வ.உ.சி,யை தெரியாது!
மோடியைத் தாக்கிய டிவி நிகழ்ச்சி
அரண்டு போன பாஜக கடிதம்
பொங்கல் திருவிழாவை ஒட்டி தமிழக டிவி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜனவரி 15 ஆம் தேதியன்று ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் தொடரின் நான்காம் சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.இதில் ஒரு மன்னரும், அமைச்சரும் பேசிக் கொள்வது போல குழந்தைகளால் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அமைச்சு அமைச்சு என்று மன்னர் விளிக்க, பதிலுக்கு அமைச்சர் மன்னரை கலாய்த்து பதிலளிப்பது போல நிகழ்ச்சி அமைந்திருந்தது.
அதில், பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம், அவரது பணமதிப்பழிப்பு நடவடிக்கைகள், பிரதமர் தமிழ்நாட்டுக்குள் வரமுடியாமல் திரும்புவது போன்ற பரபரப்பான அரசியல் நடவடிக்கைகளை காமெடிக்குள் வைத்து பகிரங்கமாக விமர்சித்திருந்தனர். பொழுது போக்கு நிகழ்ச்சியில் அதுவும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் கூட இப்படி மோடியை விமரிசித்தது சமூக தளங்களில் வைரலானது.
இதுகுறித்து உடனடியாக ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதும்., அவர் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பேசி பின் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
“பிரதமர் மோடியை பற்றிய அவதூறுகளை குழந்தைகளிடம் பரப்புவது போல இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சி உடனடியாக இந்த நிகழ்ச்சியை எந்த வடிவத்திலும் ஒளிபரப்பாமல் தடுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கான சேனல் நிர்வாகம், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிகழ்ச்சியின் நீதிபதிகள் ஆகியோர் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தமிழக பாஜகவின் சமூக ஊடக பிரிவு ஐடி பிரிவின் தலைவர் சி.டி. நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார்.
ஜி தொலைக்காட்சி உரிமையாளர் சுபாஷ் சந்திரவால். பா.ஜ.கவைச் சேர்ந்தவர்தான்.
----------------------------------------------------------------------------
குடியரசுத் தின ஊர்திகள் அணி வகுப்பு.
எதிர்க் கட்சிகள்
ஆளும் மாநில ஊர்திகள்
ஒன்றிய அரசு தடை.
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவையொட்டி ஜனவரி 26-ஆம் தேதி அணிவகுப்பு நடைபெறும். இந்த நிகழ்வில் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களும், அந்தந்த மாநிலங்களின் பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக அலங்கார ஊர்திகளை வடிவமைத்து அணிவகுப்பில் பங்கேற்கும்.
இந்தாண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட அலங்கார ஊர்தியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கியிருந்தன.
தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிவதாகவும், உலகத் தலைவர்களுக்கு வ.உ.சி, வேலுநாச்சியார் ஆகிய
தலைவர்களைத் தெரியாது என்றும் மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் ஒன்றிய அரசு தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகளில் தென்மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தின் ஊர்திகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், கடந்த ஜனவரி 3ஆம் தேதியன்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் வரும் வேலு நாச்சியாரின் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்ந்து தமிழில் ட்வீட்டுகளை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
அதைக் குறிப்பிட்டு பலரும், பிரதமருக்கு தெரிந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் பெயர், ஒன்றிய அரசின் அதிகாரிகளுக்குத் தெரியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு தி.மு.க நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது.
இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும். ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வ.உ.சி,வேலுநாச்சியார் புகழை எடுத்துக் கூறத்தானே ஊர்தி.
ஆங்கிலேயர் காலை நக்கி விடுதலையடைந்த சவர்கார்,கோட்சே படம் வைத்தால்தான் அனுமதி தரும் பாசிச மோடி. ஒன்றிய அரசு.?
இன்றும் பார்த்தால் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா,தெலுங்கானா,மே.வங்கம் போன்ற இந்தி பேசா ,எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்தான் இந்த புறக்கணிப்பில் ஒதுக்கித் தள்ளப் பட்டுள்ளது வெளிச்சமாகியுள்ளது.
--------------------------