பிபின் ராவத்

  சில குறிப்புகள்..

இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இந்திய ராணுவத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். 

முதல் முப்படை தலைமை தளபதியாக  இராணுவத்தின் உயர்பதவி வகித்த அவரது தேசத்தின் மீதான சேவையை தொகுப்பாக பார்ப்போம். 



ஜெனரல் பிபின் ராவத் 1958 ஆம் ஆண்டு உத்ரகண்ட் மாநிலம் பவுரியில் பிறந்தவர். அவரது தந்தை லக்ஷ்மண் சிங் ராவத் இராணுவத்தில் லெப்டினன்ட் ஆக  இருந்தவர். டேராடூன், சிம்லா ஆகிய நகரங்களில் பள்ளி படிப்பை முடிந்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய இராணுவ அகாடமி ஆகியவற்றில் பட்டம் பெற்றார்.

மேலும் படிப்பில் சிறந்து விளங்கியதற்காக வீரவாள் பட்டமும் பெற்றவர். தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் பாதுகாப்பு படையினருக்கான பயிற்சி கல்லூரியில் பாதுகாப்பு தொடர்பான கல்வியில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மீரட் சரண் சிங் பல்கலைகழகத்தில் ராணுவ ஊடக தந்திரம் தொடர்பாக ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். பின்னர் 1978 டிசம்பரில் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டார். இவரது முன்னோர்களும் பல தலைமுறைகளாக ராணுவத்தில் பணியாற்றியுள்ளனர். 

மேலும் 11-வது கூர்க்கா ரைபிள் ஐந்தாவது பட்டாலியனாக அவரது தந்தை இருந்த நிலையில் அதே பிரிவில் பிபின் ராவத்தும் சேர்க்கப்பட்டார். இவர் உயரமான மலைபகுதிகளில் போர் நடத்துவதில் அனுபவம் பெற்றவர்.

இந்திய ராணுவத்தில் ராணுவ நடவடிக்கை இயக்குனரகம், கர்னல் ராணுவச் செயலர் மற்றும் துணை ராணுவச் செயலர் ஆகிய மிகப்பெரிய பதவிகளை பிபின் ராவத் வகித்துள்ளார். இராணுவச் செயலாளரின் கிளை மற்றும் ஜூனியர் அதிகார கட்டளைப் பிரிவில் மூத்த பயிற்றுவிப்பாளராகவும் இவர் இருந்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரின் ஊரியில் ஒரு படையணிக்கு தலைவராகவும் இருந்தார். 1987 ஆம் ஆண்டு,  சீனாவுடன் மோதல் ஏற்பட்ட போது, சீன இராணுவ படைகளை எதிர்கொள்ள பிபின் ராவத் தலைமையில் இந்திய படை அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூர்க்கா படைப்பிரிவில் இருந்து நான்காவது அதிகாரியாக ஆவதற்கு முன்பு, அவர் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். ஜ.நா வின் அமைதி காக்கும் படையின் ஒருங்கிணைந்த பகுதியில் ஒரு உறுப்பினராகவும், காங்கோ ஜனநாயகக் குடியரசில் பன்னாட்டுப் படையணிக்கு தலைமையும் தாங்கியுள்ளார். 

மேலும் இவர் 2017 முதல் 2019 வரை மூன்று ஆண்டுகள் 27 வது  இராணுவ தளபதியாக இருந்தார். முதன் முறையாக முப்படைகளில் தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டு , 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இவர் பதவி வகித்து வந்தார். இராணுவத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக, பரம் விசிஷ்ட சேவா பதக்கம் வழங்கப்பட்டது. 

 மிக உயர்ந்தநிலையில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாக இது வழங்கப்படுகிறது. மேலும் அவர், உத்தம் யுத் சேவா, அதி விஷிஷ்ட் சேவா, விசிஷ்ட் சேவா, யுத் சேவா மற்றும் சேனா உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்தியாவவின் பயங்கரவாதிகள் அச்ச்சுறுத்தல் உள்ள மிகவும் ஆபத்தான பகுதிகளில் பணியாற்றியுள்ள ராவத் ராணுவ துறையில் துல்லியல் தாக்குதலுக்கு பெயர் போனவர். 2015-ம் ஆண்டு இந்திய-மியான்மர் எல்லையில் தாக்குதல் நடத்திய NSCN-K கிளர்ச்சியாளர்களுக்கு எல்லை தாண்டி இந்திய இராணுவம் வெற்றிகரமாக பதிலடி கொடுத்தது பிபின் ராவத்தின் சிறப்பான நடவடிக்கையில் ஒன்றாக பார்க்கபடுகிறது.

மேலும் ராணுவ தளபதியாக பதவில் இருந்த காலத்தில், பாதுகாப்பு துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் கசக்கஸ்தான், ரஷ்யா, வியட்நாம், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளின் பாதுகாப்பு துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


2019 ஆம் ஆண்டு நரேந்திர மோதி தலைமையிலான அரசு முப்படைகளின் தலைமைத் தளபதி எனும் பொறுப்பை உண்டாக்கியது. பாதுகாப்பு படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்தும் இந்த புதிய தளபதிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தது. இந்த பொறுப்புக்கு வந்தபொழுது ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு நெருக்கமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் அவர் அவற்றை தொடர்ந்து மறுத்தார். அரசியல் அற்ற நிலையை கடைபிடிக்கும் இந்திய பாதுகாப்பு படைகளின் பாரம்பரியத்திலிருந்து இவரது சில பேச்சிக்கள் விலகிச் செல்வதாக ,இந்துத்துவா குரலில் இவர் பேசுவதாக விமர்சகர்கள் கூறினார்கள். 

அசாமில் இருக்கும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எனும் கட்சி பெரும்பாலும் இஸ்லாமியர்களை கொண்டது. இந்த கட்சி வளர்ந்து வருவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அப்பொழுது பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் அதே நிலையை கடைப்பிடிப்பதாக சிறுபான்மையினருக்கான தலைவர்கள் அப்பொழுது கடுமையாக விமர்சித்தனர். 

இந்நிலையில், இன்று கோவை சூலூர் விமான படை தளத்தில் இருந்து குன்னூர் இராணுவ பயிற்சி மையத்திற்கு அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 

இதில் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும்  13 ஆயுத படை வீரர்கள் உயிரிழந்தனர். குருப் கேப்டன் வருண் சிங் படுகாயமடைந்து , விலிங்கடன் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார். இந்த துயர சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?