூங்கும் முன் காஃபி, ஆல்கஹால், புகைப்பழக்கம் கூடாது. 
  • --------------------------------------------------------------------------- •

இம்மாதம்


டிசம்பர் 1: இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


❇️ டிசம்பர் 2: உலகத் தடகள அமைப்பின் சார்பில் 2021ஆம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக, உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் அஞ்சு பாபி ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டார்.


❇️ டிசம்பர் 2: உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் வேற்றுருவம் அடைந்த ‘ஒமைக்ரான்’ கரோனா வைரஸ் தொற்று கர்நாடகத்தில் இருவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


❇️ டிசம்பர் 3: நாடு முழுவதும் ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வழிசெய்யும் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது.


❇️ டிசம்பர் 3: தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளைக் கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டது.


❇️ டிசம்பர் 4: தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் ஆந்திரத்தின் முன்னாள் முதல்வருமான ரோசய்யா (88) உடல்நலக் குறைவால் காலமானார்.


❇️ டிசம்பர் 6: அதிமுக ஒருங்கிணைப் பாளராக ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


❇️ டிசம்பர் 7: கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. டிசம்பர் 8: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.


❇️ டிசம்பர் 8: இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். டி20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு நாள் அணிக்கும் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிக்கிறார்.


❇️ டிசம்பர் 9: பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் ஒவ்வொருவரின் பெயருக்கு முன்பாக உள்ள இனிஷியல் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


❇️ டிசம்பர் 10: அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தைப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாடவைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


❇️ டிசம்பர் 10: பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் தாமதித்ததை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.


❇️ டிசம்பர் 11: துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் நேப்போமோனியச்சியை நடப்பு உலக சாம்பியனான நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சென் வீழ்த்தினார். இது அவர் வெல்லும் 5-வது பட்டமாகும்.


❇️ டிசம்பர் 12: பிரான்ஸ் நாட்டின் ஆளுகையிலிருந்து விடுதலை பெறுவது தொடர்பாக பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நியூ காலிடோனியாவில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், பிரான்ஸின் அங்கமாகத் தொடர மக்கள் ஆதரவளித்தனர்.


❇️ டிசம்பர் 14: பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜய் சிங் 81 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.


❇️ டிசம்பர் 15: நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக தமிழகம் வந்த 47 வயதுடைய நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்தது.


❇️ டிசம்பர் 15: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயத்துடன் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி பெங்களூருவில் காலமானார். இதன்மூலம் விபத்தில் பலினானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்தது.


❇️ டிசம்பர் 16: 1971-ஆம் ஆண்டு வங்கதேசத்தைப் பிரிக்கும் வகையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி அடைந்ததன் 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.


❇️ டிசம்பர் 16: பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 வயதிலிருந்து 21 ஆக உயர்த்தும் அரசின் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


❇️ டிசம்பர் 16: மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் ஒன்றான துர்கா பூஜைக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.


❇️ டிசம்பர் 17: சூரியனை ஆய்வுசெய்ய முதன் முறையாக அமெரிக்காவின் நாசா அனுப்பிய பார்க்கர் சோலார் விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் நுழைந்து புதிய அத்தியாயம் படைத்திருக்கிறது.


❇️ டிசம்பர் 17: ‘நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.

-----------------------------------------------------------------------------

M.G.R. கடைசி தினம்.

1987-ம் ஆண்டு டிசம்பர் 22ந் தேதி சென்னை கத்திப்பாரா நேரு சிலை திறப்பு விழா நடைபெற்றது. 

இதற்காக பிரதமர் ராஜூகாந்தி தமிழகம் வந்திருந்த நிலையில், முதல்வர் எம்ஜிஆர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஆயத்தமானார். 

அதற்கு முன்பு சில நாட்களாக எவ்வித நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளலாத அவர், பிரதமர் வருகிறார் என்பதற்காக நேரு சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். டிசம்பர் 22 அன்று மாலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் ராஜூகாந்தி சிலை திறந்து வைத்து பேசி முடித்தார். அதன்பிறகு பேசிய எம்ஜிஆர் சற்று சோர்வாக இருந்துள்ளார். 

அதன் பிறகு வீட்டிற்கு வந்து தளர்வுடனே காணப்பட்ட அவர், 23-ந் தேதி இரவு ராமாவரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லாத்தில் உறங்கியுள்ளார். 

அதன்பிறகு நள்ளிரவில் கழிப்பறை சென்று வந்த அவர் லேசாக நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். தண்ணீர் குடித்துவிட்டு படுத்த எம்ஜிஆர் அதன்பிறகு மயங்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக மருத்துவருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து ராமாவரம் இல்லத்திற்கு வந்த மருத்துவர்கள் எம்ஜிஆருக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். 

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

அதிகாலை 3. மணிக்கு அவர் உயிர் பிரிந்ந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

 எம்ஜிஆர் 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி மரணமடைந்தார். 

எம்ஜிஆர் மறைந்த நாளான அன்று ஆளுநர் குரானா தலைமையில் குடியரசு தலைவர் ஆர்.வெங்ட்ராமன் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகத்தை தொடங்கி வைக்க இருந்தார்.

--------------------------------------------------------------------------