இந்தியாவா? "இந்தி" யாவா?

குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் தில்லியில் நடைபெறும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநில அலங்கார வாகனங்கள் இடம் பெறுவது வழக்கம்.

அது அம்மாநிலத்தை பெருமைப்படுத்தும் விதமாக அமையும்.

பல்வேறுமொழிகள்,கலாச்சாரங்கள்,மதங்கள்,இனங்கள் இருந்தாலும் இந்தியன் என்ற ஒரே இனமாக வாழும் இந்தியத் திருநாட்டில் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பன்முகத்தன்மையை உலகிற்கு பறைசாற்றுவதாக இந்த அணிவகுப்பு அமையும். 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய பாஜக கூட்டணிஅரசு இதிலும் கூட தன்னுடைய  திருகுதாள வேலையைக் காட்டி பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுத்து வருகிறது. 

இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட அலங்கார ஊர்தியில் தேசியக்கவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், வீர மங்கை வேலுநாச்சியார் ஆகியோரது புகைப் படங்கள் இடம் பெற்றிருந்தன.

 நான்காவது சுற்று வரை தமிழகத்தின் அலங்கார ஊர்தி சென்ற நிலை யில் தற்போது நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

கேரளத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட அலங்கார ஊர்தியில் சமூக சீர்திருத்த இயக்கத் தின் முன்னோடி நாராயண குரு படம் இடம்பெற்றி ருந்தது. 

மேற்கு வங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட அலங்கார ஊர்தியில் தலைசிறந்த விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நோபல் பரிசு பெற்றவரும், தேசிய கீதத்தை இயற் றியவருமான ரவீந்திர நாத் தாகூர் ஆகியோரது படங்கள் இடம்பெற்றிருந்தன. இவையும் நிராகரிக் கப்பட்டுள்ளன.

தென் மாநிலங்களிலிருந்து பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. 

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்குரியது. 


விடுதலை போராட்டத்தில் பங்கு பெறாதவர்கள் பாஜகவின் முன்னோடிகள். மக்கள் ஒற்றுமையை யும், மதச்சார்பின்மையையும் சீர்குலைத்தவர்க ளை கொண்டாடி போற்றுகின்றனர். 

அதே நேரத்தில் விடுதலை போராட்ட வீரர்களையும், சமூக சீர் திருத்த முன்னோடிகளையும் இழிவுபடுத்துகின்றனர். 

இந்தியாவின் சுதந்திர தின 75ஆவது ஆண்டு பவளவிழா கொண்டாடப்படும் தருணத்தில் நாட்டின் விடுதலைப் போராட்ட பாரம்பரியத்தை இழிவுபடுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக பாசிச அரசு.

 அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் இடம் பெறும் போதுதான் பல்வேறு  பண்பாட்டை கொண்ட இந்தியாவின் சிறப்பை உலகம் உணரும் வாய்ப்பு கிடைக்கும்.

 ஆனால் நாட்டினுடைய வரலாற்றையே திருத்தி எழுத முயல்பவர்கள் தேசத்தின் முகத்தோற்றத்தையும் மாற்றியமைக்க முயல்கிறார்கள்.

 அலங்கார ஊர்திகள் நிராகரிப்புக்கு தொழில் நுட்ப காரணம் என சப்பைக் கட்டு கட்டுவது ஏற்கத் தக்கதல்ல.

இந்திய ஒன்றியம் ஆட்சி அதிகாரம் இருப்பதால் பாஜகவுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.

------------------------------------------------------------------------------

சென்னை மேயர் பெண்தான்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கு நடக்கும் இந்த தேர்தல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இந்த நிலையில், மாநகராட்சி மேயர் பதவிகளில் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவுகளுக்கான இடஒதுக்கீட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

நகராட்சி நிர்வாக இயக்குனர் 11-ம் தேதி அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிகளை இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிப்பது தொடர்பான கருத்துருவை அனுப்பியிருந்தார். அதை ஏற்றுக் கொண்டு அது தொடர்புடைய விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தார். அவரது கருத்துருவை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்கிறது. 

அதன்படி, ஆதிதிராவிடர் (பொது), ஆதிதிராவிடர் (பெண்கள்), பொது (பெண்கள்) ஆகிய பிரிவினருக்கு மேயர் பதவி இடஒதுக்கீட்டிற்கான உத்தரவு வெளியிடப்படுகிறது.

சென்னை மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவி ஆதிதிராவிடர் (எஸ்.சி.) பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் (பொது) பிரிவுக்கு வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சீபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



-----------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?